Wednesday, January 13, 2016

'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதிகம் ?-சசிகுமார் சிறப்பு பேட்டி

  • இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
    இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
  • ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
    ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
சசி இப்போது சன்னாசி! தாடி, மீசை, தடாலடி பார்வை என ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக குருநாதர் பாலாவின் வார்ப்பில் கூடுதல் மிரட்டலைக் கொடுக்கிறார், சசிகுமார். மணிரத்னம் கணக்காக, படம் வெளியாகும்போது மட்டுமே தரிசனம் கொடுக்கும் சசிகுமார், ஒரு பின்னிரவு நேரத்தில் ‘தி இந்து’வுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி:
பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த நீங்கள், இப்போது அவர் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறீர்கள். இந்த திருப்பம் எப்படி இருக்கிறது?


என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. ‘சேது’வில் உதவி இயக்குநராக என்னை சேர்த்துக்கொண்ட பாலா அண் ணன், ‘தாரை தப்பட்டை’யில் நாயகனாக்கி இருக்கிறார். சினிமாவில் ஒரு சிஷ்யனுக்கு குருநாதர் கொடுக்கும் பெரிய வரம் இது. என் சந்தோஷத்தையும் மனநிறைவையும் எந்த வார்த்தையாலும் சொல்லிவிட முடியாது. ஒரு பெருமூச்சு மாதிரி எல்லா நெகிழ்ச்சியும் என் நெஞ்சுக்குள் அப்படியே இருக்கு. நம்மளோட பழக லட்சம் பேர் கிடைப்பாங்க. ஆனா, நம்மளை நெறிப்படுத்த, வார்த் தெடுக்க சிலர் வாய்க்கிறது அபூர்வம். பாலா அண்ணன் அபூர்வம். ஒரு நடிகனா அவரோட ஒவ்வொரு அசைவிலும் நிறைய கத்துக்கிட் டேன்.‘இங்க பார்... அப்படித் திரும்பு... கண்ணை சிமிட்டு’ன்னு சொல்வார். அவர் சொன்னதை அப்படியே செய்வேன். அதை திரையில் பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய மாயாஜாலத்தை செய்திருக்கிறார்னு தெரியும். ‘தாரை தப்பட்டை’க்கு அண்ணன் அழைச்சப்ப ஒரு நடிகனா நான் போய் நிற்கலை. அங்கேயும் ஒரு உதவியாளராத்தான் நின்னேன். ‘நடிகன்’, ‘தயாரிப்பாளர்’ங்கிறது எல்லாம் மத்தவங்க எனக்குக் கொடுக்கிற அடைமொழி. என்னைக்குமே அவர் பின்னால கைக்கட்டி நிற்கிற, அவர் சொல்றதை முதல் ஆளா செய்யுற ‘முந்திரிக்கொட்டை’ உதவியாளன் நான். இது போதும் எனக்கு.


இளையராஜாவின் 1000-வது படத்தில் நீங்கள் ஹீரோ? இதை எப்படி பார்க்கிறீங்க?


நல்லது கெட்டது எதுவானாலும் ஒவ்வொரு மனுசனுக்கும் இளையராஜா சிநேகிதனா இருக்கார். எல்லாத்துக்கும் நாம ராஜா சாரைத்தான் தேடுறோம். அவர் சோகத்தை கழுவுறார். காதலிக்க வைக்கிறார். நம்பிக்கையை உண்டாக்குகிறார். நாடி நரம்புகளில் புகுந்து என்னென்னமோ செய்கிறார். சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். ‘ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்’னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகன் சொல்லிட்டு போயிட்டான். தலைவாழை இலை விருந்தில் ஒரு துவையல் மாதிரி ராஜா சாரோட 1000-வது படத்தில் நான் இருக்கிறது சிலிர்ப்பா இருக்கு.


பாலாவின் படம் என்றாலே வருடக்கணக்கில் ஷூட்டிங் இழுக்கும். அதேபோல்தான் ‘தாரை தப்பட்டை’ படமும். ‘தெரிந்தே சிக்கிட்டாரே சசிகுமார்’னு சினிமா உலகம் முழுக்க பேச்சு இருந்துச்சே?


சினிமா உலகில் ஆயிரம் பேசுவாங்க. அதே சினிமா உலகில் உள்ளவங்கதான் பாலா சார் படத்தில் ஒரு இடத்திலாவது தலை காட்ட முடியாதான்னு தவிச்சுட்டு இருக்காங்க. அவர் படத்தில் ஹீரோவாகிற வாய்ப்பு எனக்கு சீக்கிரமே கிடைச்சிடுச்சு. இதைத் தவறவிட நான் விரும்பலை. தவில், நாகஸ்வரம், டான்ஸ்னு நான் எல்லாத்தையும் மெனக்கெட்டு கத்துக்கிட்டேன். அதில்தான் கொஞ்சம் லேட் ஆனது. படம் எவ்வளவு திருப்தியா வந்துகிட்டு இருக்குங்கிறதை நேர்ல பார்த்தவன் நான்.


காலையில் ஏழு மணிக்கெல்லாம் முதல் ஷாட் வைப்பார். ஒரு நாளைக்கு ரெண்டு ஸீன் முடியும். 85 நாளில் முடிஞ்சிருக்க வேண்டிய படம் அது. எல்லாரும் பேயா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறப்ப நானும் என்னோட ஈடுபாட்டை காட்டணும் இல்ல? அதனால ஒரு சண்டைக் காட்சியில் ரொம்ப மெனக்கெட்டு நடிச்சேன். மூட்டு நழுவி துடிச்சுப் போயிட்டேன். என் கை சரியாக நாலு மாசம் ஆச்சு. அதுவரைக்கும் பாலா அண்ணன் காத்திருந்தார். அப்படியிருக்க, அவர்தான் தாமதம் செஞ்சார்னு எப்படி சொல்ல முடியும். ‘தாரை தப்பட்டை’ தாமதத்துக்கு முழுப் பொறுப்பும் நான்தான்.படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருப் பதற்கு வன்முறை காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். ‘சுப்பிரமணிய புரம்’ தொடங்கி ‘ஈசன்’, ‘போராளி’ என உங் கள் படங்களில் தெறிக்கும் ரத்தத்துக்கு அளவே இல்லை. இது உங்களுக்கு சலிக்கவில்லையா?


யதார்த்தம்தான் என்னோட கதை. அப்படியிருக்க நாட்டுல நடக்குற வன்முறையை மட்டும் நான் எப்படி வடிகட்ட முடியும்? தினமும் பேப்பர் படிக்கும் போது தெறிக்காத ரத்தமா என் கதையில் தெறிக்குது? நடப்பில் இல்லாத கொடூரத்தை நான் காட்டியிருக்கேனா? அப்பட்டமா நடக்குற கொலையை இன்னிக்கு சேனல் களில் நேரடியாவே காமிக்க ஆரம்பிச் சிட்டாங்க. வாட்ஸ்அப்பில் பரவுற வன் முறை ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் வந்திடுச்சே. அதை எப்படித் தடுப்பீங்க? வன்முறையை என் படங்களில் நான் விரும்பி வைக்கலை. விரும்பாததால்தான் வைக் கிறேன்.நிர்பயா கொலைக் குற்றவாளி விடுதலை ஆகிறார்... பெண்களை கொச்சைப்படுத்தும் பாடல்கள் வைரலாகின்றன‌... பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறதே... இவையெல்லாம் உங்கள் பார்வையிலோ, படைப்பிலோ வராதா?


நீங்க ‘ஈசன்’ பார்க்கலையா? தலைநகர் சென்னைக்கு வரும் ஓர் இளம்பெண் எப்படி சின்னாபின்னம் ஆகிறாங்கிறதுதான் கதை. ‘ஈசன்' வந்தப்ப ‘இப்படி நடக் குமா'ன்னு கேட்டவங்க‌, இன்னிக்கு ‘இப்படி நடக்கலாமா?’ன்னு கேட்கிறாங்க.


பெண் கள் மீதான வன்முறையும் கொடூரமும் ஒவ் வொரு இருட்டுக்குள்ளயும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. அதில், வெளியே வர்றதை மட்டும்தான் நாம பேசுறோம். நாகரிகம் வளர்ந்த அளவுக்கு நம்மகிட்ட நல்லெண் ணம் வளரலை. நிர்பயா வ‌ழக்கில் மட்டும் இல்லை... பெண்களுக்கு எதிரான அத்தனை பிரச்சினையிலும் மகளிர் அமைப்புகள் மட்டும்தான் இறங்கிப் போராடுறாங்க. இது மகளிருக்கான பிரச்சினை மட்டும்தானா? மனுஷங்களா பிறந்த அத்தனை பேரும் களமிறங்கிப் போராட வேண்டிய பிரச்சினை இல்லையா?


நன்றி - த இந்து

0 comments: