Wednesday, March 05, 2014

கறை- பாலியல் சிறுகதை

திரையரங்கத்தில் கிரிமீது இருள் கவிந்தது. மத்தியில் இருந்து கிளம்பியவெம்மை அருகாமையில் வந்துவிட்ட ஒரு காட்டு மிருகத்தின்  மூச்சுக்காற்றாய்ப் பரவியது. கிரியின் கண்ணுக்குள் இருள் கெட்டியானதிரவமாய்ப் பரவிப் பார்வையைக் குலைத்தது. அவனுக்குள் சற்றே அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் தொடங்கியது. பொறுமை தொலைத்த பார்வையாளர்களின் சில் பாம்புகள் அரங்கத்துக்குள் சீறியெழுந்தன; குரல்கள் படத்தைப் போடச்சொல்லியும் மின்விசிறிகளை முடுக்குமாறும் கட்டளையிட்டன.


ஜெனெரேட்டரின் சத்தம் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் பளீரென வெளிச்சம்

திரையில் படர்ந்தது. இருள் இப்போது ஒரு மெல்லிய திரையாய் மாறி விளாவத் துடிக்கும் வெளிச்ச விரல்களை எதிர்ப்பின்றித் தனக்குள் அனுமதித்தது.

திரையில் காட்சிகள் இடம்பெயரத் தொடங்கின. அவனுக்கு அதிகம்

பரிச்சயமில்லாத மொழியில் குரல்கள் உரத்துக் கத்திக்கொண்டிருந்தன. எந்த

இதத்தையும் கொண்டிராத அந்தச் சத்தம் நடுமண்டையைப் பிளப்பதையே குறிக் கோளாய் வைத்துக் கபாலத்தின் மீது விழும் மழுங்கினதொரு ஆயுதத்தின் தாக்குதல்போலவே இருந்தது. யாரோ ஒருவன் வெளியிலிருந்து கதவைத் திறந்து அரங்கத்துக்குள் நுழைந்தான். திறந்த கதவிலிருந்து கத்திபோல இறங்கிய வெளிச்சம் சில கணங்களில் காணாமல் போனது.

கிரி கால்களை இறுக்கி உட்கார்ந்திருந்தான். அந்த வரிசையில் வேறு யாருமில்லை. யாராவது வரக்கூடும் எனக் காத்திருந்தான். எல்லா இருக்கைகளிலும் தணிந்த இருள் மட்டுமே தேங்கியிருந்தது. அவன் மனத்தில் போட்டிருந்த கணக்குப்படி இன்னும் சற்று நேரம் அவன் பொறுத்திருக்க வேண்டும். அவன் நுழைந்தபொழுது அரங்கம் காலியாய் இருந்தது. பின் வரிசைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்திருந்தான். வீட்டிலிருந்து கிளம்பும் பொழுதே, சொல்லப்போனால் அதற்கு முன்பிருந்தே ‘காய் நகர்த்தல்களை’ மனம் வெகு தடவை ஒத்திகை பார்த்திருந்தது. காலை உணவை அள்ளிப்போட்டுக்கொண்டு அம்மாவிடம் வாய்க்கு வந்ததொரு காரணத்தை முனகிவிட்டுப் பஸ் ஏறியிருந்தான்.


பள்ளி இறுதி வருடத் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருந்தது. அந்தத் தெருவை வந்தடைந்தபொழுது காலைக்காட்சித் தொடங்கச் சரியாகப் பதினைந்து நிமிடங்களிருந்தன. காலைப்பொழுதிலேயே அசாதாரணமான வெக்கைதொடங்கியிருந்தது. எங்கும் மனிதர்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். குதித்தோடும் பந்துகள்போலத் தலைகள் மேலும் கீழும் எழுந்து அமுங்கின. அழுகல் நாற்றமும் உலர்ந்த சிறுநீர் நாற்றமும் மாறிமாறி வீசின. அசாதாரணமான போதையை அந்தப் பொழுது தன்மேல் ஏற்றுவதைக் கிரி உணர்ந்தான்.


படச் சத்தத்தையும் மீறி அவன் காதுகளை அவ்வப்போது ஒரு சீண்டல் தீண்டுகிறது. அவன் கவனத்தைத் திசை திருப்பவெனக் கிளம்பிய அழைப்பு. திசையுடைந்த இருள் சுழலுக்குள்ளேயிருந்து கொப்புளமாய்க் கிளம்பி வெடிக்கிறது. ஸ்திரமாய்ப் பதியாது வழுக்கி விழும் அவன் பார்வையை எக்காளமிடுகிறது அந்தக் குரல். விபரீதம் கசியும் குரலின் தொனி சற்றே உயர்ந்து, தொலைந்துபோகும் அவன் பார்வைக்குத் தன் திசையை அறிவிக்கிறது.


கிரிக்குப் பின்வரிசையில் வலதுபுறத்தில் கைநீட்டினால் தொட்டுவிடக்கூடியதூரத்தில் உட்கார்ந்திருப்பவளைப் பார்த்தான். கன்னங்களில் வெளிச்சம் மங்கிப்போயிருந்தது. நெற்றியில் பிரதானமாயிருந்த பெரிய பொட்டில் ஒரு வெளிச்சப் புள்ளி மின்னியது. கிரியைப் பார்த்துச் சிரித்தாள். சத்தமின்றி. நாக்கால் உதடுகளை மேலும் கீழும் உரசிக்காட்டினாள். சட்டெனத் திரையிலிருந்து எழும்பிய வெளிச்சம் அவளை முழுவதும் அலம்பி அவள் உருவம் தெளிந்தது. நடுத்தர வயது. தலையில் அள்ளி முடிந்த கொண்டையில் ஒரு பூச்சரம்.

மார்புகளுக்கு நடுவே ஒதுங்கியிருந்த சேலை. கால்களை அகலமாய் விரிப்பதும் சேர்ப்பதுமாய் ஆட்டிக்கொண்டிருந்தாள். கண்ணால் ஜாடை செய்து பக்கத்தில் வரும்படி அழைத்தாள். புருவத்தை உயர்த்தியும் நெரித்தும் அவள் முகத்தில் காட்டிய சங்கேதக்குறிகள் விகாரமாய் இருந்தன. அவனுக்கு அருகில் முன் நகர்ந்து ஜாக்கெட்டைக் கீழிறக்க அவளுடைய இடது மார்பு வெளியே தெரிந்தது. 
கிரி உடனே தலையைத் திருப்பிக்கொண்டான். ஒரு கேலிச் சிரிப்பு மெல்ல எழுந்தது. தாழ்ந்த குரல் கிசுகிசுப்பாய்த் துடித்தது. கிரியின் உடல் முழுவதும் ஒரு விரைப்பு ஏற்பட்டிருந்தது. இது அவன் எதிர்பாராதது. இந்தத் தந்திரத்தைச் சமாளிக்கக்கூடிய தயாரிப்புகள் அவன் மனத்திற்கும் உடலுக்கும் அப்பாற்பட்டவை. இவள் பிரயோகிக்கும் லாகிரிகளிலிருந்து தன் மூளையை எப்படிக் கழற்றியெடுக்க முடியும்? ஏற்கெனவே அவன் உடலில் தகிப்பு நாட்கணக்காய் இந்த நாளை எதிர்பார்த்துக் கூடிவந்திருக்கும்பொழுது தீர்க்க முடியாத ஜ்வாலையின் நாக்குப்பிளவுகளை அவனை நோக்கி வீசுகிறாள்.



அவன் அங்கிருந்து நகர்ந்தபொழுது எதிர்பார்ப்புடன் அவனைப் பார்த்துச் சிரித்தவள் அவன் விலகிப்போவதைக் கண்டதும் முகத்தை இறுக்கிக்கொண்டாள். அலட்சியம் அவள் முகத்தில் கூடியது. காலால் ஓங்கித் தரையை உதைத்தாள். கிரியின் காலுக்கடியில் பூமி அதிர்ந்தது
.

வரிசையாக இருந்த இருக்கைகளின் ஓரத்தில் வெளியே செல்லும் கதவருகே நின்ற கிரியின் கால்கள் நடுங்கின. இருட்டுக் களிமண் எங்கும் வழிந்து மூச்சடைப்பதுபோலிருந்தது. அவன் மூளைக்குள் சுழலும் சக்கரங்கள் பேரிரைச்சலிட்டன. இச்சையின் இழைகள் எல்லாப் பொறிகளையும் பின்னிச் செயல்பாட்டைத் தடுமாறச் செய்கிறது. அரங்கத்துக்குள் முடிச்சாகவும் சிண்டுசிடுக்காகவும் அமர்ந்திருந்த கூட்டத்தைத் தவிர்த்துத் தனியர்களை அவன் பார்வை உரசியது. அவனுக்குள் எத்தனையோ கணக்குகள், வரிசைப்படுத்தல்கள் உருவாகி அழிந்தன. இருளைத் துளைத்த வெளிச்சம் தழுவுகையில் உயிர்பெற்றும் மீண்டும் உடனே இருளில் கரைவதுமாய் முகங்கள் மனப்பாறைகளில் அறைந்தொடுங்கும் அலைகளாய் வந்து போயின.

 ஒரு கரம் கைபற்றியிழுத்துச் சரியான இடத்தில் தன்னை அமர்த்திவிட்டால் இந்த நெருக்கடியைத் தோற்கடித்து விடலாம். காரியம் கைகூட, பற்றிக்கொள்ள ஒரு இழை, ஏதுவான ஒரு அழைப்பு கிட்டினால் போதும். ஆனால் மனம் சுண்டிப்போடும் நாணயமோ பல முகங்களைக் கொண்டது. தரையீர்ப்பை எதிர்த்து அந்தரத்தில் சுழல்கிறது. அவன் எந்தத் திசை நோக்கி இப்போது முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும். அவனை எதிர்கொண்டு அணைத்திழுக்கும் காந்த அலைகள் எங்கிருந்து எழும்புகின்றன? விபச்சாரியின் தொங்கிய முலை மனக்கண்ணில் மோதுகிறது. தொண்டைக் குழியில் ஒரு பாறாங்கல்லாய்ச் செருகிக்கொண்டதை உமிழவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை.

தனக்குள்ளே வலிந்து கிளப்பிக்கொண்ட ஒரு உத்வேகத்துடன் பக்கவாட்டில்

நீண்டவரிசையின் கோடியில் ஒற்றையாய் அமர்ந்திருந்த உருவத்தைக் குறிவைத்து முன்னகர்ந்தான். காலி இருக்கைகள் அவன் தொடைப்புறத்தை இடித்தபடி இருந்தன. ஒரு கையால் முன்வரிசை இருக்கைகளின் முதுகைப் பிடிமானம் கொண்டு இருளில் அடியெடுத்துவைத்தபடி நகர்ந்தான். செருப்பிலிருந்து நீண்ட கால்விரல்கள் தரையில் விழுந்திருந்த பழத்தொலிகளையும் காகிதக் குப்பைகளையும் ஈரக்கறைகளையும் தீண்டுகையில் அருவெருத்தான். போக வேண்டிய தூரம் அளவில்லாததைப் போலிருந்தது. கால் பெருவிரல் ஏதோவொரு இடத்தில் மோதிச் சுளீரென வலியை உண்டாக்கியது.

நிழலுருவமாய்ப் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை வேவுபார்த்தான் கிரி. கிட்டத்தட்ட தன் வயதொத்தவன் போலவே இருப்பதாகப் பட்டது. இருட்டில் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. இருக்கைகள் இடையே இருந்த பொதுக் கையிருக்கையில் கைவைத்திருந்ததைக் கவனித்தான். அவனுடைய கை உள்ளிறங்கி மடிமேல் கிடந்தது. மெதுவாகத் தன் கையையும் கிரி அந்த கையிருக்கையின் மேல் வைத்தான். ஒரு புள்ளியில் லேசான தொடுதல் நிகழ்ந்தபோது கிரியின் தொடைகள் நடுங்கின. திரை அள்ளித்தெளிக்கும் பிரகாசத்தைக்கொண்டு பக்கத்திலிருப்பவனின் முகபாவத்தைக் கணிக்க முயன்றான். அளவில் குறைந்த வெளிச்சமும் இருளும் எல்லாவற்றின் பரிமாணத்தையும் லட்சணங்களையும் பிசகாகவே காட்டின. ஒரு லாவகம், ஒரு நெளிவு கைகூடாது தவித்தான். எங்கும் வியர்வை பெருகுவது போலிருந்தது. எந்தக் கணமும் தான் மிகப் பெரிய ஓர் ஈரத்துளியாக மாறிக் கீழ்தேங்கும் இருளில் சொட்டி மறைந்துவிடக்கூடும் என்ற அச்சம் கிரிக்குப் பெருகியது.

முதல்முறை பக்கத்தில் அமர்ந்திருந்தவன் ஸ்திரமான அடிகள் வைத்து முன்னேறினான்- தயக்கத்தின் வாசனையைக்கூட அறிந்திராதவன்போல. வெற்றியின் கொட்டு மேளத்தைக் காதில் கேட்டபடி அதற்கேற்றாற் போல் இயக்கத்தை அமைத்துக்கொண்டவனாய், பறிக்கப்போகும் கனி ஏற்கெனவே காற்றில் விழும் பாதையை உருவாக்கிக்கொண்டதாகவும் தான் கைகளை விரித்தால் மட்டும் போதும் என்ற நிச்சயத்துடன் கிரியை அணுகினான். கிரியின் உடன்பாடு குறித்து எந்தச் சந்தேகத்தையும் அனுமதிக்காத செருக்குடன் அவன் விரல்கள் தீண்டி ஆக்கிரமித்தன. இயல்பான கம்பீரத்துடன் தன்னை வெளிப்படுத்தி ஓரிரு கணத்துக்குள் எல்லாவற்றையும் அவனுடைய கட்டுப் பாட்டுக்குள் ஸ்தாபித்திருந்தான். அவன் கைகளில் எரிந்த சுடரில் மெழுகாக உருகிச் சொட்டுவதைத் தவிர கிரியால் வேறென்ன செய்ய முடிந்தது? பிறகு எத்தனை பொழுதுகள் கழிந்துவிட்டன இச்சையின் வாசனையை மட்டும் முகர்ந்தபடி. சதாவொரு தத்தளிப்புடனும் தணியாத தாகத்துடனும் நாட்கள் நகர்ந்தன.

அதற்குப் பிறகு எத்தனைமுறை இந்த அரங்கத்துக்குக் கிரி வந்து காத்திருந்திருக்கிறான். அவன் மீண்டும் வரவேயில்லை. அவனுடைய நிழலாக, அந்த அனுபவத்தின் நிழலாக இந்த அரங்கத்திலேயே தான் உறைந்துவிட்டதாகக் கிரி எண்ணிக்கொண்டான். கிரிக்கு ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்லும் உந்துதலை அளித்ததோடு அவன் பாத்திரம் முடிந்துவிட்டது. மனம் நினைவிலிருந்து மீட்டித்தரும் அனுபவத்தின் துளிகளை நக்கிச் சுவைக்க நீளும் பொறிகளின் நாக்கு அந்தப் பிரயத்தனத்தின் இறுதியில் விரயத்தையே சந்தித்து விம்முகிறது. இனித் தனியாக அரங்கத்தின் இருட்டுப் பாதைக்குள் செல்ல வேண்டும்.

கிரி இடதுகாலை லேசாக நகர்த்திப் பக்கத்திலிருப்பவனின் காலை உரசினான். அவனுடைய கால் தொடுதலைப் பொருட்படுத்தாது இருந்த இடத்திலேயே கிடந்தது கிரிக்குத் திருப்தியைத் தந்தது. திரையிலிருந்து மிகப் பெரிய ஒலிப்பிரளயம் எழத் தொடங்கியது. கிரி பக்கத்திலிருப்பவனை நோக்கித் திருப்பினான். அவனிடம் எந்த அசைவுமில்லை. முகம் திரையை நோக்கியேயிருந்தது. புது மாதிரியான விபரீதமும் கிளர்ச்சியும் கடைவாயில் ஒழுகின


. அந்தக் கணத்தில் தான் திரும்ப முடியாதவொரு புள்ளிக்குச் சென்றுவிட்டதாகத் தோன்றியது கிரிக்கு. அந்த அரங்கத்துக்குள் இரண்டுவிதமான இருள் அடுக்குகள் உருவாகியிருந்தன. எல்லா சப்தங்களையும் குடித்து அடர்ந்தகூடுபோல் இருள் அவனைச் சுற்றிப் பின்னியபோது ஒரு துல்லியமான அமைதியை, பரிசுத்தத்தை அவன் பெற்றான். அவன் பிரக்ஞை வெறும் உடலை மட்டும் அவ்விருக்கையில் கிடத்திவிட்டுப் பிரிந்து மிதந்தது. அதை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தபோது அதுவும் அவனை உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஒரு குமிழிபோல் மிதந்த அதற்கு முன்னால் அவன் ஒரு அன்னியனாய் மாறினான்.


குதிக்கும் நிழல்கள் நடுவே அமர்ந்திருக்கும் அந்த அறிமுக மற்ற மனிதன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் முதிர்சிறுவன் என்ன ரகசியத்தை இழைத்துக்கொண்டிருக்கிறான்? அவன் அடுத்து என்ன செய்யப்போகிறான்? கூடிவரவிருக்கும் கணங்கள் அவனை எங்கே இழுத்துச் செல்லப்போகின்றன? இருவரையும் பின்னும் ஒரு மெல்லிய இழை வெற்றிடத்தில் மெல்ல நடுங்குகிறது.


சிறுவன் கரத்தை மெல்ல கையிருக்கையில் வைக்கிறான். ஒரு மெல்லிய தொடுதல் நிகழ்கிறது. அந்த மனிதனுடைய முகபாவத்தைத் தீர்மானமாக அனுமானிக்க முடிய வில்லை. அவன் அந்தச் சிறுவனைவிட நன்கு வயதேறியவன். வெளியேறும் இளமையின் கால்தடங்கள் அவன் முகத்தில் பதிந்திருக்கின்றன. அவன் மென்மை யானவனா? இதமான ஓர் அசைவை நிகழ்த்துவானா? அந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான்? அந்த அரங்கத்திலிருந்து வெளியேறும்பொழுது எங்கே செல்வான்? அவனுடைய தசைநாண்களை முறுக்கேற்றும் கனவு என்ன? இந்த முதிர்சிறுவன் அவனைத் தொடுகையில் எதைத் தேடுகிறான்? அங்கே நடந்தேறும் நாடகத்தின் மர்மம் எப்போது வெளிப்படப்போகிறது? சிறுவனின் கரத்தை அவன் பற்றிக்கொள்வானா?


 சிறுவனின் கரம் அந்த மனிதனின் இருக்கைக்குள் நுழைகிறது. மெல்ல அவன் கவனிக்காதபடி. பிறகு அந்த மனிதனின் தொடைமீது அது உரசுகிறது. இருவரும் உறைந்துபோய் அமர்ந்திருக்கிறார்கள். உரசும் கரம் மெல்ல மேல் நகர அந்த மனிதன் திரும்பிச் சிறுவனை முறைக்கிறான். அவன் முகம் இறுகுவது தெரிகிறது. சிறுவன் எதையும் செய்ய இயலாதவனாய்க் கையை விலக்கிக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறான். அந்த மனிதன் சிறுவனின் கையைப் பிடித்து முறுக்குகிறான். சிறுவன் வலியில் துடிப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த மனிதன் சிறுவனின் கையை விட்டுவிடாமல் பிடித்துக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்து கொள்கிறான்.


 சிறுவனுடைய முகத்தில் பளாரென அறைகிறான். சிறுவன் நிலைகுலைந்து இருக்கையிலிருந்து வழுக்கித் தரையில் விழுகிறான். அரங்கில் ஆங்காங்கே விளக்குகள் முளைக்கத் தொடங்குகின்றன. ஆட்களின் கவனம் திரையிலிருந்து விடாது அடிக்கும் மனிதன் மேலும் எதையோ சொல்லி மன்றாடும் சிறுவன்மேலும் திரும்புகிறது. அந்த மனிதனோ கொஞ்சமும் நிறுத்தாமல் சிறுவனைத் தள்ளிவிட்டபடியும் அடித்தபடியும் இருக்கிறான். சுருண்டு சுருண்டுவிழும் சிறுவனுடைய கன்னத்தில் ஈரமாய்த் தரைக் குப்பைகளும் அசிங்கங்களும் ஒட்டியிருக்கின்றன. இப்போது அவனைப் பார்க்கவே அருவெருப்பாய் இருக்கிறது. எத்தனை ஈனமான குரலில் அவன் அழுகிறான்.


அவனுடைய பச்சாதாபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது. எத்தனை கீழ்மை அவனுடைய மூளையிலிருந்து ஒழுகியிருக்கிறது. அந்த மனிதன் அணிந்திருக்கும் கனத்த காலணியால் சிறுவனின் குரல்வளையை மிதிக்க வேண்டும். அப்போது அந்த ஈனக்குரலை ஒரு மிதியில் அறுத்துவிடலாம்.


சிறுவன் இப்போது ஓடுகிறான். இருக்கைகளுக்கிடையே தடுமாறித்தடுமாறி

விழுந்தெழுந்து. அந்த மனிதனும் விடாது துரத்துகிறான். திரையரங்கக்காவலாள் வெளிக்கதவொன்றைத் திறந்து உள்ளே விசாரிக்க வருகிறான். ஆட்கள் சிலர் பக்கத்தில் வருகிறார்கள். காவலாள் சிறுவன் ஓடிவிடாதிருக்கக் கையால் பிடித்து நிறுத்துகிறான். அந்த மனிதன் சொல்வதைக் கேட்ட கும்பல்சிறுவனைச் சூழ்ந்தது. ஒருவன் சிறுவனின் காதைத் திருகுகிறான். தலையில் ஓங்கிக் குட்டுகிறான்.
 கன்னத்தில் அறைந்து சட்டைக் காலரைப் பற்றிச்சிறுவனை உயர்த்துகிறான் வேறொருவன். பெரிய பொட்டு வைத்துக் கண்ணை உறுத்தும் உதட்டுச்சாயம் பூசியிருந்த ஒரு பெண்மணி சிறுவனின் முகத்தில் ‘தூ’வென உமிழ்கிறாள். முகத்தில் இருந்து எச்சில் சட்டையில் சொட்டுகிறது. திறந்த கதவு வழி உள்பாய்கின்ற வெளிச்சத்தில் சிறுவனுடைய தொடையருகில்கால்சட்டையில் விரிந்திருக்கும் ஈரக்கறை ஒருபொழுதும் இமைக்காத உக்கிரக்கண்ணாய்ப் பளபளக்கிறது.

thanx - sirukadhaikaL

0 comments: