Sunday, January 10, 2016

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »
காலை 11 மணி
Song of the Horned/ Owl Dau Huduni Methai Dir.: Manju Borah Bodo| 2015| 78’
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில், கடந்த 35 ஆண்டுகளில், இதுவரை 40,000 மக்கள் மதக்கலவரங்களாலும், கிளர்ச்சியாலும் மாண்டுள்ளனர். இதில் பலர் அப்பாவிப் பொதுமக்கள். ரைமாலி, இளம் பெண், அவளுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியும். அவள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவள் வேறு. தனித்துவிடப்பட்ட ஒரு வீட்டில் இருக்கும் அவள், எப்படி பிரிவினையால் தூண்டப்பட்ட வன்முறை அவளது வாழ்க்கையையும், அவள் காதலனின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதித்தது என்பதை நினைவுகூர்கிறாள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய, போடோ சமுதாயத்தின் நிலையை, அவர்கள் எதிர்கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது. போடோ மக்களின் நம்பிக்கையின் படி, இறந்து போனவரது உடல் ஆந்தை வடிவில் திரும்ப வரும், மரத்தில் நின்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கும்.
படம் இந்த நம்பிக்கையை எடுத்துக் கொண்டு அதை சுவாரசியமாக உருவகப்படுத்துகிறது நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாததால் படத்தை இயக்கமுடியாமல் ஒருவருடத்துக்கும் மேலாக இயக்குநர் மஞ்சுபோரா தவித்து வந்தார். கனடாவில் நடைபெற்ற மான்ட்ரில் உலகத் திரைப்படவிழாவில் திரையிட தேர்வான படம்.
மதியம் 2.30 மணி
The Black Hen/ Kalo Pothi Dir.:Min Bahadur Bham Nepal| 2015| 90’
நேபாளத்தின் வடக்குப் பகுதியில் அப்போதுதான் தற்காலிகப் போர் நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டது. போர்களால் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தினர் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். சிறுவர்களான பிரகாஷ் மற்றும் கிரண் என்னும் இரண்டு நண்பர்கள், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும், ஜாதியால், சமுதாய அந்தஸ்த்தால் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தாலும், பிரிக்க முடியாத அன்புடன் இருக்கிறார்கள். பிரகாஷின் அக்கா, அவனுக்குக் கொடுத்த கோழியை வளர்த்து, அதன் முட்டைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். ஒருநாள் எப்படியோ அந்தக் கோழி காணாமல் போகிறது. அதைக் கண்டுபிடிக்க எண்ணி, போரின் நீட்சி முடியாத, கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றுவிடுகிறார்கள்.
மாலை 5.00 மணி
Lens/ Dir.: Jayaprakash Radhakrishnan English | 2015| 105’
படத்தின் 70 சதவீதக் கதை, இரண்டு வெவ்வேறான இடங்களில் இருக்கும், இரண்டு நபர்களின் ஸ்கைப் உரையாடல்கள் வழியாக பயணிக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில், ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் கலந்து பேசப்படுகின்றன. சுவாரஸ்யம் மிகுந்த திரில்லர் படம்.
என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர் ஜெயப்பிரகாஷ். நடிப்பு வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். ''தொழில்நுட்ப வளர்ச்சியால், அறிமுகம் இல்லாத இரண்டு நபர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் எங்கே போய் முடிகிறது, அதன் விளைவுகள் என்னென்ன என்பதே கதை'' என்கிறார் ஜெயப்பிரகாஷ்.
மாலை 7.30 மணி
Ranna Silence/ Sokoot-e-Ranna Dir.:Behzad Rafiei Iran| 2015| 86’
ஒரு ஏழு வயது சிறுமி ககோலி மற்றும் அவள் வளர்க்கும் கோழியைப் பற்றியக் கதை. அந்த கோழி போடும் முட்டைகளில் வண்ண பென்சில்களால் வரைந்து விளையாடுகிறாள் ககோலி. அவளும் அவளது சகோதரனும் இணைந்து ககோலி போடும் முட்டைகளைப் பாதுகாத்து வருகின்றனர். ஒரு நாள் இரவு ககோலி ஒரு நரியால் தாக்கப்படுகிறாள்.


நன்றி - த இந்து

0 comments: