Thursday, June 05, 2014

JUST ANOTHER LOVE STORY - சினிமா விமர்சனம்(BENGALI)

நம் வாயை அடைத்துப் பேச்சற்றுப் போக வைக்கும் நடிப்பு எல்லாப் படங்களிலும் வெளிப்பட்டுவிடுவதில்லை. ஒருசில படங்களில் கதையின் வீரியத்தைவிடவும், நடிப்பின் வீரியம் மிகுந்திருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று ‘ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி’ (வங்கத்தில் Arekti Premer Golpo). வாயை அடைத்த நடிப்பு வங்க இயக்குநர் ரிதுபர்ண கோஷுடையது. அது திகில் படமல்ல. நிஜக் கதாபாத்திரங்களின் ஊடாகப் பயணித்து ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டிய படம். இந்த ஒரு படத்தில் அவர் வெளிப் படுத்திய நடிப்பே, அவர் யார் என்ற சித்திரத்தைப் பல வண்ணங் களைக் குழைத்து எழுதி விட்டது.


ஆவணப் படம்அந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களை அவர் ஏற்றிருந்தார். முதலாவது அபிரூப் சென் என்ற ஆவணப் பட இயக்குநர் கதாபாத்திரம். ஜாத்ரா என்ற நாட்டுப்புற நாடக வடிவத்தில் பெண்கள் நடிக்க வராத காலத்தில், பெண் வேடங்களை ஏற்பதற்குப் புகழ்பெற்றிருந்தவர் சபல் பாதுரி. அந்த முதுபெரும் நடிகரைப் பற்றி ஆவணப் படம் எடுக்கக் கொல் கத்தா போகிறார் அபிரூப் சென்.அபிரூப், தன்பாலின உறவு கொள்ளும் திருநங்கை. அவரது நடை உடையும் செயல்பாடுகளும் பெண் தன்மையுடன் இருப்பது படப்பிடிப்புக் குழுவிலும், போகும் இடங்களிலும் பிரச்சினையாகவும், கேள்விகளாகவும், சந்தேகமாக வும் உருவெடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இது எதையும் சட்டை செய்யாத துணிச்சலான ஆள் அபிரூப். அவரது ஆவணப் படத்தின் ஒளிப்பதிவாளரான பாசுவுடன் அவர் உறவுகொண்டிருக்கிறார். பாசு இரு பாலின உறவாளர் (பைசெக்‌ஷுவல்).


ஸ்திரீபார்ட்சபல் ராணி என்ற பெயரில் பெண்ணாகவே புகழ்பெற்றிருந்த நடிகர் சபல் பாதுரி, தனது சிறு வயதில் என்ன மாதிரிச் சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதும், அபிரூப் சென்னின் இன்றைய வாழ்க்கையும் படத்தில் மாறி மாறித் தோன்றுகின்றன. சபல் பாதுரியின் சிறு வயதுக் கதாபாத்திரத்தையும் ரிதுபர்ணவே ஏற்றிருப்பார்.ஆவணப் படம் வளரவளர சபல் பாதுரியின் மறு வடிவமாக, ஒரு கட்டத்தில் சபல் பாதுரியாகவே தன்னைப் பாவிக்க ஆரம்பித்துவிடுகிறார் அபிரூப். இருவரது கதையும் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து நகர்கின்றன. இரண்டும் வெவ்வேறு காலங் களில் நிகழ்ந்தாலும், இரண்டின் மையச் சரடு ஒன்றுதான். திருநங்கை என்பதால் சந்திக்கும் மனவேதனையும், அதையும்விடவும் கடுமையாகப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி யெறிந்துவிட்டு நகரும் ஆண்களின் மனப் பான்மையும்தான் அந்தச் சரடு.

ஜீரணிக்க முடியாத உண்மைநவீனக் காட்சிக் கதைகளின் இலக்கணத்துக்கு ஏற்ப, படமும் காலத்தின் முன்னும் பின்னும் அலைபாய்ந்து கதையை நகர்த்துகிறது. சற்றுப் பிசகினா லும் காட்சிகளின் தொடர்ச்சி புரிபடாமல் போகும். ஆனால், எந்தக் காட்சியிலும் அயர்ச்சி கொள்ளவைக்காமல், படம் தடதடவென்று ஓடுகிறது.பழமைவாதங்களில் ஆழ்ந்து கிடக்கும் நமது சமூகத்தை ‘ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி’ போன்ற படங்கள், தலை முடியைப் பிடித்துத் தண்ணீருக்கு வெளியே இழுத்து வருகின்றன. அவை முன் வைக்கும் உண்மைகள் முழுமையாக ஜீரணிக்க முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நசுக்கப்பட்ட அந்த உண்மைகள் இப்போதுதான் வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன.நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம் என்று பறைசாற்றிக்கொண்டாலும், மாற்றுப் பாலினத்தவர் மீது மோசமான புறக்கணிப்பைத் தொடுக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பின்னணியில் மாற்றுப் பாலினத்தவர் உளவியல் ரீதியிலும், வாழ்க்கையிலும் சந்திக்கும் கடும் நெருக்கடிகளை உணர்வுபூர்வமாக நம்மிடம் கடத்துகிறது இந்தப் படம்.


கோஷின் துணிச்சல்


ரிதுபர்ண கோஷும் கௌஷிக் கங்குலியும் இணைந்து ‘ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி’ படத்துக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் ஒருபால் உறவை வெளிப்படையாக ஆதரித்த ஒருசிலரில் ரிதுபர்ண கோஷும் ஒருவர். இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவரின் அடையாளச் சின்னமாக அவர் இருந்தார். கடைசி கால வாழ்க்கையில் அவரே மாற்றுப் பாலினத்தவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.இப்படியாக ‘ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி’ தந்த தாக்கம் எளிதாகக் கரைந்து விடாதது. ஆனால், கடந்த ஆண்டு மே மாத இறுதியில் ரிதுபர்ணவிடம் இருந்து இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதைவிடப் பெரிய அதிர்ச்சியை அவர் எப்போதும் கொடுக்க முடியாது. அவர் காலத்தோடு கலந்துவிட்டார்! அவரது பழைய படங்களைப் பார்க்கும்போது வேண்டுமானால், அந்த அதிர்ச்சி மீண்டும் நம்மைத் தாக்கக்கூடும்.(கடந்த ஆண்டு மே 30-ம் தேதி ரிதுபர்ண காலமானார்)

ரிதுபர்ண கோஷ்a


thanx - the hindu

0 comments: