Tuesday, June 03, 2014

உருகும் கிரிம், ஒழுகும் கனவு-நகைச்சுவை சிறுகதை -எழில் வரதன்

எட்டாவது மட்டுமே படித்த ஏழைப்பட்ட கிராமத்து கறுத்த இளைஞன் ஒருவன் எப்படியாவது நகரும் நகர்சார்ந்து இடத்திற்கு வந்து, ஒரு கோடிஸ்வரன் ஆகவே முடியாது என்று யாராவது நிச்சயமாய் சொன்னார்களானால் இப்பொழுதே ஏலாந்தூர் பஸ்டாப்பில் ஒரு கனவோடு பஸ் ஏறும் அந்தப் பையனை நிறுத்திவிட வேண்டியதுதான். நிச்சயமாய் சொல்வதென்றால், இப்பொழுது இருக்கும் கோடீஸ்வரர்களில் யாருமே ஏழையாகப் பிறக்கவில்லை, அவர்கள் பிறவிப் பணக்காரர்கள்தான், அவர்கள் கிராமத்தல் இருந்து வந்தவர்கள் கிடையாது, பூர்வீகமே நகரம்தான், எட்டாவது படித்தவர்கள் இல்லை எல்லோருமே பட்டம் படித்தவர்கள் என்று நிச்சயமாய் சொல்ல வேண்டும், காசு பணம் சேர்ந்த பின் வாங்கிய கவுரவ டாக்டர் பட்டம் கணக்கில் சேராது.
ஒன்பதாவது சேருவேன் என்று அடம்புடிச்சி அப்பாகிட்ட நல்லா திம்முனு ஒரு உதைய அடிவயிற்றில் வாங்கி, ரெண்டு நாள் வாந்தி எடுத்து, படிப்பாசை போய், சைக்கிள் ஒர்க்ஷாப்பில் பங்சர் ஒட்டவும் வீல் பெண்டு எடுக்கவும் மூணு வருசமா கத்துக்கிட்டு இருந்த பையன் அவன். அவன்தான் கோடீஸ்வரன் கனவோடு பஸ் ஏறப்போகிறான்.
‘இருபத்தி அஞ்சி வருச சர்வீசுடா எனக்கு… என் மாதிரி சைக்கிள் மெக்கானிக் தொழில் இந்த சுத்துப் பட்டு கிராமத்துல எவனுக்குடா தெரியும்…் என்று அவனுக்கு தொழில் கற்றுத்தந்த மெக்கானிக் அடிக்கடி சொன்னது வேலைக்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு தித்திப்பாக இருந்தது. சுத்துப் பட்டு கிராமத்திலேயே இல்லாத அளவுக்கு ஒரு திறமைசாலி நமக்கு வாத்தியாரா வந்துட்டாரே என்று.
ஆனால் சக்கர பெண்டு நிமித்திர வாகு தெரிஞ்ச பின்னாடிதான் இன்னொரு வாகும் தெரிஞ்சது அவனுக்கு. இருபத்தி அஞ்சி வருசமா இந்த பெரிய மெக்கானிக் வேலை செஞ்சும் இன்னும் கந்துக்கு காசு வாங்கி கடன்காரங்கிட்ட அசிங்கமா திட்டு வாங்கறானே, இந்த உலக மகா மெக்கானிக். அது ஏன்? பெரிய மெக்கானிக் கதியே இப்படின்னா அப்ப அரைகுறை மெக்கானிக் கதி எப்படி இருக்கும்? அப்படிங்கற வாகுதான் அது. சைக்கிள் மெக்கானிக் ஆகி பணக்காரனாகிவிடும் ஆசை வால்டியூபில் போன காத்தாயிற்று. சைக்கிள் மெக்கானிக் தொழிலை விட அவனுக்குப் பிசிரில்லாமல் தெரிஞ்ச முதல் விசயம் ‘எத்தன பெரிய மெக்கானிக்கா இருந்தாலும் சொந்த சைக்கிள்ல பெல் இருக்காது, பிரேக் இருக்காது’ன்றது.
இந்த விவரம் தெரிஞ்ச பிறகு இந்த சைக்கிள் தொழில் சரிப்படாது, வெளியூரு போயி எப்பாடு பட்டாவது பெரிய ஆளாகனுன்னு டவுனுக்கு பஸ் ஏறிட்டான் அவன். அவன்கிட்டப் போய் எட்டாவது படிச்சவன் கோடிஸ்வரன் ஆகமாட்டான்னு மவுத்தை கழட்டி காத்தைப் புடிங்கி விட்டுடக்கூடாது இல்லையா. அவனோட அம்மா ஒரு தெரிஞ்சவர் மூலமா டவுன்ல இருக்கிற ஒரு பேக்கரியில அவனை வேலைக்கு சேத்துவிட்டா. இப்படித்தானே கிராமத்திலே இருந்து டவுன் பக்கம் ஒவ்வொரு அரைகுறை படிப்பாளிங்களும் வந்து பெரிச்சாளி கணக்கா எதாவது ஒரு பொந்தில அண்டி பொழப்பு ஓட்டறது. பிறகு தெறமையும், அதிர்ஷ்டமும் உள்ளவன் குபேரனாகிறது.
அவனை வேலைக்கு சேத்துவிட்ட ஆளு ஒரு பெரிய நம்பிக்கைய அந்த சின்ன பையன்கிட்டே அப்போ சொன்னான். அத என்னன்னா ‘தம்பி, பேக்கிரி தொழில், லட்சுமித் தொழில். அதோட நுட்பம் மட்டும் சரியா தெரிஞ்சி வேலை பாத்தா கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள துட்டு பார்ட்டி ஆயிடலாம். மனுசனுக்குத் தேவை, திறமை. கத்துகிட்டவன கால வாரிவிடாத தொழிலு அது. நீ மட்டும் கொஞ்சம் வெவரமானவனா இருந்தா மடமடன்னு தொழில் கத்துகிட்டு, ரெண்டு மூணு கடை மாறி, காசு சேத்து சொந்தமா கடை போட்டு, எண்ணி பத்து வருசத்தில லட்சாதிபதி ஆவலாம்் இதைக் கேட்ட பையனுக்கு மேகத்தை முட்டிக்கொண்டு கைவிட்டு கனவேகமாக சைக்கிள் ஓட்டுவதுபோல பேரின்பம் வராதா?
லட்சாதிபதி கனவோடு கடைக்கு வந்து சேர்ந்தாயிற்று. கடையில் சேர்த்துவிட்டவன் லெட்சாதிபதி ஆக முதல் தகுதியாக என்ன சொன்னான்? நல்லா தொழில் கத்துக்க வேணும்.
பையன் தொழில் கத்துக்க ஆளாத்தான் பறந்தான். ஆனால் விட்டால்தானே. டேய், கஷ்டமருக்கு தண்ணி எடுத்து குடுடா… டேய், குடிச்ச டம்ளர எடுத்து வைடா… டேய், சாப்ட்ட பேப்பர் கீழ கெடக்கு எடுத்து கூடையில போடுடா… அந்த டேபுள தொடை, இந்த சேரை தொடை… அய்ய… எங் கடவுளே… இப்படியே நாள் கழிஞ்சா பிறகு எப்ப அடுப்படி பக்கம் போறது, எப்ப தொழில் கத்துகிட்டு, கேக்கு, ரொட்டியும் வேகவச்சி, கடைவச்சி… ஏலாந்தூர் பையனுக்கு தன் பணக்காரக் கனவு கருகுமென்று இருட்டாகத் தெரிஞ்சது. ஆறு மாசத்தில நெலமை தெரிஞ்சி ஆடிப் போயிட்டான்.
நம்பிக்கை சொல்லி கூட்டி வந்து கடையில் சேர்த்துவிட்ட ஆள் ஒரு பல்லற்ற பொக்கைவாய்க் கிழவன். அந்த பொக்கைக்கு ஊரில் பேசும்போது ஒரு முகம், இப்ப வேறு ஒரு முகம். அதுதான் இப்ப இத்தனை அதிகாரமா இவன்கிட்ட வேலை வாங்கி அடுப்படிப் பக்கம் போகவுடாம எச்சி டம்ளர் பொறுக்க விட்டது. சரி போகட்டும் மெதுவா கத்துக்கலாம். ஆனா அந்த பொக்கைவாய்க் கிழம் இவனை எத்தனை நாளைக்கு கடையில் வெச்சிருக்குமோ தெரியலையே… பையன் மேல பெரிய அதிருப்தி தெரிந்தது பொக்கைக்கு.
“நீ இப்படி கேணத்தனமா வேலை செஞ்சா உன்ன நான் உன் ஊட்டுக்கே தொறத்திடுவேன்’ என்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்த பொக்கை ஒருநாள், பன்ரொட்டியும், கொஞ்சம் கேக்கையும் கட்டி கையில் கொடுத்து ‘நாளைக்கு வெடிகாத்தால பஸ் ஏறி நீ வீட்டுக்கு போயி சேரு தம்பி்ன்னு இவன் டியூப்ப பங்சர் ஆக்கிடுச்சி. அப்படி என்னதான் ஆச்சி…?
என்ன பெரிசா ஆச்சி…
ஒருத்தன் பிரட்டு வேணுமுன்னு கேட்டான். ‘ஏண்டா மசமசன்னு நிக்கிற அவரு கேக்கறத எடுத்து குடு் ன்னு பொக்கை சொன்னது. இவன் எடுத்துக் குடுத்தான். கேட்டவன் கட் பண்ணி குடுன்னு கேட்டான். இவனுக்கு கட்டிங் டெக்னாலஜிய யாரும் சொல்லித் தராததால பக்கத்தில பிஸ்கெட் பார்சல் பண்ணிட்டிருந்த பையன்கிட்ட குடுத்து கட் பண்ணி குடுக்கச் சொன்னான். இது தப்பா? தப்பில்லதானே?


ஆனா பொக்கை வள்ளுனு விழுது. ‘ஏன், நீ துண்டு போட்டுத் தர மாட்டியா? நீயே எடுப்பாளு, உனக்கு எட்டு எடிபிடி ஆளு வேணுமா?்
சரி, தப்புதான். தானே பிரெட்டை அறுத்துத் தருவதென்று திருப்பி வாங்கினான். இதென்ன, கத்தி வச்சி பழம் மாதிரி அறுக்கணும் அவ்ளதானே… அறுத்துட்டாப் போச்சி என்று இவனும் அறுத்தான். அவனுங்க அறுத்தா எப்படி ஒரு தூசு தும்பு வெளிய வராம, வடு தெரியாம பிரட் துண்டாவுது. இவன் வருக் வருக்கென்று அறுக்க அந்த பிரட்டின் மேல் தோல் நாய் தோல் போல கிழிந்து, கீழ் பாகம் கொத்தாக வெளி வந்துவிட்டது. மொத்தத்தில் லாரியில் அடிபட்ட கழுதை போல துண்டு போட்ட பிரெட்டு அசிங்கமாக இருந்தது.
இதைப் பார்த்த பனிரெண்டு வருடம் பேக்கரித் தொழில் அனுபவமுள்ள ஜாம்பவான் இருளில் தவளை பார்த்த நாய் போல வள்ளென்று விழுந்தான், ‘அறிவு கெட்டவனே… சூடா இருக்கிற பிரட்ட கட் பண்றியே… முடியுமா? அறிவு வேணாம்.்
சூடாக இருக்கும் பிரட்டை அறுக்கக்கூடாது – அறுக்க முடியாது என்று அனுபவஸ்தன் சொல்கிறான். இந்த பொக்கை அறு என்கிறது. பிறகு வேலை செய்ய லாயக்கில்லேனு பன்ரொட்டி கட்டிகிட்டு பஸ்வேற ஏறச்சொல்லுது. பொக்கை மேல் கோபமாக வந்தது. திரும்ப ஊருக்குப் போய் சைக்கிள் மெக்கானிக் ஆக நினைத்தான். ஆனால் அந்த நெனைப்பை இன்னொரு நெனைப்பு தடுத்தது.
இவனின் லட்சாதிபதிக் கனவுக்கு பின்னால் ஒரு பொண்ணு இருக்கான்னு சொன்னா நீங்க சிரிப்பீங்க. ஏங்க, ஒரு ஏழைப் பையன் கருப்பா இருக்கான், எட்டாவது வரையிலும்தான் படிச்சிருக்கான். அதுக்காக அவன் பின்னாடி ஒரு பொண்ணு இருக்கக்கூடாதா? பேரு பொன்னிங்க.
பொன்னியோட அப்பன் காசுன்னா பேயா அலைவான். அப்ப பொன்னி யாரை கட்டிக்க முடியும்? காசுள்ளவனைதானே? இவன்கிட்ட காசில்ல. போயி பொண்ணு கேக்க முடியுமா? கேட்டாலும் பொண்ணு தருவானா? காசிருந்தா காலர தூக்கிவிட்டுட்டு ஒசரமான சேர்ல உட்கார்ந்து காலாட்டிட்டே பொண்ணு கேக்கலாமில்ல?
அப்ப என்ன செய்யணும்? பணக்காரனாகனும். அதுக்குத்தான் பேக்கரிக்கு வந்தான். இதாங்க அவனோட பின்னாடி இருக்கிற பொண்ணு கதை.
இவனுக்குப் பிடிச்ச அந்த பொண்ணு கதையில இவனுக்குப் பிடிக்காத ஒரு சோகக் கதையும் பின்னிட்டு இருக்கு. இவன் எப்படி பொன்னிக்கு மொறைப் பையனோ அப்படியே லாரியில கிளினரா ஓடற பரசுராமனும் மொறைப் பையன். அவனும் கருப்பு, ஏழாவது பெயில். ஆனாலும் பரசுராமனோட அப்பன் அவன் டிரைவர் ஆன ரெண்டாம் வருசமே லாரி வாங்கி தரதா சொல்லியிருக்கான். இப்ப தராசு எந்தப் பக்கம் எடை இழுக்கும்?
பொன்னியோட அப்பன் பரசுராமனோட தாம்பூளத்தட்டை வாங்காம இருக்கனுன்னா… லாரி ஓனர் பரசுராமன் போயி பொண்ணு கேட்டாலும் பொன்னி அப்பன் பொண்ணு தரமாட்டேன்னு சொல்லனுன்னா இவன் பரசுராமனவிட பெரிசா ஆகியே தீரணும். ஒடம்புல இல்லைங்க, பணத்தில. பொன்னி என்னடான்னா ரெண்டு பேத்து மேலயும் தலா ஒரு கண்ணு வச்சிருக்கா. எவன் பக்கம் சாஞ்சி கழுத்த நீட்டுவாளோ… யாருக்குத் தெரியும்.
பேக்கரியில சேந்து இத்தனை நாள் ஆச்சி, ஒரு சமோசா, ஒரு பப்ஸ், உருளைக் கிழங்கு சிப்ஸ் எது எப்படி போடணுன்னு ஒரு வார்த்த சொல்லித் தரல… ஆனா அது நொட்டை இது நொட்டைன்னு மட்டும் பொக்கைக்கு கொறை சொல்லத் தெரியுது. இவன் மேல தப்புத் தகறாருன்னு குத்தப் பட்டியல் நீண்டு பெரிசாகிகிட்டே போகுது. பத்து பப்சை கீழே கொட்டினது, இன்னும்கூட பிரட் வெட்டத் தெரியாம இருக்கிறது, கஷ்டமருகிட்ட வா, போன்னு மரியாதை இல்லாம பேசறது, ஒரு பருமனான அம்மா நெஞ்சு மேல டொமேட்டோ சாஸ் ஊத்தினது இப்படி பலப்பல குத்தங்க.
இன்றைக்கு பொக்கை இவனை கூப்பிட்டு ்டேய், த்தா பாரு… உன் வேலை சரியில்லேன்னு மொதலாளி சொல்லிட்டாரு (இங்க சொல்ல மறந்த விசயம், தாம் தூம்னு இவ்ளோ அதிகாரம் செய்யற பொக்கை பேக்கரியோட ஓனர் இல்ல. ரெண்டு வருசமாதான் இந்த கடையில குப்பை கொட்டிகிட்டு அல்லது அள்ளிகிட்டு இருக்கு) த்தா.. இந்த கேக்க ரொம்ப அவசரமா டெலிவரி செய்யணும். ஆளாளுக்கு வேலையா இருக்காங்க. அஞ்சி கிலோ கேக்கு. இது மேல சைக்கிளுக்கு போடுவியே கிரிஸ் அதுமாதிரி கிரிம் தடவித் தரணும் அவ்ளதான். பர்த்டே கேக்கு. ஜாக்ரதை. தப்பாச்சின்னா மொதலாளிகிட்ட என்னால பேச முடியாது. ஊட்டுக்கு தொறத்திடுவாரு, ஜாக்ரதை.்
கிரிஸ் தடவற மாதிரின்னு பொக்கை ஈஸியா சொல்லிடிச்சி. வீட்டுக்கு தொறத்திற முடிவுலதான் தெரியாத வேலைய தருதா பொக்கை? ஏலாந்தூர் பையன் கிரிம் தடவறதை வேடிக்கை பாத்ததோட சரி. பளபளன்னு வார்னீஸ் மாதிரி கிரிம் தடவி, ஒரு காத்து முட்டை, ஒரு பிசிறு இல்லாம நெகுநெகுன்னு குடுக்கணும். யாரால முடியும்? யாருக்குத் தெரியும்? கெடு விதிச்சாச்சா…
இதில் ஏதாவது குளறுபடி நடந்தா பொன்னியை பரசுராமன் கட்டிக்கிட்டுன்னு விட்டுட்டு வால்டியூப் சொருவிட்டு இருக்க வேண்டியதுதான் என்று வெடவெடப்புடன் நினைத்தவனாய் வெணிலா கிரிம் எடுத்து அதன் வெண்மை நிறத்தில் மனதை பறிகொடுத்தான். பொன்னியின் தாவணி அடிக்கடி கிரிம் போன்ற வெள்ளை நிறம்தான்.
கிரிம் தடவுவதற்கு முன் மூக்கை நோண்டியபடியே ஏலாந்தூர் கருப்பசாமியை மூன்றாம் முறையாக பயத்தோடு வேண்டிக் கொண்டான். இடுப்பில் எட்டணா சைசிற்கு மச்சமும் அதில் கொஞ்சம் முடியும் இருக்கிறது பையனுக்கு. அது அதிர்ஷ்ட மச்சமென்று அம்மா சொல்லியிருக்கிறாள். இன்றைக்குத்தான் பாக்கணும் அதோட அதிர்ஷ்டத்த, ‘தப்பு ஏதும் நடந்திடக் கூடாது சாமி. தப்பு நடந்தா தவடையில ரெண்டு விட்டு சம்பளம் ஒரு பைசா குடுக்காம வெளிய தொறத்திப் புடுவாங்க. தப்பு நடக்காம பாத்துக்கோ சாமி.் திரும்ப வேண்டிக்கொண்டான்.
ஓவனில் இருந்து பொன்னிறமான அழகிய வட்டக் கேக்கை எடுத்து டேபிளில் வைத்தான். பயத்தோடு, நம்பிக்கையோடு கிரிம் தடவ தயாரானான். அவன் கும்பிட்ட அந்த ஏலாந்தூர் கருப்பசாமி, ஏலாந்தூர் கிராமத்தில் உயரமாய் உட்கார்ந்தபடி, தன் முன் பேய் பிடித்து ஆடிய பெண்ணை கண் இமைக்காமல் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இவன் கிரிம் தடவித் தந்தால், அதன் மேலே தவளை பார்த்து வள்ளென்று குரைத்த பனிரெண்டு வருட ஜாம்பவான் வந்து கோனில் கலர் கிரிம் போட்டு பிறந்தநாள், கல்யாணநாள், இறந்தநாள் என்று எழுதி, தேதி போட்டு, ரோஜாப் பூ வைத்து, பூவுக்கு இலை போட்டு, மொக்கு போட்டு, கேக்கை முழுதாய் அட்டை டப்பாவில் போட்டு டெலிவரி தருவார்கள்.
ஏதாவது தப்பு செய்துவிட்டால் இவன் மேல தேதி போட்டு, பூ போட்டு, இலை போட்டு, இலையில் கொஞ்சம் படையல் போட்டு, சுருட்டி பொட்டலம் கட்டி ஏலாந்தூர் பஞ்சாயத்து பங்சர் கடையில் பம்ப் அடிக்க அனுப்பி விடுவார்கள்.
கேக்கின் மேல் கிரிம் கொட்டி பட்டைத் தகரத்தில் ஒரே சீராக நீவியபடி வந்தான். திரும்பத் திரும்ப எதற்கு ஜாக்கிரதையைப் பற்றி சொல்லவேண்டும்? அவன் கவனமாகத்தான் செய்தான்; பொன்னியின் கவனம் அவனுக்கு நன்றாக இருக்கிறது.
கிரிமை இழுத்தபடியே நடுவிற்கு கொஞ்சம் தாண்டி முக்கால் வீச்சிற்கு மிகச்சரியாக வரும்போது, ஏதோ பனிமலை ஐஸ்கட்டியின் மேல் சறுக்கும் விளையாட்டு வீரன் போல ஒரு ஈ பாய்ந்து வந்து, கிரிமுக்கும் கேக்குக்கும் நடுவே விழுந்து, அந்த கிரிமில் மூழ்கிப் போயிற்று.
மச்சமுள்ள அந்த ஏலாந்தூர் மன்மதன் ரெண்டு கண்களையும் பயத்தோடு நாலாபுறமும் அலையவிட்டு இந்த ஈயின் தற்கொலையை எவனும் பார்த்தானாவென பார்த்தான். பொக்கை ஒரு இளம் பெண்ணிடம், இருபத்தி ஏழு ரூபாய் சொச்சம் பில் எப்படி வந்தது என்று புதிர்ப் போட்டு விடை சொல்லிக் கொண்டிருந்தது. வள்ளென்று விழும் தவளை ஜாம்பவான் சூடான பப்சுகளை, ஏதோ மகளுக்கு நெக்லேஸ் வாங்கித்தந்த தகப்பன் போல் முகத்தை வைத்துக்கொண்டு அடுக்கினான். இவனைப் போலவே எச்சில் டம்ளர் எடுத்துப் பழகிவரும் இன்னொரு பையன், கிரிம் தடவும் புரமோசன் எல்லாம் வேண்டாம் என்பது போல வெட்டி வைத்திருந்த பிளம் பழங்களை நைசாக பதம் பார்த்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் எவரும் பார்க்கவில்லை.
சந்தோக்ஷந்தான். இப்பொழுது ஒரு குழப்பம் வந்துவிட்டது. அந்த தற்கொலை செய்துகொண்ட ஈயை வெளியே எடுப்பதா, வேண்டாமா? ஈ இந்நேரம் இனிப்பான சொர்க்கத்தில் மாண்டு மண்டையைப் போட்டிருக்கும். அப்படி சொல்வது இலக்கணப் பிழையாச்சே… அப்படியானால் மண்டையைப் போட்டும் மாண்டிருக்கலாம். மொத்தில் உசுரோடு இருக்காது.
கேக் தின்னும் அதிவீர தீர சூரர்கள் கேக்கையும், கேக்கில் போட்ட முட்டையையும், அந்த முட்டை வைத்த கோழியையும் ஒருசேர ஒரே வாயில் தின்று ஏப்பம் விடுபவர்கள்தான். அவர்களுக்கு இந்த ஈ எந்த விதத்திலும் வாய் கொள்ளாமல் போகாது. மேலும் எந்த விதத்திலும் உண்பவர்களை பாவ ஆத்மாக்கள் ஆக்காது என்பதுடன் எவ்வித செரிமானக் கோளாறுகளையும், கூடுதல் கொழுப்பு, தொந்தி, ஹார்ட் அட்டாக், ரத்த அழுத்தம், மற்றும் ரகசிய எயிட்ஸ் நோய்களையும் உண்டாக்காது.
ஆனாலும் அவனுக்கு மனசொப்பவில்லை. காட்டெறுமைகளை தின்னக் கூசாத ஜனம் கரப்பான் பூச்சிகளை அருவருப்பின் நிமித்தம் தின்னாதிருப்பதால் இந்த ஈயை விரும்பமாட்டார்கள். அதனால் இதை வெளியே எடுத்துவிடுவதே நல்லதென்று நினைத்தான். அப்படி செய்வதால் ஏலாந்தூர் கருப்பசாமி நமக்கு நல்லது செய்வார் என்று நம்பினான்.
சரி, எப்படி ஈயை எடுப்பது? கிரிமில் எங்கோ ஒளிந்து கண்டுபிடி விளையாட்டு காட்டுகிறதே இந்த ஈ. கிணற்றில் மூழ்கியவனை தீண்டும் விளையாட்டிற்காக முங்கி முங்கித் தேடும் ஒரு சாதாரண விசயத்திலேயே தோற்றுப்போய் உள்ளாடையை தலையில் போட்டுக்கொண்டு ஊர்வரை வந்து அவமானப்பட்ட அவன், கிரிமில் மறைந்திருக்கும் ஈயை திறம்படத் தேடி எடுக்கமுடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தான். குழப்பமான குழப்பமாகி ஏலாந்தூர் கருப்பசாமியிடமே என்ன செய்யலாமென்று மனசுக்குள் கேட்டான்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். இன்னும் மூன்று நாளைக்கு இந்தக் கடை கேக்கையோ அல்லது இந்த உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் எந்தக்கடை கேக்கையோ தின்பதில்லை என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.
்என்னை மன்னிச்சிக்கோ சாமி் என்று கருப்பசாமிக்கு ஒரு தாவாங்குத்து குத்திக்கொண்டு கிரிமை இன்னும் பளபளப்பாக தடவி வைத்தான். அந்த தவளைப் பார்த்து வள்ளெனும் ஜாம்பவான் அதன் மேல் ‘ஐஸ்வர்யா.சி் மற்றும் ‘ஹேப்பி பர்த்டே் போட்டு, அழகான பெட்டியில் வைத்து நிமிரவும், கேக்கை ஆர்டர் கொடுத்த இளைஞர்கள் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அதைத்தான் நேரம் என்பார்கள். அந்த நேரம் நண்பகல் ஒன்று பதினேழு. ஒரு ஈ இனிமையாக சொர்க்கம் சேர்ந்து சுவாசம் விட்ட நேரத்திற்குக் கொஞ்சம் பிந்தி.
செத்து நாறிய ஒரு பூத உடல் மனிதனுடையதாக இருந்து, அதை பெட்டியில் எடுத்துப் போனால், அதை நாம் சவப்பெட்டி என்றுதான் சாதாரணமாகவோ இல்லை அசாதரணமாகவோ சொல்வோம். ஆனால் பாருங்கள் அந்த ரெண்டு இளைஞர்களும் ஒரு பிணத்தை பெட்டிக்குள் போட்டு எடுத்துச் செல்கிறார்கள். அதை சவப்பெட்டி என்று சொல்லாமல் ‘பர்த்டே கேக்’ என்று சொல்கிறார்கள். கேக் பெட்டியின் பின்னால் சில ஈக்கள் ரொய்ங் என்று பறந்து சென்றது. ஈக்களுக்கும் உறவிருக்குமோ?
நிம்மதியாக பெருமூச்சுவிட்ட அந்த ஏலாந்தூர் பையனை பொக்கை அநியாயத்திற்கு பாராட்டித் தள்ளுகிறது. ்டேய்… நீ நம்ம பையங்கறத காமிச்சிட்டடா… பயளே. அஞ்சி வருக்ஷ சர்வீஸ் ஆளுதாண்டா நீ இன்னைக்கு செஞ்ச வேலைய செய்ய முடியும். நீ கிரிம் பூசற அழக நான் ஒரு கண் வெச்சி பாத்துனுதாண்டா இருந்தேன்.் ஏலாந்தூர் பையனுக்கு தூக்கி வாரியது. ஈ விழுந்ததை பாத்துடுச்சா பொக்கை? பரசுராமன் X பொன்னி கல்யாணத்துக்கு எவ்வளவு மொய் எழுதலாம் என்று யோசித்தான்.
‘மொதலாளிகிட்ட நாஞ் சொல்லறேன். பையன் வேலக்கார பையன், கையில தொழிலு இருக்கு, நல்லா வந்துடுவான்னு. அஞ்சி நிமிசத்தில கிரிம் தடவற, எங்கடா கத்திட்ட?் அப்பாடி… ஈய பாக்கலையா? ஒருகண் வைத்து பார்த்துக்கொண்டே இருந்ததாக பொக்கை சொன்னதே… ஒரு கண்ணில் பார்த்தால் கேக்கில் விழுந்த ஈ தெரியாதா?
‘நாளைக்கே நீ உள்ளார போயி கேக்கு, பப்ஸ் செய்யற பக்குவத்தையும் கத்துக்கோ… அடுத்த மாசம் சம்பளம் சேத்தி தரச்சொல்றேன்.்
ஆஹா… பொன்னி நமக்குதான் ஏலாந்தூர் கருப்பசாமியோவ்… என்ன கைவுடலியே நீ. மனசுக்குள் தாவாங்குத்து குத்திக் கொண்டான்.
கேக்கை எடுத்துக்கொண்டு இரண்டு இளைஞர்களும் பர்த்டே வீட்டிற்குப் போனார்கள். ஐஸ்வர்யா.சியின் அம்மா பதட்டப்பட்டாள், ‘பேர் சரியா போட்டிருக்கான்னு பாத்திங்களா? போன வருசம் ஐஸவர்யா.ஈ ன்னு போட்டிருந்தான்.்
‘பாத்துட்டேன். சி-தான் போட்டிருக்கான். இந்த முறை *ஈ* போடல.் என்றான் ஒருத்தன். கூட வந்தவன், ‘ஆமாமா… கேக்குல ஈ போடல’ என்றான்.
பிறந்த நாள் கொண்டாடி, அந்த கேக்கை வெட்டி, வாழ்த்த வந்திருந்த பெருமாட்டிகளுக்கும், சீமான்களுக்கும் அதை விநியோகித்தார்கள். அலங்கார விளக்கில் டாலடித்த அந்த சிறு பர்த்டே அறையின் வண்ண இருட்டில் மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு நடுவயதுப் பெண்ணுக்கு வந்த துண்டு கேக்கின் கிரிம் இடுக்கில் அந்த ஈ ஜீவசமாதி அடைந்திருந்தது.
அவள் ஒரு சைவபட்சிணி. (கேக்குல முட்டை போட்டிருப்பார்களா? முட்டையத்தான் சைவம்னு சொல்லிட்டாங்களே…) கேக்கை ஒரு கடி கடித்து, இது என்ன கேக் என்று ஆராயப் போனதுதான் அந்த பெண் செய்த தவறு. கறுப்பாய் என்ன தெரிகிறது என்று கண்ணாடி வழியே பார்த்து, ஒன்றும் புரிபடாமல் கையில் எடுத்து ஆராய்ந்து, பிறகும் பிடிபடாமல் கணவனிடம் காண்பித்து… ‘ஆமாப்பா, ஆமா… இது ஈயேதான்…’
போச்சி… ஒரு பார்த்டே வீடே நாறும் அளவுக்கு வாந்தி எடுத்தாள் அந்த சைவப்பட்சிணிப் பெண். பிறகு வாமிட் அலர்ஜி உள்ள அனைவரும் உவ்வே, உவ்வே என்று ஆளுக்கு ஒரு முடுக்கில் நின்று வாந்தி எடுத்தார்கள். விழுந்தது ஈயா இல்லை பல்லியா, எலியா என்பதுகூட தெரியாமல் சிலர் மயக்கமடிக்கப் பார்த்தார்கள்.
கேக்கு வாங்கிவந்த இரண்டு இளைஞர்களும் ஈயை பத்திரமாக ஒரு பாலிதீன் பையில் போட்டு எடுத்துக்கொண்டு, மீதி கேக், தின்ற பப்ஸ், மிக்சர் மற்றும் சிதிலமான பிஸ்கெட் வகைகளையும் எடுத்துக்கொண்டு போய் கடை கல்லாவில் எறிந்தார்கள். என்ன துரதிர்ஷ்டமோ, அன்று கடையில் முதலாளி இருந்தார்

கேக்குல ஈ இருக்கு சார்…் வந்த இளைஞர்கள் சொன்னதைக் கேட்ட ஏலாந்தூர் பையன் தயாராகிவிட்டான். ஊருக்கு விடிகாலையில எத்தனை மணிக்கு பஸ்?
இளைஞர்கள் சூடாக இருக்கும்போது பொக்கை கொஞ்சம் சும்மா இருந்திருக்கலாம். ‘சார்.. ஈ இந்தக் கடையில மட்டும் இல்ல… உங்க வூட்டு ஈ கூட கேக்குல விழுந்திருக்கலாம். இல்லையா?் புத்திசாலித்தனமாகத்தான் பேசியது. ஆனால் சாதா பிரச்சினையை, ஸ்பெசல் சாதா பிரச்சினையாக்கிவிட்டது பொக்கை.
அதன் பிறகு முதலாளி சொன்ன எந்த சமாதானத்தையும் ஏற்காத இளைஞர்கள் வருவோர் போவோருக்கெல்லாம் ‘இந்த கடை கேக்குல ஈ இருக்குங்கோ…் என்று தண்டுரா அடிக்காத குறையாக இலவச விளம்பரம் செய்துகொண்டே போனார்கள். அப்படி ஒரு அசம்பாவிதத்திற்கு பொக்கை காரணமாகிவிட்டது. பத்து பேருக்குத் தெரிஞ்ச ஈ விசயம், நூறு பேருக்குத் தெரிய ஒரு நாள்கூட ஆகாது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வியாபாரம் போச்சா.
அந்த இளைஞர்களை அனுப்பிய முதலாளி நோட்டை எடுத்து கணக்குப் பார்த்து ‘நாளைதோ இனி யாருக்கும் தெரியாது. அது பொக்கையோடு போயிற்று. இரவு வயில இருந்து கடைக்கு வராத. உன்னால கடைக்கு கெட்ட பேரு.் என்று சொல்லி பொக்கையை விடிகாலை பஸ்சுக்கு அனுப்பினார்.
கனவோடு வந்த ஏலாந்தூர்க்காரனால்தான் ஈ விழுந்ததென்பதோ, இத்தனை சண்டையும் அதனால்தான் என்பந்த நிம்மதி உறக்கத்தில் பொன்னி கிரிம்நிற உடை காற்றில் ஆட இப்படியும் அப்படியும் நடக்கிறாள், சிரிக்கிறாள். அந்த சிரிப்பு பாரலாரி ஓட்டும் பரசுராமனுக்காகவா இல்லை தனக்காகவா என்று கனவிலும் புரிபடாமல் குழப்பத்தில் புரண்டான் ஏலாந்தூர் பையன். 
நன்றி - சிறுகதைகள்.காம்


0 comments: