Monday, January 11, 2016

முன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்-பாமயன்

புஞ்சைத் தானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள் புறக்கணிக்கப் பட்டதால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், அந்த இடத்தில் வீரிய விதைகள் (உண்மையில் வறட்சி, பூச்சி தாக்குதல் இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத சோதா விதைகளே அவை) வந்து அமர்ந்தன. இவை அதிக ரசாயன உரம், அதிக நீர் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அது மட்டுமல்லாமல் மண்ணின் வளம் பல்வகைப் பயிர்ச் சாகுபடியால் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதாவது தினை, வரகு போன்றவற்றைத் தனியாகச் சாகுபடி செய்யமாட்டார்கள். அத்துடன் பல பயறு வகைகள், காய்கறிகள் என்று கலப்புப் பயிர் சாகுபடியைச் செய்வார்கள்.



இதனால் பயறு வகைப் பயிர்கள் மண்ணில் வெடியம் (நைட்ரஜன்) என்ற தழை ஊட்டத்தைச் சேமிக்கும். இதன் விளைவாக மண் வளம் காக்கப்படும். ஆனால் பசுமைப் புரட்சி முன்வைத்த ஓரினச் சாகுபடி (monoculture) என்பது முற்றிலும் வேதி உப்புகளை அடிப்படையாகக் கொண்டது, வெளி இடுபொருட்களுக்கு வழிகோலியது. எனவே, மண் வளம் தொடர்ந்து குறைந்துகொண்டே போகும். அது மட்டுமல்லாமல் அருந்தானியங்களுக்கு எவ்விதமான பாசன வசதியும் தேவையில்லை. பெய்யும் மழையே போதுமானது.



பன்மயப் பாதுகாப்பு
காடைக்கண்ணி (common millet) என்றொரு தானியம், இன்றைய தலைமுறையினர் இதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இது அறுபது முதல் எண்பது நாட்களில் அறுவடையாகிறது. ஒன்று அல்லது இரண்டு மழை போதும். மிகவும் சிறப்பான ஊட்டங்களைக் கொண்டது. மண்ணின் வளத்தைப் பெருக்குவதில், அடுத்ததாகத் திணையவியல் (சூழலியல்) நோக்கில் பார்த்தால் புஞ்சைத் தானியங்கள் பெருமளவு வைக்கோல்களைக் கொடுப்பவை. அதன்மூலம் கால்நடைகளுக்கான உணவு உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. எண்ணற்ற பறவையினங்கள் இந்தத் தானியங்களை உண்டு வாழ்வதோடு, அந்த வயல்களுக்கு வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பூச்சிக் கட்டுப்பாட்டுக்கும் உதவுகின்றன.


ஆனால் மக்காச்சோளச் சாகுபடியிலோ, சீமைக் கருவேல மரத்திலோ பறவைகளுக்கான உணவு கிடைப்பதில்லை. ஒரு நிலத்தில் பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படும் உயிரியல் பன்மயம் (Biodiversity), இப்போது மறைந்துவிட்டது. இதன்மூலம் மாறுபட்ட சூழலைத் தாங்கி வளரும் பயிரினங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை மறைந்துவிட்டன. வெப்பமண்டல வானவாரி நிலத்தில் உயிர்மக் கூளத்தை (Bio-mass) அதிகரிக்கச் செய்வதன் மூலம் பெருமளவு கரியை மண்ணில் நிலைநிறுத்த முடியும். இந்தக் கரிம அகப்படுத்தல் (Carbon sequestration) காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது.



ஊட்டம் நிறைந்த தானியங்கள்
புஞ்சைத் தானியங்கள் உள்ளூர் பொருளியலில் மிக முதன்மையான பங்கை வகிக்கின்றன. இதனால் உணவுக்கான பணமும் உழைப்பும் உள்ளூரிலேயே சுழன்று வருகிறது. வெளிச்சந்தைக்கு அவை போவதில்லை. இந்தப் பயிர்களுக்கு வெளி இடுபொருட்களான உப்பு உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லாததால் பணம் வெளியேறுவதில்லை.



அது மட்டுமல்ல புஞ்சைத் தானியங்கள் மிகச் சிறந்த ஊட்டங்களைக் கொண்டவை. குறிப்பாக, குதிரைவாலி எனப்படும் தானியம் நார் ஊட்டத்தைப் பொறுத்தளவில் கோதுமையைவிட 6.8 மடங்கு கூடுதல் ஊட்டத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் அரிசியைவிட 13 மடங்கு கூடுதல் ஊட்டம் கொண்டுள்ளது. தினை என்ற தவசம் அரிசியைவிடக் கூடுதல் புரதத்தைக் கொண்டுள்ளது. குதிரைவாலியில் கோதுமையைவிட 5.3 மடங்கு கூடுதலாக இரும்பு ஊட்டம் உள்ளது, அரிசியைவிட 10 மடங்கு கூடுதலாக உள்ளது. இதேபோலப் பல ஊட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நமது மருத்துவர்களின் பரிந்துரை வரகரிசிச் சோறுதான்!


நெல் கவர்ச்சி
இந்திய/தமிழக சமூக வரலாற்றில் மக்களின் சிந்தனைப் போக்கிலும் பண்பாட்டு வெளியிலும் பெரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டது. இது வெறும் வேளாண்மையோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மொழி, நிறம், சாதி என்று பல தளங்களிலும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்குப் புறம்பான, சில மேட்டுக்குடிகளின் பண்பாட்டை நிலைநிறுத்துவதாக அமைந்தது.



'கருங்கால் வரகு அல்லது பிற உணவே இல்லை' என்று கூறிய பண்டை மரபுக்கு மாறாக 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' என்று ஏங்க வைக்கும் சூழல் ஏற்பட்டது. கருப்பாக இருக்கும் பனைவெல்லமான கருப்பட்டி இழிவாக மாறி, வெள்ளை நிறத்து 'சீனி' உயரிய பொருளாக மக்களால் அணுக வைக்கப்பட்டது. பொருள் வளம், ஊடக வலு, சிந்தனைத் திறம் என்ற எல்லா வசதிகளையும் கையில் வைத்துக்கொண்டு ஒரு பெரும் பண்பாட்டு மாற்றம் நிகழ்த்தப்பட்டது. அதில் ஒன்றுதான் நெல்லரிசியின் மீதான கவர்ச்சி.


(அடுத்த வாரம்: நம் உணவை நாம் தீர்மானிக்கிறோமா?) 
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் 
தொடர்புக்கு: [email protected]


நன்றி - த இந்து

0 comments: