Monday, January 25, 2016

மூன்றாம் உலகப்போர்-திரை விமர்சனம்:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 2025-ல் மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் அது எப்படியிருக்கும் என்ற கற்பனைதான் இந்தப் படத்தின் கதைக்கரு. எதிர்காலத் தில் பயணிக்கும் இந்தக் கதைக்கு இயக்கு நர் எவ்வாறு உயிர் கொடுக்க முயன் றிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.


எல்லையில் பணியாற்றும்போது சீன ராணுவத்தின் கையில் சிக்குகிறார் இந்திய ராணுவ மேஜரான சரவணன் (சுனில்குமார்). இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 100 சீன ராணுவ வீரர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் போனதால் அவர்களைப் பற்றிய உண்மையை சரவணன் மூலம் அறியத் துடிக்கிறார் சீன ராணுவத் தளபதி (வில்சன்). ராணுவத்தின் துன்புறுத்தல்களில் சிக்கித் தவிக்கும் சரவணனின் நினைவுகள் சிறகடிக்கின்றன.



ஒரு மாத விடுமுறையில் தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்து மதிவத னியை (அகிலா கிஷோர்) திருமணம் செய்துகொண்டு தனது முகாமுக்குத் திரும்பியவர் தற்போது தப்பிச் செல்ல முடியாத பாதாளச் சிறையில் இருக்கிறார். ஒரு பக்கம் மனைவியின் நினைவுகள்; இன்னொரு பக்கம் கொடூரமான ராணுவச் சித்திரவதைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தச் சிறையிலிருந்து சரவணனால் தப்பிக்க முடிந்ததா? 100 சீன வீரர்கள் பற்றிய உண்மை என்ன? இந்தியா மீது சீனா தொடுக்க நினைக்கும் அந்தப் புதிய யுத்தம் என்ன? சரவணனின் மனைவியும் அவரது உறவினர்களும் அவர் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்களா? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தருகிறது திரைக்கதை.



‘மூன்றாம் உலகப்போர்’ என்ற ஈர்ப்பு மிக்க தலைப்பை வைத்துக்கொண்டு அதற்கு நியாயம் செய்யும் கதைக் கருவைத் தேர்ந்தெடுத்ததற்காக அறிமுக இயக்குநர் சுகன் கார்த்தியைப் பாராட்டலாம். எதிரி நாட்டு ராணுவத்தின் சிறைக் கொட்டடியில் வாடும் நாயகனின் பின்னோக்கிய நினைவுகளிலிருந்து விரிந்து செல்லும் உத்தியுடன், பிரதான கதையோடு ஒட்டியும் விலகியும் சித்தரிக்கும் திரைக்கதை உத்தியை யும் இயக்குநர் நன்கு பயன்படுத் திக்கொண்டிருக்கிறார். ஆனால், கதை யில் எந்தப் பகுதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் தெளிவில்லாமல் போனதால் கதை, கதை சொல்லும் உத்தி ஆகியவற்றின் தாக்கம் குறைந்துவிட்டது.



இந்தியா மீது சீனா தொடுக்கவிருக்கும் அந்த மூன்றாம் உலக யுத்தம் எத் தகையது என்பதை வசனங்களின் வழியாகவே விவரிப்பதைத் தவிர்த் திருக்கலாம். ஒரு நாட்டில் அதன் எதிரி நாட்டால் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தமானது சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைச் சில காட்சிகள் மூலம் நிறுவி, கதையின் நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் பயத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கலாம்.



விடுமுறையில் வந்து திருமணம் செய்துகொண்ட ராணுவ மேஜருக்கும் அவரது மனைவிக்குமான 20 நாட்கள் உறவு அழுத்தமாகச் சித்தரிக்கப் படாததால் மதிவதனி மற்றும் அவரது குடும்பத்தாரின் இழப்பும் சோகமும் பார்வையாளர்களிடம் அழுத்தமான சலனத்தை ஏற்படுத்தவில்லை.


சீன ராணுவத்தின் பாதாளச் சிறை யிலிருந்து மேஜர் சரவணன் தப்பிக்கும் அபத்தமான வழிமுறையும் காட்சிகளும் கேலிக்கூத்தாக மாறிவிடுகின்றன. 2025-ல் நடக்கும் ஒரு கதையில் தனக்குப் பிடித்த பிரபலங்கள் என்று மகேந்திர சிங் தோனியையும், சோட்டா பீம் கதாபாத்திரத்தையும் கதாநாயகி சுட்டிக் காட்டுகிறார்.


இந்தக் குறைகளையெல்லாம் மீறி, நட்சத்திரத் தேர்வு, கலை இயக்கம், கிராஃபிக்ஸ் காட்சிகளின் நேர்த்தி போன்றவை நம்மை இருக்கையில் அமர்த்தி வைக்கின்றன.


மேஜர் சரவணனாக நடித்திருக்கும் சுனில்குமாரின் உயரம், உருவம், நடிப்பு, வசன உச்சரிப்பு என எல்லாமே கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன. சிறையில் படும் வேதனைகளையும், நூதனமான சித்ர வதையால் கடைசியில் அவர் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் அகிலா கிஷோருக்கு அதிக வேலை இல்லை என்றாலும் பாத்திரப் பொருத்தம் கச்சிதம். சீன ராணுவ அதிகாரியாக வரும் வில்சன் பயமுறுத்தினாலும் பல நேரங்களில் நகைச்சுவை நடிகர் இல்லாத குறையைப் போக்கிவிடுகிறார்.


போர் சித்தரிப்பு ஆவணப்படங்களை மூலமாகக் கொண்டு, தொடக்கக் காட்சிகளை விறுவிறுப்பாக கிராஃபிக்ஸ் கொலாஜ் செய்தது, பாதாளச் சிறை, நீர்முழ்கி 2025-ன் கற்பனையான ராணுவக் கருவிகள் ஆகியவற்றைச் சித்தரிப்பதில் எபெக்ட்ஸ் அன்ட் லாஜிக் நிறுவனத்தின் கிராஃபிக்ஸ் பணி தரமாகவும் நம்பகத்தன்மை யுடனும் இருக்கிறது. வேத்சங்கரின் இசையில் பாடல்கள் எதுவும் எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை தேறுகிறது.


ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு போர் தொடுப்பதற்கான வித்தியாசமான வழிமுறைகளை அழுத்தமாக உணரச் செய்வதில் தவறிவிட்டாலும், போர் என்பது ராணுவங்களுக்கிடையில் மட்டும் நடப்பதல்ல என்பதை உணர வைப்பதிலும் இந்திய மக்கள் பல விதங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற செய்தியைக் கடத்துவதிலும் படம் வெற்றி பெற்று விடுகிறது.


the hindu

0 comments: