Thursday, January 07, 2016

ராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை -ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்


நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம்பெயர்கின்றனர்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு கேது என்றால் அஞ்சாதவர்களே இல்லை. எந்தக் கிரகத்தோடு சேர்கின்றார்களோ. எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனைத் தவறாமல் தருவதில் ராகு கேதுவிற்கு ஈடு இணை யாரும் இல்லை. ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான்.
பங்குவர்த்தகம், பந்தயம், லாட்டரி மூலம் பிச்சாதிபதியை லட்சாதிபதியாக்குவது ராகுவின் வேலையென்றால், பணத்தைப் பறித்து பரதேசியாக்கி மெய்ஞானத்தைத் தருவது, கேதுவின் செயலாகும். அரைகுறையாகப் படித்திருந்தும் அனுபவ அறிவால் மெத்தப் படித்த மேதாவிகளைத் தோற்கடிப்பவர் ராகு என்றால் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என ஆர்ப்பாட்டாம் இல்லாமல் அமைதியாக கருத்துகளை வெளிப்படுத்துபவர் கேது.
ராகுவால் ஏற்படப் போகும் பலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
சிம்மத்திலிருந்து தன் கதிர்வீச்சுகளால் உலகை ஆளவிருக்கிறார். மருத்துவத்துறை நவீனமாகும். மருந்துகளின் விலை குறையும். மரபணு ஆய்வுத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் அதிகமாகும். தேர்வில் புதிய முறை அமலாகும். பாடத்திட்டங்கள் மாறும். அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெற்றாலும் வேலைச்சுமையை அதிகம் சந்திக்க நேரிடும். புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமலாகும். ஓய்வு பெறும் வயதுவரம்பு குறைக்கப்படும். சூரியன் வீட்டில் ராகு அமர்வதால் புற்று நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவர்.
அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கும். உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். இன, மத அடிப்படையில் போர் மூளும். 08.01.2016 முதல் 10.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு மூட்டு வலி, எலும்புத் தேய்வு வந்து நீங்கும். 11.03.2016முதல் 15.11.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஒவ்வாமை, விபத்துகள், கணவன் மனைவிக்குள் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். 16.11.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அறுவை சிகிச்சை, திருமணப் பிரச்சினை, வழக்குகள், நிம்மதியற்ற போக்கு வந்து நீங்கும்.
கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்: 08.01.2016 முதல் 25.07.2017 வரை
கும்பத்தில் அமர்ந்து ஆட்சி செய்வார். சனி வீட்டில் கேது அமர்வதால் பரம்பரைப் பணக்காரர்களும், பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பாதிப்படைவார்கள். மதமாற்றம் அதிகரிக்கும். மக்களிடையே உழைக்கும் குணம் குறையும். பழைய தொழிற்சாலைகள் நலிவடையும். வழிபாட்டுத்தலங்கள் வன்முறையால் சேதமடையும். தேர்த் திருவிழா கொண்டாட்டங்கள் குறைந்து யோகா, தியானம், கூட்டுப்பிரார்த்தனைகள் அதிகரிக்கும்.
பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை உள்ள காலகட்டத்தில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காய்ச்சல், குடும்பப் பிரச்சினைகளால் மனநிம்மதியின்மை, பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை உள்ள காலகட்டத்தில் சதயம் நட்சத்திரக்காரர்கள் விபத்துகள், வழக்குகள் மற்றும் மரியாதைக்குறைவான சம்பவங்களைச் சந்திக்க நேரிடும். 21.03.2017 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சினைகள், பசியின்மை, முன்கோபத்தால் கணவன் மனைவி பிரிவு வந்து நீங்கும்.

மேஷம்

சொல்வன்மையும், செயல்திறனும் கொண்டவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு திடீர் யோகத்தையும், புகழையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உகந்த இடமல்ல. இருப்பினும் உங்கள் யோகாதிபதி சூரியனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களைக் குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் அமைதி நிலவும். எந்த ஒரு விஷயத்திலும் குழப்பம், தடுமாற்றம் வந்து செல்லும். பிள்ளைகள் எதிர்த்துக் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள்.
அவர்களின் உரிமையில் தலையிடாதீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை கவலைகள், வீண் விரயங்கள், களவு, பணப் பற்றாக்குறை, சிறுசிறு விபத்துக ளெல்லாம் வந்து போகும். உடல் எடை அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு சம்பளம் கூடும். தற்காலிகப் பணியில் இருந்தவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு அடுத்தடுத்த பயணங்களையும் செலவுகளையும் தந்த கேதுபகவான் இப்போது 11-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் இனி நடந்தேறும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை நினைத்தது நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தை ஆரோக்யம் சீராகும். புது வேலை அமையும். வீட்டில் மங்கள இசை முழங்கும்.
13.07.2016 முதல் 20.03.2017 வரை எதிலும் ஆர்வமின்மை, வீண் பகை, ஹீமோகுளோபின் குறைதல், நரம்புச் சுளுக்கு, தோலில் நமைச்சல், மறைமுக அவமானம் வந்து செல்லும். 21.03.2017 முதல் 25.07.2017 வரை அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

தெய்வீக சிந்தனை அதிகமுள்ளவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு கை, கால் வலி, கழுத்து எலும்புத் தேய்வு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டும். வீட்டை விரிவுபடுத்துவது அழகுப்படுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றிச் செலுத்துங்கள்
08.01.2016 முதல் 10.03.2016 வரை மனோபலம் கூடும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். 11.03.2016 முதல் 15.11.2016 வரை தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழிகளை யோசிப்பீர்கள். என்றாலும் இரத்த சோகை, சளித் தொந்தரவு வந்து செல்லும். 16.11.2016 முதல் 25.7.2017 படபடப்பு, கை, கால் மரத்துப் போகுதல் வந்து செல்லும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களுடைய ராசிக்குப் பதினோராவது வீட்டில் அமர்ந்துகொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்த கேது பகவான் இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். மூத்த சகோதரர்கள் வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர் தலையிட அனுமதிக்காதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
21.03.2017 முதல் 25.07.2017 வரை கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கொஞ்சம் சிரமப்படுத்தினாலும் மற்றொரு பக்கம் விடாமுயற்சியால் முன்னேற வைக்கும்.

மிதுனம்

பிறர் சுதந்திரத்தில் தலையிடாதவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை சிரமப்படுத்திய ராகுபகவான் இப்போது ராசிக்கு 3-ல் வந்தமர்வதால் இனி தன்னம்பிக்கை உண்டாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். நிலுவையிலிருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். புதிதாகத் தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். 08.01.2016 முதல் 10.03.2016 வரை மனோபலம் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
வியாபாரம் செழிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். பிரபலமான பகுதியில் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கேதுவின் பலன்கள்:
உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையைத் தந்துகொண்டிருந்த கேது இப்போது ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். அவருடன் மோதல்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கல்யாண முயற்சிகள் தாமதமாகும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்தாலும் சமாளிப்பீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தைக் காப்பாற்ற வேண்டி வரும்.
இந்த ராகு, கேது மாற்றம் உங்களை கடினமாக உழைக்க வைத்தாலும் வெற்றிக் கனியைச் சுவைக்க வைப்பதாக அமையும்.

கடகம்

விருப்புவெறுப்பு பாராமல் அனைவர்க்கும் உதவுபவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு தைரியத்தையும், காரிய வெற்றியையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்வதால் சச்சரவுகளில் சிக்குவீர்கள். எச்சரிக்கை தேவை. எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள்.
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பேருந்துகளில் செல்லும்போது படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். . கண்பார்வைக் கோளாறு ஏற்படக்கூடும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.
08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். அண்டை மாநிலத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும்.
ராகுபகவான் உங்கள் சுகலாபாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் தடைகள் நீங்கும். சிலர் வீடு மாறுவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்து வந்த சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். பால்ய நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு தந்தையாருடன் கசப்புணர்வுகளையும், வீண் செலவுகளையும் தந்த கேது இப்போது ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைவதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும்.
செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். என்றாலும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
13.07.2016 முதல் 20.03.2017 வரை முன்கோபம், அடிமனதில் ஒருவித பயம், பதற்றம், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, அலர்ஜி வந்துப் போகும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. 21.03.2017 முதல் 25.07.2017 வரை புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மழலை பாக்கியம் கிடைக்கும்.
வளைந்துகொடுத்தால் வானம் போல் உயரலாம்.

சிம்மம்

ஆக்கும் சக்தி அதிகமுள்ளவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்து கொண்டு பேச்சால் பிரச்சினைகளையும், குடும்பத்தினருடன் பிரிவுகளையும் ஏற்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் இனி பேச்சில் கனிவு பிறக்கும். உங்களுடைய பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். ஆனால் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.
இரும்பு மற்றும் கால்சியம் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே உணவில் பச்சை காய், கீரை, கனி வகைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். தூக்கம் குறையும். மின்னஞ்சல் மற்றும் கைப்பேசியில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பிற மொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. தொண்டை வலி, வேனல் கட்டி, உடல் உஷ்ணம் வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் உதவி கள் உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். மின்சாரம், கத்தரிக்கோல், நகவெட்டியைக் கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் அமர்ந்துகொண்டு நாலாவிதத்தில் உங்களை சிதறடித்த கேது இப்போது ராசிக்கு 7-ல் அமர்வதால் விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்சினையால் பிரிவுகள் வரக்கூடும். மனைவி உங்கள் குறைநிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மனைவிக்கு கர்பப்பை வலி, மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினைகள் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். மகனின் கோபம் குறையும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல மணமகன் அமைவார். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவர் உங்களைப் புரிந்துகொள்வார். பாதித் தொகை தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரர்களால் மதிப்புக் கூடும்.
இந்த ராகு கேது மாற்றம் ஆரோக்கிய குறைவையும், காரியத் தடங்களையும் தந்தாலும் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிய வைக்கும்.

கன்னி

கடமை உணர்வு அதிகமுள்ளவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு திக்குத் திசையறியாது திண்டாட வைத்த ராகுபகவான் இப்போது உங்கள் ஜென்ம ராசியை விட்டு விலகி 12-ம் விட்டிற்குள் இடம்பெயர்வதால் சோர்ந்து கிடந்த நீங்கள் இனி புத்துணர்ச்சியடைவீர்கள். கலையிழந்த உங்கள் முகத்தில் புன்னகை மலரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். உடல் ஆரோக்யம் சீராகும். வீரியத்தை விட்டு விட்டு காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள்.
குடும்பத்தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவார்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். என்றாலும் விரயஸ்தானமான 12&ல் ராகு மறைவதால் திட்டமிடாத பயணங்கள் அதிகமாகும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களும் இருந்துகொண்டேயிருக்கும். நீண்ட காலமாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர், நண்பர்கள் விட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச்செலவுகள் அதிகமாகும். அரசுக்கு முரணான விஷயங்களில் ஈடுபடாதீர்கள்.
ராகுபகவான் உங்கள் தனபாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துகொண்டு கணவன் மனைவிக்குள் பிரச்சி்னைகளை ஏற்படுத்திய கேதுபகவான் இப்போது ராசிக்கு 6-ம் இடத்தில் வந்தமர்வதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சாதுக்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். தாம்பத்தியம் இனிக்கும்.
மனைவிக்கு இருந்துவந்த உடல் நலக் குறைவு சரியாகும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் உங்களின் கனவு நனவாகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும். சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.
இந்த ராகு கேதுப் பெயர்ச்சி விவேகமான முடிவுகளால் எதையும் சாதிக்க வைக்கும்.


துலாம்

சொந்த முயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் நின்றுகொண்டு வீண் அலைக்கழிப்புகளைத் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டிற்குள் அமர்வதால் உங்களுடைய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். திடீர் பணவரவு உண்டு. எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் முக்கியப் பதவிக்கு தேர்ந்கெடுக்கப்படுவீர்கள். அதிக வட்டியுள்ள கடனை, குறைந்த வட்டிக்கு வாங்கி பைசல் செய்வீர்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 08.01.2016 முதல் 10.03.2016 வரை பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. மனைவி வழியில் செல்வாக்கு கூடும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை உங்கள் ரசனை மாறும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். என்றாலும் அலர்ஜி, கழுத்து வலி, தலைச்சுற்றல் வந்துபோகும்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படப் பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். காசோலையில் வங்கிக் கணக்கை சரிபார்த்த பிறகு கையொப்பமிட்டுத் தருவது நல்லது.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளைத் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். எனவே புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் கேது அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய நிலை உருவாகும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை உங்கள் மீது வீண் பழி, ஏமாற்றங்கள், பணம் மற்றும் பொருள் இழப்புகள், கணவன் மனைவிக்குள் மோதல்கள் வந்து செல்லும். வாழ்க்கை குறித்த விரக்தி ஏற்படும்.
இந்த ராகு கேது மாற்றம் உங்களைச் சின்ன சின்ன சுகங்களை இழந்து பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும்.

விருச்சிகம்

தியாகத்தால் எதையும் சாதிப்பவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்துகொண்டு எதிலும் வெற்றிகளைத் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் சவாலான வேலைகளையும் சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சிலர் பழைய வீட்டைப் புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வெளிவட்டாரம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆன்மிகவாதிகளின் ஆசியைப் பெறுவீர்கள்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திரும்பத் தந்து நிம்மதியடைவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவார்கள். ஆபரணச் சேர்க்கை நடக்கும்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை அரசு காரியங்கள் விரைந்து முடியும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை திரும்பி வராது என்று கருதிய பணம் கைக்கு வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டாகும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு வீண் குழப்பங்களையும், உறவினர் பகையையும் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். அலைபாய்ந்த மனசு இனி அமைதியாகும். அடிக்கடி கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். 4-ல் ராகு நிற்பதால் தாயாருடன் கசப்புணர்வுகள் வரும். தாயாருக்கு கழுத்து, முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை பணவரவு திருப்தி தரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள். 13.07.2016 முதல் 20.03.2017 வரை குடும்பத்தில் சலசலப்புகள், மந்தம், மறதி, உடம்பில் இரும்புச் சத்து குறைதல் எல்லாம் வந்துப் போகும்.
இந்த ராகு, கேது மாற்றம் முணுமுணுக்க வைத்தாலும் திட்டமிடுதல் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

தனுசு

பகட்டான வாழ்க்கைக்கு மயங்காதவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு வேலைச்சுமையையும், அவமானங்களையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்களுக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தந்தையாருடன் மனக்கசப்பு வந்துச் செல்லும். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். வீண் கவுரவத்திற்காகச் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். குலதெய்வப் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்களுடைய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை முயற்சிகளுக்கு நல்ல பதில் வரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். அயல்நாடு சென்று வருவீர்கள். 11.03.2016 முதல் 15.11.2016 வரை பழைய கடன் பிரச்சினையால் சேர்த்து வைத்த கவுரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.
கேதுவின் பலன்கள் :
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துகொண்டு தாயாருக்கு மருத்துவச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்வதால் தன்னம்பிக்கை பிறக்கும். தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குவீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். இளைய சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். 08.01.2016 முதல் 12.07.2016 வரை உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்து கிடைக்காதென்று கருதிய தொகை கைக்கு வரும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை மனசஞ்சலம், நிம்மதியின்மை, எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும்.
21.03.2017 முதல் 25.07.2017 வரை மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உடன்பிறந்தவர்கள் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்களும் இருக்கும்.
இந்த ராகு கேது மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் எதிர்பாராத வெற்றிகளையும் தரும்.

மகரம்

நீதிக்குத் தலை வணங்குபவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துகொண்டு தந்தையாருடன் மனவருத்தங்களையும், செலவுகளையும் தந்த ராகுபகவான் இப்போது 8-ல் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். உங்களுடைய அடிப்படை நடத்தைகள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தந்தையாருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். எளிதாக முடிக்க வேண்டிய சில விஷயங்களைக் கூட இரண்டு, மூன்று முறை அலைந்து முடிப்பீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும்.
வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தம்பதிகளுக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி பின்னர் நெளிய வேண்டாம். 08.01.2016 முதல் 10.03.2016 வரை தலைக்குனிவான சம்பவங்கள் நிகழக்கூடும். விதிகளுக்கு அப்பாற்பட்டு யாருக்கும் உதவ வேண்டாம்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை பணம் வரும். புது வேலை கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 16.11.2016 முதல் 25.7.2017 வரை திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு புது முயற்சிகளில் வெற்றியைத் தந்த கேது இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிற்குள் அமர்வதால் இனி அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். குடும்பத்தினருடன் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. பல் வலி, காது வலி, பார்வைக் கோளாறு வந்துச் செல்லும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை சுபச்செலவுகள் அதிகமாகும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 13.07.2016 முதல் 20.03.2017 வரை வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வழக்கு சாதகமாகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.
இந்த ராகு கேது மாற்றம் பக்குவப்படுத்துவதுடன், வாழ்க்கையின் சூட்சுமத்தை உணர்த்துவதாக அமையும்.

கும்பம்

வாரி வழங்கும் வள்ளல்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை ராசிக்கு 8-ல் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்கான சோதனைகளைத் தந்த ராகுபகவான் இப்போது 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறையும். பிரிவுகள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தால் சச்சரவுகள் வரும்.
பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைகூர்ந்து பேசாதீர்கள். மனைவிக்கு அறுவை சிகிச்சை, ஃபைப்ராய்டு பிரச்னை, நெஞ்சு வலி வந்துப் போகும். குடும்பத்தினரிடம் எதையும் மறைக்க வேண்டாம். அவர்களுக்குத் தெரியாமல் பெரிய முடிவுகளோ, முயற்சிகளோ எடுத்து சிக்கிக்கொள்ளாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. அவ்வப்போது உறக்கமில்லாமல் போகும். திருமணம் தள்ளிப் போய் முடியும். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தை பிரிய வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை.
08.01.2016 முதல் 10.03.2016 வரை தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். அரசால் அனுகூலம் உண்டு. என்றாலும் வேனல் கட்டி, உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வந்து போகும். மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கும். 11.03.2016 முதல் 15.11.2016 வரை வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு வாங்க கட்ட கடன் கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு நீங்கள் சாதாரணமாகப் பேசினாலே பிரச்சினையில் சிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்தமர்வதால் இனி பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தடுமாறிக்கொண்டிருந்த உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ராசிக்குள் கேது அமர்வதால் உடல் நலம் பாதிக்கும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள் மற்றும் அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. பாராம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள். 08.01.2016 முதல் 12.07.2016 வரை பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 21.03.2017 முதல் 25.07.2017வரை பரபரப்பாகக் காணப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.
இந்த ராகு கேது பெயர்ச்சி ஓய்வின்றி உழைக்க வைப்பதுடன் தன் கையே தனக்குதவி என்பதை உணர வைக்கும்.

மீனம்

சமாதானத்தை விரும்புபவர்களே!
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களுடைய திறமையை முடக்கிய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் வந்தமர்வதால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சச்சரவுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள்.
அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிக்கு இருந்துவந்த நோய் வெகுவாகக் குணமடையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்கு வர்த்தகம் மூலமாக பணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொள்வீர்கள். ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சிலருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். அரசாங்க பதவி சிலருக்குத் தேடி வரும். ஆனால் சளித் தொந்தரவு, கண் எரிச்சல், செரிமானக் கோளாறு வந்து போகும்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை வேலைச்சுமையால் டென்ஷன், காரியத் தடங்கல், ஆடம்பரச் செலவுகள் என வந்து போகும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். பணவரவு உண்டு.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து கொண்டு பல இன்னங்களையும், சுகவீனங்களையும் தந்த கேது இப்போது 12-ம் வீட்டில் சென்று மறைவதால் மருந்து, மாத்திரைகளிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். ராஜதந்திரமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். தோற்றப் பொலிவு கூடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் நினைத்தது நிறைவேறும். புது வேலை கிடைக்கும். 13.07.2016 முதல் 20.03.2017 வரை இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். அவ்வப்போது தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணருவீர்கள்.
சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
இந்த ராகு கேது மாற்றம் எல்லா வளங்களையும் தருவதுடன், எதையும் சாதிக்க முடியும் என்ற தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக அமையும்.


thanx - the hindu

0 comments: