Thursday, October 01, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி-1/10/2026 அக்டோபர் ரிலீஸ் படங்கள் முன்னோட்டப்பார்வை

 தீபாவளி,பொங்கல் போல காந்தி ஜெயந்திக்கு தமிழில் இவ்வளவு பெரிய படங்கள் வருவது இதுவே முதல் முறை.தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் அள்ளி விடலாம் என நினைக்கிறார்கள் போல.


1 பத்தா 
2 ஏழு கடல் ஏழு மலை
3 சிக்மா
4 அன்பில் அவன்
5 டிமாண்ட்டி காலனி 3
6 மிஸ்டர் பாரத்




1 பத்தா (காமெடி  கேங்க்ஸ்டர் டிராமா)


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம்(2012) என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன இயக்குநர் பாலாஜி தரணிதரன் அடுத்து சீதக்காதி (2018) படத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்தார்.இந்தப்படம் விமர்சன ரீதியாகப்பாராட்டுக்களைப்பெற்றாலும் கமர்சியலாக ஹிட் ஆகவில்லை.நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் படம் மாதிரி காமெடிப்படத்தைக்கொடுத்து விட்டு சீரியஸ் சப்ஜெக்ட்டை மக்கள் இவரிடம் எதிர்பார்க்கவில்லை போல.


இதே நிலை தான் கே பாக்யராஜூக்கு அன்று ஏற்பட்டது.முந்தானை முடிச்சு அதிரிபுதிரி ஹிட்டுக்குப்பின் ரிலீஸ் ஆன தாவணிக்கனவுகள் பிளாப் ஆனது. முந்தானை முடிச்சு கலகலப்பான ,ஜனரஞ்சகப்படம்.தாவணிக்கனவுகள் தங்கைகளைக்கரை சேர்க்கப்பாடுபடும் நாயகனின் சீரியஸ் கதை.எடுபடவில்லை.


இப்போது மூன்றாம் முறையாக இந்தக்கூட்டணி இணைகிறது.லிஜோ மோல் ஜோஸ் நாயகியாக நடிக்க அட்லி தயாரிக்க, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்.


ட்ரெய்லர்,டீசர் பார்க்கும்போது யூகிக்கும் கதை இது தான்.1980 களில் நடக்கும் கதை.நாயகன் ஒரு தாதா.ஊரே அவனைக்கண்டு பயப்படுகிறது.ஒரு பெண்ணைக்காதலித்து மணக்கிறான்.சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்குப்போகிறான்.அவனுக்குத்தன் மகள் மீது பாசம் அதிகம்.விசுவாசம் ,இரு முடி கட்டு ஆகிய படங்கள் போல அப்பா ,மகள் பாசத்தை முன்னிறுத்தி திரைக்கதை நகரும் போல் தெரிகிறது.


இதில் விஜய சேதுபதியின் கெட்டப் பெரிதாகக்கவரவில்லை.விக் என்பது அப்பட்டமாகத்தெரிகிறது.டி ராஜேந்தர் போல் ,ரஜினி போல் அவர் தலைமுடியைக்கோதுவது எடுபடவில்லை.

ஆனால் காமெடி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கும் போல் தோன்றுகிறது.


ரசித்த வசனங்கள்


1 எல்லாரும் அவரைக்கண்டா பயப்படுவாங்க,ஆனா அவர் எதுக்கும் பயப்பட மாட்டார்.

2 ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உன்னை அவங்க வெச்சு செய்யாமயா இருப்பாங்க?

3 அன்பே ,! ஆருயிரே!மத்தவங்கதான் என்னைப்பார்த்து பயப்படனும்.நீ பயப்படக்கூடாது,புரியுதா?

இல்ல,நீ பாடலைன்னா பயப்பட மாட்டேன்



2 ஏழு கடல் ஏழு மலை ( ரொமண்டிக் சைக்கலாஜிக்கல் திரில்லர்)



நிவின் பாலி ,சூரி , அஞ்சலி நடிக்கும் இந்தப்படம்   1/2/2024 அன்றே ரோட்டர்டாமில் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக்குவித்த படம்.

கற்றது தமிழ்(2007),பேரன்பு (2018)ஆகிய படங்களுக்குப் பின் இயக்குநர் ராம் + அஞ்சலி இருவரும் இணையும் படம் இது.


நேரம்(2013) ,ரிச்சி(2017) ஆகிய படங்களுக்குப் பின் நிவின் பாலி நடிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம் இது.

யுவன்சங்கர் ராஜா + இயக்குநர் ராம் காம்போவில். கற்றது தமிழ் ,தங்க மீன்கள் ,தரமணி ,பேரன்பு ஆகிய படங்களுக்கு ப்பின் இணையும் ஐந்தாவது படம் இது.


இது ஒரு வித்தியாசமான கதை.படம் முழுக்க ஓடும் ரயிலில் நடக்கிறது. 32 வயது சாதா மனிதனுக்கும்,8000 ஆண்டுகள் பழமையான அமரர் ஒருவருக்கும் ,ஒரு எலிக்கும்  நடக்கும் சந்திப்பில் அவர்கள் தலைவிதியே மாறுகிறது. காமெடியாக சொல்லப்பட்ட ஒரு feel குட் மூவி போல் தோன்றுகிறது.


கருடன்,விடுதலை பாகம் 1 ,கொட்டுக்காளி ,மாமன் ,மண்டாடி ஆகிய படங்களில் நாயகனாக நடித்த சூரி இதில் காமெடியனாக வருகிறார்.



ரசித்த வசனங்கள்


1 பையனுக்கு வாங்கி வெச்சிருந்த பிஸ்கெட்டை எலிக்குக்கொடுக்கிறான் ,ராஸ்கல்.


2 எலியோ ,யானையோ ,மரமோ ,புல்லோ எல்லாம் உயிர் தான்.மூத்தோரின் ஆன்மா தான்..


3 ஒரு சாதா நபர் ,மரணமற்ற மனிதர் இருவரும் சந்தித்தார்கள்


4 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.... சொல்டா


மாமலை போற்றுதும்

ழ நல்லா சொல்லு

சார்.மதுரைக்காரனுக்கு ல அவ்ளோ தான் வரும்.


5 உனக்கு என்ன வயசு ?

32 சார்

எனக்கு 8822

6. நாற்பது வயசு வரை வாழ்ந்தவங்களுக்கே மனசுக்குள்ளே என்னென்னெமோ ஓடுமில்ல?8000 வருசம் வாழ்ந்தவங்க மனசில் என்னென்ன ஓடுமோ?

7. 1441 ல் அமேசான் ல இருந்தியா?இல்லையா?

கிமு வா?கி பி யா?சார்

டேய்

சார் ,நான் அமேசான்ல ஆர்டர் கூடப்பண்ணலை சார்.




3 சிக்மா ( ஆக்சன் காமெடி  ஹெய்ஸ்ட்  திரில்லர்)


தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் என்பதால் இது கவனம் பெறுகிறது. தமிழ் ,தெலுங்கு இரு மொழிகளில் உருவான படம் இது.


சந்தீப் கிஷன் ,பரியா அப்துல்லா,ராஜூ சுந்தரம் ,சம்பத் ராஜ் ,ஷீலா ராஜ்குமார்  ஆகியோர் நடிக்க கேத் ரீன் தெரேசா கெஸ்ட் ரோலில் வருகிறார் 

இசை எஸ் தமன்.

ட்ரெய்லரைப்பார்க்கும்போது ஜனரஞ்சகமான ஒரு ஆக்சன் மசாலாப்படம் போல் தான் தோன்றுகிறது.

ரசித்த வசனங்கள்


1 நிலம்,நீர் ,காற்று,முக்கியமா பணம் எல்லாத்துக்கும் மதிப்பு நாளுக்கு நாள் ஏறிக்கிட்டுதான் போகுது.ஆனா நாம யார் என்பதற்கோ ,நம் உறவுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை.


2 இன்னைக்கு நீ உயிரோட இருக்கியேன்னு சந்தோஷப்படு.ஏதாவது ஆகி இருந்தா?


3 ஏதாவது பிராடு வேலை பண்ணப்போறீங்களா?

பயமா இருக்கு,சொல்லிடுப்பா.

4 இந்த சூதும் ,போதையும் ஒரு காய்னோட இரண்டு பக்கங்கள்.இந்த ரெண்டையும் கலந்து விட்டு கோடி கோடியா சம்பாதிக்கலாம்.


5 ஆடியன்சுக்கு என்ன தேவையோ அதைப்பண்ணு

6 அவர் பசிக்காக வேட்டையாட ஆரம்பிச்சார்.மொத்தக்காடே அவர் கண்ட்ரோலில் தான் இருந்தது


7 ஒரு படைப்பை உருவாக்குவது எவ்ளோ முக்கியமோ அதை விட முக்கியம் அதைப்பாதுகாப்பது...நான் கொஞ்சம் கொஞ்சமா அதை உருவாக்கிட்டேன் இனிமே நீ தான் அதைப்பார்த்துக்கனும்.

8 நான் நிறைய தோத்திருக்கேன்.ஆனா ஏமாந்து விட்டதில்லை.

4. அன்பில் அவன். ( ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர்)



போர்த்தொழில் ஹிட்டுக்குப்பின் அசோக் செல்வன் நடிப்பில்  அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கும் படம் இது. நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.பிளாஸ்ட் படத்தின் ஹிட்டுக்குப்பின் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளிவரும் படம் இது.

96 படப்புகழ் கோவிந்த் வசந்தா தான் இதில் இசை.

புதிதாகத்திருமணம் ஆன ஜோடி  ஒரு சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.

ட்ரெய்லரைப்பார்க்கும்போது முதல் பாதி காதல் கதை போலவும் பின் பாதி  பகத் பாசில் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்த வரதன் (2012) மலையாளப்படம் போலவும் உள்ளது.வரதன் படமே 1971ல் ரிலீஸ் ஆன Straw Dogs  என்ற படத்தின் அதிகாரப்பூரவமான தழுவல் தான்.



ரசித்த வசனங்கள்

1 சூர்யா,உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா?என்ன?

2 அவ என்னை விட வசதி.ஆனா எனக்காக எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு என் கூட ஓடி வந்தா.

3 சொன்னதை மட்டும் செய் ,அதிகப்பிரசிங்கித்தனம் எதும் செய்ய  வேண்டாம்.

4 ஒரு ரெண்டு நிமிசம் நிம்மதியா உக்காந்து அவ கூடப்பேசி எவ்ளோ நாள் ஆகுது தெரியுமா?

5 பிராமிஸ் செஞ்ச வாழ்க்கையை அவளுக்குக்குடுக்கனும்னு நான் ஆசைப்படறேன்..

6 இந்த சம்பவம் நடக்கும்போது  மேடம்  வீட்டில் தனியாவா இருந்தீங்க?

7 இன்னைக்கு நைட் எதிர்பாராத சம்பவம் நடந்து போயிடுச்சு.அதில் எனக்கும் வருத்தம் தான்.

8 தனியா இருக்கத்தான் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.

9 சார் ரொம்ப சாப்ட் டைப் போல.

10 நீ என்ன செஞ்சே?நான் என்ன செய்யறேன் என்று கணக்குப்போட்டு வாழ்வது இல்லை வாழ்க்கை.



5 டிமாண்ட்டி காலனி 3

  தமிழ். ஹாரர் திரில்லர்

அருள்நிதி ஒரு அண்டர்ரேட்டட் ஹீரோ. இவரது ஸ்க்ரிப்ட் செலக்சன் பிரமாதமாக இருக்கும்
மாமூல் மசாலாக்கதையில் நடிக்கவே மாட்டார் மாறுபட்ட க்ரைம் திரில்லர் ,திகில் ஊட்டும் ஹாரர் திரில்லர் தான் இவரது  சாய்ஸ்.

முதல் பாகம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி 26 கோடி ரூபாய் வசூல் செய்த மாபெரும் ஹிட் படம்.இரண்டாம் பாகம் 60 கோடி ரூபாய்  வசூல் செய்து சாதனை படைத்தது.இப்போது வர இருக்கும் மூன்றாம் பாகம் 75 கோடி வசூல் நிச்சயம் ,100 கோடி வசூல் லட்சியம் என்று சொல்கிறார்கள்.

இதில் அருள்நிதி,பிரியா பவானி சங்கர் ,அர்ச்சனா ரவிச்சந்திரன் ,மீனாட்சி கோவிந்தராஜன்,மியா ஜார்ஜ்  ,குருசோமசுந்தரம், ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

சாம் சி எஸ்  இசையில் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில்  அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

மிரட்டலான டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது




6 மிஸ்டர் பாரத். ( ரொமாண்டிக் காமெடி டிராமா)

ரஜினிகாந்த் + சத்யராஜ் நடித்த மிஸ்டர் பாரத் படக்கதைக்கும்,இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இயக்குநர்  லோகேஷ் கனகராஜின் சொந்தப்படம் இது.யூ ட்யூப் வீடியோ எடுக்கும் நாயகன் தன் நண்பனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க ஒரு கேங்க்ஸ்டரிடம்  போகிறான்.அவரையே  தயாரிப்பாளர் ஆக்கி படம் எடுக்கிறான். நொந்த படம் எடுப்பவன்  ஒரு சொந்தப்படம் எடுக்கும் காமெடிக்கதை இது

கிரேசி மோகன் ,எஸ் வி சேகர் பாணியில் உருவாகி இருக்கும் வார்த்தை  ஜாலக்காமெடிப்படம் இது.


ட்ரெய்லரே கலக்கல் காமெடியாக இருக்கிறது.


பாரத் ,சம்யுக்தா விஸ்வநாதன் ,பால சரவணன் ,நிதி பிரதீப் ஆதித்யா கதிர் ,லிங்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கதை ,திரைக்கதை ,இயக்கம் நிரஞ்சன்.

ட்ரெய்லரைப்பார்த்தபோது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வேன் வெச்சு எல்லாம் கடத்தி இருக்கோம் காமெடி டிராக் போல இதிலும் கடத்தல் காமெடி இருக்கும் போலத்தெரிகிறது.





ரசித்த வசனங்கள்



1 கொஞ்சம் லெங்க்த்தியா வீடியோ எடுத்துட்டு வாடான்னா ரெண்டு மணி நேரப்படமா எடுத்துட்டு வந்திருக்காங்க.




2 அதென்ன எல்லாமே 2 நிமிசம் ,4 நிமிசம் வீடியோ வாவே இருக்கு,கொஞ்சம் நீளமா எடுத்தா என்ன?

3 என்னடா லாலி பாப்?

அவனுங்க பாக்கெட்டை செக் பண்ணினப்போ இது தான் இருந்தது.இன்னமும் இதை வெச்சுத்தான் சுத்திட்டு இருக்கானுங்க.


4 யார்றா போன்ல?

ஏன் ப்ரோ கேட்கறீங்க?

 சும்மாதான்....

அப்ப சரி...


யார்றா போன்ல?

என்ன பிரதர்?மறுபடி கேட்கறீங்க?

சும்மாதான்

அப்ப சரி..

5 அண்ணன் கோபமா இருக்கார்டா.

6 சரி ,அடுத்து என்ன?

எப்போ?னு. சொன்னா யூ ட்யூப்ல அப்லோடு பண்ணிடலாம்.

7 இவனுங்க கிட்டே தியேட்டர் க்குப்படம் பண்ணனும்னு புரிய வைக்கலையா?

8 ஆக்சுவலா இவன் யார் பேச்சையுமே கேட்கறதில்லை.இவன் பேச்சை மட்டும் தான் கேட்கறான்.என்னைக்கு இவன் பேச்சை மட்டும் தான் இவன் கேட்கறான்னு இவனுக்குத்தெரியுதோ அப்போ தான் திருந்துவான்.

9 எதுக்கு டென்சன் ஆகறே?உனக்கு ஒரு பிரச்சனைனா அதுக்கான தீர்வை நோக்கிப்போ.அதை விட்டுட்டுப்புலம்பிட்டே இருக்காதே.


10 அண்ணே,நீங்க எங்கே போறீங்க.எல்லா சொல்யூசனுக்கும் என் கிட்டே ஒரு பிராப்ளம் இருக்குண்ணா.... அய்யய்யோ மாத்தி சொல்லிட்டனோ?

11 திடீர்னு பணம் கேட்டா எப்படி?நெக்ஸ்ட் டைம் கடத்தும்போது கண்டிப்பாத்தந்துடறேன்.

12. டேய்...உன் கிட்டே நான் என்னடா சொன்னேன்?

டேய்... அப்டினு சொன்னீங்க.

Wednesday, September 30, 2026

The Runner (2026)-ஆங்கிலம் /தமிழ் -சினிமா விமர்சனம் ( ஆக்சன் திரில்லர்)@அமேசான் பிரைம்

 



திரையரங்குகளில்  வெளிவராமல் நேரடியாக ஓடிடி க்கு வந்த படம் இது.அமேசான் பிரைம் தளத்தில் தமிழ் டப்பிங்கில் 2/9/2026  முதல் காணக்கிடைக்கிறது.


Wonder woman(2020)படத்தில் ஒண்டர் விமனாக நடித்துப்புகழ்பெற்ற கல் கடேட் நடித்திருக்கும் செமயான ஆக்சன் திரில்லர் இது.Fast & Furious(2009) படத்தில் அறிமுகமான இவர் 17 வருடங்களில் 26 படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகி ஒரு வக்கீல்.அவளுக்கு ஒரு மகன்.அவனுக்கு டைப் 1 சுகர் பிராப்ளம் இருக்கிறது.தினசரி மாத்திரை,மருந்து கொடுத்து கவனமாகப்பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது.அன்று ஒரு முக்கியமான கேஸ் விஷயத்தில் கோர்ட்டில்  ஆஜராக வேண்டி இருக்கிறது.நாயகி தன் மகனை ஸ்கூலில் விட்டு விட்டு  கிளம்புகிறாள்.


அப்போது வில்லன். நாயகியின் மகனின் செல்போனிலிருந்து அழைக்கிறான்.வில்லனைப்பற்றி ஒரு அறிமுகம்.வில்லன் பெரிய கோடீஸ்வரன்.ஒரு கொலைக்கேசில் மாட்டிக்கொள்கிறான்.அந்தக்கொலையை நேரில் பார்த்த சாட்சி இன்று கோர்ட்டில் சாட்சி சொல்ல இருக்கிறான்.அந்த நிகழ்வு நடந்து விட்டால் வில்லனின் கதி அதோகதிதான்.

இதனால் வில்லன் நாயகியின் மகனை கிட்நாப் செய்து  நாயகிக்கு போன் செய்து மிரட்டுகிறான்.இன்று கோர்ட்டில் ஆஜராக இருக்கும் அந்த சாட்சியை நாயகி தன் கையால் கொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் நாயகியின் மகனை வில்லன் கொன்று விடுவான்.

இப்போது நாயகி இருக்கும் இடத்திலிருந்து  10 கிமீ தூரத்தில் இருக்கும் சாட்சியை நாயகி சாலை மார்க்கமாக ஓடியே போய்க்கொல்ல வேண்டும்.ஒரு பக்கம் போலீஸ் வேறு நாயகியைத்துரத்துகிறார்கள் நாயகி தனக்குத்தரப்பட்ட  டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்தாரா? என்பது மீதித்திரைக்கதை.

நாயகியாக  கல் கேடட் பிரமாதமாக நடித்திருக்கிறார்.அட்டகாசமாக ஓடி இருக்கிறார்.என்ன ஒரு பாடி பிட்னெஸ் என வியக்க வைக்கிறார்.

நாயகியின் மகனாக நடித்த சிறுவனும் குறை வைக்கவில்லை.வில்லனாக வருபவருக்கு வேலை அதிகம் இல்லை.போனில் குரல் மட்டுமே மிரட்டுகிறது.க்ளைமாக்சில் ஒரே ஒரு சீனில் மட்டுமே வில்லனின் முகம் காட்டப்படுகிறது.


மார்க் கிப்சன் திரைக்கதை எழுத படத்தை இயக்கி இருப்பவர் கெவின் மெக்டனால்ட்.

சாம் ரைஸ் எட்வர்டின் எடிட்டிங்கில் படம் 84 நிமிடங்கள் ஓடுகிறது.

ஒளிப்பதிவு ,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் குட்.






ரசித்த வசனங்கள்


1 நமது ரகசியங்களை  ஷேர் பண்ண ஒரு ஆள் தேவை.

,2 மனித உடலில் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவு ரத்தம் இருக்கும்.வந்துட்டே இருக்கும்.ஊறிக்கிட்டே இருக்கும்


சபாஷ் டைரக்டர்


1  நாயகி,வில்லன்,நாயகியின் மகன்,நாயகியின் நண்பன் என மொத்தம் நான்கே முக்கியக்கேரக்டர்கள் என்பதால் குழப்பமே இல்லாமல் கதை சொல்ல முடியும் என்ற பாசிட்டிவ் பாயிண்ட்.

2 செல்போன் மூலம் நாயகியை வில்லன் டிராக் செய்வதால் நாயகி எப்படி அந்த சாட்சியைக்கொலை செய்வாள்?மகனைக்காப்பாற்றுவாள்?வில்லனை ஏமாற்றுவாள்?என்ற எதிர்பார்ப்பு கூடுவது,அதை திரைக்கதை பூர்த்தி செய்வது

3 வில்லனை ஏமாற்ற  நாயகி செய்யும் ட்ரிக் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக வருவது அருமை.

4 ஒரு சீன் கூட போரடிக்காமல் படம் முழுக்க பரபரப்பான ,விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டம்,நாயகியின் ஓட்டம் இரண்டும் அட்டகாசம்.

5 படம் முழுக்க லைவ் லொக்கேசனில் பப்ளிக் பிளேசில் பொதுமக்கள் புடை சூழ சாலைகளில்,ரயிலில் படம் பிடித்து இருப்பதால் ஒரு நம்பகத்தன்மை பிறக்கிறது.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. என்னதான் நாயகி அப்பாட்டக்கர் ரன்னராக இருக்கட்டுமே?மணிக்கு 165 கிமீ வேகத்தில் செல்லும் ரயிலில் ஒருவன் நாயகியின் போனை அபேஸ் செய்ததும் நாயகி ரயிலை  விட வேகமாக குறுக்கு வழியில் ஓடி அடுத்த ஸ்டேஷனில் ரயிலுக்கு முன்பாக ஆஜர் ஆகி திருடனைப்பிடித்து போனை மீட்பது எல்லாம் காதில் பூக்கூடை ரகம்.


2 சாட்சிக்குக்காவல் இருக்கும் போலீஸ்காரரை பணயக்கைதி ஆக்கினால் வில்லனுக்கு வேலை சுலபமாக ,உடனடியாக ரிசல்ட் கிடைக்குமே? எதனால் வில்லன் தலையை சுத்தி மூக்கைத்தொடுகிறான் ?

3 தொடர்ச்சியாக ஒருவர் ஒரு மணி நேரம் வேகமாக ஓடுவதே பெரிது.இதில் நாயகி வில்லனுடன் போனில் பேசிக்கொண்டே ,அவன் சொல்வதை பாலோ பண்ணிக்கொண்டே ஓடுவது எப்படி?மூச்சிரைக்காதா?

4 நாயகியை போலீஸ் ஒரு பக்கம் துரத்துகிறது.ஒரு முறை துப்பாக்கி முனையில் பொதுமக்களை நாயகி மிரட்டும்போது போலீஸ் நாயகியைக்காலில்,கையில் சுட்டிருக்கலாம்.செய்யவில்லை.

5 வில்லனுக்குத்தெரியாமல் வேறு ஒரு போனில் மெசேஜ் அனுப்ப நாயகி ஓடிக்கொண்டே முயற்சிக்க அது பலனளிக்கவில்லை.பாத்ரூம் போவதாக வில்லனிடம் சொல்லி விட்டு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே?


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்.


CPS கமெண்ட் - ஆக்சன் திரில்லர் விரும்பிகள் அனைவருக்கும் படம் பிடிக்கும்.ஆனால் படம் முழுக்க ஒருவர் ஓடிக்கொண்டே இருப்பது சிலருக்கு சலிப்பைத்தரலாம்.ரேட்டிங்க். 3/5


The Runner
Release poster
Directed byKevin Macdonald
Written byMark Gibson
Produced byDavid Kosse
Starring
CinematographyAnthony Dod Mantle
Edited bySam Rice-Edwards
Music byTom Hodge
Production
company
Rockwood Pictures
Distributed byAmazon MGM Studios (via Prime Video)
Release date
  • 2 September 2026
Running time
84 minutes[1]
CountryUnited Kingdom
LanguageEnglish

Tuesday, September 29, 2026

இம்மார்ட்டல் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் காமெடி திரில்லர்)

 இம்மார்ட்டல் என்றால் அழிக்க முடியாத பெரும் சக்தி என்று அர்த்தம்.





எத்தனையோ பேய்ப்படங்களைப்பார்த்திருக்கிறோம்.தமிழ் சினிமாவின் முதல் வேம்ப்பயர் காமெடி பேண்ட்டசி  சினிமா என்று இதை சொல்லலாம்.டெக்னிக்கலாக மிரட்டி இருக்கும் இந்தப்படம் திரைக்கதையில்  கலக்கி இருக்கிறதா?என்பதைப்பார்ப்போம்


ஸ்பாய்லர் அலெர்ட்

மெயின் கதைக்குப்போகும் முன் ஒரு பிளாஸ்பேக்.


1000 வருடங்களுக்கு முன் ஒரு தம்பதி...மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கிறார்.குழந்தை பிறந்ததும் அதைப்பார்த்து அம்மாவே பயப்படுகிறார்.இது சாதாரண குழந்தை இல்லை என  பிரசவம் பார்த்த அந்த மூதாட்டி வேறு பயமுறுத்துகிறார்.அந்தக்குழந்தையை ஒரு மலை உச்சியில் விட்டு விடுகிறார்கள்.இந்த சீனை இங்கேயே கட் பண்ணி 2026 க்கு கதை நகருது.


நாயகன்  சென்னையில் தனது மாமாவின் பிரிண்ட்டிங்க் பிரஸ்சில் வேலை செய்கிறான்.தங்குவதற்கு வாடகை வீடு பார்க்கிறான்.தனி வீடாக வாடகைக்குப்போனால்  செலவு அதிகம் ஆகும்,அதனால் 5 பேர் சேர்ந்து ஒரு  வீட்டை ஷேர் பண்ணி ஷேர் ஆட்டோ போல் பண்ணிக்கிட்டா செலவு குறையும் என்று நினைக்கிறான்.


தேடி வந்த தேவதை மாதிரி நாயகி நாயகனுக்கு போன் செய்கிறாள்.நான் தங்கி இருக்கும் வீட்டில் ஷேரிங்க் பார்ட்னராக வந்து தங்கிக்கொள்கிறீர்களா?என்று கேட்கிறாள்.திண்ணையில் படுத்துக்கிடந்தவனுக்கு திடுக்னு வாழ்வு வந்த கதை தான்.

இலவசமா அருகம்புல் ஜூஸ் குடிச்சாலே குடிப்பவன் கரும்பு ஜூஸ் கிடைச்சா வேணாம்னா சொல்வான் ?ஓக்கே என்கிறான்.

வீட்டுக்கு வந்து பார்த்தா அது வீடு இல்லை,பங்களா.அதுக்கு 5,000 ரூபாய் தான் வாடகை என்றதும் நாயகனுக்கு செம குஷி.


நாயகியுடன் வீட்டில் தங்குகிறான்.நாயகியைக்கவர அவ்வப்போது முயற்சிகள் செய்து வருகிறான்.நாயகியும் நாயகனுக்கு நல்ல கம்பெனி தருகிறாள்.

நாயகன் ,நாயகி இருவரும் நட்பாகப்பழகி நெருக்கமாகும்போது நாயகனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது.நாயகி சாதாரண மனிதப்பெண் அல்ல.ஏதோ அமானுஷ்யம் அவளிடம் இருக்கிறது.

இது தெரிந்ததும் நாயகன் உஷாராகி அந்த  வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான்.முடியவில்லை.நாயகியின் கட்டுப்பாட்டில் அந்த வீடு இருக்கிறது என்பதை உணர்கிறான்.

இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக ஜி வி பிரகாஷ் குமார் பிரமாதமாக நடித்திருக்கிறார்.இதுவரை இது போல் ஒரு நல்ல ரோல் அவருக்குக்கிடைக்க வில்லை என்றே சொல்லலாம்


நாயகியாக கயாடு லோஹர் கிளாமர் கியூன் ஆக வருகிறார்.நடிப்பும் அருமை. அவரது சிரிப்பும் ,டயலாக்  டெலிவரியும் ஆண்ட்ரியாவை நினைவுபடுத்துகிறது.தமிழில் இவர் நடிக்க ஒப்பந்தமான முதல் படம் இதுதான் ( ஆனால் சில படங்கள் ரிலீசில் முந்திக்கொண்டன)

லொள்ளு சபா மாறன் ,டி எம் கார்த்திக், குமார் நடராஜன், ,ஆதித்யா கதிர்  ஆகியோர் காமெடி செய்கிறார்கள்.

2 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் சாம் சி எஸ்.ஓக்கே ரகம்.பின்னணி இசை மிரட்டல் ரகம்.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு அட்டகாசம்.நாயகியின் க்ளோசப் ஷாட்கள் அருமை.திகில் கிளப்பும் காட்சிகளும். வெல்டன் கேமரா ஒர்க் என சொல்ல வைக்கிறது.

எம் ராஜேஷின் எடிட்டிங்கில்  படம் 131 நிமிடங்கள் ஓடுகிறது.

அறிமுக இயக்குநர்
மாரியப்பன் சின்னா தான் இயக்கி இருக்கிறார்.

சபாஷ்   டைரக்டர்


1 முதல் பாதி முழுக்க நாயகன் ,நாயகி ரொமான்சுக்கு முயற்சிக்கும் முன்னெடுப்புகள் என்பதால் ஜாலியாக நகர்கிறது.நாயகன் - நாயகி கெமிஸ்ட் ரி யும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

2 நாயகியின் அழகும் ,கிளாமரும் படத்துக்குப்பெரிய பிளஸ்.அந்தக்கேரக்டரில் ஒரு மர்மம் இருக்கிறது என்று தெரிந்தபின் சுவராஸ்யம் கூடுகிறது.

3 மலையாளத்தில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட்டான லோகா சேப்டர் 1 ,ஜிவிபி நடித்த டார்லிங்க் ,ஜீவா நடித பிளாக் இந்த மூன்று படங்களின் கதை போலவா?இல்லை ,வேறு மாதிரி கதையா?என்பதை இயக்குநர் கொண்டு போன விதம் அருமை.


4 ஹாரர் திரில்லர் படங்களுக்கே உரித்தான மிரட்டும் பின்னணி இசை சாம் சி எஸ்  கச்சிதமாக உருவாக்கி இருக்கிறார்.

5 இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ட்விஸ்ட்டும் ,க்ளைமாக்சும் குட்

6 நாயகி வரையும் பெயிண்ட்டிங்க்சில் இருக்கும் விஷயங்கள் மட்டும் தான்  அபார்ட்மெண்ட்டில் பேக் டிராப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்து நாயகன் அதிரும் காட்சி.

7 நாயகியிடம் இதுவரை மாட்டியவர்கள் அனைவருமே  ஏபி நெகடிவ் க்ரூப் ரத்தம் என்பதும் நாயகன் அதை விட அரிதான ரத்த வகை என்பதால் எதற்காக நாயகி நாயகனை தன் வசப்படுத்தி இருக்கிறாள்?என நாயகனுக்கு வரும் சந்தேகம்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 லோ பட்ஜெட் படம் என்பதால் மான்ஸ்டர் வரும் காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான் என்பது அப்பட்டமாகத்தெரிகிறது.

2 ஆகாஷ் என்ற கேரக்டர் நாயகியைப்பற்றிய ஒரு ரகசியத்தை நாயகனிடம் முதல் முறை கூறு.போது அதை சட்டை செய்யாத நாயகன் இரண்டாம் முறை கூறும்போது அப்போதுதான் கேட்ட மாதிரி ஜெர்க் ஆவது ஏன் ?

3 ஆகாஷ் கேரக்டர் நாயகனுக்கோ ,ஆடியன்சுக்கோ அந்த ரகசியத்தை ஓப்பன் செய்யாமல் விட்டிருந்தால் படம் இன்னமுமே சஸ்பென்ஸ் ஆக இருந்திருக்கும்.

4 எல்லாரையும் ,எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நாயகி அந்த ஆகாஷ் கேரக்டர் நாயகனிடம் நாயகியைப்பற்றிய ரகசியத்தை சொல்லும்போது ஏன் தடுக்கவில்லை?அல்லது ஏன் சொல்ல விட்டார்?என்பதற்கு பதில் இல்லை.


5 நாயகன் மூலம் ஒரு அபூர்வமான குழந்தையைப்பெற்றுக்கொள்வதுதான் நாயகியின் நோக்கம் எனில் அதை செயல்படுத்த ஏன் தாமதம் ?யார் அதை தடுக்கிறார்கள் ?

 
ரசித்த வசனங்கள்

1.  ஹலோ... சார். ஷேரிங்க் ரூம் பார்க்கறீங்களா?

எஸ்... எத்தனை பசங்க?

நான் மட்டும் தான் (ஹஸ்கி  வாய்சில் நாயகி)

2  எப்போ ஷிப்ட் ஆகப்போறீங்க?

ஆல்ரெடி ஷிப்ட்டெட்.

3 என்னடா?உன் ரூமைக்காட்றேன்னு சொல்லிட்டு பைவ் ஸ்டார்  ஹோட்டலைக்காட்றே?

4  என்ன பொண்ணுடா அவ..தம் கேட்டா தம் தர்றா.பீடி கேட்டா பீடி தர்றா.

5 பார்க்க லட்சணமா இருக்கா-னு சொல்றே.லட்ச லட்சமா பணம் வெச்சிருக்கானு சொல்றே.அவளையே கரெக்ட் பண்ணிக்கல்யாணம் பண்ணிக்கோ.

6 இப்போ உனக்குக்கிடைச்சிருப்பது கோல்டன் டைம்


7  நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?

எப்படியும் தப்பாதான் கேட்கப்போறே...

8  டேய்...என்னை மாதிரி ஒரு அழகான பையனும்,தேவதை மாதிரி ஒரு பெண்ணும் பக்கத்து பக்கத்து ரூமில் இருந்தா எப்படி இருக்கும் ?

எனக்கு வயித்தெரிச்சலா இருக்கும்.

9 நீ சொல்றது நிஜம்.இந்த ரூமில் கொசு ஜாஸ்தியா இருக்கு.அதான் உன் ரூமுக்கு வந்தேன்.

10 மிஸ்...என் ரூமில் கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கு

என் ரூமில் வவ்வால் தொல்லை இருக்கும், பரவாயில்லையா?



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். 16+ ( அனிமேட்டட் வெர்சனில் ஒரு லிப் லாக் சீன் இருக்கிறது)


CPS கமெண்ட் - தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி .வழக்கமாக பாழடைந்த பங்களாவில் மாட்டிக்கொள்ளும் நான்கு பேர் கான்செப்ட்டிலிருந்து விலகி புதிய முயற்சி இது. கலகலப்பான ,விறுவிறுப்பான முன் பாதி ,அமானுஷ்யங்கள் நிறைந்த பின் பாதி என சரியான மிக்சிங்க். ரேட்டிங்க். 3/5

Immortal
Theatrical release poster
Directed byMariyappan Chinna
Written byMariyappan Chinna
Produced byArunkumar Dhanasekaran
Starring
CinematographyArun Radhakrishnan
Edited byM. Rajesh
Music bySam C. S.
Production
company
AK Film Factory
Distributed bySakthi Film Factory
Release date
  • 4 September 2026
Running time
131 minutes
CountryIndia
LanguageTamil

Monday, September 28, 2026

இஞ்சி வெல்லம் - மணிரத்னம் + விஜய்சேதுபதி காம்போ படத்தின் கதை இதுதான்- க்ரேசி ஸ்டுப்பிட் லவ் 2011

 


சமீபத்தில் மணிரத்னம் படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பைக்கிளப்பியது.மீசை. இல்லாத விஜய் சேதுபதியின் யங் லுக் இது நிச்சயம் ஒரு காதல் கதை தான் என்று யூகிக்க வைத்தது.



காற்று வெளியிடை படத்தில் கார்த்தி இதே போல் மீசை இல்லாத கெட்டப்பில் தான் நடித்தார் ,ஆனால் படம் வெற்றி பெறவில்லை என மீம்ஸ் ஓடியது.ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன்,மாதவன் நடித்த அலைபாயுதே , ஆகிய படங்களிலும் நாயகனுக்கு மீசை இல்லை,ஆனாலும் அந்தப்படங்கள் ஓடவில்லையா? எனவே மணிரத்னம் இயக்கும் படத்தில் நாயகனுக்கு மீசை இல்லை என்பதால் அந்தப்படம் ஹிட் ஆகாது என்ற வாதத்தில் வலிமை இல்லை.


மணிரத்னம் இதுவரை 29 படங்களை இயக்கி இருக்கிறார்.இப்போது இயக்கும் புதிய படம் அவரது 30வது படம்..இன்னமும் டைட்டில் வைக்கப்படவில்லை.

புதிய படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று விசாரித்ததில்  2011ம் ஆண்டு வெளியான கிரேசி ஸ்டுப்பிட் லவ் என்ற ஹாலிவுட் படத்தின் அபிஷியல் ரீமேக் அல்லது அன் அபிசியல் ரீமேக் அல்லது பட்டி டிங்கரிங்க் அட்லி வெர்சன் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


மணிரத்னம் இயக்கிய முதல் படமான  பல்லவி அனுபல்லவி (1983) கன்னடப்படம் ,இரண்டாவது படமான உணரு (1984) மலையாளப்படம் ,மூன்றாவது படமான பகல் நிலவு (1985) ,நான்காவது படமான இதயக்கோயில் (1985)  ஆகிய நான்கு படங்களும் அவரது கதை தான்.ஐந்தாவது படமான  மவுனராகம் (1986) ஏற்கனவே மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தைக்கிள்ளாதே (1980) படத்தின் இன்ஸ்பிரேசனில் அதே கதையைக்கொஞ்சம் மாற்றி எடுத்த படம் தான்.


நாயகன் (1987) கமல் நடித்திருந்தாலும் காட் பாதர் என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து உருவிய கதை தான்.அக்னி நட்சத்திரம் (1988),கீதாஞ்சலி/இதயத்தைத்திருடாதே(1989),அஞ்சலி(1990) இவை சொந்தக்கதைகள்.

ரஜினி நடித்த தளபதி(1991)  மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதை.ரோஜா(1992) சத்யவான் சாவித்திரி கதை..திருடா திருடா(1993), பம்பாய்(1995) ஆகியவை சொந்தக்கதை.

இருவர் (1997) கலைஞர்+ எம் ஜி ஆர்+ஜெ கதை.தில்சே (உயிரே) 1998,அலைபாயுதே(2000),கன்னத்தில் முத்தமிட்டால் (2002) ஆய்த எழுத்து(யுவா) (2004) சொந்தக்கதை.


குரு(ஹிந்தி-2007) அம்பானி கதை.ராவன் (ராவணன்-2010) ராமன்,சீதை,ராவணன். இராமாயணக்கதை.கடல்(2013),ஓ காதல் கண்மணி(2015),காற்று வெளியிடை (2017) சொந்தக்கதை.


சிம்பு நடித்த செக்கச்சிவந்த வானம் (2018) ஒரு ஹாலிவுட் படத்தின் உல்டா.பொன்னியின் செல்வன் பாகம் 1(2022) ,பொன்னியின் செல்வன் பாகம் 2 (2023)  இரண்டும் கல்கியின் நாவல்கள்.

தக் லைப் (2025) ஒரு கொரியன் படத்தின் உல்டா வெர்ஷன்.


மேலே சொன்ன தகவல்களிலிருந்து. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய  படங்களில் பெரும்பாலும். உல்டா கதைகள்தான்.திரைக்கதை ,ட்ரீட்மெண்ட் ,மேக்கிங்கில் தனி பாணி வைத்திருந்தாலும் புதுக்கதையாக இருக்காது.




சரி.க்ரேசி ஸ்டுப்பிட் லவ் படத்தைப்பற்றிப்பார்ப்போம்.

50 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 145 மில்லியன் டாலர் வசூலித்த படம்.கிளாமர் குயின்களான எம்மா ஸ்டோன் ,ஜூலியனே மூர் ஆகியோர் நடித்த படம்.


நாயகன் 45 வயதான நபர்.மனைவி , ,13 வயது மகன் கொண்ட நல்ல குடும்பம்.

ஓப்பனிங்க்  ஷாட்டிலேயே நாயகி நாயகனிடம். உன்னிடம் அட்ராக்ட்டிவான விஷயங்கள் எதுவும் இல்லை.ரொம்ப போர் கேரக்டர்.உன்னை எனக்குப்பிடிக்கவில்லை.எனக்கு டைவர்ஸ்  வேண்டும்.எனக்கு வேறு ஒருவருடன் காதல் இருக்கிறது.என்னுடன் பணி புரியும் நபரைக்காதலிக்கிறேன் என்கிறாள்.


நாயகனுக்குக்கடும் அதிர்ச்சி.அப்செட் ஆகி வெளியே கிளம்புகிறான்.பெண்களை வசீகரிப்பது எப்படி?என்பதை நாயகனின் நண்பன் ட்யூஷன் எடுக்கிறான்.ஒரு பாரில் சில பெண்களை சந்தித்து அவர்களை வசீகரிக்க  முயற்சித்து வெற்றியும் பெறுகிறான்.அவளுடன் நாயகன் நெருக்கமாக இருக்கிறான்.இப்போது நாயகனுக்குத்தன்னம்பிக்கை வந்து விடுகிறது.


எப்படியும் மனைவியைத்தன் வசப்படுத்தி விடலாம்.அவள் மனதை மாற்றி விடலாம் என்று நினைக்கிறான்.


நாயகனின் வீட்டில் ஜெசிகா என்ற 18 வயதுப்பெண் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள்.நாயகனின் நண்பனின் மகள்.காலேஜ் படித்துக்கொண்டே பார்ட் டைமாக இங்கே வேலை செய்கிறாள்.நாயகனின் 13 வயது மகனுக்கு ஜெசிகா மீது ஒரு தலைக்காதல்.ஆனால் ஜெசிகாவுக்குத்தன் அப்பா வயசுள்ள அப்பாவின் நண்பரான நாயகன் மீது காதல்.


நாயகனின் மகனிடம். ஜெசிகா. உன் அப்பாவைத்தான் லவ் பண்றேன் என  ஓப்பனாக சொல்லாமல் பூசி மெழுகுகிறாள்.நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.அதுவுமில்லாமல் நான் வேறு ஒருவரை விரும்புகிறேன்.என்னை மறந்து விடு என்கிறாள்.

ஜெசிகாவின் அப்பா உண்மை புரியாமல் நாயகனைத்தப்பாக நினைக்கிறான்.தன் மகள் மனதை திட்டமிட்டு மயக்கி விட்டான் என்று நினைக்கிறான்.ஆனால் நிஜத்தில் நாயகனுக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது.


ஒரு கட்டத்தில் நாயகனின் மகனின் உண்மையான அன்பை உணர்ந்து ஜெசிகா அவனிடம் காதலுக்கு ஓக்கே சொல்கிறாள்.நாயகியும் நாயகனின் அன்பை உணர்ந்து. விவாகரத்து வேண்டாம்.நாம் ஒன்றாக இருப்போம் என்கிறாள்.சுபம்


இது தான் ஹாலிவுட் படத்தின் கதை.இதைத்தமிழுக்கு ஏற்ற மாதிரி பட்டி டிங்கரிங் பண்ணி இருக்கலாம்.

இணையத்தில் வெளி வந்த விஜய் சேதுபதியின் மீசை இல்லாப்புகைப்படங்கள் கதைப்படி நாயகன் வசீகரம் இல்லாதவன் என்று நாயகி சொன்னபின் நாயகனின் தோழி நாயகனை பியூட்டி பார்லர் அழைத்துச்சென்று அவனை அழகாக மாற்றுவதுதான் சிச்சுவேஷன்.


இந்த விவகாரமான கதை தமிழுக்கு ஒர்க் அவுட் ஆகுமா?என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மொத்தத்தில் மணிரத்னம் அடுத்த பரபரப்புக்குத்தயார் ஆகி விட்டார்.


கே பாலச்சந்தர் படத்தில் தான்( அபூர்வ ராகங்கள்) இப்படி  அப்பா  வயது ஆள் நாயகன் -மகள் வயது  பெண் நாயகி என்று வரும் .கத்தி மேல் நடப்பது மாதிரி ஜாக்கிரதையாக அவர் கையாண்டு வெற்றி பெற்றார்.மணிரத்னம் என்ன செய்யப்போகிறார் தெரியவில்லை.


நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.



க்ரேசி ஸ்டுப்பிட் லவ் 2011 படம் நெட் பிளிக்சில் ,அமேசான் பிரைம் (ரெண்ட்டல்) காணக்கிடைக்கிறது.மணிரத்னம் ரசிகர்கள் பார்த்து வைத்துக்கொள்ளவும்.


குறிப்பு- இந்தத்தகவல் இதுவரை இணையத்தில் வேறு எங்கும் வெளியாகவில்லை.அதேபோல் தமிழில் க்ரேசி ஸ்டுப்பிட்  லவ் படத்தின் விமர்சனமும் இதுவரை வரவில்லை.