Saturday, January 02, 2016

அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

குழந்தைகளை மையமாகக் கொண்ட இன்னொரு படம், நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் உருவான படம், அழகு குட்டி செல்லம் பாடல், ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்புகள் என்ற இந்த காரணங்களே அழகு குட்டி செல்லம் படத்தைப் பார்க்கத் தூண்டின.



தியேட்டருக்குள் நுழைந்ததும் நிசப்தம் நிலவியது. டைட்டில் கார்டு ஆரம்பித்ததும், தம்பி ராமையாவை ஆசிரமத்துச் சிறுவன் கென் கமென்ட் அடிக்கும்போது தியேட்டர் சிரிப்பில் அதிர்ந்தது.


படம் எப்படி?


ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் இந்த பூமிக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. ஆனால், அந்த குழந்தை பெரியவர்களின் முடிவால் அடையும் பாதிப்புகளும், அவஸ்தைகளுமே படத்தின் மையக் கரு.



ஆறு குடும்பங்களில் குழந்தையால் ஏற்படும் தடுமாற்றங்கள், இழப்புகள், வலிகள், மாற்றங்கள்தான் படத்தின் கதைக்களம்.


இதை எந்த நெருடலும், உறுத்தலும் இல்லாமல் வலைப்பின்னலாக இருந்தாலும் குழப்பமில்லாமல் அழகாக பார்வையாளர்களுக்குக் கடத்திய விதத்தில் வசீகரிக்கிறார் இயக்குநர் சார்லஸ்.



ஆசிரமத்து சிறுவனாக நடித்திருக்கும் கருணாஸ் மகன் கென் கொடுக்கும் சின்ன சின்ன கவுன்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. நாடகம் போட திட்டமிடும் கேப்டன் சாணக்யா, அக்கா குழந்தை ஊருக்குப் போய்விட்ட தவிப்பில் குழம்பும் யாழினி, ஜான் விஜய்யிடம் எஸ்கேப் ஆகும் நேஹா பாபு, ''ஊரை விட்டு ஓடிப் போயிடலாம். ஊட்டிக்குப் போய்விடலாம்'' என்று அடிக்கடி சொல்லும் ராஜேஷ் குணசேகர் ஆகியோர் நடிப்பில் பின்னி எடுக்கிறார்கள்.



ஆட்டோ டிரைவராக வரும் கருணாஸ் யதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ''மூணு பெண் குழந்தைகளுக்கு சோறு போடலையா. நாலாவதும் பெண் குழந்தைன்னா விட்டுருவேனா. அதுவும் என் ரத்தம்தானே'' என மனைவியிடம் வெடித்து கலங்கும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிச் செல்கிறார்.


ரித்விகாவின் தவிப்பு, இழப்பு, நடிப்பில் ரசிகர்கள் கலங்கினர். நரேன், தேஜஸ்வினி, வினோதினி, சேத்தன், தம்பி ராமையா, கிரிஷா, மீரா கிருஷ்ணன், அகில், சுரேஷ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.



விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா குழந்தைகளின் அத்தனை அசைவுகளையும், நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குழந்தைகளைக் கையாண்ட விதத்திலும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம்.



வேத்சங்கர் சுகவனத்தின் இசை படத்தோடு இயல்பாய் பொருந்திப்போகிறது. அழகு குட்டி செல்லம் என்ற ஒற்றைப் பாடலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தன் உணர்வுகளால் பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்க விட்ட விதத்தில் வேத்சங்கர் கவனிக்க வைக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிரவீன் பாஸ்கர் குழந்தையை மறைத்து வைத்தல், மாடிக்கு கொண்டு செல்லுதல் போன்ற இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.



ஆறு கிளைக்கதைகளை நாடகம், போட்டி என்ற இரட்டைப் புள்ளியில் இணைத்த விதம் சுவாரஸ்யம். குழந்தைகளை எந்த மிகைத் தன்மை கொண்ட அதிபுத்திசாலிகளாகக் காட்டாமல், இயல்பாக உலவ விட்ட விதம் ரசிக்க வைக்கிறது. சின்ன சின்ன குறைகள், பிழைகள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.



ஆனாலும், குழந்தைகள் குறித்த புரிதலையும், பேரன்பின் அடர்த்தியையும் அனுபவிக்க வைப்பதற்காக இந்த அழகு குட்டி செல்லம் படத்தை கொஞ்சி மகிழலாம்.

நன்றி - த இந்து

0 comments: