Saturday, June 07, 2014

ஸ்டார்ட் ஆக்ஷன், கட்-சுப்ரஜா-சிறுகதை@குமுதம்

கட்”என்று அடித்தொண்டையில் இருந்து கத்தினார் இயக்குனர்.
கேமரா பக்கம் திரும்பினார்.
”யார்றா நொய் நொய்ன்னு பேசிட்டே இருக்கறது …ம்மால”
ஸ்கர்ட்டின் நாயகனை சரித்துப் பிடித்திருந்த மும்பை நாயகிக்கு தமிழ் தெரியது.தெரிந்திருந்தால் ‘இழுத்து இழுத்து அடிக்கவா..இதழிரண்டில் முத்தவா’என்ற பாடலுக்கு மூன்று நாளாய் ஆடிக்கொண்டிருந்திருக்க மாட்டாள்.
‘சார்’என்றாள் தயக்கத்துடன் சம்யுக்தா.புதிய உதவி இயக்குனர்.ஃபைனான்சியரின் மூலம் யுனிட்டில் சேர்ந்த தமிழ் பெண்.
இயக்குனர் பக்கத்தில் சென்றாள். கேமரா முன்னால் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தவர்,”இப்ப என்னப்பா பிரச்சனை?”என்றார் கரகரக்குரலில்.
”ஜட்டி தெரியுது சார்…மானிட்டர்ல்ல”என்றார் அவர் காதில் மட்டும் விழுகிறார் போல்.
“அட அதுக்குதான் சவுண்ட் உட்டியா,ஏம்மா அவளே தெரிஞ்சுதான காண்பிச்சிட்டு இருக்கா..வந்தோமா தொழிலை கத்துகிட்டோமான்னு இல்லாமா நடுவுல நடுவுல சீன் போடாத”
சம்யுக்தாவிற்கு எல்லோரும் தன்னையேப் பார்ப்பது போல் இருந்தது.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றுதான் தனியார் கல்லூரியில் அவள் ஃபிலிம் டெக்னாலஜி படித்தாள்.
முடித்ததும் பிராக்டிகல் அறிவு வேண்டும் என்று இந்த இயக்குனரிடம் சேர்ந்தாள்.அதற்கு சிபாரிசு பிடிக்கவே தந்தையின் நண்பரான ஃஃபைனான்சியரை இரண்டு மாதம் துரத்தி கடிதம் வாங்க வேண்டியிருந்தது.
முதல் முறை அவரைப் பார்க்க போகிறேன் என்று அவள் ஃப்ரண்ட்ஸிடம் சொன்ன போது “வாவ் அவரா தேசிய விருதுப் பெற்ற இயக்குனர்..அவரோட படத்துல வொர்க் பண்ண போறியா..க்ரேட்”என்று ஏற்றி விட்டார்கள்.
இரண்டு நேஷனல் அவார்ட்,நாலு ஸ்டேட் அவார்ட்,ஆந்திரா நந்தி விருது.அவரைப் பார்க்க அலுவுலம் போன போது வெளியில் பெருத்த கூட்டம் இருந்தது.அப்படி ஒரு பரபரப்பை அவள் அப்பொழுதுதான் பார்க்கிறாள்.மேனேஜரிடம் ஃபைனான்சியர் கடிதத்தினை கொடுத்ததும் அவர் உடனே உள்ளே கொண்டு போனார்.போன வேகத்தில் வெளியில் வந்தவர்’உள்ள வாம்மா”என்று அவளை உள்ளே அழைத்துப் போனார்.ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் சேர்மன் அறை போன்று இருந்தது அது.
”என்ன ஷார்ட் ஃபிலிம் பண்ண?”
”சைல்ட் லேபர் பத்தி”
”வெரி பிட்டி என்ன பண்ண ,நாம என்ன பண்ணாலும் சமுதாயத்துல எதையும் நிறுத்த முடியாது..அடுத்த வாரம் ஷூட்டிங்க ஆரம்பம்..இந்த ஷெட்டியூலுக்கு எல்லாம் ரெடி..ஆமாம் டிஸ்கஷன் எல்லாம் வருவியா..எப்ப ஆரம்பிக்கும் எத்தனை மணிக்கு முடியும்ன்னு சொல்ல முடியாது…டைமிங்க் எல்லாம் பார்க்க முடியாது..வருவியா..ப்ராப்ளம் இல்லையே ?”
”இல்ல சார்..கார் வச்சிருக்கேன்..நானே ஒட்டிட்டு வருவேன்..”‘
”ஓ ரிச் கேர்ள்..ரிச் ட்ரீம்ஸ்”என்றார்.
மறு நாளே வரச் சொல்லி விட்டார்.
வந்தவளிடம் அசோசியேட்டை அறிமுகப் படுத்தினார்.
”இது சேகர் ..ஆரம்பத்துல இருந்தே இருக்கான்..ரைட் ஹாண்ட..லெஃப்ட் ஹாண்ட் எல்லாம் இவன் தான்..சேகர் இது சம்யுக்தா,நம்ம ஃபைனான்சியர் ரெகமெண்டேஷன்…ஷார்ட் ஃபிலிம் எல்லாம் பண்ணியிருக்கா…”
ஆயிற்று.
முதல் நாள் படப்பிடிப்பில் அந்த அக்ஷன் ஹீரோவை அறிமுகப் படுத்தினார்.
”சஞ்சு இது சம்யுக்தா…படிச்ச பொண்ணு..நம்மகிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்திருக்கு”
அந்த ஹீரோவின் வாய்ஸ் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.அசாத்திய ரொமான்ஸ் நாயகன்..
“ஹலோ நைஸ் டூ மீட் யூ”என்று பெண்ணின் குரல்.
அட கடவுளே,பாதி சுளுக்கு.
அன்றிரவே தோழிகளிடம் சொல்லி சிரித்து சிரித்து மகிழ்ந்தாள்.
”இங்க பாரு சம்யுக்தா..ஒரு கலைச் சேவையும் புடுங்க நான் வரலை..பணம்…பணம் தான் குறிக்கோள்..உங்க ஃபைனான்சியர் என்னை நம்பி பல கோடி இறக்கியிருக்கார்.சேவை பண்றேன்னா …சூதியா கர் மேம் சலோன்னு குத்தி அனுப்பிடுவாரு..இது தான் நிஜம்..”என்றார்.
முதல் ஷெட்டியூல் தாண்டியது.ஒரு பக்கம் எடிட்டிங்க் போய் கொண்டிருந்தது.
அன்று -
எடிட்டிங் முடிந்த வேளையில் சொன்னார்.
”நாளையில இருந்து டிஸ்கஷன்.முதலைப் பண்ணைத் தாண்டி ஒரு ரிசார்ட்ல்ல ,மேனேஜர் கிட்ட அட்ரஸ் வாங்கிக்க ,சரியா பத்து மணிக்கு வந்துடணும்.ஒரு வாரம் அங்கே தங்க வேண்டியிருக்கும்”
”வந்துடறேன் சார்..”
அம்மா பூமிக்கும் வானத்துக்கும் குதித்தாள்.
”உங்க அப்பனுக்கு புத்தியில்லை உன்னை நான் தடுக்க தடுக்க இந்த படிப்பு வச்சார்,இப்ப டிஸ்கஷன் போகணும் அங்கயே தங்கணும்ங்கற”
அம்மாவை சமாளிக்க இரவு பன்னிரெண்டு ஆகி விட்டது.
அவள் ஃபார்ம் ஹவுஸ் போய் சேர்ந்த போது ஹவுஸ் உதவியாளன் தவிர வேறு யாரும் இல்லை.பெரிய நீச்சல் குளம் பக்கத்தில் இருந்தது அந்த குட்டி வீடு.கேரளா பாணியில் ஓடுகள் பதிக்கப் பட்டு இருந்தது.
”நீங்க வருவீங்கன்னு டைரக்டர் சொன்னாரு”
உள்ளே ஏ.சி ஓடிக் கொண்டு இருந்தது.உள்ளே நடுவில் பெரிய சோபா.இரண்டு துணை சோபா இருக்கைகள்.பெரிய மானிட்டர் ஒன்று.கீழே தொத்திக் கொண்டு கண்ணாடிப் பலகையில் டி.வி.டி ப்ளேயர் ஒன்று.
கதவு தட்டப் பட்டது.
திறந்தாள்.
அந்த உதவியாளன்.
”டீ தரவா மேடம்..இல்ல வேற ஏதாவது சாப்பிடறீங்களா?”
”புரியலை..வேற ஏதாவதுன்னா?”
”இல்ல டைரக்டர் நீங்க என்ன கேட்டாலும் வாங்கித் தரச் சொன்னார்…பீர் கேன் வாங்கி பிரிட்ஜுல வச்சிருக்கேன்…”
சிரித்தாள்.
”வேண்டாம் லைம் டீ கொடு ”
”சரி மேடம் “கதவை மூடிக் கொண்டு நடந்தான்.
டி.வி.டி.ப்ளேயர் பக்கத்தில் இருந்த டி.வி.டி.களை பார்த்தாள்.
ஸ்டேன்லி குப்ரிக்,ஃபாஸ் பைண்டர் மற்றும் சில சரித்திரம் தொட்ட இயக்குனர்கள்.இதையெல்லாம் பார்ப்பாரா?
நேரம் கரைய கையில் கொண்டு வந்திருந்த அயர்ன் ரேண்டை படிக்க ஆரம்பித்தாள்.
பத்து நிமிடம் கடந்திருக்கும்.
லைம் டீ வந்தது.
கொடுத்த பையன் ”மதியம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணனும் உங்களுக்கு ?”என்று கேட்டான்.
”என்ன கிடைக்கும்?”
”நீங்க சைவமா ,அசைவமா ?”
”என்ன கிடைக்கும்,சைவம்தான்”
”பக்கத்துல இருபத்தியிரண்டு கிலோ மீட்டர் போனா மகாபலிபுரம்.பச்சைக் காய்கறிகள்ல் இருந்து மீன் வரைக்கும் எல்லாம் கிடைக்கும்..அவருக்கு மீன் வாங்கப் போறேன்..உங்களுக்கு உருளை பொரியல் செய்யவா?”
”ஏதோ ஒண்ணு..சைவமா இருக்கணும்..”
”நான் கிளம்பறேன் மேடம்..வெளியில பூட்டிட்டு போயிடுவேன்..டைரக்டர் கையில ஒரு சாவி இருக்கு “கேட்காமலேயே தகவல்களை சொல்லிப் போனான்.
கைப் பேசியை எடுத்து நேரம் பார்த்தாள்.
மணி பதினொன்று.
இன்னும் யாரும் வரவில்லையே?
இயக்குனருக்கு போன் போட்டாள்.
”என்னம்மா வந்துட்டியா?”
”யாரும் வரலை சார்..நான் மட்டும் தான் வந்திருக்கேன்..”
”உன்னை மட்டும் தான்ம்மா வரச் சொல்லியிருக்கேன்..நீயும் நானும் மட்டும் தான்..நம்ம கிட்ட வொர்க் பண்ற பசங்க வெளியில பல இயக்குனர்களோட தொடர்பு உள்ளவங்க ,நல்ல சீன் பிடிச்சா சொல்லிடுவாங்க ..நான் வந்துட்டு இருக்கேன்..”லைனைக் கத்தரித்து விட்டார்.
ரெண்டு பேர்தான.
கைப் பேசி அழைத்தது.
”அந்த டி.வி.டி எல்லாம் பார்த்துட்டு இரும்மா ..நம்ம கதைதான் உனக்கு தெரியுமா…அதை ஒட்டி சீன் ஏதாவது இருந்தா நோட் பண்ணி வை..நாம் யூஸ் பண்ணிக்கலாம்”
”சரி சார்”என்று கைப் பேசியினை வைத்து விட்டாலே ஒழிய-
எல்லாமே பார்த்த படங்கள்,அதிலிருந்து சீனைப் பிடிப்பதா?
முதல் முறையாக வாய் விட்டுச் சிரித்துக் கொண்டாள்.
பண்ணிரண்டு மணி இருக்கும் வந்து சேர்ந்தார்.
பெர்முடாஸ் ஒன்றைப் போட்டுக் கொண்டு இறங்கினார்.
அவளைப் பார்த்து ‘ஹாய்’என்றார்.
இயக்குனருக்கு சொந்த ஊர் கவுந்தம்பாடி என்று எங்கோ படித்தது நினைவில் வந்தது.
”சம்..அப்படியே நீச்சல் குளம் போறேன்..வந்துடு..”
போனாள்.
அவள் போவதற்கும் அவர் குளத்தில் இருந்தார்.
”என்னம்மா நீ வரலையா..இந்த டைம்ல்ல சூப்பரா இருக்கும்..பையன் கிட்ட கேளு ஸ்விம்மிங் சூட் எடுத்து தருவான்”
”எனக்கு ஸ்விம்மிங் தெரியாது..”
”எனக்கு மட்டும் தெரியுமா..இது ஆழமே நாலரை அடிதான்.
அவருடைய உயரத்துக்கு ஏற்றார் போல் கட்டிக் கொண்டார் போல்.
அந்த பையன் ஒரு தட்டில் சிக்கனும் இன்னொரு தட்டில் பாட்டில் கிளாஸ் ஐஸ் க்யூப் பாக்ஸ் என்று கொண்டு வந்தான்.
ஒரு பெக் ஊற்றி மெல்ல சிப்பி விட்டு ஒரமாய் வைத்து விட்டு மீண்டும் தண்ணீரில் பாய்ந்தார்.
அவளுக்கு ஒரு புறம் பயமாய் இருந்தாலும் இன்னொரு புறம் சிரிப்பாய் இருந்தது.
இரண்டு மணி வரை எருமை மாடு மாதிரி ஊறிக் கொண்டு கிடந்தார்.
இரண்டரை மணிக்கு சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து இருந்த போது கேட்டார்.
”நம்ம படத்துல என்னை ஐ லைட் தெரியுமா?”
”என்ன சார் ?”
” ராஜ்கபூர் படம் மாதிரி ஒரு சீன் பிடிக்கணும் சென்ஸார் கை வைக்க முடியாத மாதிரி ஒரு சீன் இருந்தா போதும் படம் பிச்சிக்கும்..போன படத்துல வச்சேன் இல்ல..அர்ச்சனா பால் பாத் டப்ல்ல மயங்கி கிடக்கும் போது..கதைப் படி அவளுக்கு பேய் பிடிக்கிற காட்சி…நேக்கடா தண்ணிக்குள்ள…கதைப் படி முக்கிய காட்சி..சென்ஸார் மிரண்டுட்டாங்க இல்ல”
அவர் பேச பேச அவளுக்கு அருவருப்பாய் இருந்தது.
சென்ற மாதம் ஒரு நாடு அவருக்கு சிறந்த மனித நேயர் விருது தந்ததும் நினைவில் வந்தது.
”யோசி ஒரு சீன் போதும்”
சோபாவில் சரிந்து உட்கார்ந்து இருந்தவர் அப்படியே உறங்கிப் போனார்.
கொஞ்ச நேரத்தில் குறட்டைச் சப்தம் வந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் நாவலில் கவனம் செலுத்தினாள்.

ஐந்து மணிக்கு எழுந்தவர் கதவைத் திறந்து கத்தினார்.
”டேய் எருமை”
அவன் ஓடி வந்தான்.
”ரெண்டு மசாலா டீ கொண்டு வா ‘
உள்ளே வந்தவர் “”அந்தப் பய நல்லா டீ போடுவான்,ஏதாவது சீன் பிடிச்சியா நான் சொன்னா மாதிரி ?”என்று கேட்டார்.
”இல்ல சார்”
”நான் ஒரு சீன் நினைச்சேன் நல்லா இருக்கா பாரு”
”சொல்லுங்க சார்..”
”பிடிக்காத கணவன் கூட வாழ்றா..காதலிச்சப் போது இருந்தவன் இல்ல..இப்ப வேற மாதிரி தெரியறான்..அவன் அவ விருப்பம் இல்லாம்லேயே அவ கிட்ட பலவந்தமா உறவு வச்சுக்கறான்..அவ தன் மேல இருக்கற அவன் முதுகுல கத்தியை சொருகறா..சென்ஸார் ஏதும் டச் பண்ண முடியாது…”
”சார்”
“இவ்வளவு வக்ரமா வேணுமா”
”அதைதான இப்ப விரும்பறாங்க”
“”அந்த காட்சி ஸ்கார்ச்சின்னு ஒரு இங்கிலிஷ் படத்தோட கிளைமாக்ஸ் காட்சி சார்?”
‘திடுக்’கிட்டு அவளைப் பார்த்தார்.
“ஓ அந்த படத்தை நீயும் பார்த்துட்டியா?”
பேசாமல் இருந்தாள்.
”எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்?’
அதன் பின் மீண்டும் பாட்டிலில் மூழ்கி விட்டார்.
இரவு-
தூங்கப் போகும் போது மணி பதினொன்று.
நன்றாக தூங்கி விட்டாள்.
திடீர் என்று விழிப்பு வந்தது.
காலை யாரோ சுரண்டுவது போல் இருந்தது.

பயத்துடன் கண்ணைத் திறந்தாள்.
- காலடியில் மனித நேயம்.
படம் ரிலீஸ் ஆனது.
எல்லா செண்டர்களிலும் பிய்த்துக் கொண்டு போனது.
பத்திரிக்கைப் பேட்டி ஒன்றில் ‘க்ளைமாக்ஸ் காட்சி சொன்னது என் உதவி இயக்குனர் சம்யுக்தா”என்று பொய் சொன்னார்.
மூன்றாவது மாதம் தன் தயாரிப்பிலேயே அவளை இயக்குனர் ஆக்கினாள்.
ஃபர்ஸ்ட் ஷெட்டியூல்.
அவள் பாடல் காட்சி மாண்டேஜ் எடுத்துக் கொண்டிருந்தாள்.
மும்பை நாயகி .
புதுமுகம்.
‘ஷாட்’ போய் கொண்டிருந்தது.
பின்னால் ஒரு கணைப்பு ,முணுமுணுப்பு!
‘கட்”என்று கத்தினாள்.
திரும்பினாள்.,
‘எந்த நாயி “என்றாள்.
அவன் முன்னே வந்தான்.
புது உதவியாளன்.
வங்கி ஜி.எம்.சிபாரிசில் வந்தவன்.
”என்ன ராகுல்?’
அவள் காதுகளில் மட்டும் கேட்கும் படி சொன்னான்.
”ஜட்டி தெரியுது மேடம் ஹீரோயின் போட்டு இருக்கறது”
”அவளே காட்டறா ..உனக்கு என்ன …ரசிடா போடா போய் கண்டினியூட்டி எழுது” என்றாள்.
- தீபாவளி ஸ்பெஷல் 2013


நன்றி - சிறுகதைகள்.காம்

0 comments: