Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, March 05, 2014

கறை- பாலியல் சிறுகதை

திரையரங்கத்தில் கிரிமீது இருள் கவிந்தது. மத்தியில் இருந்து கிளம்பியவெம்மை அருகாமையில் வந்துவிட்ட ஒரு காட்டு மிருகத்தின்  மூச்சுக்காற்றாய்ப் பரவியது. கிரியின் கண்ணுக்குள் இருள் கெட்டியானதிரவமாய்ப் பரவிப் பார்வையைக் குலைத்தது. அவனுக்குள் சற்றே அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் தொடங்கியது. பொறுமை தொலைத்த பார்வையாளர்களின் சில் பாம்புகள் அரங்கத்துக்குள் சீறியெழுந்தன; குரல்கள் படத்தைப் போடச்சொல்லியும் மின்விசிறிகளை முடுக்குமாறும் கட்டளையிட்டன.


ஜெனெரேட்டரின் சத்தம் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் பளீரென வெளிச்சம்

திரையில் படர்ந்தது. இருள் இப்போது ஒரு மெல்லிய திரையாய் மாறி விளாவத் துடிக்கும் வெளிச்ச விரல்களை எதிர்ப்பின்றித் தனக்குள் அனுமதித்தது.

திரையில் காட்சிகள் இடம்பெயரத் தொடங்கின. அவனுக்கு அதிகம்

பரிச்சயமில்லாத மொழியில் குரல்கள் உரத்துக் கத்திக்கொண்டிருந்தன. எந்த

இதத்தையும் கொண்டிராத அந்தச் சத்தம் நடுமண்டையைப் பிளப்பதையே குறிக் கோளாய் வைத்துக் கபாலத்தின் மீது விழும் மழுங்கினதொரு ஆயுதத்தின் தாக்குதல்போலவே இருந்தது. யாரோ ஒருவன் வெளியிலிருந்து கதவைத் திறந்து அரங்கத்துக்குள் நுழைந்தான். திறந்த கதவிலிருந்து கத்திபோல இறங்கிய வெளிச்சம் சில கணங்களில் காணாமல் போனது.

கிரி கால்களை இறுக்கி உட்கார்ந்திருந்தான். அந்த வரிசையில் வேறு யாருமில்லை. யாராவது வரக்கூடும் எனக் காத்திருந்தான். எல்லா இருக்கைகளிலும் தணிந்த இருள் மட்டுமே தேங்கியிருந்தது. அவன் மனத்தில் போட்டிருந்த கணக்குப்படி இன்னும் சற்று நேரம் அவன் பொறுத்திருக்க வேண்டும். அவன் நுழைந்தபொழுது அரங்கம் காலியாய் இருந்தது. பின் வரிசைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்திருந்தான். வீட்டிலிருந்து கிளம்பும் பொழுதே, சொல்லப்போனால் அதற்கு முன்பிருந்தே ‘காய் நகர்த்தல்களை’ மனம் வெகு தடவை ஒத்திகை பார்த்திருந்தது. காலை உணவை அள்ளிப்போட்டுக்கொண்டு அம்மாவிடம் வாய்க்கு வந்ததொரு காரணத்தை முனகிவிட்டுப் பஸ் ஏறியிருந்தான்.


பள்ளி இறுதி வருடத் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்திருந்தது. அந்தத் தெருவை வந்தடைந்தபொழுது காலைக்காட்சித் தொடங்கச் சரியாகப் பதினைந்து நிமிடங்களிருந்தன. காலைப்பொழுதிலேயே அசாதாரணமான வெக்கைதொடங்கியிருந்தது. எங்கும் மனிதர்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். குதித்தோடும் பந்துகள்போலத் தலைகள் மேலும் கீழும் எழுந்து அமுங்கின. அழுகல் நாற்றமும் உலர்ந்த சிறுநீர் நாற்றமும் மாறிமாறி வீசின. அசாதாரணமான போதையை அந்தப் பொழுது தன்மேல் ஏற்றுவதைக் கிரி உணர்ந்தான்.


படச் சத்தத்தையும் மீறி அவன் காதுகளை அவ்வப்போது ஒரு சீண்டல் தீண்டுகிறது. அவன் கவனத்தைத் திசை திருப்பவெனக் கிளம்பிய அழைப்பு. திசையுடைந்த இருள் சுழலுக்குள்ளேயிருந்து கொப்புளமாய்க் கிளம்பி வெடிக்கிறது. ஸ்திரமாய்ப் பதியாது வழுக்கி விழும் அவன் பார்வையை எக்காளமிடுகிறது அந்தக் குரல். விபரீதம் கசியும் குரலின் தொனி சற்றே உயர்ந்து, தொலைந்துபோகும் அவன் பார்வைக்குத் தன் திசையை அறிவிக்கிறது.


கிரிக்குப் பின்வரிசையில் வலதுபுறத்தில் கைநீட்டினால் தொட்டுவிடக்கூடியதூரத்தில் உட்கார்ந்திருப்பவளைப் பார்த்தான். கன்னங்களில் வெளிச்சம் மங்கிப்போயிருந்தது. நெற்றியில் பிரதானமாயிருந்த பெரிய பொட்டில் ஒரு வெளிச்சப் புள்ளி மின்னியது. கிரியைப் பார்த்துச் சிரித்தாள். சத்தமின்றி. நாக்கால் உதடுகளை மேலும் கீழும் உரசிக்காட்டினாள். சட்டெனத் திரையிலிருந்து எழும்பிய வெளிச்சம் அவளை முழுவதும் அலம்பி அவள் உருவம் தெளிந்தது. நடுத்தர வயது. தலையில் அள்ளி முடிந்த கொண்டையில் ஒரு பூச்சரம்.

மார்புகளுக்கு நடுவே ஒதுங்கியிருந்த சேலை. கால்களை அகலமாய் விரிப்பதும் சேர்ப்பதுமாய் ஆட்டிக்கொண்டிருந்தாள். கண்ணால் ஜாடை செய்து பக்கத்தில் வரும்படி அழைத்தாள். புருவத்தை உயர்த்தியும் நெரித்தும் அவள் முகத்தில் காட்டிய சங்கேதக்குறிகள் விகாரமாய் இருந்தன. அவனுக்கு அருகில் முன் நகர்ந்து ஜாக்கெட்டைக் கீழிறக்க அவளுடைய இடது மார்பு வெளியே தெரிந்தது. 
கிரி உடனே தலையைத் திருப்பிக்கொண்டான். ஒரு கேலிச் சிரிப்பு மெல்ல எழுந்தது. தாழ்ந்த குரல் கிசுகிசுப்பாய்த் துடித்தது. கிரியின் உடல் முழுவதும் ஒரு விரைப்பு ஏற்பட்டிருந்தது. இது அவன் எதிர்பாராதது. இந்தத் தந்திரத்தைச் சமாளிக்கக்கூடிய தயாரிப்புகள் அவன் மனத்திற்கும் உடலுக்கும் அப்பாற்பட்டவை. இவள் பிரயோகிக்கும் லாகிரிகளிலிருந்து தன் மூளையை எப்படிக் கழற்றியெடுக்க முடியும்? ஏற்கெனவே அவன் உடலில் தகிப்பு நாட்கணக்காய் இந்த நாளை எதிர்பார்த்துக் கூடிவந்திருக்கும்பொழுது தீர்க்க முடியாத ஜ்வாலையின் நாக்குப்பிளவுகளை அவனை நோக்கி வீசுகிறாள்.



அவன் அங்கிருந்து நகர்ந்தபொழுது எதிர்பார்ப்புடன் அவனைப் பார்த்துச் சிரித்தவள் அவன் விலகிப்போவதைக் கண்டதும் முகத்தை இறுக்கிக்கொண்டாள். அலட்சியம் அவள் முகத்தில் கூடியது. காலால் ஓங்கித் தரையை உதைத்தாள். கிரியின் காலுக்கடியில் பூமி அதிர்ந்தது
.

வரிசையாக இருந்த இருக்கைகளின் ஓரத்தில் வெளியே செல்லும் கதவருகே நின்ற கிரியின் கால்கள் நடுங்கின. இருட்டுக் களிமண் எங்கும் வழிந்து மூச்சடைப்பதுபோலிருந்தது. அவன் மூளைக்குள் சுழலும் சக்கரங்கள் பேரிரைச்சலிட்டன. இச்சையின் இழைகள் எல்லாப் பொறிகளையும் பின்னிச் செயல்பாட்டைத் தடுமாறச் செய்கிறது. அரங்கத்துக்குள் முடிச்சாகவும் சிண்டுசிடுக்காகவும் அமர்ந்திருந்த கூட்டத்தைத் தவிர்த்துத் தனியர்களை அவன் பார்வை உரசியது. அவனுக்குள் எத்தனையோ கணக்குகள், வரிசைப்படுத்தல்கள் உருவாகி அழிந்தன. இருளைத் துளைத்த வெளிச்சம் தழுவுகையில் உயிர்பெற்றும் மீண்டும் உடனே இருளில் கரைவதுமாய் முகங்கள் மனப்பாறைகளில் அறைந்தொடுங்கும் அலைகளாய் வந்து போயின.

 ஒரு கரம் கைபற்றியிழுத்துச் சரியான இடத்தில் தன்னை அமர்த்திவிட்டால் இந்த நெருக்கடியைத் தோற்கடித்து விடலாம். காரியம் கைகூட, பற்றிக்கொள்ள ஒரு இழை, ஏதுவான ஒரு அழைப்பு கிட்டினால் போதும். ஆனால் மனம் சுண்டிப்போடும் நாணயமோ பல முகங்களைக் கொண்டது. தரையீர்ப்பை எதிர்த்து அந்தரத்தில் சுழல்கிறது. அவன் எந்தத் திசை நோக்கி இப்போது முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும். அவனை எதிர்கொண்டு அணைத்திழுக்கும் காந்த அலைகள் எங்கிருந்து எழும்புகின்றன? விபச்சாரியின் தொங்கிய முலை மனக்கண்ணில் மோதுகிறது. தொண்டைக் குழியில் ஒரு பாறாங்கல்லாய்ச் செருகிக்கொண்டதை உமிழவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை.

தனக்குள்ளே வலிந்து கிளப்பிக்கொண்ட ஒரு உத்வேகத்துடன் பக்கவாட்டில்

நீண்டவரிசையின் கோடியில் ஒற்றையாய் அமர்ந்திருந்த உருவத்தைக் குறிவைத்து முன்னகர்ந்தான். காலி இருக்கைகள் அவன் தொடைப்புறத்தை இடித்தபடி இருந்தன. ஒரு கையால் முன்வரிசை இருக்கைகளின் முதுகைப் பிடிமானம் கொண்டு இருளில் அடியெடுத்துவைத்தபடி நகர்ந்தான். செருப்பிலிருந்து நீண்ட கால்விரல்கள் தரையில் விழுந்திருந்த பழத்தொலிகளையும் காகிதக் குப்பைகளையும் ஈரக்கறைகளையும் தீண்டுகையில் அருவெருத்தான். போக வேண்டிய தூரம் அளவில்லாததைப் போலிருந்தது. கால் பெருவிரல் ஏதோவொரு இடத்தில் மோதிச் சுளீரென வலியை உண்டாக்கியது.

நிழலுருவமாய்ப் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை வேவுபார்த்தான் கிரி. கிட்டத்தட்ட தன் வயதொத்தவன் போலவே இருப்பதாகப் பட்டது. இருட்டில் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. இருக்கைகள் இடையே இருந்த பொதுக் கையிருக்கையில் கைவைத்திருந்ததைக் கவனித்தான். அவனுடைய கை உள்ளிறங்கி மடிமேல் கிடந்தது. மெதுவாகத் தன் கையையும் கிரி அந்த கையிருக்கையின் மேல் வைத்தான். ஒரு புள்ளியில் லேசான தொடுதல் நிகழ்ந்தபோது கிரியின் தொடைகள் நடுங்கின. திரை அள்ளித்தெளிக்கும் பிரகாசத்தைக்கொண்டு பக்கத்திலிருப்பவனின் முகபாவத்தைக் கணிக்க முயன்றான். அளவில் குறைந்த வெளிச்சமும் இருளும் எல்லாவற்றின் பரிமாணத்தையும் லட்சணங்களையும் பிசகாகவே காட்டின. ஒரு லாவகம், ஒரு நெளிவு கைகூடாது தவித்தான். எங்கும் வியர்வை பெருகுவது போலிருந்தது. எந்தக் கணமும் தான் மிகப் பெரிய ஓர் ஈரத்துளியாக மாறிக் கீழ்தேங்கும் இருளில் சொட்டி மறைந்துவிடக்கூடும் என்ற அச்சம் கிரிக்குப் பெருகியது.

முதல்முறை பக்கத்தில் அமர்ந்திருந்தவன் ஸ்திரமான அடிகள் வைத்து முன்னேறினான்- தயக்கத்தின் வாசனையைக்கூட அறிந்திராதவன்போல. வெற்றியின் கொட்டு மேளத்தைக் காதில் கேட்டபடி அதற்கேற்றாற் போல் இயக்கத்தை அமைத்துக்கொண்டவனாய், பறிக்கப்போகும் கனி ஏற்கெனவே காற்றில் விழும் பாதையை உருவாக்கிக்கொண்டதாகவும் தான் கைகளை விரித்தால் மட்டும் போதும் என்ற நிச்சயத்துடன் கிரியை அணுகினான். கிரியின் உடன்பாடு குறித்து எந்தச் சந்தேகத்தையும் அனுமதிக்காத செருக்குடன் அவன் விரல்கள் தீண்டி ஆக்கிரமித்தன. இயல்பான கம்பீரத்துடன் தன்னை வெளிப்படுத்தி ஓரிரு கணத்துக்குள் எல்லாவற்றையும் அவனுடைய கட்டுப் பாட்டுக்குள் ஸ்தாபித்திருந்தான். அவன் கைகளில் எரிந்த சுடரில் மெழுகாக உருகிச் சொட்டுவதைத் தவிர கிரியால் வேறென்ன செய்ய முடிந்தது? பிறகு எத்தனை பொழுதுகள் கழிந்துவிட்டன இச்சையின் வாசனையை மட்டும் முகர்ந்தபடி. சதாவொரு தத்தளிப்புடனும் தணியாத தாகத்துடனும் நாட்கள் நகர்ந்தன.

அதற்குப் பிறகு எத்தனைமுறை இந்த அரங்கத்துக்குக் கிரி வந்து காத்திருந்திருக்கிறான். அவன் மீண்டும் வரவேயில்லை. அவனுடைய நிழலாக, அந்த அனுபவத்தின் நிழலாக இந்த அரங்கத்திலேயே தான் உறைந்துவிட்டதாகக் கிரி எண்ணிக்கொண்டான். கிரிக்கு ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்லும் உந்துதலை அளித்ததோடு அவன் பாத்திரம் முடிந்துவிட்டது. மனம் நினைவிலிருந்து மீட்டித்தரும் அனுபவத்தின் துளிகளை நக்கிச் சுவைக்க நீளும் பொறிகளின் நாக்கு அந்தப் பிரயத்தனத்தின் இறுதியில் விரயத்தையே சந்தித்து விம்முகிறது. இனித் தனியாக அரங்கத்தின் இருட்டுப் பாதைக்குள் செல்ல வேண்டும்.

கிரி இடதுகாலை லேசாக நகர்த்திப் பக்கத்திலிருப்பவனின் காலை உரசினான். அவனுடைய கால் தொடுதலைப் பொருட்படுத்தாது இருந்த இடத்திலேயே கிடந்தது கிரிக்குத் திருப்தியைத் தந்தது. திரையிலிருந்து மிகப் பெரிய ஒலிப்பிரளயம் எழத் தொடங்கியது. கிரி பக்கத்திலிருப்பவனை நோக்கித் திருப்பினான். அவனிடம் எந்த அசைவுமில்லை. முகம் திரையை நோக்கியேயிருந்தது. புது மாதிரியான விபரீதமும் கிளர்ச்சியும் கடைவாயில் ஒழுகின


. அந்தக் கணத்தில் தான் திரும்ப முடியாதவொரு புள்ளிக்குச் சென்றுவிட்டதாகத் தோன்றியது கிரிக்கு. அந்த அரங்கத்துக்குள் இரண்டுவிதமான இருள் அடுக்குகள் உருவாகியிருந்தன. எல்லா சப்தங்களையும் குடித்து அடர்ந்தகூடுபோல் இருள் அவனைச் சுற்றிப் பின்னியபோது ஒரு துல்லியமான அமைதியை, பரிசுத்தத்தை அவன் பெற்றான். அவன் பிரக்ஞை வெறும் உடலை மட்டும் அவ்விருக்கையில் கிடத்திவிட்டுப் பிரிந்து மிதந்தது. அதை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தபோது அதுவும் அவனை உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஒரு குமிழிபோல் மிதந்த அதற்கு முன்னால் அவன் ஒரு அன்னியனாய் மாறினான்.


குதிக்கும் நிழல்கள் நடுவே அமர்ந்திருக்கும் அந்த அறிமுக மற்ற மனிதன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் முதிர்சிறுவன் என்ன ரகசியத்தை இழைத்துக்கொண்டிருக்கிறான்? அவன் அடுத்து என்ன செய்யப்போகிறான்? கூடிவரவிருக்கும் கணங்கள் அவனை எங்கே இழுத்துச் செல்லப்போகின்றன? இருவரையும் பின்னும் ஒரு மெல்லிய இழை வெற்றிடத்தில் மெல்ல நடுங்குகிறது.


சிறுவன் கரத்தை மெல்ல கையிருக்கையில் வைக்கிறான். ஒரு மெல்லிய தொடுதல் நிகழ்கிறது. அந்த மனிதனுடைய முகபாவத்தைத் தீர்மானமாக அனுமானிக்க முடிய வில்லை. அவன் அந்தச் சிறுவனைவிட நன்கு வயதேறியவன். வெளியேறும் இளமையின் கால்தடங்கள் அவன் முகத்தில் பதிந்திருக்கின்றன. அவன் மென்மை யானவனா? இதமான ஓர் அசைவை நிகழ்த்துவானா? அந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான்? அந்த அரங்கத்திலிருந்து வெளியேறும்பொழுது எங்கே செல்வான்? அவனுடைய தசைநாண்களை முறுக்கேற்றும் கனவு என்ன? இந்த முதிர்சிறுவன் அவனைத் தொடுகையில் எதைத் தேடுகிறான்? அங்கே நடந்தேறும் நாடகத்தின் மர்மம் எப்போது வெளிப்படப்போகிறது? சிறுவனின் கரத்தை அவன் பற்றிக்கொள்வானா?


 சிறுவனின் கரம் அந்த மனிதனின் இருக்கைக்குள் நுழைகிறது. மெல்ல அவன் கவனிக்காதபடி. பிறகு அந்த மனிதனின் தொடைமீது அது உரசுகிறது. இருவரும் உறைந்துபோய் அமர்ந்திருக்கிறார்கள். உரசும் கரம் மெல்ல மேல் நகர அந்த மனிதன் திரும்பிச் சிறுவனை முறைக்கிறான். அவன் முகம் இறுகுவது தெரிகிறது. சிறுவன் எதையும் செய்ய இயலாதவனாய்க் கையை விலக்கிக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறான். அந்த மனிதன் சிறுவனின் கையைப் பிடித்து முறுக்குகிறான். சிறுவன் வலியில் துடிப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த மனிதன் சிறுவனின் கையை விட்டுவிடாமல் பிடித்துக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்து கொள்கிறான்.


 சிறுவனுடைய முகத்தில் பளாரென அறைகிறான். சிறுவன் நிலைகுலைந்து இருக்கையிலிருந்து வழுக்கித் தரையில் விழுகிறான். அரங்கில் ஆங்காங்கே விளக்குகள் முளைக்கத் தொடங்குகின்றன. ஆட்களின் கவனம் திரையிலிருந்து விடாது அடிக்கும் மனிதன் மேலும் எதையோ சொல்லி மன்றாடும் சிறுவன்மேலும் திரும்புகிறது. அந்த மனிதனோ கொஞ்சமும் நிறுத்தாமல் சிறுவனைத் தள்ளிவிட்டபடியும் அடித்தபடியும் இருக்கிறான். சுருண்டு சுருண்டுவிழும் சிறுவனுடைய கன்னத்தில் ஈரமாய்த் தரைக் குப்பைகளும் அசிங்கங்களும் ஒட்டியிருக்கின்றன. இப்போது அவனைப் பார்க்கவே அருவெருப்பாய் இருக்கிறது. எத்தனை ஈனமான குரலில் அவன் அழுகிறான்.


அவனுடைய பச்சாதாபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது. எத்தனை கீழ்மை அவனுடைய மூளையிலிருந்து ஒழுகியிருக்கிறது. அந்த மனிதன் அணிந்திருக்கும் கனத்த காலணியால் சிறுவனின் குரல்வளையை மிதிக்க வேண்டும். அப்போது அந்த ஈனக்குரலை ஒரு மிதியில் அறுத்துவிடலாம்.


சிறுவன் இப்போது ஓடுகிறான். இருக்கைகளுக்கிடையே தடுமாறித்தடுமாறி

விழுந்தெழுந்து. அந்த மனிதனும் விடாது துரத்துகிறான். திரையரங்கக்காவலாள் வெளிக்கதவொன்றைத் திறந்து உள்ளே விசாரிக்க வருகிறான். ஆட்கள் சிலர் பக்கத்தில் வருகிறார்கள். காவலாள் சிறுவன் ஓடிவிடாதிருக்கக் கையால் பிடித்து நிறுத்துகிறான். அந்த மனிதன் சொல்வதைக் கேட்ட கும்பல்சிறுவனைச் சூழ்ந்தது. ஒருவன் சிறுவனின் காதைத் திருகுகிறான். தலையில் ஓங்கிக் குட்டுகிறான்.
 கன்னத்தில் அறைந்து சட்டைக் காலரைப் பற்றிச்சிறுவனை உயர்த்துகிறான் வேறொருவன். பெரிய பொட்டு வைத்துக் கண்ணை உறுத்தும் உதட்டுச்சாயம் பூசியிருந்த ஒரு பெண்மணி சிறுவனின் முகத்தில் ‘தூ’வென உமிழ்கிறாள். முகத்தில் இருந்து எச்சில் சட்டையில் சொட்டுகிறது. திறந்த கதவு வழி உள்பாய்கின்ற வெளிச்சத்தில் சிறுவனுடைய தொடையருகில்கால்சட்டையில் விரிந்திருக்கும் ஈரக்கறை ஒருபொழுதும் இமைக்காத உக்கிரக்கண்ணாய்ப் பளபளக்கிறது.

thanx - sirukadhaikaL

Saturday, April 20, 2013

கனியான பின்னும் நுனியில் பூ - வண்ணதாசன் -சிறுகதை

கனியான பின்னும் நுனியில் பூ
நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...
வண்ணதாசன்
இந்தக்கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக்
குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் மேல் சற்றுச் சாய்ந்தாற்போல நின்றுகொண்டு, 'சரிப்பா’ என்றாள். அவள் இந்தப் பழக் கடையைப் பார்த்த மாதிரியே தெரியவில்லை.


ரயில் வருவதற்காக அடைத்துப்போட்டிருந்தார்கள். பத்து, முப்பது வண்டிகள், கார்கள், ஆட்டோக்கள் என்று ஒன்றுக்குள் ஒன்று கோத்துக்கொண்டு நிற்கிற இந்த ரோட்டில் இப்படிக் காத்துக்கிடப்பது பிடித்திருந்தது. ஒரு பல்ஸர் வாகனத்தின் பின் சக்கரத்துக்குக் காற்றுப் பிடித்துக்கொண்டே... கம்பங்கூழ், தர்பூசணிக்கீற்று விற்கிற தாடிக்காரருடன் சிரித்துக்கொண்டு இருப்பவரை இந்த உச்சி வெயில் ஒன்றும் செய்யவில்லை. சித்த வைத்தியசாலை அருகில் இருப்பதுபோல வாடைஅடிக்கிற இந்த இடத்தில் பூவரசமரம் தவிர, வேறு எதையும் காணோம்.
ஆட்டோக்கள் பழுதுபார்க்கிற வொர்க்‌ ஷாப்பில் இருந்து, 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ என்ற பாட்டு வந்துகொண்டு இருந்தது. தினகரி வாகைப் பூவின் காம்பைப் பிடித்துத் திருகியபடி, 'அப்பா, உங்க ஆளு பாட்டு வரிசையா போடுதான்’ என்றாள். அதற்கு முன்புதான் 'வந்ததே... ஓ... ஓ... குங்குமம். கண்களே... ஓ... ஓ... சங்கமம்’ முடிந்திருந்தது. 'அநேகமா அடுத்தது 'ராசாவே ஒன்ன நம்பி’தான்’ என்று சொல்லியபடி என் பக்கம் வரும்போது திருச்செந்தூர் பாஸஞ்சரின் சத்தம்.
வந்துகொண்டே இருந்தவள் அதே இடத்தில் நின்று, 'நல்லா இருக்குப்பா ரயில் கூப்பிடுகிறது’ என்றாள். அது எப்படி இந்த ரயில் சத்தம் மட்டும் எல்லோருக்கும் பிடிக்கிறது? தினகரி 'நல்லாருக்குப்பா’ என்று என்னிடம் சொல்வதுபோல, நானும் 'நல்லா இருக்குல்லம்மா?’ என்று என்னுடைய அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்ட நேரத்தில் அம்மா வைத்திருந்த சிவசைலம் தாழம்பூ கூட ஞாபகம் வருகிறது. ரயில் சத்தம் இத்தனை வருடம் கழித்து ஞாபகம் வரும்போது தாழம் பூ வாசம் வரக் கூடாதா என்ன?
சொல்லப்போனால் அது தாழம்பூ வாசனை இல்லை. பக்கத்தில் இருக்கிற இந்தப் பழக் கடையின் வாசனை. பழக் கடை என்று சொல்லக் கூடாது. பழமுதிர்சோலை. எங்கே பார்த்தாலும் பத்து அடிக்கு ஒன்று. அதற்கென்று ஒரு நீல நிற வெளிச்சம். எல்லாத் தோப்பிலும், எல்லாக் காலத்திலும், எல்லாப் பழங்களும் உதிரும்போல. காம்பில் இருந்து கழன்று நேராக இந்தக் கடை யின் கூடையில் விழுந்ததுபோல அத்தனை மினு மினுப்பான சதைப் பற்று.
தினகரி வீட்டை விட்டுப் புறப்படும்போதே, 'ஆப்பிள் வேண்டாம்ப்பா’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். 'ஏட்டீ... ஃப்ரெண்டு பிள்ளை உண்டாகியிருக்கான்னு பார்க்கப்போறே. மாதுளம் பழம் நல்லதா நாலு பார்த்து வாங்கிக்கிட்டுப் போ. சாக்லேட்டு, ரொட்டினு எதையாவது கண்டது கழியதை வாங்கிட்டுப் போயிராதே. உங்க அய்யாவும் நீ சொன்ன சொல்லைத் தட்ட மாட்டா. சரின்னு சொல்லிருவா!’ என்று சொல்கிற அம்மாவையும் மறுக்க வில்லை. 'சரிம்மா’ என்று சொல்லிக்கொண்டாள். லேசான சிரிப்பு வேறு என்னைப் பார்த்து. அது எப்படி என்று தெரியவில்லை. இந்தப் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தட்டும் வாடாமல் முள்ளும் கோணாமல் சரியாகத் தராசைப் பிடிக் கத் தெரிந்துவிடுகிறது.
எனக்கும் மாதுளம் பழம் வாங்கத்தான் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் மாதுளம் பழத்துக்குச் சுளை இருப்பதுபோல் எட்டாக வகிர்ந்து, பூப் போல இதழ் இதழாக விரித்து நான்கு பழங்களை முன்னால் பார்வையாக வைத்துவிடுகிறார்கள். இந்த மாதுளம் பழ விதை, வெள்ளரிப் பிஞ்சு விதையை எல்லாம் இப்படி வரிசையாக அடுக்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தார்கள். எனக்குத் தோன்றுவதுபோல தினகரிக்கும் தோன்றுமா? 'யாருப்பா சொல்லிக்கொடுத்தாங்க?’ என்று அவள் என்னிடம் கேட்க வேண்டும்போல இருந்தது. என் கையில் பழக்கடைக்காரர் பிளந்துவைத்த மாதுளையை ஏந்தியிருந்தேன். ஏதோ ஒரு கேரளத்துக் கோயிலில் ஆயிரம் பெரும் திரி ஏற்றுவதற்கு விளக்கின் ஒவ்வொரு திரி முகமாகத் திருப்பிக்கொண்டு இருந்ததுபோல, அதைத் திருப்பினேன். 'நல்லா இருக்கு இல்லே’ என்று பக்கத்தில் தினகரி நிற்கிற ஞாபகத்தில் கேட்டேன். அவள் இல்லை.
'நல்லா இருக்கு சார்’ பக்கத்தில் நிற்கிறவர் சிரித்தார். நரை முடிக்குத் தேய்க்கிற தைலமோ என்னவோ, அபிஷேகத் திருநீறு வாசனை மாதிரி அடித்தது. தாடி வளர்ந்திருந்தது. அடர்த்தியுடன் அது கன்னத்தில் இரண்டு வரிகளாக மடிந்து ஒதுங்க, அவர் சிரிப்பது நன்றாக இருந்தது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் சமயம் இவ்வளவு அழகாகத் தெரியும் மூக்கைச் சமீபத்தில் பார்த்ததில்லை. கல்லூரியில் தாவரவியல் சொல்லிக்கொடுத்த தாம்சன் சார் முகம் ஞாபகம் வருகிறது. தேர்வு எழுதுகிற அறையின் குறுக்கே பறந்து கத்திக்கொண்டு வலப்புற ஜன்னல் வழியாக வெளியேறிய ஒரு பயந்த மீன்கொத்தியின் சத்தம்கூடக் கேட்கிறது. ஒன்றில் இருந்து ஒன்றுக் குத் தாவுகிற இந்தப் பழக்கமே என் கையில் கீற்றுக் கீற்றாகப் பிளந்து சிவந்துகிடப்பதாகத் தோன்றியது.
நான் தினகரி எங்கிருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தினகரி பழக் கடைகளில் ஒரு தானியம் கொத்துகிற சிறு பறவை ஆகிவிடுவாள். ஒரு கறுப்புத் திராட்சையைப் பிய்த்து வாயில் இடுவாள். அடுத்து பச்சையை. ஒரு நாவல் பழத்தை. ஒரு சிவந்த ப்ளம் பழத்தைக்கூட. கடைக்காரர்களுக்கும் அவளைப் பார்த்தால் ஒருபறவை யாகத்தான் தோன்றிவிடுமோ என்னவோ? ஒன்றும் சொல்வதில்லை. அப்படியே சொன்னா லும், 'நல்லா இருக்கா பாப்பா?’ என்றுதான் கேட்கிறார்கள். அல்லது அப்படிக் கேட்பதுபோலச் சிரிக்கிறார்கள்.
தினகரி கையில் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழப் பாக்கெட்டை வைத்துக்கொண்டு அங்கிருந்து காட்டுகிறாள். இறக்குமதியானது என்றுகூடக் கடைக்காரர் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் மதிப்புக் குறைவு. 'இம்போர்ட்டட் சார்’ என்கிறார். நான் தினகரியை இங்கே வரச் சொல்கிறேன்.
'இதை எடுங்க சார்... நல்லா இருக்கும்’ பக்கத் தில் நின்ற தாடிக்காரர் மாதுளை இருக்கும் கூடையில் இருந்து ஒவ்வொன்றாகப் பார்த்துப் பொறுக்கிக் கொடுக்கிறார். உள்ளங்கை ஈரத்தால் அதன் தோலைத் தடவியபடி 'அணில் நகம் பட்டிருக்கு’ என்கிறார். தேங்காயைச் சுண்டிப்பார்த்துத் தருவதுபோல ஒன்றைச் சுண்டிக்கூடப் பார்த்தார். ஒன்றைச் சரியில்லை எனத் தனியாக வைத்தார். அது சரிந்து கூடைக்குள் உருண்டபோது, 'அட!’ என்று சிரித்தார். அந்தச் சிரிப்பு வித்தியாசமாக இருந்தது. என்னிடம் அவர் நீட்டிய மாதுளைகளை வாங்கிக்கொண்டேன்.
அவருடைய கையில் இருந்த பையில் கொய்யாப் பழங்கள் இருந்தன. கிருஷ்ணன்கோவில் பழங்கள்போல. மிகச் சீராகப் பொறுக்கியெடுத்த பழங்களின் தேர்வுதான். ஒன்றைச் சரியாகத் தேர்வுசெய்கிறவர் இன்னொன்றையும் அப்படியே செய்வார் என்று நம்பலாம். அது எப்படி... கொய்யாப் பழமும் மாதுளம் பழமும் ஒன்று ஆகுமா என்று திருப்பியும் கேட்கலாம். அவரை ஒட்டி, அவருடைய வேட்டியைப் பிடித்தபடி ஒரு பெண் குழந்தை இருந்தது. கையில் இருந்த குடையின் நிழல் அதனுடைய தோள் வரை விழ, அது அப்பாவையும் என்னை யும் பார்த்தது.
அகலமான கண்கள். அகலமான கண்களில் மட்டும் எப்போதும் சம பங்கு கண்ணீரும் சம பங்கு சிரிப்பும் நிரம்பியிருப்பதுபோலவே இருக்கிறது. எந்தப் பிரயாசையும் இன்றி, ஒரு பேரழகு வந்துவிடுகிறது அந்தக் கண்களால் பார்க்கிற யாருக்கும். அது தன் அகண்ட கண் களால் அப்பாவைப் பார்த்தது... என்னைப் பார்த்தது. சிறு வெட்கம் வந்து கீழே குனிந்து சிரித்தது. குடையின் பிளாஸ்டிக் கைப்பிடிக்குள் ஒளிந்திருக்கும் நீல நிற, ஆரஞ்சு நிறக் குமிழிகளை வெளியே உதறிச் சிந்துவதுபோல் குடையை லேசாகச் சுழற்றியது. மறுபடியும் அப்பாவைப் பார்த்தது.
தினகரி இவ்வளவு நேரமும் எங்கள் மூன்று பேரையும்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்போல. என்னுடைய முதுகை லேசாகச்சுரண்டி னாள். அது போதாது என என் தோள்பட்டையை வலுவாக உலுக்கினாள்.
''என்ன, ஸ்ட்ராபெர்ரி வாங்கணுமா?'' நான் தினகரியைக் கேட்டேன். என் கையில் அவர் பொறுக்கி எடுத்துக்கொடுத்த மாதுளைகள் இருந்தன. மாதுளைக்கு மட்டும் கனியான பின்னும் நுனியில் பூ.
தினகரி என்னை நகர்த்திக்கொண்டு போனாள். அவளுடைய குரல் மிகவும் தணிந்திருந்தது. 'என்னுடைய பைக் சாவியை பைக்கிலேயே வைத்துவிட்டதுபோலவும், அது அங்கே இருக்கிறதா தினகரி’ என்று கேட்பதுபோலவும் நான் இன்னும் சற்று அவரைவிட்டு நகர்கிறேன்.
'அந்த ஆளு யாரு தெரியுமாப்பா?’ என்று கேட்டாள்.
'எந்த ஆளும்மா?’ என்று பழக் கடையைப் பார்த்தேன். பழக் கடைக்குள் மூன்று பேர் இருந்தார்கள். மூன்று பேரும் ஒரு பொட்டுக்கூடக் கசங்காத வெள்ளைச் சட்டைதான் போட்டுஇருந்தார்கள். இப்போது ரொம்பப் பேர் போடு கிற மாதிரி 'மந்திரி வெள்ளை’. மந்திரிகள் பழ முதிர்சோலை வைக்கக் கூடாது என நிபந்தனைகள் உண்டா என்ன?
தினகரி எரிச்சல்படவே இல்லை. வாகைப் பூவைக் குனிந்து எடுத்த அதே நிதானத்துடன் இருந்தாள். ஒரு காட்டுப் பழத்தை முகர்ந்து பார்க்கும் அதே சமனுள்ள துறவுடன் என்னைப் பார்த்தாள். 'உங்களிடம் மாதுளம் பழங்கள் பொறுக்கிக் கொடுத்தானே அந்த ஆள்’ என்றாள். நான் எப்படி உடனடியாக அவரைப் பார்க்காமல் இருக்க முடியும்? 'ஐயோ... உடனே அங்கே பார்க்காதீங்க அப்பா’ என்று கடித்த பற்களுக்குள் முனங்கினாள்.
எனக்குப் புரியவில்லை. அவரைப் பார்க்காவிட்டால் நான் எங்கே பார்க்க வேண்டும் என்றும் தெரியவில்லை. தரையில் யாரோ சப்போட்டா விதையைத் துப்பியிருந்தார்கள். கறுப்புக் கறுப்பாக, பளபளவென்று கிடந்தன.
'அந்த ஆளுதாம்பா. எங்க காலேஜ் போகிற டவுன் பஸ்ஸுல, ஒரு ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற பொண்ணு கழுத்துலகிடந்த சங்கிலியைக் கட் பண்ணப் பார்த்துட்டுப் பிடிபட்டவன். அந்த மூக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எல்லாரும் உதைச்ச உதையில அன்னைக்கு அவன் மூக்குல இருந்து ரத்தம் வடிஞ்சுக்கிட்டே இருந்துது. சட்டையை வெச்சு ஒத்தி ஒத்தி எடுத்துக்கிட்டே இருந்தான்’- தினகரி சொல்லிக்கொண்டே போனாள். நான் தினகரி சொல்வதைக் கேட்டுக்கொண்டும் அந்த ஆளைப் பார்த்துக்கொண்டும் இருந்தேன்.
'இருக்கட்டும்மா’ என்றேன்.
கொஞ்சம்கூட அந்த ரத்தம் ஒழுகுகிற முகம் எனக்குள் பதியவே இல்லை. முற்றிலும் எனக்குப் பக்கத்தில் நின்று மாதுளைகளை அவராகவே தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஒருவராகவே இருந்தார்.
'இருக்கட்டும்மா’ என்று மறுபடி தினகரியிடம் சொல்லிக்கொண்டே அவரும் அந்தச் சின்னப் பெண்ணும் நிற்கிற இடம் பக்கம் நகர்ந்தேன். எனக்கு என்னவோ அவருடைய முகத்தை மறுபடி நெருக்கத்தில் பார்க்க வேண்டும்போல இருந்தது. பக்கவாட்டில் அந்த மூக்கு நன்றாகத்தானே இருந்தது. அவரால் நல்ல கொய்யாப் பழங்களைப் பொறுக்க முடிகிறதுதானே. இவ்வளவு அகன்ற கண்களுடைய சிறுமிகூட அவருடைய பெண்தானே. நான் யோசித்துக்கொண்டே போகையில், என் கையில் வைத்திருந்த மாதுளைகளில் ஒன்று சற்றுப் பிசகி கீழே உருண்டு விழுந்தது. ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமாக உருளும்போல. அது தன் போக்கில் உருண்டு நிற்கிற வரை பார்த்துக்கொண்டே நின்றேன்.
குடையைக் கழுத்தோடு இடுக்கிக்கொண்டு அந்தச் சிறு பெண், உருண்டுபோயிருந்த பழத்தை எடுத்து நீட்டியது. சிரித்தது. இன்னொரு மாதுளைபோல இருக்கிற அந்த முகத்தின் கனிவு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்தப் பெண் குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்ததுபோல, நான் அதனுடைய அப்பாவைப் பார்த்துச் சிரித்தேன். என்னுடைய சிரிப்பை ஒரு பரிசு பெறுவதுபோல அவர் வாங்கிக்கொண்டார். தன்னுடைய இடது கையால் மகளின் தலையைத் தன்னுடைய உடம்போடு சேர்த்து இழுத்தார். தன் குழந்தையின் முகத்தை அதே இடது கை யால் அதனுடைய இரண்டு கன்னமும் இழுபட வருடினார். அப்படி இழுபடும்போது அவரு டைய மகளின் உதடுகள் ஒரு குருவிக் குஞ்சி னுடையதைப் போலக் குவிந்து பிளந்தன.
இன்னும் ஒருமுறை ஒரு பழம் உருள வேண்டும். அதை அது எடுத்துக்கொடுக்க வேண்டும். என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். அதனுடைய அப்பா இடது கையால் அணைத்துக்கொள்ள, வாய் இப்படி, குருவிக் குஞ்சைப் போலப் பிளக்க வேண்டும். நான் அந்தக் கணத்தை மீண்டும் மீண்டும் விரும்பினேன். ஒரு தகப்பனின் கை இதைவிட நெருக்கமாகத் தன்னுடைய சின்னஞ்சிறு மகளின் கன்னத்தை வருட முடியாது என்று தோன்றியது. நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்.
'இதே மாதிரி இன்னும் ரெண்டு, மூணு பழம் உங்க கையால செலெக்ட் பண்ணிக் கொடுங்க’ என்று சிரித்தேன். பக்கத்தில் குடையோடு நிற்கிற அவருடைய பெண்ணை அவரைப் போலவே இழுத்து என்னோடு சேர்த்துக்கொண்டேன்.
தினகரி ஒன்றுமே சொல்லா மல் என் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுடைய கைகளைச் சமீபத்தில் என் கைகளில் வைத்துக்கொண்டது இல்லை. எடுத்து வைத்துக்கொண்டேன். லேசாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டே சொன்னேன், 'அவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக் காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவு தாம்மா’.
தினகரியின் கைவிரல்கள் என் கைகளுக்குள் லேசாக அதிர்ந்தன. கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு இறுக்கிப் பிடித்தது. அவள், 'அவ்வளவுதான்ப்பா’ என்று சொல்லியபடி என்மீது பூப்போலச் சாய்ந்துகொண்டாள்.
குடையை முதுகுக்குப் பின்னால் நன்றாகச் சாய்த்து, எங்கள் இருவரையும் பார்க்கிற அந்தக் குழந்தையின் முகத்தில் திரும்பத் திரும்ப ஒரு முடிக் கற்றை பறந்து விழுந்துகொண்டிருந்தது.
தினகரி என்னைவிட்டு விலகி அந்தக் குழந்தையிடம் போனாள். முகத்தில் விழுகிற முடியை ஒதுக்கிவிட்டாள். பக்கத்தில் நிற்கிற அதனுடைய அப்பாவைப் பார்த்துக்கொண்டே,               
'கண்ணு ரெண்டும் நல்லா இருக்கு’ என்றாள்.

Saturday, February 23, 2013

எய்தவன் - சுஜாதா - சிறுகதை ( 1996)

பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... 


 
 சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் 'ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். நாய் குரைக்கும். இன்று மரகதம் அதை வாக் அழைத் துப் போயிருந்தாள். போன வாரம்தான் பாதுகாப்புக்காக பாரி ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மரகதத்துடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு தாளிடாமல் இருந்தது. தள்ளித் திறந்து வந்தான்.




குறுகிய சமயத்தில் அவன் நடுத்தர வயது, சதுர முகம், மாநிறம், காலர் இல்லாத சட்டை, அதனுள் தெரிந்த சங்கிலி. மீசை ஏன்... அடர்த்தியான காதோர முடியைக்கூடக் கவனித்தார். ஒருவிதத்தில் இவனை உள் மனதில் எதிர்பார்த்திருந்தாரோ...


''யாருப்பா?''
''சாரைப் பார்க்கணும்.''
''என்ன விஷயமா?''
''கேஸ் விஷயமா.''
''அதுக்கெல்லாம் தம்புசெட்டித் தெருவில் ஆபீஸ் இருக்குது... அங்க வாப்பா...'' என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் ஒளித்துவைத்து இருந்த இரண்டு ஆயுதங்களை முதுகுப் பக்கத் தில் இருந்து எடுப்பதைப் பார்த்தார். வாசலில் ஆட்டோ ரிக்ஷா இன்ஜின் அணைக்காமல் ஓடிக்கொண்டு இருந்தது. ஆபத்து என்று அவருக்குள் அட்ரினலின் பாய்வதற்குள், அவன் நேராக மார்பைக் குறிவைத்துக் குத்தினான். சற்றே திரும்பிவிட, விலா எலும்புக்குள் தாக்குதலின் வேகத்தினாலும் பலத்தினாலும் மென்மையான தசைகளுக்குள் புகுந்து கத்தி யின் நீளத்துக்கு அதிகமாகவே கிழித்தது. தடுமாறி ''மரகதம், மரகதம், மணி...'' என்று அலறுவதற்குள் மற்றொரு குத்து. இந்த முறை கழுத்தில் மற்றொரு ஆயுதத்தால் மண்டை மேல் பக்கவாட்டில் பாய்ந்து, நெற்றிக்கு அருகில் பட்டு, வலது கண்ணைச் சேதப்படுத்தி, தாடைக்குள் பாய்ந்து வராந்தாவில் அலங்காரத்துக்கு வைத்திருந்த 'டெரகோட்டா’ குதிரை மேல் ரத்தம் தெறித்தது. ரத்த சேதத்தில் நினைவிழப்பதற்கு முன் அவன் முகத்தின் தழும்பையும் வியர்வை நாற்றத் தையும் மூச்சில் சாராய நெடி யையும் உணர்ந்தார்.



அக்கம்பக்கத்தினர் குரல் கேட்டு ஓடி வருவதற்குள் அவன் ஆட்டோ ரிக்ஷா ஏறி வேகமாகச் சென்றுவிட்டான். தெரு முனையில் மற்றொரு ஆட்டோ காத்திருந்தது. இந்த ஆட்டோ அவனை உதிர்த்துவிட்டுக் கூட்டத்தில் கரைந்து விட்டது. 40 தூரத்தில் ஒரு டி.வி. சீரியலுக்குப் படம்பிடிக்க டிபன் பாக்ஸ், ஜெனரேட்டர் எல்லாம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தன.


 அவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
சுந்தரலிங்கம் மயங்கிவிழுந்தார். அவர் மகன் முகச்சவரம் பண்ணிக்கொண்டு இருந்தவன் ஓடிவந்தான். கொஞ்ச நேரம் செய்வது அறியாமல் தடுமாறிய பின், மாருதியில் அவரைத் திணித்து (பின் சீட்எல்லாம் ரத்தம்) அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றான். 'போலீஸ் கேஸ்’ என்று அவர்கள் எடுக்க மறுத்து, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கொடுத்தார்கள். அடையாறில் இருந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு மயக்க நிலையில் எடுத்துச் செல்கையில், மிகுந்த ரத்த சேதத்தில் அழுத்தம் குறைந்து, மூச்சு நூல்போல வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது. இதயம் நின்றுபோகும் அவசரத்தில் இருந்தது. எமர்ஜென்ஸியில் அவருக்கு ரத்தம் மணிவாசகம்தான் கொடுத்தான். வெளிப்புறக் காயங்களை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்தார்கள்... தையல் போட்டார்கள். மார்பில் பாய்ந்திருந்த கத்திக்குத்து அகலக் குறைவாக, ஆனால், எட்டு இன்ச்சுக்கு மேல் ஆழமாக இருந்த அதன் பாதையில் டிஷ்யூக்களை எல்லாம் சேதப் படுத்தியிருந்தது.



ராயப்பேட்டை ஆஸ்பத்திரி      மாலை 5 மணி... 



அதே தினம் டெலிவிஷன் கேமராக்களும் நிருபர்களும் ஆஸ்பத்திரியைச் சூழ்ந்துகொள்ள... போலீஸ் டி.ஐ.ஜி. வந்தபோது, கேள்விக்கணை களால் துளைக்கப்பட்டபோது...
''மணிமோகன் ஆளுங்கதான் செய்திருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்களே.?''
''நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்...''
''கொலைகாரனைப் பிடிச்சுருவீங்களா?''
''முதல்ல இது கொலை இல்லை. கொலை முயற்சி... சுந்தரலிங்கம் உயிருடன் இருக்கார். ட்ரொமா வார்டில் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கார்...''
''இது ஏற்பாடு செய்த கொலைனு...''
''நாங்க எந்த முடிவுக்கும் வரலை...''
''கொலை முயற்சி செய்தவனைப் பிடிச்சுருவீங்களா?''
''அதுக்குத்தானே போலீஸ் இருக்கு.''
''பிடிக்க மாட்டீங்கன்னு சொல்றீங்க?''
''எனக்குக் கோபம் வரலை'' என்று சிரித்தார் டி.ஐ.ஜி.
''ஆட்டோ நம்பர் தெரியுமா?''
''முதல்ல ஆட்டோவான்னே ஊர்ஜிதமாகலை. அவருக்கு நினைவு வந்தப்புறம்தான் மேல் விவரம் தெரியும். அவர் குத்தப்பட்ட சமயத்தில் பக்கத்துல யாரும் இல்லை. 40 அடி தள்ளி ஷூட்டிங் செய்துக்கிட்டு இருங்காங்க... அவங்க யாரும் கவனிக்கலை. போலீஸ் என்ன செய்யும், சொல்லுங்க...''
''சுந்தரலிங்கம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, கொடுக்க வேணாம்னு மேலிடத்து உத்தரவு வந்தது உண்மையா?''
''பொய்... அவர் எங்ககிட்ட புரொட்டெக்ஷன் எதும் கேக்கவே இல்லை.''



சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுந்தரலிங்கத்துக்கும் அவர் மனைவி மரகதத்துக்கும் நிகழ்ந்த உரையாடல்... 




மரகதம்: ''எதுக்காகங்க உங்களுக்கு வம்பு? அவன் ஆளைவெச்சு அடிப்பானாம். இப்பவே நீங்க பாட்டுக்கு கோர்ட்டுக்குப் போயிர்றீங்க. தெனம் ரெண்டு போன்கால் வருது... 'தாலி அறுக்கணுமா... உம் புருஷனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு... கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு’னு.''
சுந்தரலிங்கம்: ''இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது மரகதம்...''
மரக: ''பின்ன எதுக்குத்தான் பயப்படணும்?''
சுந்: ''கடவுளுக்கும் மனசாட்சிக்கும்தான் பயப்படணும்.''
மரக: ''எனக்கு மணிமோகன்கிட்டயும் பயம்.''


சுந்: ''இவனெல்லாம் மந்திரியா இருக்க லாயக்கு இல்லை. சாராய சாம்ராஜ்யம், ஹவாலா மார்க் கெட்னு கோடி கோடியா சம்பா திச்சு வெச்சிருக்கான். இவன் தொழிற்சாலையில வொர்க்கர்ஸ் கேஸ்ல அப்பியர் ஆனேன். எத்தனை ஊழல் தெரியுமா..? ரிஜிஸ்தர்ல ஒரு சம்பளம்... கொடுக் கறது ஒரு சம்பளம். 'லேபர் லா’வுக்குப் பயந்து பர்மனென்ட் ஆக்காம ஆறு மாசத்துக்கு ஒரு முறை டிஸ்மிஸ் செஞ்சு மறுபடி வேலைக்கு எடுத்துக்கற ட்ரிக்... 200 பேரை அப்படி வெச்சிருக் கான். சைல்டு லேபர்... வயசை அதிகமாகச் சொல்லி சைல்டு லேபர் பதினஞ்சு ரூபா சம்பளம் உயர்த்த அழறான். பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை வெளிநாடு போறான். கட்சிக்காக ஓப்பனாவே இன்டர்வியூ ஒன்றுக்கு ஒரு லட்சம் வெச்சாத்தான் பேட்டியே உண்டு. தினம் 20 பேர்கிட்ட வாங்கறான் இப்படி.''



மரக: ''அவங்க எல்லாருமே இப்படித்தான் இருக்காங்க. இந்த உலகத்தையே திருத்துவீங்களா?''
சுந்: ''இல்லை, மணிமோகன் ஒரு டெஸ்ட் கேஸ்... நான் எடுக்கறதெல்லாம் டெஸ்ட் கேஸ்தான். பப்ளிக் இன்ட்ரஸ்ட் கான்ஸ்டிட்யூஷனல் லா... கன்ஸ்யூமர் மேட்டர் இப்படித்தான் எடுப்பேன். மணிமோகன் மாதிரி ஆளுகளையெல்லாம் கேள்வி கேக்காம சுட்டுருவாங்க சைனாபோல நாட்ல.''
மரக: ''அங்கேயும் கரப்ஷன் இருக்குன்னு கல்கண்டுல படிச்சேன்.''
சுந்: ''கரப்ஷன் எல்லா இடத்துலயும்தான் இருக்கு. ஏன்... அமெரிக்காவுல இல்லையா? ஆனா, அதை எதிர்த்துப் போராடறவங்களும் எல்லா இடத்துலயும் என்னை மாதிரி நிறையப் பேர் இருப்பாங்க. இங்க நான் ஒருத்தன்தான்.''
ராயப்பேட்டை ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தன் டீனுடன் பேசிய பேச்சு..

.
டீன்: ''என்ன ராம்... எப்படி இருக்கார். புரட்சி வக்கீலு?''

ராம்குமார்: ''சுந்தரலிங்கம் ஸ்கல்ல அடிபட்டு கன்கஷன் உள்ளே கொஞ்சம் ரத்தம் கசிந்து, கட்டி தட்டிப் போயிருக்குது... ஸ்கேன்ல தெரியுது பாருங்க... காயங்கள்லாம் நல்லாவே ஆறிக்கிட்டு வருது... ஸுச்சர் போட்டது... நல்லவேளை டயாபட்டிக் இல்லை.''
டீன்: ''தெரியுது. மூளைல கட்டி கரையறத்துக்கு மருந்து கொடுத்துருங்க. ரொம்ப பேஜார் கேஸுங்க... பத்திரிகைக்காரனுவ, போலீஸ்காரனுவ, ஜீ.டி.வி-லருந்து ஒரு பொம்பளை உயிரை எடுக்கறா... 'பேட்டி கொடு, விவரம் எப்ப வரும்’னு.''
ராம்: ''சுயநினைவு வந்து, யார் தாக்கினார்கள் என்கிற விவரம் வெளிப்பட ஒரு வாரமாவது ஆகும் சார்.''
டீன்: ''பொழைச்சுருவார் இல்ல?''
ராம்: ''பிழைச்சுருவார். ஆனா, ஒரு கண்ணு போயிருச்சு. க்ளாஸ் ஐதான் பொருத்தணும். முகத் துக்குக் குறுக்கே தழும்பு. ஆனாலும் ரொம்ப அதிர்ஷ்டக்காரர். கத்திக்குத்து இதயத்தை அரை இன்ச்ல தவறவிட்டிருக்குது.''
22.1.96 பெசன்ட் அவென்யூ சுந்தரலிங்கத்தின் வீட்டில்... 



டிஸ்சார்ஜ் ஆகி காரில் இருந்து இறங்கியவரைக் கண்ணீருடன் வரவேற்றாள் மரகதம்.
''உயிர் பிழைச்சு வந்தீங்களே... அஷ்டலட்சுமி கோயிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்துருவம்...''
''இல்லை, மரகதம் இப்ப டயர்டா இருக்குது... டி.ஐ.ஜி. வேற வரேன்னுசொல்லியிருக்காரு.''
''உங்க கண்ணு... உங்க கண்ணு..?''
''ஒரு கண்ணு போனது போனதுதான். எதையோ கோலிக்குண்டை வெச்சுப் பொருத்தியிருக்காங்க. ஊசிநூல் கோக்க சிரமமா இருக்கும்னாங்க. படிக்கறதுல அதிகம் ஸ்ட்ரெயின் வேண்டாம்னாங்க. அதும் இடது கண்ணு. அழுவாத கண்ணு. நீ சொன்னாப்பல உயிரோட திரும்பினதே பெரிசு. காயம் ஆறிடுச்சு. தழும்பு போயிடும்... இந்தத் தழும்பு! ஆனா, இன்னொரு தழும்பு போகாது.''
''ஐயோ! இந்த வக்கீல் வேலையே வேணாங்க. இருக்கறதை வெச்சுக்கிட்டு ஏதாவது கம்பெனியில லீகல் அட்வைஸர் வேலை பாத்துக்கங்க. பையனும் படிப்பை முடிச்சுருவான். ஊருக்காக பிராது கொடுத்து அலைஞ்சு உசிரைவிட்டது போதுங்க. என்னங்க... இத்தனை ஃபீல் பண்ணிச் சொல்லிக்கிட்டு இருக்கேன்... சிரிக்கிறீங்களே?''
''ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே. கடவுள் காப்பாத்துவார்.''
''உங்களைத் திருத்தவே முடியாதுங்க.''



23.1.96 பிற்பகல் - டி.ஐ.ஜி. வந்து நலம் விசாரித்தபோது...
டி.ஐ.ஜி.: ''மிஸ்டர் சுந்தரலிங்கம்... சும்மா ஒரு கர்ட்டசி விசிட்தான். உங்க கேஸு ரொம்ப ஹாட் ஆயிருச்சு. நீங்க எப்ப ஐடென்டிபிகேஷனுக்கு வர முடியும்னு சொல்லுங்க. ஒரு மாதத்துக்கு செக்யூரிட்டி போட்டிருக்கோம். பார்த்திங்கல்ல...''
சுந்தரலிங்கம்: ''கண்டுபிடிச்சுட்டீங்களா ஆளை?''
டி.ஐ.ஜி.: ''நாலு பேரைப் புடிச்சுவெச்சிருக்கோம். இந்த மாதிரி காசு வாங்கிட்டுக் கொலை செய்யற நாலஞ்சு கும்பல் இருக்குதுங்க. எல்லாருக்கும் கான்டாக்ட் உண்டு. ஹிட்மென் போலீஸ்லயும் இவங்களுக்குத் தொடர்பு உண்டு. நீங்க குத்துப்பட்டஉடனேயே அவங்கள்ல சேகர்னு ஒருத்தன் கன்னியாகுமரில தக்கலைன்னு ஒரு ஊர்க்காரன்... தலைமறைவாய்ட்டான். ஆறு இன்ச், எட்டு இன்ச் கத்திஎல்லாம் அவன்தான் பயன்படுத்திட்டு ஆட்டோ மாத்திப் போயிருவான். இப்பத்தான் ஒரு மாசம் விட்டு மெட்ராஸ் திரும்பியிருக்கான். அவனாத்தான் இருக்கும்னு தோணுது. உங்களைக் குத்தினவன், முகம் ஞாபகம் இருக்குமா உங்களுக்கு?''
சுந்: ''கண்டிப்பா... அந்த முகத்தை மறக்கவே மாட்டேன்.''
டி.ஐ.ஜி.: ''தட் மேக்ஸ் அவர் ஜாப் ஈஸி. மேலும், உங்க கேஸ் ரொம்ப பொலிட்டஸைஸ் ஆயிருச்சு. யாரையாவது கைது பண்ணியே ஆகணும்... பத்திரிகைக்காரங்க துளைக்கிறாங்க. அதும் தனியார் டி.வி-லருந்து மாயானு ஒரு பொண்ணு... என்னென்னவோ வரம்பில்லாமக் கேக்குது. என் மக வயசு தான் இருக்கும்.''
சுந்: ''நீங்க சேகரோ எவனோ... அவனைப் பிடிச்சு என்னங்க பிரயோஜனம்? அவன் ஒரு அம்புங்க. எய்தவன் யாருனு.''
டி.ஐ.ஜி.: ''முதல்ல அடையாளம்... அப்புறம் அவனைச் செலுத்தியது யாருனு கண்டுபிடிக்கறம்.''
சுந்: ''அவனைச் செலுத்தியது மந்திரினு தெரிஞ்சா, மந்திரிய அரெஸ்ட் பண்ணுவீங்களா?''
 டி.ஐ.ஜி.: (சற்றுத் தயக்கத்துக்குப் பின்) ''நீங்க யாரைச் சொல்றீங்கனு தெரியுது. ஆனா, மினிஸ்டர்ங்க எல்லாருமே தடயங்களை மறைச்சுருவாங்க. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்லயே திணர்றாங்களே. எதையும் கோர்ட்ல நிரூபிக்கறது கஷ்டம். என்னைக் கேட்டா, நீங்க இந்தக் கோணத்தை விட்டுர்றதுதான் நல்லது.''
சுந்: ''மழுப்பறீங்க... நான் கேக்கறது, 'ஒரு மந்திரிதான் குத்த வெச்சார்’னு அவன் சொன்னா, அந்த மந்திரியைக் கைது பண்ண மனோபலம் உங்களுக்கு இருக்கா? சந்திரலேகா கேஸ்ல என்ன ஆச்சு... ஏன் விட்டீங்க..?''
டி.ஐ.ஜி.: ''நீங்களும் மாயா மாதிரியே கேள்வி கேக்கறீங்க. ஒருமுறை நான் அஃபீஷியலா இல்லாம தனியா வரேன். அப்ப பேசலாம்... அடுத்த சனிக்கிழமை வெச்சுக்கலாமா?''
சுந்: ''என்ன?''
டி.ஐ.ஜி.: ''அடையாள பரேடு. அஞ்சு பேர்ல யாருன்னு நீங்க அடையாளம் காட்டணும்.''
சுந்: ''எய்தவன் இருக்க அம்பைக் கொண்டுவர்றீங்க.''
டி.ஐ.ஜி.: ''அம்பையும் அடைக்கணும் இல்ல.''
சுந்: ''ஒண்ணு பண்ணுங்க முதல்ல... அந்த சேகர்ங்கறவனை இங்க கூட்டிட்டு வாங்க.''
டி.ஐ.ஜி.: (சற்று யோசித்து விட்டு) ''இல்லைங்க. அது முறைப்படி தவறுங்க. முதல்ல ஐ.டி. பரேடு ஆவட்டும். அப்புறம் அவன்தான்னு நிச்சயமா தெரிஞ்சா தனியா அழைச்சுட்டு வரேன். அவனை எல்லாம் அடிச்சுக் கிடிச்சு வழிக்குக் கொண்டுவர முடியாதுங்க. சரியான உதை தாங்கு வாங்க.''
சுந்: ''அடிக்கிறதுக்கு இல்லைங்க...''
எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அந்த பரேடு நடை பெற்றது. கொண்டுவந்த ஐந்து பேரில் சேகர் என்பவனைப் பார்த்த மாத்தி ரத்திலேயே கண்ணாடிக்குப் பின்னால் இருந்து ''இவன்தான்'' என்றார்.
''எப்படிச் சொல்றீங்க?''
''முகத்துல தழும்பை மறக்கவே மாட்டேன். அவ்வளவு கிட்டத்தில் பார்த்தேனே. கை வேத்திருக்கு பாருங்க. முகம்கூட... இவன்கூடக் கொஞ்சம் தனியா பேச விரும்பறேன்.''
''ஏற்பாடு பண்றேங்க. ப்ரஸ் கான்ஃபரன்ஸ் போட்டுச் சொல்லிரவா... நிஜ குற்றவாளியைக் கைது பண்ணிஆச்சுன்னு.''
''நான் பேசிடறேங்க முதல்ல...'' என்றார் சுந்தரலிங்கம்.



கமிஷனர் அலுவலகத்தின் பின்பகுதி. கார் பார்க் அருகில் தனியான இருண்ட ஒற்றை பல்பு அறையில்...
சேகர் என்பவன் அழைத்து வரப் பட்டான். வெளியே காவற்படையினர் எச்சரிக்கையுடன் இருக்க, இருவருக்கும் நிகழ்ந்த, முழு உரை யாடலின் வடிவாக்கம் -
சுந்தரலிங்கம்: ''உன் உண்மைப் பேரு என்ன?''
சேகர்: ''என்னவா இருந்தா உனக்கென்ன... எனக்கு நிறையப் பேர் உண்டு.''
சுந்: ''டிசம்பர் 5-ம் தேதி காலைல பெசன்ட் நகர்ல என் வீட்டுக்கு வந்து கத்தியால வயித்துல குத்திட்டு, மண்டை மேல கீறிட்டுப் போனியே... இதப் பாரு, என் கண்ணு போச்சு. (சட்டையைக் கழற்றி) தழும்பைப் பாரு. நான் சாவலைடா, என்னைச் சாவடிக்க முடியாது.''
சே: ''இதெல்லாம் என்கிட்ட எதுக்குச் சொல்ற?''
சுந்: ''எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருக்கே?''
சே: ''எத்தனையாயிருந்தா உனக்குஎன்ன?''
சுந்: ''நான் ஒரு வக்கீல். உன்னைப் பதினஞ்சு வருஷம் ஜெயிலுக்கு அனுப்ப முடியும். உன்னைப் பார்த்தது நான் ஒருத்தன்தான். நீதான்னு அடையாளம் காட்டிட்டா நீ காலி. உள்ள போனா வெளிய வரவே முடியாது. சொல்லு, உன்னை அனுப்பிச்சது மணிமோகன் ஆளுங்கதானே?''
சே: ''எனக்கு எதும் தெரியாது. என்னை அடிச்சு உதைச்சாலும் எந்த வெவரமும் கெடைக்காது. நல்லா உதை தின்னுவேன்?''
சுந்: ''என்ன செஞ்சா வெவரம் கெடைக்கும்?''
சே: ''பாரு... எனக்கு மந்திரியும் தெரியாது, முந்திரியும் தெரியாது. காதர் பாச்சானு ஒரு பார்ட்டி வருவான். 'இந்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்குது. இந்த விலாசத்தில் பார்ட்டி இருக்குது’னு காட்டி வுடுவான். 'மூணு நா பார்த்து வெச்சுட்டுத் தீர்த்துரு’னு. கைல காசு மெய்ல குத்து. அவ்ளவ்தான். ஆளை வுடு.''
சுந்: ''என்னைத் தீர்க்கச் சொன்னாங்களா, காயம்படுத்தச் சொன்னாங்களா?''
சே: ''கட்சில உன்னைத் தீர்க்கத்தான் சொன்னாங்க. காயம்படுத்தணும்னா கதியே வேற. ரூட்டே வேற. பால் காட்டிக்கிட்டே நாலு தட்டு தட்டிரலாம். உன்னைய மார்லதான் வெச்சுக் குத்தினேன். கொஞ்சம் அதிகப்படியாவே சரக்கு ஏத்திருந்தனா... கை நடுங்கிருச்சு. தப்பிச்சுக்கிட்ட, சாவலை. மண்டைக்குத்தான் குறிவெச்சேன். நீதான் முட்டாத்தனமா திரும்பி கண்ல வாங்கிக்னே... அது உன் தப்பு. முதக்க சும்மா ஒரு கீறல் கீறிட்டுப் பயங்காட்டிட்டுத்தான் வரச் சொன்னாங்க. அன்னைக்குக் காலைலதான் சொன்னாங்க... 'பார்ட்டி ரொம்ப பேஜார் பண்ணுது. தீர்த்துரு’னு.''
சுந்: ''உனக்கு எத்தனை பணம் கொடுத்தாங்க?''
சே: ''ஏளாயிரத்துச் சில்லறை. இன்னும் ஒரு ரெண்டு ரூபா வரணும்.''
சுந்: ''இப்ப 'மேன் ஸ்லாட்டர்’னு சட்டத்தில் உனக்குச் சிறை தண்டனை நிச்சயம் வாங்காம நான் உன்னை விடமாட்டேன்.''
சே: ''எனக்கு வக்கீல் வெப்பாங்க. பெயில் அப்ளிகேஷன் போடுவாங்கனு காதர் பாய் சொன்னாரு. இதுக்கு மிந்தி செய்திருக்காங்க. பெங்களூர்ல ஒரு மார்வாடியைக் குத்தினப்ப.''
சுந்: ''இப்ப மாட்டாங்க. கேஸ் சூடாயிருச்சு. யாரும் உனக்கு பெயில் அப்ளிகேஷன் கொடுக்க மாட்டாங்க. பாத்துக்கிட்டே இரு.''
சே: ''அப்படிங்கறே நீ?''
சுந்: ''பெயில் கேட்டாக்கூடக் கடுமையா அதை எதிர்ப்பேன். இந்த கேஸ்ல யாரும் தலையிட மாட்டாங்க. நீதிபதிங்களே பயப்படுவாங்க. நீ தப்பிக்கிற துக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.''
சே: ''என்ன வளி? மந்திரி யாருன்னே எனக்குத்
தெரியாதுபா. சொல்றனில்லை. நான் ரொம்ப அடிமட்டத் தில் இருக்கற 'பார்ட்டி’பா. பெரிய மனுசங்களுக்காகத் தொளில் செய்றம தவிர, பெரிய மனுசன் யாருன்னே தெரியாது. மிஞ்சிப் போனா, கட்சித் தொண்டனுங்க அல்லது அந்த அந்தப் பேட்டைக்குக் கட்சி ரவுடிங்க, கலெக்ஷன் மாஸ்டர்ங்க உண்டு. குடுமிங்களை வீட்டைக் காலி பண்ணவெக்க... கடையைக் கொளுத்தணும்... பொறம்போக்குல கடை போடறப்ப துணை வேணும்... கொருக்குப்பேட்டை, அபிராமபுரம்னெல்லாம் கூப்பிடுவாங்க... போவேன். எவனுக்குக் காரியம் செய்ய றோம்னுலாம் தெரியாது. ஏதோ வவுத்துப் பொயப்புக்கு அஞ்சு பத்துக்குப் பளுதில்லாம செய்யறன். அகஸ்தியர் கோயில்ல கலசம் திருடலாம், வரயான்னாங்க... போவலை. இந்த வருசம் மாலை போடலாம்னிருக்கேன்.''
சுந்: ''பதினஞ்சு வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்காம விட மாட்டேன் உன்னை. கமிஷனரை வேணா கேட்டுப் பாரு. யோசிச்சுப் பாரு... இளமையா இருக்கே. உன் வாழ்க்கைல முக்கியமான பதினஞ்சு வருஷத்தை சிறைச்சாலையிலயே கழிக்கச் சம்மதமா?''
சே: (கலவரத்துடன்) ''என்ன செய்யணுங்கறீங்க?''
சுந்: ''சேகர், நீ செஞ்ச பாரு காரியம்? அரைகுறை. வெட்டுருத்தில இதைப் போல அமெச்சூர்த்தனமான முயற்சி இருக்க முடியாது. காலை வேளையில செய்திருக்கக் கூடாது. மேலும், மோடஸ் ஆப்பரண்டின்னு சொல்வாங்க. உன் முறை ஆறு இன்ச் கத்தியைப் பயன்படுத்தறது. ஆட்டோவுல ஓடிட்டு தெரு முனையில மற்றொரு ஆட்டோவுக்கோ, மோட்டார் சைக்கிளுக்கோ மார்றது இதெல்லாத்தை யும் போலீஸ் கவனிக்கிறாங்க. சுலபமா கண்டுபிடிச்சுருவாங்க.''
சே: ''என்ன சொல்ற வாத்யாரே, புரியும்படி சொல்லு?''
சுந்: ''ஒவ்வொரு தடவையும் முறைய மாத்தணும். அடுத்த கொலை செய்யறப்ப ராத்திரில போகணும். கத்தியால குத்தக் கூடாது... துப்பாக்கி பழகியிருக்கியா... ரைஃபிள் ஏகே-47?''
சே: ''இல்ல, வாத்யாரே. நான் சில்ற ஆசாமி.. எனக்கென்னவோ நீ டமாஸு பண்றனு பச்சி சொல்லுது.''
சுந்: ''தமாஷ் இல்லை சேகர்... நான் கத்துக்கொடுக்கறேன். போலீஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுக்கறப்ப உன்னைக் காட்டிக் கொடுக்கப்போறது இல்லை. 'இவன்தானான்னு சந்தேகமா இருக்குது. ஐம் நாட் ஷ்யூர்’னு சொல்லி உன்னை விடுதலை செய்துடப்போறேன். ஒருத்தன் கெடுதல் செஞ்சாலும் அவன் வெக்கப்படும்படி நன்மை செய்து ரணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு... சேகர், நீ படிச்சிருக் கியா?''
சே: ''ஆறு கிளாஸ், பாளையங்கோட்டைல இருக்கறப்ப... என்னைக் காப்பாத்தறியா? என்ன சொல்ற?''
சுந்: ''ஆமாம், உன்னைக் காப்பாத்தறேன்.''
சே: ''அதுக்கு நான் இன்னா செய்யணும்... திருந்திடணுமா... கதர் குல்லாய் மாட்டிக்கிட்டு சுதந்திர தினத்துல கொடி ஆட்டணுமா?''
சுந்: ''அதெல்லாம் எதும் வேண்டாம். அடுத்தமுறை காரியத்தைச் சுத்தமா செய்யணும். யாரும் நீதான்னு கண்டுபிடிக்க முடியாதபடி. வேட்டைக்குப் போன தடயங்களை மறைக்கணும். நான்தான் உன்னை ஏவினேன்னு தெரியக் கூடாது. சரியான சந்தர்ப்பம் பார்த்து கிரீன்வேஸ் ரோட்டில அந்த வீட்டைக் கண்காணிக்கணும். எப்ப கோட்டைக்குப் போறான், எப்ப வாக் போறான், எப்ப சின்ன வீட்டுக்கு... எல்லாத்தையும் கவனிச்சு, ராத்திரியில ரைஃபிள் வெச்சுச் சுடணும். ஸ்தலத்தை விட்டு விசில் அடிச்சுட்டே நடந்து போகணும். எல்லாம் சொல்லித் தரேன்.''
சே: ''யாரைச் சுடணும்!''
சுந்: ''மணிமோகனை... அதுக்கு என்ன விலை தெரியுமா... உன் விடுதலை... பதினஞ்சு வருஷம் சுதந்திரம்.''
சே: (யோசித்து!) ''சரிங்க...''


நன்றி - விகடன் 

Thursday, February 14, 2013

என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும் - சபிதா -சிறுகதை

20 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன். முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல இருந்தது மனம்.  
 
 
மார்பிள் தரையின் குளிர்ச்சியைப் பாதம் உணரத் துவங்கி, நரம்புகளின் வழியே தலைக்கு ஏறியது கிறுகிறுப்பாக இருந்தது. தாஜ்மகாலைத் தூரமாக நின்று தரிசிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அழகு முழுமையாகப் புலப்படும். அதன் அருகில் சென்றாலோ, அது விஸ்வரூபம் எடுக்கும். அதனுள் நுழைந்துவிட்டாலோ... நாம் அதில் மூழ்கிக் காணாமல் போய்விடுவோம். காதலில் கரைந்துவிடுவதைப் போலத்தான்.


தொலைவில் நின்று தாஜ்மகாலைக் கவனிக்கத் தொடங்கினேன். முன்பு இருந்த தூய்மையான அழகை தாஜ்மகால் மெள்ள இழந்துவருவது உண்மைதான். காரணம், அமில மழை என்கிறார்கள். அதன் மேல் ஸ்தூபியில் லேசான மஞ்சள் நிறம் படியத் தொடங்கியுள்ளது, பல தடவை சலவைக்கு உட்படுத்தப்பட்ட வெண்ணிற ஆடையைப் போல. காற்றிலும் நாசி வெறுக்கும் ஒருவிதமான துர்நாற்றம். மனித மனங்களைப் போலவே தாஜ்மகாலும் மெள்ள மெள்ள மாசு அடைந்துவருகிறது.

தாஜ்மகால் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. என்னைப் பொறுத்தவரையில் தாஜ்மகால் வெறும் கட்டடம் மட்டும் இல்லை. வெறும் காதலின் சின்னமும் இல்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒன்று இங்கு இருக்கிறது. இந்தக் காற்றில் சொல்ல முடியாத துக்கமும் காதலும் மிதக்கிறது. இந்தத் தூண்களில் காதல் படிந்து உள்ளது. இந்தப் பெரிய பிரமாண்டமான அமைப்பு என்னைத் துரும்பனாக மாற்றிக் கேலி செய்கிறது.


எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. இமய மலையின் முன் நிகழும் அதே அற்புதம். காதலும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்த னைக் கருத்துகள் உலவினா லும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான்.


தாஜ்மகால் வெறும் ஷாஜகானின் காதலுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கு வருகை தரும் எவருமே தங்க ளுடைய மனக் கண்ணில் ஒரு மின்னல் நொடிப்பொழுதே னும் தாங்கள் இழந்த காதலி யையோ, நழுவிப்போன காதலையோ நினைக்காமல் இருக்க முடியாது. பல இதயங்கள் தூவிய காதல் இந்தக் காற்றில் முளைத்து வேர் விட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் தன் முயற்சி எதுவும் இன்றி தூண்டப்படும் பக்தியைப் போலவே தாஜ்மகாலின் உள்ளே யும் காதல் மேலெழும்பும்.


வெளிப் பிராகாரத்தில் கால்போன போக்கில் சுற்றி அலைந்துகொண்டு இருந்தேன். ஏனோ, சாலைகளில் பிரக்ஞையற்றுச் சுற்றும் கந்தல் ஆடைக்காரனின் நினைவு வந்தது. அவனுடைய உலகம் முற்றிலும் வேறானது. அவன் இந்த உலகத்தோடு ஒரு நூலிழை அளவே கட்டப்பட்டு இருக்கிறான். அதில் நாம் அறியாத ஒரு மேன்மையான வாழ்வும் இருக்கலாம்தான்.


பரந்து விரிந்த வெண்ணிற மார்பிள் தரை எனக்குச் சற்றும் சொந்தம் இல்லாத, ஆனாலும் நான் சரிய ஏங்கும் மடியைப் போலத் தோன்றியது. வானம் பார்க்க நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வேண்டும்போல இருந்தாலும், சுற்றி லும் அங்கொன்றும் இங்கொன்று மாக அலையும் மனித நடமாட்டத்தை மனதில்வைத்துக் குட்டைச் சுவருக்கு முதுகைக் கொடுத்துக் கால்களை நீட்டி அமர்ந்தேன். இப்படித்தான் மனதில் தோன்று வதை எல்லாம் நம்மால் செய்ய முடிவது இல்லை. சத்தமாகப் பாட, சுற்றி உள்ளவர்களைப் பற்றி சட்டை செய்யாமல் குதித்து ஆட... என எத்தனை மனத் தடைகள்?



மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம்போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். களைப்பாக இருந்தது. இந்த உலகில் இருந்து முற்றிலும் என்னைத் துண்டித்துக்கொள்ள முயல்பவனைப் போல கண்களை இறுக மூடிக்கொண்டேன். உள் இழுத்து முழுவதுமாக வெளி யிட்ட மூச்சு, புதைந்துபோயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டது.



முதல்முறையாக தாஜ்மஹால் பார்க்க வந்தது அமுதாவுடன். பலரும் எங்களுடன் இருந்தார்கள் என்றாலும், அன்று இங்கு இருந்தது நான், அமுதா மற்றும் தாஜ்மகால் மட்டுமே.


 அமுதாவுக்கும் எனக்குமான காதல் நீடித்தது ஒரே ஒருநாள் மட்டுமே. சொல்லப்போனால் சில நொடிப் பொழுதுகள் மட்டுமே. ஆனாலும் அந்தக் காதல் வாழ்நாள் முழுவதும் வலி தரக் கூடியதாக, வலிமையானதாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை. அமுதாவை நினைத்ததும் அவளுடைய சுருள்சுருளான அடர்ந்த முடிதான் நினைவில் ஆடியது. அவள் என்னை உரசிக்கொண்டு அமரும்போது, ஒன்றாக உறங்கும்போது எல்லாம் என் மூக்கின் துவாரத்தில் அவை கிச்சுகிச்சு மூட்டும். தொடர்ந்த தும்மலின் எரிச்சலில், ''ஏய்... பஞ்சு மிட்டாய் தலை... தள்ளிப் போடி'' என்பேன். பதிலுக்கு அவள் நகங்களால் கிள்ளிய காயங்களின் தழும்புகள்கூட இப்போது என்னிடம் இல்லை.



ஏதேனும் புத்தகத்தில் அவள் மூழ்கியிருக்கும்போது அவள் கையில் உள்ள ஒற்றை முடியை மட்டும் அவள் அறியாமல் மெள்ள இழுப்பது எனக்குப் பிடித்தமான விளையாட்டு. வலியால் துடித்தபடி அலறும் அமுதா, என்னைத் துரத்திப் பிடித்துத் தலைமுடியைப் பற்றி இழுத்து ஓர் அடியேனும் போடாமல் ஓய மாட்டாள்.



உண்மையில் அமுதாவைத் திருமணம் செய்து கொள்ள எங்களுக்குள் எந்தத் தடையும் இல்லை. உறவின் முறையில் அவளை நான் மணந்துகொண்டு இருக்கலாம்தான். அமுதாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி மாற்றலாகும்படியான மத்திய அரசு வேலை. அவளுடைய கல்வியின் காரணமாக, பால்யம் தொட்டே அவள் எங்கள் வீட்டில் எங்களுடன் வளர வேண்டியதாயிற்று.


என் வீட்டில் நான், அப்பா, அம்மா, அமுதா மற்றும் அமுதா வயதில் ஒரு தங்கை. அமுதாவை ஆசை தீரக் காதலிப்பதற்கான எல்லாவிதமான சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும், சுதந்திரமும், உரிமையும் இருந்தது எனக்கு. கண்ணாமூச்சி ஆடும்போது, ஓடிப் பிடித்துப் புரண்டு விளையாடும்போது, குளியல் அறையில் இருந்து ஈரம் சொட்டச் சொட்ட அமுதா வெளியேறும்போது, பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றும்போது... ஏகாந்தமான எந்தச் சூழலிலும் அந்தப் பாழாய்ப் போன காதல் எங்களுக்குள் மணி அடிக்கவே இல்லை.




ஒருவேளை அந்த வெளிப்படையான சூழல்தான் எங்கள் காதலுக்குப் பெரும் தடையோ? காதலில் கள்ளத்தனமும் தடைகளும்தான் சுவாரஸ்யமோ? என்னவென்று இதுவரையில் விளங்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் பெண் மனம் மட்டும் அல்ல; மனித மனங்களே ஆழமானவைதான். ரகசியங்களும், மர்மங்களும், அழகும், அபாயமும் நிறைந்த கடல் மாதிரி.



யாரோ தோள் தொடுவதைப் போல உணர்ந்ததும் மெள்ளக் கண் திறந்தேன். ஓர் இளைஞன் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தான். நெடுநேரமாக என்னை அழைத்துக்கொண்டு இருந்திருப்பான்போலும். நான் சுய நினைவு வந்தவனைப் போல மெள்ளத் தலையை உலுக்கிக்கொண்டு, ''யெஸ்...'' என்றேன்.



''யூ டேக் எ போட்டோகிராஃப் ப்ளீஸ்... இஃப் யூ டோன்ட் மைன்ட்...'' என்றான். அவன் பின்னால் மலர்ந்த புன்னகையுடன் ஓர் இளம் பெண் நின்றுகொண்டு இருந்தாள். அவர்கள் இருவருடைய முகங்களும் காதலால் ஜொலித்துக்கொண்டு இருந்தன. அவர்கள் இருவரும்தான் இந்த உலகிலேயே இன்பமயமானவர்களைப் போல இருந்தார்கள். நிச்சயம் உலகம் காதல் வயப்பட்டவர்களின் கைகளில்தான் உள்ளது.



அந்த இளைஞன் தன்னிடம் இருந்த கேமராவை என்னிடம் நீட்டினான். நான் கோணம் பார்க்கத் தயாரானேன். அவர்கள் பசை போட்டதைப் போல ஒட்டிக்கொண்டார் கள். கரங்களைக் கோத்துக்கொண்டார்கள். முத்தமிட்டுக்கொண்டார்கள். ஒரே சால்வைக்குள் குளிர்காய்ந்தார்கள். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் ஒரு வகையில் அவனது காதல் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. மிக இயல்பாகத் தோன்றிய பொறாமையைப் புறந்தள்ளிவிட்டு அவர்களை ரசிக்கத் தொடங்கினேன்.



அமுதாவுக்குத் திருமணமான புதிதில் அவள் கணவனுடன் சேர்ந்து எடுத்திருந்த தேனிலவுப் புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். அந்தப் புகைப்படங்களில் எல்லாம் நெருக்கம் காட்டுவதில் அமுதாவுக்குச் சிறு தயக்கம் இருந்ததைப் போலத் தோன்றியது. அவள் முகத்தில்கூட மென்சோகம் இழையோடியதைப் போல இருந்தது. அல்லது அவ்வாறு எண்ணிக்கொள்வது எனக்குச் சமாதானமாக இருந்தது.



நன்றி சொல்லி கேமராவுக்காகக் கை நீட்டினான் இளைஞன். கைகுலுக்கி விடைபெற்றான். அந்தப் பெண் தூரத்தில் இருந்து கையசைத்துச் சென்றாள்.


அமுதாவின் திருமணத்துக்குப் பிறகு நாங்கள் சில முறை சந்தித்தோம். கிரஹப் பிரவேசம், அறுபதாம் கல்யாணம், திருமண வீடு, துக்க வீடு இப்படிச் சில சந்தர்ப்பங்களில்தான் சந்திக்க முடிந்தது. அமுதா உணவு பரிமாற நேரிட்டால் எனக்குக் கூடுதலாக ஒரு ஸ்வீட் கிடைக்கும். ஒரு பண்டிகையின்போது என் மனைவியும் நானும் அமுதாவுக்கு மிக விருப்பமான நிறத்தில் புடைவை ஒன்றைப் பரிச ளித்தோம். இப்படித்தான் நாங்கள் அன்பை இதுநாள் வரை பரிமாறிக் கொண்டோம்.



வயிறு, 'என்னைக் கொஞ்சம் கவனி’ என்று பசியை அனுப்பியது. ஒரு சிறுவனிடம் பேல்பூரி வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன்

.
அம்மா ஊரில் இல்லாத நாட்களில் அமுதாதான் சமைப்பாள். கிச்சனைப் போர்க்களமாக்கிவிடுவாள். அப்பா சத்தம் இல்லாமல் சாப்பிடுவார். நான்தான் அவளைச் சீண்டுவேன். ''ச்சீ... என்னடி சாப்பாடு இது... இதுக்குப் பேர் என்ன? இல்ல... இனிமேதான் வைக்கப்போறியா? உன் பரிசோதனைக்கு நான் என்ன எலியா?'' என்பேன். அமுதாவுக்கு முகம் எல்லாம் சிவந்துவிடும். புருவத்தை நெரித்துக் கண்களை உருட்டுவாள்.


''பாருடா... உனக்கு சமைக்கவே தெரியாத ஒருத்திதான் பொண்டாட்டியா வருவா. நீ அவளுக்கும் சேர்த்துச் சமைக்கிற கோலத்தை நான் பார்க்கத்தான் போறேன். அன்னைக்கு வெச்சுக்கறேன் உன்னை. என் சாபம்டா இது...'' என்பாள். அவள் பேச்சின் தாளத்துக்கு ஏற்ப அவள் சுருள் முடியும் ஆடும். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்கு அமுதா அவள் பெற்றோருடன் டெல்லிக்குச் சென்றுவிட்டாள். அப்புறம் அமுதாவின் கல்யாணச் செய்தியுடன்தான் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தாள். மொட்டை மாடியில் அத்தையும் நானும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.


அத்தை திடுமென அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாள். ''ஏண்டா ஹரி, உனக்கு அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு தோணவே இல்லையா?'' என்றாள்.



நான் அதிர்ந்துபோய் ''ச்சீ... என்ன அத்தை, நான் ஒருநாளும் அமுதாவை அப்படி நினைச்சதே கிடையாது...'' என்று பதறினேன்.


''இதையேதான் அவளும் சொன்னா!'' என்றாள் அத்தை சாதாரணமாக.


பின் மிகவும் ஆர்வமாக, ''அத்தை, இப்போ அமுதாவுக்குப் பார்த்திருக்கிற வரன் யாரு? பையன் என்ன பண்றான்?'' என்றேன்.


''காலேஜ்ல கூட படிச்ச பையனாம். அமுதாவை ரொம்பப் பிடிக்குமாம். அவகிட்டகூடச் சொல்லாம நேரா எங்ககிட்ட வந்தான். எங்களுக்கும் பிடிச்சுஇருந்தது. சரின்னு சொல்லிட்டோம்...'' என்ற அத்தையிடம், ''கழுதை... இவளும் லவ் பண்ணியிருப்பா. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க... நீங்களும் நம்பிட்டீங்களாக்கும்'' என்று சிரித்தேன்.


அத்தையும் சிரித்தபடி, ''அது சரி, உனக்கு எப்போ கல்யாணம்... நீயும் யாரையாவது..?'' என்று அடிக் கண்ணால் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள். அப்படியே அமுதாவின் வயதான பிம்பம்போல இருந்தது.


''ம்... லவ் பண்ற லிஸ்ட் பெருசு. அதுக்குக் குறைஞ்சது நான் அஞ்சு கல்யாணமாவது பண்ணணும்!'' என்றேன்.


''போடா வாலு...'' என்றபடி அத்தை அடிக்க வந்தாள்.


தாஜ்மகாலைச் சுற்றி உள்ள புல் தரையில் ஆங்காங்கே நாரைகள், சிறகு முளைத்த குட்டிக் குட்டி தாஜ்மகாலைப் போல அலைந்துகொண்டு இருந்தன. அப்பாவுக்கு ஏனோ அமுதா மேல் தனிப் பிரியம். எல்லாவற்றுக்கும் ''அமுதாவைப் பார்... அமுதாவைப் பார்'' என்று ஒப்பிட்டுப் பேசுவார்.


''நீ ஏண்டி இங்க இருக்கே. உன் வீட்டுல போய் இருக்க வேண்டியதுதான. நான் நிம்மதியா இருந்திருப்பேன். உன்னாலதான் இந்தாளு என்னைத் திட்டுறாரு'' என்று சண்டையிட்ட அன்றைக்கு, அமுதா பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி ரகளையே செய்துவிட்டாள். அப்பாவும் அம்மாவும் அவளைச் சமாதானம் செய்யப் பெரும்பாடுபட்டார்கள். பிற்பாடு நான் அவளிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் தனிக் கதை.



அமுதாவின் திருமணத்துக்காக ஒரு வாரம் முன்பே நாங்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டோம். அந்த ஒரு வாரம் முழுவதும்தான் நான் அமுதாவை மிக அருகில் நன்றாக உணர்ந்தேன். அமுதா முற்றிலும் வேறு யாரோவைப் போலவே இருந்தாள். அவள் தோற்றத்தில், உடல் மொழியில் மெருகேறி இருந்தது. அமுதா எங்கள் வீட்டுப் பெண் என்ற பெருமிதமும் உரிமையும் தோன்றியது. திருமணத் துக்கு முதல் நாள் அமுதாவுக்குத் திடீரென அந்த ஆசை வந்தது.



''தாஜ்மகால் போலாமா?''


நான் பதில் சொல்லும் முன், ''ப்ளீஸ்... போலாம்டா. என் கடைசி ஆசை'' என்றாள்.


அத்தை, ''சரி... ஹரி கூடப் போ'' என்று சொன்னாள்.


''ம்ஹும்... நம்ம குடும்பத்துல எல்லாரும் வரணும்'' என்று சிறு குழந்தையைப் போல அடம்பிடித்தாள்.


அமுதா, பூப்போட்ட பச்சை நிற சல்வார் கமீஸில் தயாராகி வந்தாள். ''ஹரி... இந்த சல்வார் கமீஸ் எப்படி இருக்கு?'' என்று கேட்டவள், நான் பதில் சொல்வதற்கு முன், ''அவர் வாங்கித் தந்தது...'' என்றாள்.


அத்தை கேட்ட கேள்வி வட்டமடித்தது. 'ஏன் ஹரி, அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு உனக்குத் தோணவே இல்லையா?’


ஐயோ... இவள் என் அமுதாவாச்சே. இவளை எப்படி நான் யாருக்கோ தாரை வார்ப்பேன். அவளுக்கு இருட்டு என்றால் பயமாச்சே. வண்ணதாசனின் எழுத்துகள் என்றால் உயிரை விடுவாளே. குளிர்காலத்தில் மூச்சுவிடச் சிரமப்படுவாளே. புதியவனுக்கு இதெல்லாம் தெரியுமா? அவளை முழுவதுமாகப் பறிகொடுக்கப்போகிறோமோ என்ற பரிதவிப்பு என்னை அலைக்கழித்தது.


ஏன் இத்தனை நாட்களாக இப்படி முட்டா ளாக இருந்தேன். அமுதாவின் தோழிகளை வசீகரிக்கத் தோன்றிய அளவு ஏன் அமுதாவை வசீகரிக்கத் தோன்றவில்லை. அல்லது அவ்வாறு நடந்துகொண்டு அமுதாவை ஆழம் பார்த் தேனோ? இல்லை... இவள் என் அமுதாதானே எங்கே போய்விடப்போகிறாள் என்ற அலட்சியமும் உதாசீனமுமா? பைத்தியம் பிடித்துவிடும்போல இருந்தது.



காரில் அமுதா என் அருகில்தான் அமர்ந்து இருந்தாள். வழக்கத்துக்கு மாறாக இருவரும் வெகு அமைதியாக இருந்தோம். நடுவே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவே இல்லை. சண்டையிட்டுக்கொள்ளவும் இல்லை. அந்தப் பேரமைதி என்னைக் குலைத்தது. என் பால்யம் தொட்டு என்னுடன் வளர்ந்தவள், இன்று என் அருகில் இருந்தும் அந்நியமாகிப்போனாள். விநோதமான ஏதோ ஓர் உணர்வு தொண்டையை அடைத்தது. நடக்கக் கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்று உள்ளே மணி அடித்தது.



நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னர் ஒரு சிறிய மரக் கதவு திறந்தது. அது தாஜ்மகாலின் நுழைவாயில். ஒரு நிமிடம் இந்த வெண்மையான, பிரமாண்ட கட்டடத்தின் முன் நான் கரைந்துபோனேன். என் மூச்சு நின்றது. அறிவு ஸ்தம்பித்தது. தாஜ்மகால் பேரழகியாக மாறி என்னை மயக்கி, கோடானுகோடி உணர்வுகளைத் தூண்டினாள். என் பார்வை தாஜ்மகா லின் மேல் நிலைகுத்தி நிற்க, அமுதாவின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டேன். அவள் விரல்களோடு எனது விரல்களைக் கோத்துக் கொண்டேன். தொட்டுக்கொள்ளல் எங்களுக் குள் புதிதல்ல என்றாலும், இந்தத் தொடுதல் புதிது. அவள் விரல்களை விடுவித்துக்கொள்வாளோ என்ற பயத் தில் அவளுடைய கரங்களில் என் பிடியை மேலும் இறுக்கினேன். அமுதா என் முகத்தை உற்று நோக்கி னாள். நான் தாஜ்மகாலில் இருந்து கண்களை விலக்கவில்லை.



''ஹரி...'' என்றாள் அமுதா மிக பலவீனமாக. கடைசி மூச்சை வெளியிடும் ஆன்மாவின் குரலாக அது இருந்தது.


''ஷ்...'' என்றபடி அவள் விரல்களை மேலும் இறுகப் பற்றியபடி நடந்துகொண்டு இருந்தேன். நடைப் பூங்காவின் நடுவே இருந்த குளத்தில் தாஜ்மகாலின் பிம்பத்துடன் எங்களுடைய பிம்பமும் பிரதிபலித்தது.


''ஹரி... கல்யாணப் பொண்ணைப் பத்திரமா கூட்டி வா'' என்றவாறே எங்களிடம் இருந்து வெகு தூரமாகச் சென்றுகொண்டு இருந்தார்கள் குடும்பத்தினர்.


அமுதா, ''ஹரி...'' என்றாள் மறுபடியும், மிக சன்னமாக. அவளது குரல் யாரோ ஒருவரின் குரல்போல் ஒலித்தது. இப்போது அவளின் கரங்கள் எனது கரங்களை இறுகப் பற்றியிருந்தது.


தாஜ்மகாலின் வெளிப் பிராகாரத்தில் முதல் அடி எடுத்து உள் நுழைந்ததும் வீசிய காற்றில் அமுதாவின் தலை முடியில் ஒரு கற்றை முன் நெற்றியில் விழுந்தது. எப்போதும் மையிட்டதைப் போல இருக்கும் அமுதாவின் கண்கள் பிரகாசமாக விரிந்திருந்தன. அவை காதலாலும் கண்ணீராலும் பளபளத்தது. விரிந்த அவளுடைய இதழ்களின் நடுவே அவளது பற்கள் தெரிந்தன. நாசி சிவந்து துடித்துக்கொண்டு இருந்தது. அவளது காதோரத்தின் சுருள் முடிக் கற்றை ஒன்று கரிய நாகத்தைப் போலக் கன்னத்தில் வழிந்தோடியது. அதை ஒதுக்கிவிட வேண்டும் என என் கைகள் பரபரத்தன.


''அமுதா... நீ இத்தனை அழகாடி?'' என்றேன் உடைந்து தோற்றுப்போனவனாக... போரில் புறமுதுகுக் காட்டிய கோழையாக.


ரசாயனம் ஊற்றெடுத்தது. காமம் தலைக்கேறியது. முத்தமிடவோ, கட்டியணைக்கவோ இயலாமல் இரு தனித் தனி எரிமலைகளாக நாங்கள் கனன்றுகொண்டு இருந்தோம். தடயமேதும் இன்றி ஒரு களவு நிகழ்ந்தேறியது.



''ஹரி... என்னடா செய்ய நான்?'' என்றாள் அமுதா கண்ணீர் வழிய. அழுத்தப்பட்டு இருந்த மொத்த அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாக நாங்கள் மௌனித்து இருந்தோம். ஏதோ மந்திர விரலுக்குக் கட்டுப்பட்ட பொம்மைகளா னோம். நான் சுதாரித்து பற்றிய விரல்களை உதறி, திகைத்து விலகினேன். அமுதா என்னை ஊடுருவி வெறித்தாள் வெகுநேரம் வரை.



'குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல அவன் தனது பாவங்களில் இருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டா கும். சூரியனும் சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப்படுத்தவே இந்தக் கட்டடம் எழுப்பப்பட்டு உள்ளது!’ -  இவை ஷாஜஹானின் வாசகம் எனப் பின்னாளில் அறிந்தேன். 



ஒருவகையில் சரியான தருணத்தில் காதலை உணராத குற்றவாளி நான். அமுதாவுடன் நான் வாழ முடியாத வாழ்வு, என்னை மிகத் தூய்மையானவனாகவே இன்று வரை வைத்திருக்கிறது. அந்த நொடிப்பொழுது காதல் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. காதலிக்கக் காதலி தேவை இல்லையே. வெறும் காதல் மட்டுமே போதும். அவளுக்கும் அப்படித்தான் இருக்க முடியும்.


மீண்டும் ஒரு முறை பார்வையால் தாஜ்மகாலைப் பருகிவிட்டு வெளியேறத் தொடங்கினேன்.


அடுத்த முறை அமுதாவைப் பார்க்கும்போது கேட்க வேண்டும், அவள் மீண்டும் எப்போதாவது தாஜ்மகால் பார்க்க வந்தாளா என்று?


 thanx - vikatan

Monday, February 11, 2013

பிருந்தாவின் கனவு - அ. வெண்ணிலா - சிறுகதை

பிருந்தாவின் கனவு

முன்குறிப்பு: ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவலே இந்தக் கதை! 


பிருந்தாவுக்குக் கைகுலுக்கப் பிடிக்கும். கை கூப்பியோ, கைகளை உயர்த்தியோ வணக்கம் சொல்வதைவிட, கைகுலுக்கி வணக்கம் சொல்வது மனசுக்குப் பிடிக்கும். நெருக்கமாக உணர்வாள். வலது கை குலுக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இடது கையை மேலேவைத்து அழுத்தி, இரு கைகளுக்குள் ஒரு கையைப் புதைத்துக்கொள்ளும் கணம் உயிர்ப்பானது.
 முன் பார்த்த முதல் சந்திப்பில் கை குலுக்க கைகளை முன் நீட்டினால், எதிரில் நிற்கும் ஆண் கொஞ்சம் மிரள்வது தெரியும். எதிர்பார்த்திருக்க மாட்டான். மனசுக்குள் உள்ள தடுமாற்றம் மறைத்து, 'அவளே கை நீட்டுகிறாள், நமக்குஎன்ன?’ என்று காட்டிக்கொள்வதுபோல் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கைகளை வெளியே எடுத்து, அவசர அவசரமாகக் கை குலுக்குவார்கள்.
 கை குலுக்கல் இங்கு சம்பிரதாய மீறல். பெண் தன் உடலின் கட்டுக்களை லேசாக விடுவித்துக் கொள்ளும் சுதந்திரம். சில நேரங்களில் அழைப் பாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயமும் உள்ளது. பொதுச் சபைகளில், (நிச்சயம் அவை ஆண்களால் நிரம்பியதாகத்தானே இருக்கும்.) நண்பர்களுடன் கை குலுக்கும் பெண்தான் கவனத்தின் மையம்.
 எல்லோரும் அவரவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதுபோல் பாவனை இருக்கும். அவர்களின் ரகசியக் கண்கள் அந்தப் பெண்ணை ஊடுருவியபடியேதான் இருக்கும். கை குலுக்கலுடன், பற்கள் வெளியே தெரிகிற மாதிரி, கொஞ்சம் சத்தமும் வெளிக் கேட்கிற மாதிரி சிரித்துக்கொண்டு, லேசாக நண்பனின் கையைத் தட்டிக்கொண்டு பேசுகிற பெண் என்றால், சபை எப்போது கலையும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார் கள். 'என்ன பாஸ், என்ன மச்சி, என்ன மாப்ள, என்ன தல’ என அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப அழைத்து, 'கைவசம் ஒரு ரெடி பீஸ் வெச்சிருக்க போல இருக்கே’ என்று பொறாமை கலந்த, வாழ்த்துக்கள் போன்ற ஏக்கத்தைத் தெரிவிப்பார்கள். 
'அக்கா, தங்கச்சிகூடப் பொறக்கலையா’ என்று திட்டு வாங்கக் கூடாது என்ற வைராக்கியத்தோடு வளர்க்கப்பட்ட சில அப்பிராணி ஆண் கள், இயல்பான இந்தக் கைகுலுக்கலுக்குப் பயந்துவிடுவார்கள். ஈரத் துணியைப் பிடித்துக் கை குலுக்குவதுபோல் அவர்கள் கைகள் வேர்த்து இருக்கும். கை குலுக்கி முடித்த பிறகு தீவிரவாதச் செயலைச் செய்த மாதிரி, இரு கைகளையும் பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு, நடுக்கத்தைக் குறைத்துக்கொள்வார்கள் அல்லது கைக்குட்டை எடுத்து, வியர்க்கும் முகத்தை அடிக்கடி துடைத்துவிட்டுக்கொண்டு, உண்மையிலேயே தான் அப்பிராணி என்பதை நிரூபிப்பார்கள்.


கை குலுக்குவதைப் பற்றி தான் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருப்பதை, கீழே தாழும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.



தோழிகள் கோபிப்பார்கள்... ''இங்க எல்லா ஆம்பளையும் ஒண்ணுதான்டி. தண்ணி அடிச்சுட்டு லுங்கியை அவுத்துத் தோள் மேல போட் டுக்கிட்டு போறவன்ல இருந்து... சட்டையை இன் பண்ணிக்கிட்டு, பளபளப்பா ஷூ போட்டுக்கிட்டு, முகத்தை இறுக்கமா வெச்சுக்கிட்டு அதிகாரியா வர்றவன் வரைக்கும் எல்லா ஆம்பிள மனசுக்குள்ளயும் 'இவ ஒரு பொம்பளதானே’னு சொல்ற புத்திதான் இருக்கும். நீ சும்மா ஏன் அவனுங்ககிட்ட போய் இயல்பா இருக்கிறதாக் காட்டிக்கணும்னு நெனைக்கிறே? இவனுங்ககிட்டபோய் உனக்கென்ன ஃப்ரெண்ட்ஷிப்... கத்திரிக்காய், மண்ணாங்கட்டி. வந்தா வேலையைப் பார்ப்பியா..?'' என்பார்கள். இவள் சிரித்துக்கொண்டே ''வாழ்க்கைலேர்ந் துதானே எல்லாத் தத்துவமும் வந்தி ருக்கு. வாழ்க்கைலேர்ந்து வந்ததே வாழ்க்கைக்குப் பயன்படாதா?'' என்பாள்.




''உனக்கெல்லாம் பட்டாலும் புத்தி வராதுடி. பேரக் கெடுத்துக்கிட்டு எங்கனா கஷ்டப்படு. அப்புறம் இப்படிக் கனவு வந்தது, அப்படிக் கனவு வந்ததுன்னு சொன்னே... அவ்ளோதான்'' என்பதோடு தோழி களும் நகர்ந்துகொள்வார்கள்.



தலைநகரத்தின், புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு அதிகாரி இவள். தினம் புதுப் புது முகங்கள், விதவிதமான தேர்வுகள் என்று ஒவ்வொரு நாளும் சுவாரஸ்ய மாகவே போகும். நிறைய சதவிகிதம் எடுத்துத் தேர்ச்சி பெற்ற மாணவர் களை, வேலைக்காக நிறுவனம் தேர்வுசெய்துவிடும். தேர்வு செய்த மாணவர்களை, எந்தெந்தப் பணிக்கு நிறுவனத்தில் பணியில் அமர்த்த முடியும் என்று தேர்வுசெய்து கொடுப்பதே இவளின் பணி.



கல்லூரியில் இருந்து நேரடியாகப் பணிக்கு வரும் புதிய மாணவர்களைத் துவக்கத்தில் ஆர்வமாகச் சந்திப்பாள். சான்றிதழில் அவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவிகிதத்துக்கும், பணி சார்ந்து நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதிக்கும் தொடர்பே இருக்காது. கல்லூரியில் அவர்கள் பெறும் அனுபவம் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும்.



 இவள் கேட்கும் நுட்பமான கேள்விகளில் ஆண்கள், பெண்கள் இருவருமே தடுமாறிப்போவார்கள். உறவுகளைக் கையாள்வதுகுறித்து, குறிப்பாக இருபாலாரிடமுமே தெளிவு இருக்காது. பதில் என்ற பெயரில் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். நல்ல கத்திரிக்காயைக் கூடையில் இருப்பதில் இருந்துதானே தேர்வுசெய்ய முடியும்? கூடையைக் கிளறிக் கிளறி இருப்பதில் நல்லது என்று நம்புவதைத் தேர்வு செய்வாள். இவள் தேர்வு பெரும்பாலும் தோற்காது.


இவளுக்குக் கீழே இருக்கும் அடுத்த நிலை அதிகாரிகள் நான்கு பேரும் ஆண்கள். அப்படி ஒரு நினைவு வராமல் இருக்க விரும்புவாள். தவிர்க்க முடியாமல் 'ஆண்கள்’ என்பதும் சேர்ந்தே ஞாபகத்தில் வரும். அந்த நினைவைக் குறைப்பதற்காகவே, கண்களைப் பார்த்துப் பேசுவது, பல் வெளித் தெரியச் சிரிப்பது, அவர்களின் முன்னால் ஆடைகளைச் சரிசெய்துகொள்ளாதது, திடீர் என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தால் பதற்றம் அடையாமல் இருப்பது எனப் பல்முனை முயற்சிகளைச் செய்துபார்ப்பாள். இடைவேளை நேரத்தில் அவளாகவே தேநீர் குடிக்க அழைப்பாள்.



திவாகர்தான், இவளுக்கு அடுத்து இந்த அலுவலகத்துக்கு வந்தவன். இரண்டு புதியவர்கள் சேர்ந்து அந்த இடத்தை, பழையதாக்க முயற்சிப்பதுபோல் இருவரும் ஒன்றாகத் தேநீர் குடிக்கப்போவது, மதிய உணவைப் பகிர்ந்துகொள்வது என்று இணைந்து வேலை செய்தார்கள். காலையில் கை குலுக்கிக்கொள்வது, சந்தோஷத்தில் அடித்துக்கொண்டு சிரிப்பது, இயல்பாகப் பக்கத்தில் உட்கார்வது என்று இவளால் திவாகருடன் பொருந்திப் போக முடிந்தது. திவாகர், பிருந்தாவின் அணுகுமுறையினால் அவளோடு இயல்பாக இருக்கக் கற்றுக்கொண்டான். பிருந்தா எதிர்பார்ப்பதும் இதைத்தான். ஒரு பெண்ணுடன் உள்ளது போன்ற சகஜமான நட்பை, ஆணிடமும் பெற்றுவிட வேண்டும் என்பதே பிருந்தாவின் பேரவா.



இந்தக் கதையின் பிரச்னை என்ன என்றால், நீங்கள் எல்லோரும் யூகிப்பதைப் போல்... பிருந்தாவுக்கு அவள் விரும்பும்படியான நண்பர்கள் கிடைக்காதது அல்ல; பிரச்னையே பிருந்தா தான்.



அவளுக்குப் பிடித்தமான நிறைய ஆண்கள் இருந்தார்கள். பிடித்தமான என்பதில் 'யோக்கியமான’ என்ற தகுதியை உள்ளடக்கியது இல்லை. இன்று பல பேர் அந்தத் தகுதியைப் பெரிதாக எடுத்துக்கொள்வதும் கிடையாது. பிருந்தா தன் அறிவு, படிப்பு, திறமை எல்லாம் பயன்படுத்திப் பழகும் நண்பர்கள் வட்டத்தை இயல்பாக்கி வைத்திருப்பாள். எல்லோருக்கும் சம மதிப்பு, சம இடம். தராசைச் சரியாக வைத்திருந்தாள். தராசின் முள்ளே ஊசல்தானே? மெல்லிய காற்றோ, மயிலிறகின் கூடுதல் எடையோ... தராசின் ஒரு தட்டை உயரச்செய்வதுபோல் சில சம்பவங்கள் நடந்துவிடும். பிருந்தாவின் வலிந்து கற்பித்துக்கொள்ளப்பட்ட நட்புப் பிம்பம் அன்றைய கனவில் சிதறும்.



திவாகர்தான் அப்படி ஒரு துர்கனவால் சிதைக்கப்பட்ட முதல் பிம்பம். அலுவலக வேலையாக இவளும் திவாகரும் கோவைக்குப் பயணமானார்கள். காரில் நீண்ட பயணத்தின் உற்சாகம் இருவரிடமும். சொந்த விஷயங்கள், கல்லூரி நாட்கள், முதல் காதல் அனுபவம், மனசுக்குப் பிடித்த முதல் ஆள் என்று பயணம் ஏற்படுத்திக் கொடுத்த தனிமை இதத்தில், மனசின் பக்கங்களைப் புரட்டிப் பேசினார் கள். இருவருக்குமே பிடித்திருந்தது. அதிகமாக வலிந்து தன்னை நல்லவ னாகக் காட்டிக்கொள்ளாத அவனின் வெளிப்படைத் தன்மையை ரசித்தாள்.



நிறைய முறை கை, கால்கள் தொட்டுக்கொண்டன. நீண்ட நேரம் தொங்கவிட்டபடி வரும் காலைச் சரிசெய்துகொள்ள, மடித்து உட்கார்ந்தபோது அவள் முட்டிக் கால் அவன் கால் மேல் இடித்தது. எதுவும் உறுத்தவில்லை... அல்லது உறுத்தாத மாதிரி நடந்துகொண்டார்கள்.



போன வேலை ஒரு நாள் முன்னதாகவே முடிந்துபோனது. தங்களின் கூட்டு, வேலையை எளிமையாக்கிய மகிழ்ச்சியில் அன்று மாலையே ஊர் திரும்பினார்கள். ஃபுட் பாய்சனோ என்னவோ, புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் இவளுக்குத் தலைவலியும் வாந்தியும் ஆரம்பித்தது. கிளம்பிப் போன பயணத்துக்கு நேர்மாறாக இருந்தது திரும்பும் பயணம். சோர்ந்துபோனாள். வழியில் வண்டியை நிறுத்தி மாத்திரையும் நேநீரும் வாங்கிக்கொடுத்தான் திவாகர். ஜுரம் அடிக்கிறதா என்று அவ்வப்போது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். உடம்பு முடியாத நேரத்தில், அன்பான ஓர் ஆள் பக்கத்தில் இருப்பது பெரிய தெம்புதானே?



கவலையுடன் இவளை வீட்டில் விட்டுச் சென்றான். நன்றாகத் தூங்கும்படியும், மறு நாள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளும்படியும் சொல்லிவிட்டுச் சென்றான். உடம்பு முடியாமல் இருந்தாலும் ஒரு நிறைவும் மகிழ்வும் இருந்தது.



நள்ளிரவில் அலறி அடித்து எழுந்தாள். கழுத்து, நெற்றி எல்லாம் வேர்வையில் குளித்திருந்தது. வாய், 'வேண்டாம்... வேண்டாம்...’ என்று முணு முணுத்தபடி இருந்தது. 'நீயா திவாகர், நல்லவன் மாதிரி இருந்தாயே?’ என்று கனவில் தான் கேட்ட கேள்வியின் மிச்சம் அவள் நாவில் இருந்தது. நட்பாகப் பேசிக்கொண்டே திவாகர் தன்னுடன் தவறாக நடக்கத் துணிந்த, அந்தக் கனவு அவளின் சிந்தனைக்குப் பெருத்த அடியாக இருந்தது. 'கூடாது... தான் தோற்கக் கூடாது. தனக்குப் பிரியமான ஒருவனைத் தன் கனவு சிதைக்க அனுமதிக்கக் கூடாது. நண்பர்கள் வேண்டும்... அவர்கள் ஆண்களாக அல்ல; நண்பர்களாக.’



சிந்தனை தரும் உறுதி, நடைமுறையில் அவளுக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் இருந்து திவாகரை அவளால் இயல்பாகப் பார்க்க முடியவில்லை. அவனைப் பார்த்துச் சிரிக்கும்போது எல்லாம் அவள் இமைகளுக்குள் கனவு வந்து உட்கார்ந்துகொள்ளும். கனவின் அச்சுறுத்தலால், இவளால் திவாகரை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. இணைந்த பயணத்தில் விபத்து ஒன்றை ஏற்படுத்திவிட்டு, கனவு அமைதியாக உட்கார்ந்து இருந்தது.



காரணம் இல்லாமல் பிருந்தாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திவாகர் தடுமாறி னான். அவளின் அமைதிக்கான பொருள் தெரியாமல், மீண்டும் பழையபடி நடந்துகொள்வது தனக்கான அவமதிப்பாக முடியும் என்ற புரிதலில் அவனும் அமைதி காத்தான். பிருந்தாவுக்கு அப்போதுதான் புரிந்தது, தன் முயற்சி இல்லாமல் எந்த நட்பும் வளர முடியாது என்று. கொஞ்ச நாளில் அவனின் விலகல் பழகிப்போனாலும், பார்த்துக்கொள்ளும் நேரத்தில் கண்ணில் ஒரு முள் குத்தத் துவங்கும். இமைகளைத் தழைத்துக்கொண்டாலும் முள் நெஞ்சுக்குள் இறங்கும்.



தனிமையில் சந்திக்க நேரும் எல்லா நட்பும் தன்னைப் படுக்கையறைக்கு அழைப்பதாகவே காட்டும் கனவுகள் தினம் தினம் பிருந்தாவுக்கு வரத் துவங்கின. கனவை வெறும் கனவு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாதபடி, தாக்கம் அதிகமாக இருந்தது. யாரைப் பார்த்தாலும் பயம். கொஞ்சம் கூடுதலாகச் சிரித்துப் பேசிவிட்டால், அன்று கனவு வந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தூக்கத்தை விரட்டிய படியே விழித்திருப்பாள். 



தினம் பத்து, இருபது ஆண்களுடன் அலுவல்ரீதியாகப் பேசிப் பழக வேண்டிய கட்டாயம் இருந்த இவளுடைய பணியில்... இவளுடைய கனவு பெரும் சித்ரவதையாக இருந்தது. சிரித்த முகமாக இருந்தவளின், உதட்டு மடிப்புக்குள் புன்னகை ஒளிந்து கொண்டது. அமைதியான தூக்கம் இல்லாததால், கண்கள் கருவளையத்துக்குள் சிக்கின. முகம் சுருங்கி ஒடுக்கு விழுந்தது. வேலையில் கூர்மையும் சுறுசுறுப்பும் குறைந்தது. நிமிட நேரத்துக்குக் கூர்மை குறைந்தால்கூடத் தன்னைத் தகுதி இல்லாமல் ஒதுக்கிவிடும் வேலையில், அவளால் சமாளிக்க முடியவில்லை.



தோழிகள் கட்டாயப்படுத்தி மன நல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் சென்றார்கள். முதலில் அமைதியாகத் தூங்குவதற்கு அவர் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைத்தார். உடல்நிலையும் மனநிலையும் கொஞ்சம் தேறியவுடன் பேசலாம் என ஆலோசனை சொன்னார். நன்றாக, வயிறு நிறையச் சாப்பிடச் சொன்னார். உடல் வியர்க்க வேலையோ, உடற்பயிற்சியோ செய்து வரச் சொன்னார். இரவு நடைப் பயிற்சிக்குப் பின் தூங்கப்போனால், உடம்பு அலுத்து, சோர்ந்து, களைப்பில் தூங்கிவிடலாம் என்றார்.



அவர் சொன்னதை எல்லாம் செய்தாள். தூக்கம் மட்டும் வரவில்லை. களைத்துப்போய் படுக்கையில் விழுந்தாலும், கை, கால்கள் அசந்துகிடந்தனவே தவிர, மனசு கொட்டக்கொட்ட விழித்திருந்தது. தான் வேறாகவும் மனசு வேறாகவும் பிரிந்து கிடக்கும் அதிசயத்தைத் தினமும் இரவுகளில் சந்தித்தாள். உடம்பு ஓய்வு எடுக்கும். மனசு மட்டும் விழித்திருந்து சுற்றி நடப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கும். மனசையும் உடம்பையும் ஒன்றிணைக்க முடியாமல் தடுமாறினாள். சம நிலை குலைந்த அவளின் நாட்கள் தினம் அவளுக்கு நரகத்தைப் பரிசளித்தன.



இவளின் மோசமான நிலையைப் பார்த்து, மருத்துவருக்கே கவலை வந்தது. இவ்வளவு ஆழமாக... ஒரு சிறு விஷயம் பாதிப்பதற்கான காரணத்தை இவளிடம் இருந்து கண்டறிய அவர் பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டார். தினம் மருத்துவருடன் பல மணி நேரங்கள் உட்கார்ந்த இவள், மெள்ளத் தன்னுடைய இளம் பருவச் சம்பவங்களை நினைவுகூர்ந்தாள்.



ஆண்- பெண் நட்பு இவளுடைய அறிவு நிலையின் விருப்ப மாக இருப்பதையும், ஆண் - பெண் உறவின் வன்முறை அவள் ஆழ் மனசின் அனுபவமாக இருப்பதையும் மருத்து வர் கண்டறிந்தார். இவளின் மனப் பிரச்னைக்கு மருந்து இவளேதான் என்று மருத்துவருக்குத் தெரிந் தது. நண்பர்களைக் கையாள்வதைப் பற்றி அவள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.



இரவுத் தூக்கத்தில்தான் கனவு நிறையும். பகலில் தூங்கி ஓய்வு எடுக்கலாம் என்று அலுவலகத்துக்கு 15 நாட்களுக்குத் தொடர் விடுப்பு எடுத்தாள். சூடாக வெந்நீரில் குளித்துவிட்டு, வயிறு முழுக்கச் சாப்பிட்டு, தன்னை வெகுவாக மனதளவில் தளர்த்திக்கொள்வாள். 'தனக்கு எதிரான ஆண் கள் யாரும் இல்லை... தான் வெறுக்கும் ஆண்கள் யாரும் இல்லை... உலகில் உள்ள ஆண்கள் எல்லாம் தனக்கு விருப்பமானவர்களே’ என்று மனசுக் குள் மந்திரம்போல் சொல்லிக்கொண் டாள்.



 தன் அனுமதி இல்லாமல் தன்னை யாரும் நெருங்க முடியாது என்று உறுதியாக வாய் திறந்து சொல்லிப்பார்த்தாள். தான் எவ்வளவு இணக்கமான, புரிந்துகொண்ட ஆண்களுக்கு மத்தியில் இருக்கிறோம் என்று பெருமிதப்பட்டாள். தனக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்த நண்பன், கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த நண்பன், கல்லூரியில் தங்களுக்குள் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டு, உச்சபட்ச சந்தோஷத்துடன் படிப்பை முடிக்க உதவிய ஆண்கள், தன்னைப் பெண் என்று உணரவைக்காமல் சரிக்குச் சரியாகப் பழகிய அலுவலக நண்பர்கள் என்று தனக்குப் பிடித்த நண்பர்களை நினைவுகூர்ந்தாள்.




ஹெட்போனில் பழைய சோகப் பாடல்களைக் கேட்டாள். மனதை உற்சாகம்கொள்ளவைக்கும், நெகிழவைக்கும் சோக வரிகள், மனதைத் துடைத்துவைத்ததைப்போல் வெறுமையாக்கின. குழப்பங்கள் வடிந்து மனது பாடல் வரிகளை முணுமுணுத்தது. வெந்நீர்க் குளியல், வயிறு கனக்கச் சாப்பாடு, தனிமை, காலை நேரத்தின் இளம் குளிர்ச்சி, அறைக்குள் உருவாக்கப்பட்ட மெல்லிய இருட்டு, பாடல் தரும் கிறக்கம், எல்லாம் சேர்ந்து தூங்குவதற்கு இசைவான ஓர் அமைதியைத் தரும் என்று மகிழ்ந்தாள். ஏ.சி-யைக் கூட்டிவைத்துவிட்டு, பாட்டு கேட்டுக்கொண்டு போர்வைக்குள் சுருண்டாள். மூளைக்குள் இருந்த மனங்கொத்திப் பறவைகள் எங்காவது பறந்துபோய்விட்டால் பரவாயில்லை என்பதுபோல் கூண்டுகளை அகலத் திறந்துவைத்தாள். சிந்தனைகளைத் தொலைக்க வேண்டும் என்ற சிந்தனை யிலேயே தூங்கிப்போனாள். பல நாட்கள் தூங்க முடியாததன் அசதியை அந்த காலைப்பொழுது நீக்கிக் கொண்டு இருந்தது.




கனவுக்குப் பகல் என்ன? இரவு என்ன? விழிகள் ஓய்ந்தால் போதாதா, இடம் பிடித்துக்கொள்ள? பிருந்தாவைத் துரத்த ஆரம்பித்தது பெருங்கனவு.



தலையை வருடின விரல்கள். 'உனக்குள் இவ்வளவு சோகமா பெண்ணே?’ என்ற கனிவான குரல் கழுத்து அருகில் கேட்டது. துவண்டுகிடந்த பாதங்களைத் தன் மடியின் மீது தூக்கிவைத்துக் கொண்டு மெள்ள அழுத்தின. ஒவ்வொரு கால் விரலையும் வலிக்காமல் சொடுக்கு எடுத்தன. 'ஏன் இப்படி மெலிந்து எலும்பாகத் துருத்திக் கொண்டு இருக்கின்றன விரல்கள்?’ - ஆதங்க வார்த்தைகள் விரல்களுக்கு அடியில் புதைந்தன.



'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’ பாடல் காதுக்குள் கேட்டது. பி.சுசீலாவின் குரலில் ஒன்றினாள். மெள்ள ஒரு கை உடலை அணைத்தது. இவ்வளவு நேரம் இருந்த மென்மை யில் இறுக்கம் கூடியிருந்தது. தன் உடம்பை ஒரு கை வாகாகப் பிடித்துக்கொள்ள... மற்றொரு கை ஆடையை விலக்கத் துவங்கியது. உடம்பு ஒடுங்கியது. ஆடையை விலக்கும் கையைக் கூர்ந்து பார்த்தாள். தனக்குப் பழக்கமான கை போலவே இருந்தது. பார்வையைக் கூர்மையாக்கி, இன்னும் நெருங்கிப் பார்த்தாள். இந்தக் கையைத் தெரியுமே... இந்தக் கை... இந்தக் கை... நினைவின் ஆழத்தில் பாதாளச் சங்கிலி வேகமாகத் துழாவியது. அடையாளத்தைத் தொட்டுவிட்ட கணத்தில்... நெற்றிப் பொட்டுத் தெறிக்க அவள் வாய்விட்டு அலறினாள் 'அப்பா...’!



நன்றி - விகடன்