Wednesday, January 13, 2016

உலகப்பட இயக்குநர் ஆவது எப்படி?

மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, குறும்படங்கள் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்து தனது முதல் திரைப்படத்தை (Who’s that knocking at my door Black & white 1967) இயக்கி ஆண்டுகள் 48 ஆகின்றன. கடந்த நவம்பர் 17-ல் தனது எழுபத்துமூன்றாம் வயதில் அடியெடுத்து வைத்த இவரை, இத்தனை ஆண்டுகள் திரையுலகில் இருந்தும், திறமையில் துளிக்கூட மங்காத இயக்குநர் என்று தாராளமாகக் குறிப்பிட முடியும். இத்தனை வருடங்கள் சுறுசுறுப்பாகத் திரையுலகில் இயங்கிய / இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்கள் உலக அளவில் மிகச் சிலரே இருக்கின்றனர் (ஸ்பீல்பெர்க் இன்னொரு உதாரணம்).‘முத்திரை’ இயக்குநர்
ஸ்கார்ஸேஸியின் படங்களின் விசேஷ அம்சங்கள் என்ன? எதனால் அவரை இன்றுவரை அற்புதமான இயக்குநர் என்று திரைப்பட வெறியர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?
சில இயக்குநர்களின் படங்களை, எந்தக் காட்சியை கவனித்தாலும் அது அவரது படம் என்பதைச் சொல்லிவிட முடியும். அவர்களது முத்திரை அந்தப் படங்களில் அப்படிப் பதிந்திருக்கும். முத்திரை என்பது, வெறும் ஷாட்கள் அமைக்கும் முறை, லைட்டிங், ‘கட்’கள் போன்றவை இல்லை (mise en scène). அந்த இயக்குநரின் மனதில் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றி என்னென்ன தனிப்பட்ட எண்ணங்கள் இருக்கின்றனவோ, அவை அப்படியே அந்தப் படங்களின் காட்சிகளிலும் பிரதிபலிக்கும். இதுவே, நான் குறிப்பிட்ட ‘முத்திரை’ என்ற வார்த்தையின் பொருள். இதனை ‘auteur’ என்ற வார்த்தையால் (இந்தப் பதத்தை ஒரு அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்) விளக்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்குநர்தான் ஸ்கார்ஸேஸி.
எப்படிப்பட்ட படங்களை இதுவரை ஸ்கார்ஸேஸி இயக்கியிருக்கிறார் என்று கவனித்தால், Biopic என்று சொல்லக்கூடிய, உண்மைச் சம்பவங்கள் கொண்ட படங்கள், வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றிய படங்கள்தான் அவரது திரைவாழ்க்கையில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இதுவரை ஒன்பது திரைப்படங்களை அப்படி இயக்கியிருக்கிறார் (Boxcar Bertha, Raging Bull, The Last Temptation of Christ, Goodfellas, Casino, Kundun, The Aviator, Hugo மற்றும் The Wolf of Wall Street).இதற்கு அடுத்தபடியாக, Gangster Crime திரைப்படங்கள். இவற்றில், GoodFellas, Casino, Gangs of New York, Mean Streets, The Departed ஆகியன அடங்கும். கூடவே, தனிப்பட்ட மனிதர்களின் அடிமன உளவியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் ஸ்கார்ஸேஸி பல படங்களை எடுத்துள்ளார். அவை: Taxi Driver, Cape Fear, Bringing out the Dead, Shutter Island போன்றவை. இவை தவிர, நகைச்சுவைப் படங்கள் (Alice doesn’t live here Anymore, The King of Comedy, After Hours) ஆகியவையும், Musical படங்களையும் (New York, New York) எடுத்திருக்கிறார்.
இயல்பின் எல்லைவரை
ஸ்கார்ஸேஸியின் படங்களில் வரும் கதாபாத்திரங்களைக் கவனித்தால், அவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவு உள்ளவர்களாக இருப்பார்கள். இந்தக் கதாபாத்திரங்களை அவர் விரிவாகக் காட்டும்போது, அவரது படங்களின் தொனியைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் பலமுறை எழுந்துள்ளன. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை முழுவதுமாக ஸ்கார்ஸேஸி காட்டும்போது, அவர்களின் போராட்டம், எழுச்சி, தோல்வி, மாற்றங்கள் போன்றவற்றை அவர் முடிந்தவரை இயல்பாக, உள்ளது உள்ளபடி காட்டுகிறார் என்பதைக் கவனித்தால் அந்தக் குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவை என்பது புரிந்துவிடும்.
ஸ்கார்ஸேஸியின் படங்களில் வன்முறை அதீதமாகக் காண்பிக்கப்படும். ஆனால் காட்சியுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் மிக இயல்பாகவே தோன்றூம். உதாரணமாக, Goodfellas படத்தில், ஜோ பெஸ்சி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான டாம்மி என்பவன், ஒரு பாரில் பில்லி பேட்ஸ் என்ற மற்றொரு பிரபல ரவுடியை அடித்தே மயக்கமுறச் செய்யும் காட்சி வரும்.
அதே படத்தில், சிறிய வேடத்தில் நடித்த சாமுவேல் ஜாக்ஸனை டாம்மி கொல்லும் காட்சியும் அப்படிப்பட்டதே. இதன் பின் வந்த Casino படத்தின் இறுதியில், அதே ஜோ பெஸ்சி நடித்த நிக்கி என்ற கதாபாத்திரத்தை ஒரு காட்சியில் மாட்டை அடிப்பதுபோல் அடித்துவிட்டு, நகருக்கு வெளியே உயிரோடு புதைப்பார்கள். தற்காலத்தில் மிக அதிகமாகப் புழங்கும் இப்படிப்பட்ட வன்முறைக் காட்சிகளையும் என்றோ ஸ்கார்ஸேஸி செய்துகாட்டிவிட்டார். இவற்றையெல்லாம், இவை ரவுடிகளோடு சம்மந்தப்பட்ட காட்சிகள் என்பதால் இயல்பாக, அப்படியப்படியே காட்ட வேண்டும் என்பது அவரது முடிவு.
சமூகத்தைக் கண்காணிப்பவர்
தனது 14-வது வயதில் பாதிரியாராக மாறுவதற்கான படிப்பில் ஈடுபட்டார் ஸ்கார்ஸேஸி. ஆனால், அவரால் அதில் தொடர முடியவில்லை. பாதிரியாராக ஆசைப்பட்ட ஒரு நபரின் படங்களில் தெறிக்கும் வன்முறை என்பது சுவாரஸ்யமான முரண்தானே? ஸ்கார்ஸேஸியின் The Last Temptation of Christ படமும் அதனால்தான் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது என் யூகம்.
ஸ்கார்ஸேஸியின் இன்னொரு விசேஷம், அவரது படங்களில் அவர் ஷாட்களை அமைக்கும் முறை. அவரது படங்களின் ஷாட்கள் பெரும்பாலும் குறுகிய அளவிலேயே cut செய்யப்படும். இவற்றை ஸ்கார்ஸேஸியே எடிட்டிங் டேபிளில் முடிவு செய்வார். கூடவே, ஒரு ஷாட்டுக்குள் இடம்பெறும் விஷயங்கள் மிகவும் உயர்தரமாகவும் ஆடம்பரமாகவும் (rich feel) இருக்கும் கதாபாத்திரங்களின் பின்னணி இவரது பெரும்பாலான படங்களில் அப்படி இருப்பதால்.
தனது படங்களின் மூலம், தொடர்ச்சியாக, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை மிகக் கவனமாகக் கண்காணித்துப் படம் பிடித்தே வந்திருக்கிறார் ஸ்கார்ஸேஸி. இதற்கு அட்டகாசமான எடுத்துக்காட்டு Taxi Driver.
ஏன் ஸ்கார்ஸேஸியின் சில படங்கள் கிட்டத்தட்ட ஒரே போன்ற கருவைக் கொண்டிருக்கின்றன? குறிப்பாக Goodfellas, Casino & The Wolf of Wall Street? தனது திரை வாழ்க்கையை ஸ்கார்ஸேஸி தொடங்கிய காலத்தில் அவரிடமிருந்து பல பரிசோதனை முயற்சிகள் வெளிப்பட்டன. இளமையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், முதுமையில், நம்மிடம் இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும்போது, எதைச் செய்ய வேண்டும் என்று நன்றாக யோசித்தே முடிவுசெய்ய முடியும் என்பது அவரது கூற்று. ஆகவே, அவரது சில படங்கள் ஒரே போன்ற கருவைக் கொண்டிருப்பது என்பது, அந்தப் படங்களை உருவாக்க வேண்டும் என்று அவருக்குள் எழுந்த ஆழமான எண்ணத்தினால்தான் என்பதை அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
தற்போது கிட்டத்தட்ட 17 வருடங்களாக அவரது மனதில் இருந்த ஒரு கதையைப் படமாக்கும் வேலையில் இறங்கிவிட்டார் ஸ்கார்ஸேஸி. படத்தின் பெயர் Silence. கதை, வழக்கப்படி பிரச்சினைக்குரியதுதான். பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், இரண்டு போர்த்துக்கீசியப் பாதிரியார்கள், ஜப்பானில் கிறிஸ்துவத்தைப் பரப்ப மேற்கொள்ளும் பயணம் விவரமாக வருகிறது. 1966-ல் ஜப்பானிய மொழியில், ஷுஸாக்கு எண்டோ (Shsaku End) என்பவரால் எழுதப்பட்ட நாவல் இது. 2016-ல் திரைக்கு வரும்.
- தொடர்புக்கு: [email protected]

நன்றி - த ஹிந்து

0 comments: