Sunday, January 10, 2016

கெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1?-உதயநிதி ஸ்டாலின். பேட்டி

நகைச்சுவைக் களத்தில் இருந்து ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால், ‘‘மூன்று படங்கள் நகைச்சுவைக் களத்தில் பண்ணியாச்சு. எனக்கே காமெடி பண்ணிப் போரடித்துவிட்டது. ஏதாவது புதுக் களத்தில் பயணித்தால் இன்னும் கத்துக்கலாம் என்று தேர்வு செஞ்ச படம்தான் 'கெத்து'’’ எனச் சிரிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.


ட்ரெய்லரைப் பார்த்தால் ஆக்ஷன் களத்தில் இனிமேல் பயணிப்பீர்கள் போல..


நான் எதையுமே முடிவு பண்ணவில்லை. எனக்குச் சரியாக வரும் என்ற படங்களை தேர்வு செய்து பண்றேன். ‘நண்பேண்டா' படப்பிடிப்பில் இருக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் திருக்குமரனை இந்தக் கதையோடு அழைத்து வந்தார். கதை எனக்கு புதுசாக இருக்கும் என்று நம்பி, உடனே பண்ணலாம் என்று ஒப்புக் கொண்டேன்.



இக்கதையில் வரும் அப்பா வேடம் நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் சத்யராஜ் சார் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநரிடம் கூறி, கதை சொல்ல அனுப்பிவைத்தேன். அவருக்கும் கதை பிடித்துவிட, பண்ணலாம் தம்பி என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் எடிட் பண்ணி இயக்குநர் முருகதாஸிடம்தான் காட்டுவோம். அவரும் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது, எங்களுக்கு ஒரு நல்ல படம் பண்ணிக்கிட்டு இருக்கிறோம்கிற தைரியம் வந்தது. இப்படத்தின் கதை விவாதத்தில் கூட முருகதாஸும் அவருடைய டீமும் நான்கு கலந்துகிட்டாங்க.




படத்தில் கெத்தானவர் நீங்களா, சத்யராஜா?
கண்டிப்பாக சத்யராஜ் சார்தான். பி.டி மாஸ்டர் கேரக்டர் பண்ணியிருக்கிறார். எங்கு அநியாயம் நடந்தாலும் அவருக்குப் பிடிக்காது. உடனே போய் தட்டிக்கேட்பார். அப்படிப்பட்டவர் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் படம்.



நான், விக்ராந்த், சத்யராஜ் சார் மூணு பேரும் பங்கேற்ற ஒரு சேசிங் காட்சி படத்தில் இருக்கிறது. கொடைக்கானலில் எட்டு நாட்கள் படமாக்கினார்கள். அங்க பயங்கர குளிர். அவ்வளவு குளிர்லயும் எங்க இருவரையும் விட வேகமாக ஓடுறார் சத்தியராஜ் சார். நானும் விக்ராந்துக்கும் காட்சிகள் இல்லாதப்போ கேராவேனில் ஏறி ஹீட்டர் போட்டு உட்காந்து விடுவோம். ஆனால் அவருக்கு அதெல்லாம் தேவைப்படல. அந்தளவுக்கு உடம்பைக் கட்டுக்கோப்பா வைச்சிருக்கார்.



ஆக்ஷன் களத்தில் ஒரு படம் பண்ணலாம் என்று தீர்மானிக்க காரணம் என்ன ?



மக்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. த்ரில்லர், க்ரைம் த்ரில்லர், பேய் படங்கள் என மக்கள் விரும்புகிறார்கள். ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல், வேறு வேறு களங்களில் பயணிக்கலாம் என்பதுதான் என் எண்ணம். சந்தானம் கூடவே சுத்திகிட்டு இருக்கார், அவரை விட்டால் இவருக்கு வேற ஆள் கிடையாது என்று சில விமர்சனங்கள் வந்தது. ஒரு இரண்டு படம் சந்தானம் இல்லாமல் நடிச்சுட்டு அப்புறம் அவரைக் கூப்பிட்டுக்கலாம்ன்னு முடிவு செஞ்சேன்.






‘கெத்து' படத்தைத் தொடர்ந்து ஒரு இந்திப் படத்தை மறுஆக்கம் பண்ணக் காரணம் என்ன?
‘இதயம் முரளி' என்ற படம்தான் அடுத்து நான் பண்ண வேண்டியது. முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்ததால், படத்தின் பட்ஜெட் கட்டுப்படியாகவில்லை. அதனால் அந்தக் கதையை அப்படியே வைத்துவிட்டு இந்திப் படத்தை ரீமேக் பண்ணலாம் என்றார் இயக்குநர் அஹ்மத். அவர் மீது எப்போதுமே எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு. குறைந்த பட்ஜெட்டில் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள், உடனே பண்ணலாம் என்று கேட்டேன். அப்போது ஒரு இந்தி படத்தின் டி.வி.டி.யைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். எனக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே உரிமையை வாங்கிப் பண்ணியிருக்கிறோம். அதுவும் எனக்கு முக்கியமான படமாக அமையும். 'கெத்து' படத்தில் சத்யராஜ் சார் என்றால், அஹ்மத் படத்தில் பிரகாஷ் ராஜ் சார் அசத்தியிருக்கிறார்.



சிறு முதலீட்டுப் படங்கள் நிறையப் பண்ணியிருக்கலாமே. ஏன் பண்ணவில்லை?
நான் சிறு முதலீட்டில் ஆசைப்பட்டுத் தயாரித்த படங்கள் சரியான வரவேற்பு பெறவில்லை என்பதுதான் காரணம். எனது படங்களுக்கு வரிச் சலுகை கிடைக்காது உள்ளிட்ட பல பிரச்சினைகள் அதற்குக் காரணமாக இருக்கு. சரி பெரிய நடிகர்களின் படங்கள் தயாரிக்கலாம் என்றால், என்னுடைய தயாரிப்பில் பெரிய ஹீரோக்கள் நடிக்கப் பயப்படுவார்கள். திரையுலக வியாபாரத்தில் எனக்கென்று ஒரு மார்க்கெட் இருக்கிறது. அதனால் நான் நடிக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன், வெளியிடுகிறேன். அவ்வளவுதான்.



எனக்கு க்ரைம் த்ரில்லர், வில்லத்தனம் கலந்த பாத்திரம் போன்ற படங்கள் எல்லாம் பண்ண ஆசையாக இருக்கிறது. புதுமையான கதைகளில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், பண்ணுவேன். அதே போல தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். திரையுலகம் நிறைய நஷ்டத்தில் போய் கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். படங்கள் நஷ்டமாகிக் கொண்டே இருக்கின்றன. பெரிய நடிகர்களின் சம்பளமும், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது.



தயாரிப்பாளர் சங்கம், வரிச்சலுகை உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் ஈடுபாடு காட்டுவதில்லையே. ஏன்?



வரிச்சலுகை விஷயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் தரப்பில் இருந்து வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை ஒத்தி வைத்துக்கொண்டே போகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எனக்கு எந்தவொரு உதவியும் கிடையாது. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. அவர்களே பல பிரச்சினைகளில் இருக்கிறார்கள். எனக்கு யார் மீதும் வருத்தமோ, கோபமோ கிடையாது. வரி சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி நான் பேச முடியாது.



அப்பா ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லி வருகிறார்களே..



தேர்தல் வருகிறது. மக்களிடையே அப்பாவின் உழைப்புக்கு நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது. ‘நமக்கு நாமே' திட்டத்தை நிறையப் பேர் கிண்டல் செய்கிறார்கள். அதை எல்லாம் மீறி மக்களிடையே சென்று மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்கிறார். அதை யாருமே இதுவரை பண்ணியது கிடையாது. சிலர் பண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய அளவுக்குப் பண்ணியதில்லை. அந்த உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


நன்றி - த இந்து

0 comments: