Sunday, June 08, 2014

நீதி நியாயம்- சிறுகதை - சுரா, வைக்கம் முகம்மது பஷீர் @நக்கீரன்

நீதிமன்றத்தில் நடைபெற்ற எல்லா நடவடிக்கைகளையும் வெறுப்புடன் பார்த்தவாறு நின்று கொண்டும், அது எதுவும் தன்னுடன் சம்பந்தப்பட்டது இல்லை என்ற எண்ணத்துடன் அலட்சியமாக நடந்து கொண்டும் இருந்த குற்றவாளி அப்துர் ரஸாக்கிடமிருந்து யாரும் எந்த வாதத்தையும் எதிர்பார்க்கவில்லை.
அவன் குற்றத்தை ஒத்துக்கொள்வான் என்றும், அன்றே தண்டனை கிடைக்கும் என்றும் போலீஸ்காரர்களும் ஊரின் முக்கிய மனிதர்களான முஸ்லிம் பெரியவர்களும் நினைத்தார்கள். அது உண்மையும் கூட. மதிப்பிற்குரிய நீதிபதி வஸீர் ஹுஸயின் தீர்ப்பு எழுதி தயாராக்கியும் வைத்திருந்தார்.
கேஸ் அழைக்கப்பட்டது. போலீஸ் புடை சூழ, பலசாலியான குற்றவாளி கூண்டுக்குள் ஏறினான். அவன் அப்போதும் கோபமே இல்லாமல் இருந்தான்.
அவன் மீது இருந்த குற்றப் பத்திரிகையைப் படித்துக் கேட்கச் செய்த நீதிபதி கேட்டார்:
“”நீங்கள் இந்தக் குற்றத்தைச் செய்தீர்களா?”
அப்துர் ரஸாக் கம்பீரமான குரலில் சொன்னான்:
“”ஆமாம்.”
நீதிபதி மீண்டும் கேட்டார்:
“”உங்களை தண்டிக்காமல் இருக்க ஏதாவது காரணம் இருக்கா?”
அப்துர் ரஸாக் நிமிர்ந்து நின்றான். அவனுடைய கண்கள் விரிந்தன. வெறித்தன. நீதிமன்றத்தில் எல்லாரும் கேட்கும் விதத்தில் உரத்து மிடுக்கான குரலில் அவன் சொன்னான்:
“”மதிப்பிற்குரிய நீதிமன்றம் தயவு செய்து பொறுமையுடன் கேட்க வேண்டும். நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
இஸ்லாமில் ஒரு சட்டம் இருப்பதை மதிப்பிற்குரிய நீதிபதியும் இந்த நீதிமன்றத்தில் கூடியிருக்கும் முஸ்லிம் பெரியவர்களும் தெரிந்திருப்பார்கள். ஆதரவற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை தர வேண்டும், ஏழைகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும், ஏழை நோயாளிகளுக்கு வைத்திய உதவி செய்ய வேண்டும், திருமண வயதை அடைந்த ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
இதெல்லாம் பணக்காரர்களின் பொறுப்பு. அதற்காகத்தான் கருணையின் வடிவமானவரும், நீதிமானுமான அல்லாஹ் அவர்களுக்குப் பணத்தைத் தந்திருக்கிறார். இவற்றையெல்லாம் இங்குள்ள பணக்காரர்களான முஸ்லிம்கள் செய்யவில்லை. ஒரு வேளை, மறந்து போயிருக்கலாம். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. யார் குற்றம் செய்தார்களோ, அவர்களை அல்லாஹ் தண்டிப்பார். நான் செய்த குற்றத்தைத்தான் நான் கூறப்போகிறேன்.
என் வாப்பா இறக்கும்போது, நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் சகோதரிக்கு ஒன்பது வயது. அவளைப் பள்ளிக்கூடத்தில் அப்போதுதான் சேர்த்திருந்தோம். என் தந்தை இறந்து மூன்று மாதங்கள் ஆவதற்கு முன்பு, இங்கிருந்த ஒரு முஸ்லிம் முக்கிய மனிதர் எங்களை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.
நானும் என் தாயும் சகோதரியும் எங்கே போவோம்? பகல் முழுவதும் இரவு முழுவதும் நாங்கள் ஒரு காலியாகக் கிடந்த கடையின் திண்ணையில் தங்கினோம். மறுநாள் எங்களுக்கு இடம் கிடைத்தது. என் நண்பனான ஒரு நாயர் இளைஞன் தன் தந்தையிடம் சொல்லி சம்மதிக்க வைத்து, அந்தக் கடையின் ஒரு அறையை எங்களுக்கு தங்குவதற்குத் தந்தான்.
பழைய கதை… நான் என் சகோதரியைப் படிக்க வைத்தேன். தாய்க்கு சோறு அளித்தேன். என் தோள் இவ்வளவு பெரிதாக இருப்பதற்குக் காரணம்- நான் அரிசி மூட்டையைச் சுமந்தேன். ஒரே நேரத்தில் இரண்டு அரிசி முட்டைகளை நான் சுமப்பேன். சுமை இல்லாதபோது, பீடி சுற்றுவேன். பாக்கு வியாபாரம் செய்வேன். கருவாடு வியாபாரம் செய்வேன்.
இப்படி ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. என் சகோதரி படிப்பை முடித்துவிட்டாள். பரவாயில்லை என்று தோன்றிய குஞ்ஞப்துல்லாவிற்கு திருமணம் செய்து கொடுத்தேன். நான் எண்ணூறு ரூபாயை வரதட்சணையாகத் தந்தேன். இந்த எண்ணூறு ரூபாயை நான் எப்படி உண்டாக்கினேன் என்பது நீதிமன்றத்திற்குப் புரிகிறது அல்லவா?
மூன்று வருடங்கள் கடந்தன. சகோதரிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. இதற்கிடையில் என் சகோதரியை குஞ்ஞப்துல்லா மிதிக்கவும் அடிக்கவும் செய்திருந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. கணவன்- மனைவியை தண்டிக்கிறான். நான் எதுவும் கூறவில்லை.
எட்டு மாதங்களுக்கு முன்னால் குஞ்ஞப்துல்லா மனைவியையும் குழந்தைகளையும் என்னிடம் அழைத்துக்கொண்டு வந்தான். சகோதரி மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்டாள். நோயாளியாக இருந்தாள். நான் மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தேன். நாட்கள் போய்க்கொண்டிருக்க, குஞ்ஞப்துல்லா என் சகோதரியை உதறி விட்டான் என்று கேள்விப்பட்டேன். மொழி சொல்லி! என்ன மொழி? என்ன காரணத்திற்காக மொழி சொன்னான்? நான் போய் கேட்டேன்.
குஞ்ஞப்துல்லா சொன்னான்: “”மனம்தான் காரணம். நான் அவளுக்கு மொழி சொல்லி இருக்கேன். உனக்கு என்ன? ஒன்றுமில்லை. இஸ்லாமில் சட்டம் இருக்கிறதே! பெண்ணின் இளமையை நாசம் பண்ணிவிட்டு, அவளையும் குழந்தைகளையும் வெளியேற்றுவது. அதற்குப் பிறகு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம்.”
நான் திரும்பி விட்டேன். அந்த நிலையில் குஞ்ஞப்துல்லா திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்று கேள்விப்பட்டேன்.
திருமணத்திற்கு நானும் போயிருந்தேன். நிக்காஹ் நடப்பதற்கு முன்னால் நான் குஞ்ஞப்துல்லாவைப் பிடித்து வாசலுக்குக் கொண்டு வந்தேன். பிறகு கால்கள் இரண்டையும் பிடித்துச் சுழற்றி சுழற்றி, அவனை நான் தென்னை மரத்தில் அடித்துக் கொன்றேன்.”
நான் அல்லாஹுவிற்கு முன்னால் குற்றவாளி இல்லை. நான் இவ்வளவுதான் கூற முடியும்.”
நீதிமன்றத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு நீதிபதி சொன்னார்:

”தெய்வத்தின் நீதி நியாயமும் நாட்டின் சட்டமும் எப்போதும் ஒன்றாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. நான் தெய்வத்தின் சட்டத்தை ஏற்றுக்கொண்டால், இந்தக் குற்றவாளி குற்றமற்றவர் என்பதைத் தெரிந்து வெறுமனே விட வேண்டும். ஆனால், இந்த நாட்டின் நீதி நியாயம் கூறுகிறது- இந்தக் குற்றவாளி செய்திருக்கும் குற்றம் கடுமையான தண்டனை அளிக்கப்படக்கூடிய ஒன்று என்று

இந்த நீதிமன்றம் உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் சட்டத்தை நடத்தக் கடமைப்பட்டிருக்கிறது.” இவ்வளவையும் கூறிய நீதிபதி வஸீர் ஹுஸயின், அப்துர் ரஸாக்கைத் தூக்கில் போட்டுக் கொல்லும்படி தீர்ப்பு கூறினார்.
தூக்கில் தொங்கவிட்டுக் கொல்லவும் செய்தார்கள்.
கருணையே வடிவமான அல்லாஹ், அப்துர் ரஸாக்கின் ஆத்மாவிற்கு நிரந்தர அமைதியை அளித்து அருள் செய்யட்டும்.
மங்களம்.
- நவம்பர் 2008 


நன்றி - சிறுகதைகள்.காம்

0 comments: