Sunday, March 16, 2014

மம்முட்டி , மோகன் லால் தான் என்னை சினி ஃபீல்டை விட்டே துரத்தியது - ஷகீலா ஓப்பன் டாக் @ த ஹிந்து

சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா?- ஷகிலா நேர்காணல்

நடிகை ஷகிலா
நடிகை ஷகிலா
சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. 


ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் இரு சிறுமிகளை “அண்ணன் பொண்ணுங்க” என்று அறிமுகப்படுத்துபவர், அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, “இப்போ பேசலாம்ணா” என்கிறார்.ஜனப்புழக்கம் அதிகமுள்ள பகுதியில் இருக்கிறீர்களே… வெளியே போகவர சிரமமாக இல்லையா?நான் பொறந்து வளர்ந்த ஏரியாண்ணா இது. இந்த வீட்டுலதான் 33 வருஷமா இருக்கேன். ஒண்ணுமே இல்லாம இருந்தப்போவும் இங்கேதான்; லட்சக் கணக்குல சம்பாதிக்குறப்போவும் இங்கேதான். நாங்க ஏழு பிள்ளைங்க, அப்பா, அம்மானு அடிவைக்குறதுக்குகூட இடம் இல்லாம இருந்த வீடு. இன்னைக்கு இந்த வீட்டுல ஒட்டிட்டு இருக்குற ஞாபகங்களோட நான் மட்டும் தனியா இருக்கேன். சின்ன வயசுல இந்த ஏரியாவுல இருக்குற ஒவ்வொரு வீட்டுலேயும் பூந்துவந்திருக்கேன். ஆனா, ஒருகட்டத்துக்கு அப்புறம் ஷூட்டிங் விட்டா வீடு, வீடு விட்டா ஷூட்டிங்னு ஆயிடுச்சு வாழ்க்கை. எப்போவாச்சும் ரொம்பத் தேவைன்னா பக்கத்துல இருக்குற கடைகளுக்கு முகத்துல கர்சிப்பைக் கட்டிக்குட்டு போவேன். போற வேகத்துல திரும்பிடுவேன்.அப்பா, அம்மா என்ன செய்துகொண்டிருந்தார்கள்?


அப்பா ஒரு சூதாடின்ணா. சீட்டாட்டம், ரேஸு இதான் அவருக்குத் தொழில், பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே. திடீர்னு ஒருநாள் ஜெயிச்சுட்டு வந்து நகைகளா வாங்கிட்டு வந்து போட்டு அழகு பார்ப்பார், கொஞ்சுவார். ஒரு வாரம் கழிச்சு கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொண்ணா கழட்டிக்கிட்டுப் போய் சூதாடுவார். அம்மா இப்படி ஒரு அப்பாவுக்கும் ஏழு பிள்ளைகளான எங்களுக்கும் இடையில போராடிட்டு இருந்தாங்க. இந்தக் கஷ்டம் எல்லாம் எனக்கு ரொம்பத் தாமதமா, ஒரு பதினஞ்சு, பதினாறு வயசுலதான் தெரிய ஆரம்பிச்சுச்சு. எங்க அக்காவுக்கும் எனக்கும் 16 வயசு வித்தியாசம். அவங்கதான் என்னைத் தூக்கி வளர்த்தாங்க. என்னோட 16 வயசுல அவங்க பிரசவத்துக்காகப் போறாங்க. ஆஸ்பத்திரி போக காசு இல்லை. அப்போதான் எனக்கு எல்லாம் விளங்குது, சரி, இனிமே நாமதான் நம்ம குடும்பத்தைப் பார்க்கணும்னு.அதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கும்போது, ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்?முதல் காரணம், எனக்குப் படிப்பு சுத்தமா வராது. எவ்வளவோ பள்ளிக்கூடங்கள்ல மாத்தி மாத்திச் சேர்த்துப் பார்த்தார் எங்கப்பா. ம்ஹூம்… ஒருகட்டத்துல, ‘பேசாம எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கப்பா'ன்னு எல்லாம் அழுதிருக்கேன். இப்படிப்பட்ட என் படிப்பை வெச்சிக்கிட்டு எங்கே வேலை தேட முடியும்? ரெண்டாவது காரணம் என்னன்னா, வீட்டைச் சுத்தி சினிமாக்காரங்களா இருந்தது. இதோ, ஜன்னல் வழியா தெரியுது பார்த்தீங்களா, அந்த வீட்டுலதான் ஜனகராஜ் அங்கிள் இருந்தார். விஜயசாந்தி ஆன்டி வீடு அதுக்கும் கொஞ்சம் தூரம். நான் எல்லார் வீட்டுக்கும் விளையாடப் போவேன். சும்மா சொன்னாங்களோ என்னவோ, ‘ஏய், நீ அப்பாட்ட சொல்லிட்டு வா… சினிமா ஹீரோயினாயிடலாம்'பாங்க. அது அப்படியே மனசுல பதிஞ்சுருந்துச்சு. நான் ஃபெயிலாகி நின்னு, எங்கப்பா என்னை அடிச்சப்போ பார்த்துப் பதறிப்போய் ஓடிவந்த மேக்கப் மேன் உமாசங்கர் அண்ணன், ‘பாப்பாவை சினிமால சேர்த்துட்டுருண்ணா'னு அப்பாகிட்ட பேசினார். அப்பா அனுப்பிவிட்டுட்டார்.முதல் பட அனுபவத்தைச் சொல்ல முடியுமா?சில்க் ஹீரோயினா நடிச்ச ‘ப்ளே கேர்ள்ஸ்' டைரக்டர் என்னைப் பார்த்த மாத்திரத்துல ஓகேன்னுட்டார். எனக்கு சில்க்கூட இருக்குற பொண்ணு கேரக்டர். இருபதாயிரம் ரூபாய் சம்பளம். துணைக்கு என்கூட வந்திருந்த என் தங்கச்சியைப் பார்த்துட்டு, அவளுக்கும் ஒரு கேரக்டர். இருபதாயிரம் சம்பளம். எனக்கு நம்பவே முடியலை. இனி நம்ம குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லேன்னு முடிவு பண்ணிட்டேன். ஷூட்டிங் போனப்போ ரொம்ப சின்ன டிரஸ்ஸா கொடுத்தாங்க. எனக்கு வெட்கமா போயிடுச்சு. போட முடியாதுன்னுட்டு நின்னேன். ‘ஒண்ணும் தப்பில்லைம்மா; அங்கே சில்கைப் பாரு'ன்னு தூரமா உட்கார்ந்திருந்த சில்கைக் காமிச்சாங்க. அவங்க என்னைவிடக் கம்மியான டிரஸ்ல உட்கார்ந்திருந்தாங்க. சரி, இங்கே இதெல்லாம் சகஜம்னு முடிவெடுத்துட்டேன். அப்புறம் வரிசையா படங்கள்.நீங்கள் ஹீரோயின் ஆக முடியவில்லை என்ற வருத்தம் எல்லாம் வரவில்லையா?மொதல்ல தெரியலை. அப்புறம் நமக்கெல்லாம் இதுவே பெரிய விஷயம்னு நெனைப்பாயிட்டு.சின்னச் சின்னப் பாத்திரங்களில் நடித்துவந்த நீங்கள் எப்போதிலிருந்து நீலப் படங்களில் நடிக்க ஆரம்பித்தீர்கள்? எந்தச் சூழல் உங்களை அதை நோக்கித் தள்ளியது?மூணு வருஷம் இப்படியே போச்சு. அப்பா திடீர்னு இறந்துட்டார். அதுவரைக்கும் அவர்தான் என்னோட படங்கள், ஷூட்டிங் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டவர். அவர் செத்து ஆறேழு மாசம் படமே இல்லை. இதுக்கு இடையிலேயே தவணையில கார் வாங்கியிருந்தேன். அப்பாவோட கடன்லாம் வேறு சேர்ந்துக்கிட்டு. கையில காசில்லை. அப்போதான் மலையாளத் தயாரிப்பாளருங்க ரெண்டு பேர் வந்து ‘கிண்ணாரத் தும்பிகள்' படத்துக்காகப் பேசினாங்க. ‘முப்பது வயசுப் பொம்பளைக்கும் சின்ன பையனுக்கும் காதல்'னு ஆரம்பிச்சாங்க. நான் முடியவே முடியாதுன்னு சொல்லி திட்டி அனுப்பிட்டேன். ‘யோசிச்சு வைம்மா, நாளைக்கு வர்றோம்'னுட்டுப் போனாங்க. அவங்க கிளம்பினதுல ஆரம்பிச்சு ராத்திரியெல்லாம் அம்மா ஒரே புலம்பல். தாங்கலை. மறுநாள் அவங்ககிட்ட நான் நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அப்புறம் அதுவே பழகிடுச்சு.கொஞ்சமான உடைகளோடு பாலுறவுக் காட்சிகளில் நடிப்பது சங்கடமாக இல்லையா?எந்த நடிகை மூடிக்கிட்டு நடிக்க முடியுது? சொல்லுங்க பார்ப்போம். சினிமாவை விடுங்க. ரோட்டை எட்டிப் பாருங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நோக்கம். ஒவ்வொரு தேவை.பொதுவா, சாதாரண படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கே பாலியல் சீண்டல்கள் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பார்கள். நீலப் பட நடிகைகளுக்கு அந்தச் சீண்டல்கள் இன்னும் பெரிய பிரச்சினையாக இருக்குமே?நான் வளரும்போதே ஆம்பளை மாதிரிதான் வளர்ந்தேன். ‘ஏய்'னு ஒருத்தன் கூப்பிட்டா, ‘என்னடா?'னு கையை முறுக்குற ஆளு. ஆனா, பார்க்குற எல்லாரையுமே அண்ணா, அப்பானு கூப்பிட்டுத்தான் பழகுவேன். அதனாலேயோ என்னவோ இன்னைக்கு வரைக்கும் எனக்கு அந்த மாதிரியான பிரச்சினைகள் எதுவும் வந்ததில்லை. அதுக்காக யாருக்கும் இந்தப் பிரச்சினையே இல்லைனும் சொல்ல மாட்டேன். என்கூட நடிக்குற பொண்ணுங்ககிட்டேயே வாலாட்ட பார்த்த பசங்களை நான் மிரட்டி அனுப்புன கதையெல்லாம் உண்டு. ஆனா, ரெண்டு பேர் பிரியப்பட்டுப் போனா அது தப்பில்லேனுதான் தோணுது. ஒரு நடிகனோட நோக்கம்தானே நடிகையோட தேவையைப் பூர்த்திசெய்யுது? நாம என்னதான் பேசினாலும், வாழ்க்கையில ஒண்ணை இழந்துதானே ஒண்ணைப் பெற வேண்டியிருக்கு? ஒரு பொண்ணை வெளியிலேர்ந்து பார்க்குறவங்களுக்கு, அவளோட உடம்பு முக்கியமான விஷயமா இருக்கலாம். ஆனா, அந்தப் பொண்ணுக்கும் அப்படியே உடம்புதான் முக்கியமான விஷயமா இருக்கணும்கிற தேவை இல்லையே? ஒரு பொண்ணுக்குத் தன் உடம்பைவிட பேரு, புகழ், பணம் இல்லை வேற ஏதோ ஒண்ணு முக்கியமா பட்டா அது தப்பில்லையே?சினிமா துறையில் பாலியல் சுரண்டலே இல்லை என்று சொல்லவருகிறீர்களா?


எல்லாத்தையும் சுரண்டலா பார்க்க முடியாதுன்னு சொல்ல வர்றேன்.


ஒருகட்டத்தில் மலையாள சினிமாவை விட்டு நீங்கள் ஒதுங்கியதன் பின்னணியில், மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன் லாலுக்கும் மம்மூட்டிக்கும் முக்கியமான பங்கு இருந்ததாகப் பேசப்பட்டதே?ஆமா, நமக்கு வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை ஒரு படம் வரும். அவங்களுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு படம் வரும். அதுவும் ஓடலைன்னா? நேரடியா மிரட்டலை. வேற வழியில தொல்லை கொடுத்தாங்க. திடீர்னு பார்த்தா, நான் நடிச்ச 27 படங்கள் சென்சார்ல அப்படியே நிக்குது. இப்படி நிறைய.சினிமாவைக் குறைத்துக்கொள்ள அதுதான் காரணமா?


அப்படியெல்லாம் இல்லை. ஓடிட்டே இருக்கீங்க, திடீர்னு ஒருநாள் எதுக்கு இவ்வளவு ஓடுறோம், இவ்ளோ ஓடினதுல என்ன மிச்சம்னு யோசிக்கிறப்போ ஒண்ணுமே இல்லாதது மாதிரி இருந்தா எப்படியிருக்கும்?தனிப்பட்ட வாழ்வைச் சொல்கிறீர்களா?


ஆமா, வருஷத்துக்கு அறுபது, எழுபது படங்கள் எல்லாம் நடிச்சிருக்கேன். ஒருநாள் அம்மாகிட்டே கேட்குறேன் நம்ம கையில எவ்ளோ இருக்கும்னு? கையை விரிச்சுக் காட்டுறாங்க. ‘அக்காகிட்டேதான் எல்லாத்தையும் கொடுத்தேன், அவ யாருகிட்டேயோ வட்டிக்குக் கொடுத்து ஏமாந்துட்டாம்மா'ங்கிறாங்க. அதைக்கூடத் தாங்கிக்கிக்கலாம். சம்பாரிச்ச காசையெல்லாம் குடும்பத்துக்குத்தான் கொடுத்தேன். ஆனா, அந்தக் குடும்பத்துல என் தம்பியைத் தவிர யாரும் இன்னைக்கு இல்லை. அப்பா – அம்மா இறந்துட்டாங்க. ஒரு அண்ணன் தீக்குளிச்சு செத்தான். அக்கா, தங்கச்சி வீட்டுல இன்னைக்கு என்கூட யாரும் பேசுறதுகூட இல்லை. என்னோட பேசுறதே அவமானமா இருக்காம். அக்கா ஞாபகம் வரும்போதெல்லாம் அவங்க இருக்குற வீடியோவை ஓடவிட்டுப் பார்த்துப் பார்த்து அழுவேன். (கண் கலங்குபவர் பக்கத்தில் இருக்கும் சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரட்டை எடுத்துப் புகைக்க ஆரம்பிக்கிறார்).


காதல், திருமணம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையா?


காதல்தானே? இதுவரைக்கும் ஒரு டஜன் காதல் வந்துட்டுப் போயிருக்கு. இப்போகூட ஒரு காதல் இருக்கு. எல்லாரும் மாதிரி நமக்கும் ஒரு கல்யாணம், குழந்தைங்க, குடும்பம் எல்லா ஆசையும் இருக்கத்தான் செய்யுது. ஆனா, சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா? என்னோட கடைசிக் காதல் எப்படி முறிஞ்சுது தெரியுமா? எங்க அண்ணனுக்குக் கொடுத்தனுப்பின ஒரு பிரியாணிப் பொட்டலத்துக்காக முடிஞ்சுது. ஒருமுறைதான் கூடப் பிறக்கிறோம். அண்ணனுக்கு ஒருவேளை சாப்பாடு கொடுக்குறதே பொறுக்கலைன்னா? இதோ அந்த அண்ணன் செத்துட்டான், அவன் பிள்ளைங்களை ரோட்டுல அனாதையா விட்டுட முடியுமா? அப்படித்தான் விடணும்னு சொல்லுறதை காதல்னு என்னால ஏத்துக்க முடியலை. (அடுத்த சிகரெட்டை எடுக்கிறார்).


இந்த சிகரெட் பழக்கம் எப்போது வந்தது?


சினிமாவுக்குப் போனதுக்கு அப்புறம்தான். ஒரு ஷூட்டிங்ல பூஜா பட்டைப் பார்த்தேன். சுத்தி ஏகப்பட்ட சிகரெட் துண்டுகள். என்னைக் கவனிச்சுட்டு ஒரு ‘மல்பரோ லைட்ஸ்' சிகரெட்டைக் கொடுத்தார். அப்போ ஆரம்பிச்சது. ஆரம்பத்துல, ஒரு ஸ்டைல்; இப்போ டென்ஷனானா தேவைப்படுது. டிரிங்ஸும் எடுத்துப்பேன். ரொம்பக் கம்மியா. எப்போவாவது. அது அப்பாவைப் பார்த்துப் பழகினது.ஒரு பேட்டியில், “ஆண்களோடு மது அருந்த மாட்டேன்” என்று சொல்லியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். என்ன காரணம்?


அப்படிச் சொல்லலை. எவ்வளவோ அண்ணன்மார்கூடக் குடிச்சுருக்கேன். ஆனா, புதுசா ரெண்டு ஆண்கள்கூடக் குடிக்கணும்னா மாட்டேன்; ஏன்னா, அவங்க நோக்கம் குடிச்சதுக்கு அப்புறம் படுக்கையை நோக்கிப் போகும்னுதான் சொல்லியிருந்தேன்.


இப்படிப் புகைப்பது, குடிப்பது எல்லாம் உடலுக்குக் கேடு அல்லவா?கேடுதான், தேவைப்படுதே… என்ன செய்றது? இங்கே ஒரு பிச்சைக்காரப் பாட்டி இருக்கு. உரிமையா வீட்டுக்குள்ள வரும். ‘யம்மாடி, ஒரு கட்டிங் வாங்கிக் கொடும்மா'னு கேட்டுக் காசு வாங்கிட்டுப் போகும். இடையில ரெண்டு மாசம் ஊருல நான் இல்லை. நேத்தைக்கு வந்துச்சு. ‘பட்டினி போட்டுட்டியேடாம்மா'னுச்சு. ‘ஏம்மா, யாரும் சாப்பாடு வாங்கித் தரலை?'யான்னேன். ‘சாப்பாடு எல்லாரும் வாங்கித் தருவாங்க. குடிக்க நான் யார்கிட்டே போய்க் கேட்க முடியும்?'னுச்சு. நெனைச்சுப்பார்த்தா, பெரிய கஷ்டம்தான். இதுவும் ஒரு வகையிலான பசிதான். ஆனா, ஒரு பொம்பளை குடிக்க யாராவது இரக்கம் காட்டுவாங்களா?சரி, குடும்பத்துக்காக நடிக்க முடிவெடுத்தீர்கள். ஒருபக்கம் நடித்தீர்கள், சம்பாதித்தீர்கள் என்றாலும் இன்னொரு பக்கம் உங்கள் தனிப்பட்ட ஆசைகள், கனவுகளைப் பறிகொடுத்திருக்கிறீர்கள். இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது அன்றைக்கு சினிமாவைத் தேர்ந்தெடுத்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது சரியான முடிவு என்றுதான் நினைக்கிறீர்களா?சரியான்னு தெரியலை. ஆனா, தப்புன்னு சொல்ல மாட்டேன். என்னோட சினிமா வாழ்க்கையில எனக்கு எந்த வருத்தங்களும் இல்லை. சாகுறவரைக்கும்கூட நடிக்கத் தயாரா இருக்கேன். ஆனா, எல்லாக் காலத்துலேயும் ஜனங்க என்னை ரசிப்பாங்கன்னு முட்டாள்தனமா நான் நம்பலை. நான் ஏமாந்தது என் குடும்பத்துகிட்டேதான்; சினிமாகிட்டே இல்லை. காதல்ல ஏமாந்தேன்னா, என்னோட வெளிப்படையான அணுகுமுறையா இருக்கலாம். ஆனா, இதான் நெஜ ஷகிலா. அதை மறைச்சுட்டு நிக்குற பொய்யான ஷகிலாவைதான் நேசிக்க முடியும்னா, அப்படிப்பட்ட நேசம் எனக்கு வேணவே வேணாம். வாய்ப்பு இருக்குறவரைக்கும் நடிச்சுட்டு, கடவுள் அனுமதிக்கிறவரைக்கும் நான் நானாவே வாழ்ந்துட்டுப் போயிடுறேன்!​


சமஸ், தொடர்புக்கு: [email protected]

நன்றி - த தமிழ் இந்து


0 comments: