Wednesday, January 06, 2016

மாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அட்டர்ஃபிளாப்பா?த ஹிந்து அலசல்

பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.


கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத திருமண உறவினுள் போலி யான இல்லறத்தை சிருஷ்டிக்க முற் படுவதில் உருவாகும் முரண்பாடு களும், மெல்ல முகிழ்க்கும் காதல் அத் தியாயமும் தமிழ் சினிமா பலமுறை கண்ட கதை. ஏற்கெனவே கையாண்ட கதையை மீண்டும் கையாளும்போது அதில் இருக்கவேண்டிய புதுமையோ, புதிய பார்வையோகூட சொல் லிக்கொள்ளும் அளவில் இல்லை.



பாத்திர வார்ப்புகள், வசனங்களில் கதாசிரியர் செல்வராகவன் வித்தியாசம் காட்டியிருந்தாலும் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் பெரிய வித் தியாசம் இல்லை. நாயகனை நிராகரிக் கும் நாயகி ஆதிக்க உணர்வுடன் நடந்துகொள்வதை வேண்டுமானால் வித்தியாசம் என்று சொல்லலாம்.


நாயகியின் மனம் இளகும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவத்துக் கான பின்புலம் நன்கு கட்டமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்ட விதம் அபத்தம். கதையின் போக்கை திசைமாற்றக்கூடிய இக்காட்சியை ஏற்றுக்கொள்ளும் வித மாகச் சித்தரித்திருந்தால் கதையின் போக்குக்கு அது வலு சேர்த்திருக்கும். கிளைமாக்ஸ் திருப்பமும் வழக்க மான சினிமாத்தனம். போதாக் குறைக்கு, நாயகன், நாயகி இருவரும் தங்கள் தரப்பை நியாயப்படுத்த தலா ஆளுக்கொரு காட்சியில் நீளமாக வச னம் பேசி கொடுமைப்படுத்துகிறார்கள்.


தன் ஆண் நண்பர்களுடன் மனோஜா வுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நவநாகரிகப் போக்கு கொண்டவராக இருந்தும் சுயமரியாதையும் சுய கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கும் மனோஜாவின் ஆளுமை ஆகியவை நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திருமணத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அவர் அவதிப்படுவது, தன் மனைவிக்கு ஏற்ப நடந்துகொள்ளத் தெரியாத பிரபுவின் அவஸ்தைகள் இருவரையும் இணைத்துவைக்க நண்பர்கள் செய்யும் முயற்சி ஆகியவற்றை சித்தரித்த விதம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.



புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாவுக்காகத் திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண், திருமண உறவுக் குள் தான் மோசமாக நடந்துகொண்டால் அதுவும் அம்மாவை பாதிக்கும் என்பதை யோசிக்க மாட்டாளா? பிடிக்கவே பிடிக்காத திருமணத்தில் எதற்காக 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்? ஒரு தவறும் செய்யாத கணவனை தான் வதைப்பது பற்றிய உணர்வே அந்த பெண்ணுக்கு ஏற்படாதா?



டேட்டிங் என்ற சாக்கில் பெண் களைக் காம நுகர்வுக்குப் பயன் படுத்திக்கொள்ளும் நண்பனை அதற் காகவே பிரிகிறார் நாயகி. பின்னாளில் அதே நண்பனோடு டேட்டிங் செல்ல ஒப்புக்கொள்ளும்போது நாயகியின் கதாபாத்திரம் சரிகிறது. யாருமே ஊடுருவ முடியாத இரும்புக் கோட்டை போலத் தன்னை ஆக்கிக்கொண்டுள்ள ஒரு பெண் மனம் மாறும் காட்சியில் எந்த அளவுக்கு வலு இருக்க வேண்டும்? படத்தில் அந்த இடம் சப்பென்று இருக்கிறது.



நகர்ப்புற இளைஞர்களிடம் ஊறி யிருக்கும் டேட்டிங் கலாச்சாரத்தை இயல்பாகச் சித்தரிக்கிறார் இயக்குநர். ஆனால் மாநகர இளைஞர்களும் யுவதிகளும் டிஸ்கொத்தே, மது, டேட்டிங் தவிர வேறு சிந்தனைகளே இல்லாதவர்கள் போன்ற சித்தரிப்பு உறுத்துகிறது.


பொருந்தாத திருமணத்தின் தொடக்க நாட்களைச் சித்தரிக்கும் சில காட்சிகள் இயல்பாக உள்ளன. காட்சிகளைக் கையாளும் விதத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் நேர்த்தியாக வெளிப் படுகிறார். செல்வராகவனின் வசனங்கள் இயல்பாக உள்ளன. மனோஜாவின் நண்பன், பிரபுவுக்கு ஆலோசனை வழங்கும் காட்சி இதற்கு உதாரணம்.



படமாக்கப்பட்ட விதம், உரையாடல் கள் ஆகியவற்றில் இருக்கும் நேர்த்தி, சம்பவங்களைக் கோத்த விதத்தில் இல்லை. பெரும்பாலான காட்சிகள் ஊகிக்கக்கூடியவையாக, பார்த்து சலித்தவையாக இருக்கின்றன. ஒவ் வொரு காட்சியையும் மிக நிதான மாக நகரவிடும் படத்தொகுப்பு திரைக்கதையை மந்தமாக்குகிறது.


வாமிகா, ராமகிருஷ்ணா இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெறும் அளவுக்கு ராமகிருஷ்ணா தன் பாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். உறுதியான ஆளுமையை வெளிப் படுத்துவதில் வாமிகாவின் கண்கள், முக பாவனைகள் நன்கு ஒத்துழைக்கின்றன. மனோஜாவின் அம்மாவாக வரும் கல்யாணி, பிரபுவின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள் ஆகியோரும் பொருத்தமான தேர்வுகள்.


அறிமுக இசையமைப்பாளர் அம்ரித் தின் இசையும், தரின் ஒளிப்பதிவும் கதையுடன் இணைந்து பயணிக்கின்றன. பாடல்கள் நினைவில் தங்கவில்லை என்றாலும் பின்னணி இசை பல இடங்களில் வசீகரிக்கிறது.


ஏற்கெனவே எடுத்தாளப்பட்ட கதையை புது தலைமுறை கதா பாத்திரங்களுடன் மீண்டும் சொல்வதில் தவறில்லை. ஆனால் காட்சியின் அதிர்ச் சிக்காக, கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்களில் செயற்கையான சிதைவுகளை திணித்திருப்பது கதையின் அஸ்திவாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. காட்சிகளின் இயல்புத் தன்மையும் சீராக இல்லை.


கலாபூர்வமான சில படங்கள் மெதுவாக நகரலாம். அதற்காக, மெதுவாக நகரும் படமெல்லாம் கலாபூர்வமான படமாகிவிடாது.

நன்றி - த இந்து

0 comments: