Thursday, March 06, 2014

எம்.ஜி.ஆர் -ன் உத்தம வில்லன் அசோகன்


மூன்று நொடி வசனத்தைக்கூட மூன்று நிமிடம் நீட்டி முழக்கிப் பேசிப் புதிய பாணி கண்டவர். பட்டை தீட்டப்பட்ட புருவத்தை உயர்த்தினால், பச்சைப் பிள்ளைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் வெலவெலத்துப்போவார்கள். அவர்தான் எஸ்.ஏ. அசோகன். இயற்பெயர் அந்தோணி. ‘மணப்பந்தல்’ படத்துக்காக அசோகன் ஆக்கினார் இயக்குநர் டி.ஆர். ராமண்ணா.



திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.ஏ. படிக்கும்போதே கருத்தரங்கப் பேச்சாளர் என்று பெயர் வாங்கியவர். ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வெளிப்படும் அவருடைய நடிப்பு, கல்லூரி வளாகத்தைத் தாண்டியும் பாராட்டிப் பேசப்பட்டது. இந்தியாவிலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் நாடகப் போட்டி ஒன்று நடந்தது. ஜோசப் கல்லூரி சார்பில் அசோகன் கலந்துகொண்டார். முதல்பரிசாகத் தங்கப் பதக்கம் கிடைத்தது.



சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார். நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார். 


அப்போது சி.எல். ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க, ‘விஜயபுரி வீரன்’ படத்தை இயக்கிவந்தார் தளியத். அந்தப் படத்தில் அசோகனுக்கு ஒரு முக்கிய வேடம் கிடைத்தது. அந்தப் படத்தின் உதவி இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தருடன் ஏற்பட்ட பழக்கம் நெருங்கிய நட்பாக விரிவடைந்தது. பின்னாளில் அவரை ஏவி.எம். நிறுவனத்துக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அசோகன். ஏவி.எம். நிறுவனத்தையும் எம்.ஜி.ஆரையும் பல மட்டங்களில் சந்தித்துப் பேசி சம்மதிக்கவைத்து, ‘அன்பே வா’ படம் உருவாகக் காரணமாக இருந்தவரும் அசோகன்தான்.



‘மணப்பந்தல்’, ‘இது சத்தியம்’, ‘காட்டு ராணி’ படங்களின் மூலம் கதாநாயகனாக வலம்வந்தார் அசோகன். அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்களில் குணச்சித்திர, வில்லன் வேடங்கள் குவிந்தன.



எல்லோரிடமும் எளிதில் நட்பாகிவிடும் அசோகனுக்கு எம்.ஜி.ஆர்., ஏவி.எம்.சரவணன், சின்னப்பா தேவர், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர் மிக நெருக்கமானார்கள். எம்.ஜி.ஆருடன் 80 படங்களுக்குமேல் நடித்துள்ள அசோகன், அவரைவைத்து ‘நேற்று இன்று நாளை’ படத்தைத் தயாரித்து, சோதனைக்கிடையே வெற்றி கண்டார்.



கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அசோகனுக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோயமுத்தூர் சரஸ்வதிக்கும் தீவிரமான காதல். திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, பெண் கேட்கப் போனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. “இனிமேல் சரஸ்வதியை சந்திக்கக் கூடாது. மீறினால் போலீஸில் புகார் செய்து விடுவோம்” என்று மிரட்டுகிறார்கள்.



அப்போதைக்கு ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பட பூதம்போலக் கையைக் கட்டி நின்றவர், தகுந்த நேரம் பார்த்துக் காந்திருந்தார். நேரம் வந்தது. குடும்பத்தினர் கண்களில் எதையும் தூவாமல், தப்பித்துவந்தார் சரஸ்வதி. தயாராக இருந்த அசோகன் அவரைக் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார்.



எம்.ஜி.ஆருக்குத் தகவல் தரப்பட்டது. அசோகனைப் பாராட்டிய அவர், உடனடி யாகத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்., ஏவி.எம். சகோதரர்கள், ஏ.சி. திருலோகசந்தர் ஆகியோர் நுங்கம்பாக்கம் ஃபாத்திமா சர்ச்சில் கூடினார்கள். தேவாலயத்தின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. சரஸ்வதிக்கு மேரி ஞானம் என்று பெயர் சூட்டப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த திருமணம் என்பதால் பெண் வீட்டார் போலீஸில் புகார்செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது. நெருங்கிய நண்பர் ஜெய்சங்கர் வெளியூர் படப்பிடிப்பிலிருந்து திரும்பிவந்து அசோகன் – மேரி ஞானம் தம்பதிக்குத் தனது வீட்டில் சிறப்பான விருந்துவைத்து மகிழ்ந்தார்.


படங்கள் உதவி: ஞானம்



readers views


  • ramesh  from Chennai
    i saw some his action very attractive and good to listen his Dialogue and body language.
    6 days ago ·   (3) ·   (0) ·  reply (0)
    ramesh · yaana  Up Voted
    • ஒரு நல்ல நடிகரை பற்றி, ஒரு நல்ல மனிதரை பற்றி, ஒரு நல்ல நினைவலைகள், MGR அவர்களுக்கு நல்ல பெயரையும் அவர் நடித்ததில் வித்தியாசமான கதாபாத்திரத்தையும் வாங்கிகொடுத்த அசோகன் அவர்களை பற்றி நல்ல முறையில் சொள்ளபட்டதர்க்கு நன்றி.
      6 days ago ·   (4) ·   (0) ·  reply (0)
      •  Vaduvooraan  from Chennai
        "எம்ஜியாரை வைத்து ‘நேற்று இன்று நாளை’ படத்தைத் தயாரித்து, சோதனைக்கிடையே வெற்றி கண்டார்!"- இதில் அசோகன் சோதனைகளை கண்டது மட்டும்தான் உண்மை! எம்ஜியார் கட்சி தொடங்கி மும்முரமாக அரசியலில் ஈடுபட்டதாலும், வெளியே சொல்லாத இயலாத காரணங்களினால் இருவருக்கும் கசப்புணர்வு தோன்றியதாலும் படம் நிறைய வருடங்கள் தயாரிப்பில் இருந்து அசோகனின் கையை கடித்து விட்டது. நுங்கம்பாக்கம் பகுதியில் மட்டும் மூன்று நான்கு வீடுகளை விற்று படத்தை முடித்தார் அசோகன். அதைத் தொடர்ந்து இறங்குமுகம்தான் அவருக்கு! அசோகன் திருமணம் பற்றிய தகவலில் ஒரு தவறு. அசோகன் திருமணம் நடந்து முடிந்து ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகுதான் 'இரவும் பகலும்' படம் வாயிலாக ஜெய்சங்கரின் திரையுலகப் பிரவேசமே நடந்தது! அதனால் அவர் வெளியூரில் இருந்து வந்து வாழ்த்தி விருந்தளித்திருக்க முடியாது!
        6 days ago ·   (10) ·   (1) ·  reply (1)
        •  vinod  
          நேற்று இன்று நாளை - 1971ல் படம் துவங்கி 1974ல் வந்தது .ஏகப்பட்ட சோதனைகள் - அரசியல் அன்றைய மு க வின் அடக்கு முறை மிரட்டல்கள் எல்லாம் தாண்டி எம்ஜிஆர் ரசிகர்களின் ஆதரவோடு படத்தை வெளியட்டு மாபெரும் வெற்றி கண்டார் .. வசூலில் மாபெரும் சாதனைகள் புரிந்து மதுரை - நெல்லை யில் 19 வாரங்கள் படம் ஓடியது . அசோகன் மட்டும் முகவின் மிரட்டலுக்கு பணிந்து எம்ஜிஆரை விட்டு விலகினார் .ஆனால் அசோகனுக்கு நேற்று இன்று நாளை கையை கடிக்கவில்லை .லாபம் கண்டார் .
          6 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
        •  Raj  from Waikanae
          திருமணத்திற்கு ஏன் மதம் மாறவேண்டும். யோசித்து பாருங்கள்.
          6 days ago ·   (2) ·   (1) ·  reply (0)
          •  கே. ஜோசப்  from Madurai
            ஓ! இவர்தான் அவரா! இப்போது என்ன வந்தது அசோகனின் ஃபிளாஷ்பேக்கிற்கு?
            6 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
            •  Murugan  
              அந்த நன்றிக்காகத்தான் சிவாஜி கட்சி ஆரம்பத்தபோது எம்ஜிஆருக்கு ஆதரவாகப் பிரச்சாரம செய்தாரா அசோகன்? சிவாஜியை எதிர்த்து அசோகன் பேசிய மேடைப்பேச்சுக்களின் தரத்தையும் மேற்கண்ட கட்டுரை சொல்லியிருந்தால் முழுமை அடைந்திருக்கும். அந்தத் தலைமுறையில் அனைவரும் நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள்தான். துரதிருஷ்டவசமாகத் தங்களுக்கும் தொழில் காரணமாக பகை வளர்வதைத் தடுக்க யாருமே முயலவில்லை.
              6 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
              •  muthamil  
                செம artistuuuuuuuu paaaaaaaaaaa,,,,,,,, different uh irukum ivarudaya acting.
                6 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
                •  Muthusamy Krishnan at Government from Salem
                  அசோகன் செய்தது சரியா?அவருக்கு துணை போன எம்.ஜி.ஆர் ராய் என்ன வென்று சொல்வது ?உனையன காதல் என்றல் 'சரஸ்வதி'மேரி யாக மாற வேண்டும்?இதற்கு பலர் துணை?எ.வி.எம்.சரவணன் தம் குடும்ப பெண்கள் காதல் என்றால் மதம் மாறி திருமணம் செய்து வைப்பார?'உலகே மாயம்,வாழ்வே மாயம்'
                  6 days ago ·   (2) ·   (0) ·  reply (1)
                  Subramanyam  Up Voted
                  •  Vaduvooraan  from Chennai
                    நல்ல பொழைக்க தெரிஞ்சவங்க இவிங்க அதுனால மத்தவங்களுக்கு வரும்போது மட்டும் முற்போக்கு சிந்தனை என்கிற சுவிட்ச் ஐ ஆன் பண்ணிடுவாங்க! வேற இனத்தை சார்ந்த பெண்ணாக இருந்தால் பலமான எதிர்ப்பு இருந்திருக்கும். இந்த கேசுல அதெல்லாம் இருக்காதுன்னு தெரிஞ்சுதான் கொஞ்சம் தைரியமாகவே செயல் பட்டிருக்காங்க
                    6 days ago ·   (3) ·   (0) ·  reply (0)
                  • ராஜ் மற்றும் முத்துசுவாமி கிருஷ்ணன் இருவரின் கேள்விகளும் சரியானவையே.
                    5 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
                    •  karthik  from Chennai
                      ஏதோ பழைய கதையை சொல்றீங்க, எம் ஜி ஆர் தவிர மற்றவர் எல்லாம் யார் என்று தெரியவில்லை, ஆனா படிக்க நன்றாக இருந்தது.

                    thanx - the hindu

                    0 comments: