Wednesday, March 19, 2014

நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி-தோழர் இ.எம்.எஸ்.


சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள். இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் தோழர் இ.எம்.எஸ். ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் 1909-ல் பிறந்தவர் அவர். ஆண்டுக்கு 50,000 மரக்கால் நெல் குத்தகைதாரர்களிடமிருந்து மட்டும் அவருடைய குடும்பத்துக்கு வரும். வீட்டு வேலைகளைச் செய்ய மட்டும் 12 நாயர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இருந்தனர். எனில், எப்படிப்பட்ட செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து அவர் வந்தவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.


தன் குடும்பத்துக்கென்று எதையும் வைக்காமல், அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மனிதர்.


தான் விரும்பும் மாற்றத்தைத் தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் இ.எம்.எஸ். தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை எடுத்தவர், கல்லூரிப் பருவத்தில் பூணூலை அறுத்தெறிந்தார். ‘நம்பூதிரி இளைஞர் சங்க’த்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், இத்தகைய சீர்திருத்தத்தை மற்றவர்களும் கடைப்பிடிக்க வற்புறுத்தினார். இதுகுறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.சென்னைச் சிறையில் இருந்தபோது இ.எம்.எஸ். பூணூல் அணியாததைப் பார்த்த, அப்போது அவருடன் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இ.எம்.எஸ்-ஸுக்குப் பூணூல் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பூணூலை வாங்கிய இ.எம்.எஸ். பிராமணர் அல்லாத ஒரு தண்டனைக் கைதியிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்.


நாடு முழுவதும் திரண்ட விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, தோழர் இ.எம்.எஸ்-ஸையும் இழுத்தது. 1932-ல் கல்லூரியை விட்டு வெளியேறி, காந்தி அறைகூவல் விடுத்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேர்ந்தது. வரலாற்றுத் துறை மாணவரான


இ.எம்.எஸ். கல்லூரியை விட்டு வெளியேறியபோது, அவரது பேராசிரியர் “நீ வரலாற்று மாணவன் மட்டுமல்ல; வரலாற்றை உருவாக்க வேண்டியவன்” என வாழ்த்தியிருக்கிறார். 1927-ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இ.எம்.எஸ். பங்கேற்றார். பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தவர்கள் பக்கம் இ.எம்.எஸ். நின்றார்.


காந்தியால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தவர், இரண்டு வருடக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவர்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அறிந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.


தலைமறைவுக் காலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை


சுமார் ஆறாண்டுக் காலம் இ.எம்.எஸ். தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். ஆசார அனுஷ்டானங்களில் நியதிகளைக் கடைப்பிடித்து வளர்ந்த பெரியதொரு பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்த தோழர் இ.எம்.எஸ்., தலைமறைவு வாழ்க்கையின்போது மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தும் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்கள் ஆகியோரது குடிசைகளில், அவர்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தந்த உணவை - அசைவம் உட்பட - உண்டு எந்தவித எதிர்ப்புமின்றி, கட்சி ஊழியம் செய்தார்.


அந்தக் காலகட்டத்தில் வரலாற்றையும் அரசியலையும் மார்க்ஸியக் கொள்கைகளையும் ஆழமாக அலசத் தொடங்கிய இ.எம்.எஸ்., மெல்ல மெல்ல காந்தியிட மிருந்து விலகி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்போது தலித் மக்களுடன் வாழ்ந்ததுதான் தன் வாழ்வில் பெரிய தாக்கத்தை உருவாக்கிய நாட்கள் என்று அவரே தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.சுதந்திரத்துக்காக ஆவேசமாக காந்தி போராடினாலும், சமுதாயச் சீர்திருத்தத்தில் அவருடைய பங்களிப்பு போதாது என்று இ.எம்.எஸ். கருதினார். இதனால் காந்தியிடமிருந்தும் நேருவிடமிருந்தும் விலகி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் தலைமையிலான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1936-ல் தோழர் இ.எம்.எஸ்-ஸை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்த பெருமை தோழர் சுந்தரய்யாவைச் சாரும்.தோழர் இ.எம்.எஸ். யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பரந்த வாசிப்பு உள்ளவர். படித்ததைப் போலவே எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தார். அவருடைய எழுத்துகள் 100 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
1937-ல் மலபார் பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினரானார். (தமிழக சட்டமன்றத்தில் முன்னோடி உறுப்பினர்களில் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட அன்றைய அரசு மலபார் விவசாயிகள் பிரச்சினைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவில் தோழர் இ.எம்.எஸ்ஸும் இடம்பெற்றிருந்தார்.


இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த அறிக்கைக்குத் தனது மாற்றுக் கருத்தை ஒரு குறிப்பாக அளித்தார். (அன்றைய விவசாயிகள் நிலைமையும், அதற்கு இ.எம்.எஸ். அளித்த தீர்வையும் இப்போதும் பேராசிரியர்கள் பாராட்டுகிறார்கள். அவர் அளித்த தீர்வு, எதிர்காலத்தில் தேசம் தழுவிய விவசாயிகள் இயக்கங்களின் முழக்கங்களாக மாறின.)


தோழர் இ.எம்.எஸ். தான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவிய வரலாற்றுச் சூழலைத் தாண்டிச் சிந்தித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுந்தபோது, ‘ஐக்கிய கேரளம்’ நூலை இ.எம்.எஸ். எழுதினார். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு வித்திட்ட பல முன்னோடிகளில் தோழர் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர்.


நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி


1957-ல் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இ.எம்.எஸ். தலைமையில் கேரளத்தில் அமைந்தது. 28 மாதங்களே நீடித்த இந்த ஆட்சியின் குறுகிய காலத்தில், உபரி நில விநியோகம், குத்தகை விவசாயிகளின் நில வெளியேற்றத் தடுப்பு, குடியுரிமைப் பாதுகாப்பு (மனைப்பட்டா), கல்வியளிப்பதில் அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல், பரந்துபட்ட சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை நிறுவுதல் போன்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.


கல்வி, சுகாதாரம், பிறப்பிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்றும் கேரளம் முதலிடத்தில் இருப்பதற்குத் தோழர் இ.எம்.எஸ்-ஸின் பங்களிப்பு முக்கியமானது.


கட்சி பெரிதா, தனிநபர் பெரியவரா?


தோழர் இ.எம்.எஸ். இரு முறை முதல்வராக இருந்திருக்கிறார். தவிர, கட்சியின் பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஆனால், என்றைக்குமே தான் என்ற செருக்கோ அகங்காரமோ அவரிடம் வெளிப்பட்டது இல்லை. ஒரு சின்ன உதாரணம், அவர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தில் தவறு இருந்தது பின்னர் தெரியவந்தது. இதற்காகக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அவரைப் பகிரங்கமாகக் கண்டித்தது.அவர் டெல்லியிலிருந்து கூட்டம் முடிந்து திருவனந்தபுரம் வந்தபோது அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தவறு நடந்த துறைக்கான அமைச்சர் அவர் இல்லை என்றாலும், ஒரு முதல்வராகத் தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், “என் கட்சியே என்னைக் கண்டிக்காவிட்டால் வேறு யார்தான் என்னைச் சரிசெய்ய முடியும்?” என்று கேட்டார்.


வாழ்நாள் சாதனை


அவருடைய கடைசிக் காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர், ‘‘உங்களுடைய வாழ்க்கையின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டபோது, “ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் பிறந்த என்னைப் பின்னாளில், பாட்டாளி வர்க்கம் தன் தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டதையே வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார் இ.எம்.எஸ். ஊழலும் யதேச்சதிகாரமும் அரசியல் யதார்த்தம் ஆகிவிட்ட சூழலில் வாழ்கிறோம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணராக வழிகாட்டுகிறார் தோழர் இ.எம்.எஸ்.


(இன்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு நினைவு நாள்).


- ஜி. ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: [email protected]

thanx - the hindu


 • தோழர் அவர்களை நேரில் பார்த்ததும் அவரது பேச்சை கேட்டதும் பசுமரத்து ஆணியாக என் நெஞ்சில் பதிந்து விட்டது. அன்னாரை இந்த நாளிலும் நினைவு கூர்கிறேன்.
  about 11 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • ஏலங்குளம் மனைக்கல் சங்கரன் நம்பூதிரிபாட் போன்ற தலைவர்கள் அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து பொது வாழ்வில் நேர்மைக்கும், எளிமைக்கும், தொண்டு உள்ளத்துக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த்வர்கள். ஜி.ஆர் எழுதிய சிறப்பான கட்டுரை
   about 11 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
   •  A.SESHAGIRI  from Mumbai
    இதே கம்யூனிஸ்ட் கட்சியில்தான் தனது மத அடையாளங்களை இறக்கும் வரை துறக்காமல் கட்சி பணி ஆற்றி,கட்சியின் உயரிய பதவியான ''பொதுச்செயலாளராக" வும் இருந்த திரு.ஹர்கிஷன் சிங் சுர்ஜித்.
    about 11 hours ago ·   (1) ·   (4) ·  reply (1)
    •  John  
     ஹர்கிஷன் சிங் கூட இந்த நாட்டிற்காக மிகப்பெரிய தியாகங்கள் செய்தவர் என்பதை அவரது வரலாறு மூலம் தெரிந்து கொள்ள முடியும்
     about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  Kumaraguruparan Ramakrishnan Sub-editor, Chennai Edition at Theekkathir from Chennai
     தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை மார்க்சியவெளிச்சத்தில் எப்படிப் பகுத்துப்பார்ப்பது என்பதற்கு இ.எம்.எஸ் எழுதிய "தி மகாத்மா அன் தி இஸம்" ஒரு சிறந்த உதாரணம். காந்திஜியின் கொள்கையை விமரிசித்த இ.எம்.எஸ்.அவரது தன்னலம் கருதாத தொண்டை மனதாரப் பாராட்டினார். இப்புத்தகத் தலைப்பே அர்த்தம் பொதிந்தது. தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் திருவனந்தபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மக்களோடு மக்களாக க்யூ வரிசையில் தள்ளுவண்டியில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஓடோடி வந்த மருத்துவமனை டீன் "என்ன தோழரே, நீங்கள் ஏன் சிரமத்துடன் 'க்யூ' வரிசையில் வருகிறீர்கள்? சொல்லியிருந்தால் நானே உங்களை முதலில் பரிசோதித்து அனுப்பியிருப்பேனே" என்றதற்கு, "நான் எனது முறை வரும் வரை, சக மக்களைப்போலவே காத்திருப்பேன்" என்று தன்னடக்கத்துடன் கூறி நன்றி தெரிவித்தது எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. -இரா.குமரகுருபரன், சென்னை-64
     about 10 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
     •  raj N  from Chennai
      அருமையான பதிவு . சமீபத்தில் மறைந்த திருமதி பார்வதி கிருஷ்ணன் அவர்களும் மிகச் செல்வாக்குள்ள வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தாலும் அவை எல்லாவற்றையும் உதறி மிகக்கடுமையான எளிமையான வாழ்க்கையைக் கட்சிக்காக, மக்களுக்காக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார். உலகிலேயே மக்கள் பணத்தைச் சுரண்டி சொத்துகளைக் குவிக்காத உண்மையான அரசியல்வாதிகள் கம்யுனிஸ்டுகள் மட்டுமே !
      about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
      •  N.A.SUNDARAM.  from Thane
       SRI EMS WAS A GREAT HONEST PATRIOT APPLAUDED/APPRECIATED/PRAISED BY FREEDOM FIGHTER / STATESMAN / ADMINISTRATOR / FARSIGHTED POLITICIAN MOST REVERED SRI RAJAJI. AN EXAMPLE TO BE FOLLOWED BY PRESENT DAY SO CALLED LEADERS.
       about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
       • கட்டுரையை முதலில் இருந்து படித்தேன் உடல் முழுவதும் புல்லரித்துவிட்டது கடைசியில் எழுதியவர் தோழர் ஜி.இராமகிருட்டிணன் என்று காணும் பொழுது எவ்வளவு பெரிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒரு சாதாரண கொள்கையே இல்லாத கட்சியிடம் 2 அல்லது 3 பாராளமன்ற இடத்துக்காக ஒட்டிக்கொண்டு இருந்ததை நினைத்து மன வேதனை அடைந்தேன்
        about 10 hours ago ·   (10) ·   (1) ·  reply (0)
        •  Manikannan  from Bangalore
         பணத்தை குறிக்கோளாகக்கொண்ட இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக இடதுசாரிகளை தெரிந்து கொள்ள வேண்டும்
         about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
         • தோன்றின் புகழோடு தோன்றுக...........இவர் ஒரு எடுத்துக்காட்டு
          about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
          •  Sreenath  
           நல்லதொரு கட்டுரை. இன்றைய இளைய தலைமுறை படிக்கவேண்டியது.
           about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
           •  Ilan  from Bangalore
            அற்புதமான கட்டுரை, இப்படியும் ஒரு மனிதரா?? இது போன்ற தெய்வங்களுடன் நாம் இந்த மண்ணில் பிறந்தது நம் பாக்கியம்?? அற்புதமான தலைவர், இவர் தான் உண்மையான வரலாற்றை உருவாக்கியவர், இவர் தான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்!! இது போன்ற போர்வையில் கட்சியின் கொள்கை மற்றும் பெயரை கலங்க படுத்த ஒரு கும்பல் நம் நாட்டில் உள்ளது தா.பா, இராமச்சந்திரன் (MLA) போன்ற கருங்காளி கும்பல் இது போன்ற தலைவர்களின் தியாகங்களை நாசம் செய்கிறார்கள், நம் மக்களுக்கு எது உண்மையான அரசியல் கட்சி என்று தெரிவதில்லை, இது போன்ற கயவர்கலால் சிகப்பு துண்டை பார்த்தாலே வேருக்கிறார்கள், இ.எம்.எஸ் போன்ற தலைவர்களால் தான் நம் நாடு இன்னமும் அன்ணிய முதலாளித்துவ அடிமையாகமல் உள்ளது, இனியும் நாம் காங்கிரஸ், பிஜேபி போன்ற கட்சிகளை ஆட்சியில் விட்டால் நமக்கு சங்குதான்???
            about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
            •  r. r  from Bhandup
             சிறந்த மாமனிதர். நல்ல அரசியல் வாதிக்கு ஒரு எடுத்துக்காட்டு . அவர் வழி நடப்போம்.
             about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
             • இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். கட்டுரை ஆசிரியர் உட்பட எவரேனும் இவர் போன்று வாழ முயற்சிக்கின்றார்களா கம்யூனிச கட்சிகளில்?
              about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (1)
              George  Up Voted
              •  George  
               தோழர் நல்லகண்ணு வை இவருக்கு தெரியாதா?
               about 6 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
              •  V.Sundar  from Kumar
               In Tamil Nadu, if a TV channel is run in his (Com.Nambudripad) name and people are reminded about him frequently, they will enquire about him if they think they got something through that person, either tangible or intangible benefits/objects. Otherwise, now-a-days they don't care about any person/history and have become fully insulated/thick-skinned from any sort of news/sacrifice by anybody.
               about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
               •  saki,  
                மிக அற்புதமான தலைவர்கள் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றில் படிக்கிறோம் ... தற்போது அப்படி சுட்டிக்காட்ட யாரும் இல்லையே ...காலம் அப்படி ஒரு thalaivanai kattuma....
                about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                •  arul Jothi at Anna University from Mumbai
                 இந்திய தேசத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையை நினைவு கூறும் அற்புதமான கட்டுரை .
                 about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                 •  tamilnesan Rafeek  from Chennai
                  இந்த கட்டுரையை இன்று ஆட்சியை பிடிக்க துடிக்கும் மோடிக்கு அனுப்பி வையுங்கள்.
                  about 6 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
                  •  Shahul Umer  from Mumbai
                   இன்றைய கம்யூனிஸ்ட் கால் வெட்கபட வேண்டும்
                   about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                   • E M S ஒரு வரலாற்று பாடம் ,யாரும் நெருங்க முடியாத உதாரணம் ,நினைவு கூர்ந்த G R கு நன்றி ,எல்லோரும் kamunist ஆகிவிட முடியாது.
                    about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                    •  John  
                     இ.எம் .எஸ் ஒரு நல்ல அரசியல்வாதி ஆவதற்கான 3 தகுதிகளை குறிப்பிட்டுள்ளார் .அவை கண்ணியத்துடன் உண்மை பேசுதல் , மக்களுடன் நெருங்கிய உறவு வைத்து அவர்களுக்கு சேவை செய்யும் குணம் , அதோடு அரசியலை குறித்த அறிவை வளர்த்தல் ஆகியனவே . இன்று எத்தனை அரசியல்வாதிகளிடம் இத்தகைய குணாம்சங்கள் உள்ளன ? எதிர்கட்சியை சேர்ந்தவர்களை எதிரிகளாக காணும் இன்றைய சூழலில் இன்றும் மாற்று கருத்து மிக்க கட்சிகளை மற்றும் அதன் தலைவர்களை சகிப்புத்தன்மையுடன் கருத்து மற்றும் கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் கம்யுனிஸ்ட்கள் மட்டுமே . இன்றைய தலைமுறையினர் கம்யுனிச கொள்கைகளை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் பலரும் எதிர்த்து வருகின்றனர் .
                     about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                     •  Ayasin  from Riyadh
                      He is the HERO, also Mr. Harkishan Singh, but how is the today comrades, working and making money from the politics, and telling i am comrades. what a shame....JAI HIND

                     0 comments: