Saturday, January 09, 2016

தற்காப்பு-திரை விமர்சனம்

காவல்துறை நிகழ்த்தும் மோதல் (என்கவுன்ட் டர்) கொலைகளைப் போற்றிப் புகழும் படங் களைப் பார்த்து வாய் பிளந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது இந்த அசலான ‘என்கவுன்ட்டர்’ படம். என்கவுன்ட்டர்கள் மற்றும் போலி என்கவுன்ட்டர் களின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல், வணிகப் புள்ளிகளின் சுயநல வலைப்பின்னலை அப்பட்டமாக காட்டியிருக்கிறது தற்காப்பு.


புகழ்பெற்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சக்திவேல். தனது சக அதிகாரிகள் இருவருடன் இணைந்து செயல்பட்டு மேலதிகாரிகள் தரும் கட்டளைகளுக் கேற்ப 18 மோதல் கொலைகளை நடத்தியவர். பல கொலைகளைச் செய்த குற்றவாளியான ரியாஸ் கானை என்கவுன்ட்டர் செய்யும் பணி அவருக்குத் தரப்படுகிறது. ரியாஸ் கான் செய்த கொலைகள் அரசியல்வாதிகளுக்காகச் செய்யப்பட்டவை என்பது சக்திக்குத் தெரியாது. தனக்களிக்கப்பட்ட பணியைச் செவ்வனே முடிக்கிறார். நிஜ மோதல் போன்ற தோற் றத்தை உருவாக்கிப் போலி மோதல் கொலையை அரங்கேற்றிவிடுகிறது அவரது அணி. கொடூரமான ஒரு கொலைகாரனைக் கொன்றுவிட்ட திருப்தியுடன் இருக்கும் அவர்களுக்கு மனித உரிமை ஆணையத் தின் விசாரணை மூலமாக நெருக்கடி ஏற்படுகிறது.மனித உரிமை ஆணைய அதிகாரியான சமுத்திரக்கனி மூவரையும் தீவிரமாக விசாரணை செய்கிறார். அவர்கள் செய்தது போலி மோதல் கொலைதான் என்பதை அம்பலப்படுத்துகிறார். அதற்கான உத்தரவு யாரால், ஏன் கொடுக்கப்பட்டது என்பதையும் அவர்களுக்கு உணரவைத்து, நீதிமன்றத் தில் உண்மையைச் சொல்லும்படி வலியுறுத்துகிறார். இதை மோப்பம் பிடித்துவிடும் உயரதிகாரிகள் இந்த மூவரையும் தீர்த்துக்கட்ட முடிவுசெய்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க இவர்கள் முயலும்போது அப்பாவிப் பொதுமக்கள் நால்வர் நடுவில் சிக்கிக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை.அதிகார வர்க்கத்தின் சுயநலம், வணிக உலகின் பணபலம், இவர்களுக்குத் தலையாட்டி அனுகூலம் பெறும் காவல் துறையினர் ஆகியோரின் திட்டமிட்ட சதியே மோதல் கொலைகளுக்குப் பின்னால் இருக்கின்றன என அப்பட்டமாகச் சொல்லும் அறிமுக இயக்குநர் ஆர்.பி. ரவியைப் பாராட்ட வேண்டும். இந்தக் கொலை பாதக நாடகத்தில் நேர்மையான பல அதிகாரிகள் பலிகடாவாகிறார்கள் என்பதையும் காட்டியிருக்கிறார்.கொலைக்குத் தேர்வு செய்யப் பட்ட இடத்திலிருந்து கதையை முன்னும் பின்னுமாக நகர்த்தித் திரைக்கதை அமைத்த விதம் சுவாரஸ்யமாக உள்ளது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் காதல் ஜோடிகளின் துணைக் கதைகள் சுவாரஸ்யமற்ற விதத்தில் சொல் லப்பட்டிருப்பது தொய்வை ஏற்படுத்துகிறது. கொலைகள், திட்டங்கள், விசாரணைகள், வேட்டைகள் ஆகியவை அடங்கிய பகுதிகள் கச்சிதமாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைந்து வேகமாக நகருகின்றன. காதல் கதைகள் வரும் பகுதிகள் சப்பென்று இருக்கின்றன.


பல மோதல் கொலைகளை நிகழ்த்திய சக்திவேலின் மனம் இந்தக் கொலைகளின் பின்னணி தெரிந்ததும் மாறுகிறது. தன்னைக் கொல்ல வருபவர்களைக் கொல்வதற்கான வாய்ப்பு இருந்தும் கொல்லாமல் விடுவது அந்த மனமாற்றத்தின் அடையாளமாக மனதில் நிற்கிறது.சரியான கதையும் திறமையை வெளிக்காட்டும் கதா பாத்திரமும் அமையாமல் தத்தளித்துவந்த சக்திவேல் வாசு, தனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தொடக் கத்தில் கம்பீரமும் திட்டமிடலும் தெறிக்கும் என்கவுன்ட் டர் அதிகாரியாக வரும் சக்தி, சமுத்திரக்கனியின் விசாரணையில் சிக்கி ‘தாம் செய்தது’ அத்தனையும் அப்பட்டமான கொலைகள் என்பதை உணர்ந்து துடிக் கும்போது அவர் நடிப்பு முற்றிலும் மாறுபட்ட பரி மாணத்தை வெளிப்படுத்துகிறது. சமுத்திரக்கனியின் நடிப்பும் அவரது விசாரணையில் மிளிரும் நுணுக்கங் களும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
திரைக்கதையை முன்னும் பின்னுமாகக் கலைத்துப்போட்டுச் சொல்லும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்குத் தேவையான ஒளிப்பதிவைச் சரியாகக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த். பின்னணி இசை அதிகம் பேச வேண்டிய படத்தில் அதன் பங்கை மிகுந்த உழைப்புடன் வழங்கியிருக்கிறார் எஃப்.எஸ். பைசல்.‘குற்றவாளி தப்பிக்க முயன்றபோது நடந்த சண்டை யில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். எனவே தற் காப்புக்காக போலீஸ் சுட வேண்டி வந்துவிட்டது. இந்தச் சண்டையில் குற்றவாளி இறந்து போனார்’ என்று செய்திகளில் படித்த பார்வையாளர்களுக்கு யாருடைய தற்காப்புக்காகச் சுடப்பட்டது என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறது இந்தப் படம். உள்ளடக்கம், உரையாடல் மட்டு மல்லாமல் படமாக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்ந்த தரத்துடன் வந்திருக்கிறது. பிரதான கதையில் செலுத்தியிருக்கும் கவனத்தில் சிறிதளவாவது கிளைக் கதைகளில் செலுத்தியிருந் தால் படம் மொத்தமாகக் கவர்ந்திருக்கும்.


நன்றி - த ஹிந்து

0 comments: