Saturday, June 28, 2014

எம் ஜி ஆர் சி எம் ஆக முக்கியக்காரணம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா? - எம் ஜி ஆர் பேட்டி

ஜே ஜே சில குறிப்புகள்" நாவலில் குறைந்த வயதில் காலமான பாரதி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, மு.தளையசிங்கம் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடும் போது, சுந்தர ராமசாமி இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார். "மேதாவிலாசத்துக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ!". அண்மையில் நான் இயக்குனர் சாரோனது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படத்தைப் பார்த்த போது, இந்த வரிகள் மீண்டும் மீண்டும் என் மனசுக்குள் தோன்றிக் கொண்டே இருந்தன. 1950 -களின் பிற்பகுதியில் தன் கருத்தாழம் மிக்க புரட்சிகரமான பாடல்களோடு, தமிழ் திரைப்படஉலகில் ஒரு புயல் போல நுழைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரைச் சார்ந்த செங்கபடுத்தான் காடு கிராமத்தில், 1930 ஏப்ரல் 13ம் தேதி அருணாச்சலம் பிள்ளை, விசாலாட்சியம்மாள் அகியோருக்கு மகனாகப் பிறந்து, 1959ம் ஆண்டு தனது இருபத்தி ஒன்பதாம் வயதில் மறைந்து விடுகிறார். 1955 முதல் 1959 வரையிலான நான்கே ஆண்டுகள் தான், அவர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிய காலம். ஆனால், அந்த சொற்ப வருஷங்களுக்குள் அவர் தமிழ் திரைப்படப் பாடல்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் யாராலும் மறுக்க முடியாதது. கே. என் ராமச்சந்திரன் எனும் ஓவியரது அசையும் தூரிகையிலிருந்து படம் துவங்குகிறது. மக்கள் மனசில் தன் பாடல்களைச் சித்திரம் போல் தீட்டிச் சென்ற அவரது நண்பர் கல்யாணசுந்தரத்தின் ஞாபகங்களை, படம் முழுக்க நெகிழ்வுடன் சொல்லிச் செல்கிறார் ராமச்சந்திரன். 


ஒரு படைப்பாளியை உருவாக்கிய வாழ்க்கை நெருக்கடி 


பட்டுக்கோட்டையை ஒரு பாடலாசிரியராக எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த பாடலாசிரியன் உருவான பின்ணணி, அந்த பாடல்களின் பின்னுள்ள வாழ்க்கைப் போன்றவற்றை விவரிக்கிறது இந்த ஆவணப்படம். 


ஓலைக் குடிசையில் பிறந்து வயல் வெளிகளில் திரிந்து, பதினைந்து வயதில் வேலைபார்க்கத் துவங்கிய அவருக்கு, ஆடுமாடுகள் மேய்த்தல், ஏர் உழுதல், தேங்காய்ப் பறித்தல், கீற்று முடைதல், என பத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழில்கள் தெரிந்திருக்கின்றன. மல்யத்தம், கம்பு சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளின் பரிச்சியமும் இருந்திருக்கிறது. தந்தையும் அண்ணனும் கவிஞர்கள் ஆதலால் பாடும் திறனை இளமையிலேயே பெற்றிருந்திருந்த அவர், பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் பேச வருவதற்கு முன் அந்த மேடையில் பாடல்கள் பாடும் சிறுவனாகவும் இருந்திருக்கிறார். 


நிலச்சுவான்தார்கள், முதலாளிகள், மிட்டா மிராசுகள், மடாதிபதிகள் ஆகியோர் விவசாயிகள் உழைப்பை சுரண்டியதையும் சாதிக் கொடுமைகள் நிகழ்த்தி அவர்களை கடுமையாக தண்டிப்பதையும் இளம் வயசிலேயே கண்டு மனம் நொந்துள்ளார். தண்டனை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாயில் சாணிப்பால் ஊற்றுதல், அவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்தல், பெண்கள் முழங்காலுக்குக் கீழ் சேலைகட்டினால் அவர்களை அடித்துத் துன்புறுத்தல் - இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்த -அதனால் அச்சுருத்தப்பட்ட குடும்பங்களில் ஒன்று அவரது குடும்பம். மணலி கந்தசாமி, சீனிவாசராவ், களப்பால் குப்பு, இரணியன், சிவராமன் போன்று அந்த காலத்தில் மக்கள் போராட்டங்களை நடத்தியவர்களோடு தொடர்பு கொண்டிருந்திருக்கிறார் கல்யாணசுந்தரம். 


மக்கள் கவிஞனை அடையாளம் கண்டது யார்? 


இன்னொரு பக்கம் பட்டுக்கோட்டைப் பகுதியில் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய திராவிட இயக்கத் தலைவர்கள் அணைக்காடு டேவிஸ், பட்டுக்கோட்டை அழகிரி, ஆகியோரது தொடர்பும் பாரதி தாசன் தொடர்பும் இவருக்குக் கிடைத்துள்ளது. இது தவிர நாடக நடிகனாக நடித்த அனுபவமும் அவருக்கிருந்தது. 


1950ல் ஏ.கே. சுந்தரம் என்ற பெயரில் மதுரையில் சக்தி நாடக சபாவில் நடிகனாகச் சேர்ந்து, அந்த குழுவினரோடு ஊர் ஊராகச் சென்று கவியின் கனவு, முதல் ரெளடி, டிஎஸ்பி, என் தங்கை போன்ற பல நாடகங்களில் சிறு சிறு வேடமேற்று நடித்திருக்கிறார். நாடகப்பாத்திரங்கள் பாடும் பாடல்களுக்கு வாயசைக்கத் துவங்கிய அவர், தானே சுயமாக தான் ஏற்ற பாத்திரங்களுக்கு பாடல்களைப் பாடத் துவங்குகிறார். 


நாடகக்குழு புதுவையில் இருந்த போது, காலை நேரங்களில் பாரதி தாசனோடு இருக்கிறார். அப்போது தான் ஏ.கே. சுந்தரம் என்ற நடிகனை கவிஞர் கல்யாணசுந்தரமாக கண்டு கொள்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். 1952ல் சக்தி நாடக சபா கலைக்கப் பட்டு அந்த ஆண்டே சென்னைக்கு வருகிறார். 


சென்னைக்கு வந்த பின், சிவாஜி நாடகமன்றம், மனோன்மணியம் நாடகமன்றம், மக்கள் நாடகமன்றம் போன்ற நாடகக்குழுக்களில் விதி, சிற்பியின் காதலி, பம்பாய்மெயில், நாடோடி, மந்திரிகுமாரி, போன்ற நாடகங்களில் நடித்துக் கொண்டே பாடலாசிரியராகவும் இருக்கிறார். 


இந்த பின்னணிகளோடு தாளம் போட்டு லய ஞானத்தோடு பாடும் திறனும் கவிதை அம்சமும் எளிமை நடையும் இலக்கிய மோகமும் அனுபவத்தை மொழியில் மாற்றும் லாவகமும் அவரிடம் இருந்தது தான், அவர் திரைப்படத்துறையில் பணியாற்றிய நாலு ஆண்டுகளும் அவர் கொடி கட்டிப் பறக்க அடித்தளமாய் அமைந்துள்ளன. 


1.8.54ல் திண்டுக்கல்லில் நடந்த தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில், அரங்கேறிய "கண்ணின் மணிகள்" நாடகத்துக்காக அவர் அனைத்து பாடல்களையும் எழுதி நடிக்கவும் செய்கிறார். "கதிராடும் கழனியிலே சதிராடும் பெண்மணி" என்று துவங்கும் பாடலின் கடைசி வரிகள் இப்படி முடிகின்றன. "தேனாறு பாயுது. செங்கதிர் சாயுது. ஆனாலும் மக்கள் வயிறு காயிது". இந்த பாடலைக் கேட்ட தோழர் ஜீவானந்தம் கவிஞர் கல்யாணசுந்தரம் பாடல்களில் மக்கள் கவிஞனுக்குரிய தரம் இருக்கிறது என பாராட்டுகிறார். இந்த பாராட்டுதலில் உந்துதல் பெற்று, கண்ணின் மணிகள் நாடகத்துக்குப் பிறகு நடிப்பதை முற்றிலும் நிறுத்திக் கொண்ட கல்யாணசுந்தரம் பாடல் எழுதுவதிலேயே முழு கவனம் செலுத்துகிறார். 


திரைப் பிரவேசமும் தனித்த சாதனைகளும் 


ஏற்கனவே அவரது நாடகப்பாடல்களால் ஈர்க்கப்பட்டிருந்த ஏ.எல். நாராயணன், தான் கதை வசனம் எழுதிய "படித்த பெண்" படத்தில் பாடல் எழுத இவருக்கு வாய்ப்பை வாங்கித் தருகிறார். 1954ல் அ. கல்யாணசுந்தரம் எனும் பெயரில் அவர் எழுதிய முதல் பாடல் அமைந்த "படித்த பெண்" திரைப்படம் 1956ல் தான் வெளிவந்திருக்கிறது. ஆனால், 1955ல் மார்டன் தியேட்டர்ஸின் மகேஸ்வரி திரைப்படமே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலோடு திரைக்கு வந்த முதல் திரைப்படம். 


1954ல் முதல் பாடலை எழுதத் துவங்கியிருந்தாலும் 1956ல் வெளிவந்த பாசவலை படப்பாடலான "குட்டியாடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம் குள்ள நரி மாட்டிகிட்டா குறவனுக்கு சொந்தம், சட்டப்படி பார்க்கப் போனா எட்டடி தான் சொந்தம்" என்ற பாடல் - கே.பி காமாட்சி, கே.டி. சந்தானம், மருதகாசி, கா.மு.ஷெரீப், கு.மா. பாலசுப்ரமணியம், கண்ணதாசன், தஞ்சை ராமய்யா தாஸ் போன்றவர்கள் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 19 இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் எழுதிய கல்யாணசுந்தரத்தின் திரைப்பட பாடல்களே (1965) தமிழில் முதன் முதலாக புத்தக வடிவில் வந்துள்ளது. 


வாழ்வோடு ஒட்டிய சொற்களை பாடல்களில் புனைந்து நாட்டுப்புற இலக்கியம் போல தன் பாடல்களை ஆக்கிய கல்யாணசுந்தரம் உழைக்கும் மக்களின் குரலை அவர்கள் மொழியிலேயே பதிவு செய்து, திரைப்படப் பாடல்களில் ஒரு புது பாணியை உருவாக்கினார். 1957ல் வந்த புதையல் படத்தில் வரும் "சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்" பாடலைத்தவிர 


வேறு எந்த பாட்டையும் மெட்டுக்கு எழுதாத கல்யாணசுந்தரம் சினிமா பாடல்களின் மூலமும் புரட்சிகரமான கருத்துகளை மக்கள் முன் வைக்க முடியும் என சாதித்துக் காட்டியவர். 


"ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக்குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே
தூண்டில் காரன் வரும் நேரமாச்சு – ரொம்ப
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே" போன்று எளிய நடையில் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருந்த கல்யாணசுந்தரத்தின் முதல் கவிதை 7.11.1954 ஜனசக்தி இதழில் வெளி வந்தது. இது தவிர தாமரை, தென்றல் திரை, பேசும் படம், அமிர்தம், மல்லிகை போன்ற இதழ்களிலும் அவர் கவிதைகள் எழுதியுள்ளார். 


"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்" என்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். சொல்லும் அளவுக்கு அவரது பெரும்பாலான சமூக பாடல்கள் அமைந்திருந்தன. 


"ஊருக்கெல்லாம் ஒரே சாமி, ஒரே நீதி, ஒரே ஜாதி, கேளடி கண்ணாத்தா", "சின்னப்பையலே சின்னப்பயலே சேதி கேளடா", "தூங்காதே தம்பி தூங்காதே", "திருடாதே பாப்பா திருடாதே" "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்" "கையில வாங்கினேன் பையில போடல காசுப் போன இடம் தெரியல" போன்ற அவரது பாடல்களின் வரிகள் அவரை திரைப்படங்களில் பாமரன் குரலை ஒலிக்க விட்ட பாடலாசிரியனாகவே பெரும்பாலோருக்கு அடையாளம் காட்டியது. ஆனால் அவ்வகையான பாடல்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல கல்யாணசுந்தரம் என்பதை " சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்", "செல்லக் கிளியே அல்லி குளமே சொல்ல தெரியாத பிள்ளை சித்திரமே தாலேலோ" போன்ற தாலாட்டு பாடல்களும், "தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா", "அம்பிகையே முத்து மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா" போன்ற பக்தி பாடல்களும்" பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது. எல்லாம் இருக்கும் போது பிரிந்த குணம் இறக்கும் போது சேருது", "கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி மானே வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி"போன்ற தத்துவ பாடல்களும் "என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே, நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே", "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கும் நானிருக்கும்" போன்ற காதல் பாடல்களும் அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுக்க முடியாது என்பதை சொல்கின்றன.
57 படங்களில் 270க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கல்யாணசுந்தரம் தன் கடைசி பாடலை பண்டரிபாய் தயாரித்த மஹாலக்‌ஷ்மி படத்துக்கு எழுதியுள்ளார். அந்த பாடலின் பல்லவியில் அவர் எழுதிய வரிகள் இவை
"தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டன்
போனா எவனும் வரமாட்டான் – இதை
புரிஞ்சுகிட்டவன் அழமாட்டான்" 


1959ல் தலைவலிக்காகவும் சைனஸ் பிரச்சனைக்காகவும் சென்னை அரசினர் பொது மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பி, ரத்தப்போக்கு நிற்காமல், மறுபடி அங்கேயே சிகிச்சைக்கு சென்று 8.10.1959ல் காலமானார் கல்யாணசுந்தரம். பாரதி தாசன் தலைமையில் 11.9.57ல் கெளரவாம்பாளை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருஷமே அவரோடு வாழ்ந்திருக்கிறார் கல்யாணசுந்தரம். அவர் இறக்கும் போது, அவர் மனைவி கையில் ஐந்து மாத கைக்குழந்தை இருந்திருக்கிறது. 


ஏராளமான செய்திகளோடும் சுவாரஸ்யமான சம்பவங்களின் சித்தரிப்புகளோடும் ஒரு சிறு ஆய்வேடு போல படம் விரிந்தாலும் எண்ணிக்கையில் அதிகமான பாடல்களை துண்டு துண்டாகச் சேர்த்து நீளத்தை இரண்டரை மணிநேரமாக ஆக்கியிருப்பதை எடிட்டர் லெனினும் இயக்குனரும் சேர்ந்து குறைத்திருக்கலாம். ஆவணப்படத்தின் தோற்றத்துக்குப் பின்னால் ஒரு தெளிவான கட்டமைப்பு வேண்டியிருக்கிறது என்பதை இந்தப் படமும் உணர்த்துகிறது போன்ற ஒரு சில விமர்சனங்களை மீறி, இது ஒரு தவிர்க்கமுடியாத ஆவணப்படம் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.
தவிர்க்க முடியாத ஆவணம்
கல்யாணசுந்தரம் பிறந்த கிராமம், பட்டுக்கோட்டை, சென்னையில் அவர் வாழ்ந்த ராயப்பேட்டை போன்ற பகுதிகள், மற்றும் சேலம் மதுரை என பல இடங்களுக்கு சென்று படமாக்கியிருக்கிறார் இயக்குனர். கல்யாணசுந்தரத்தை நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவர்களின் நேர்காணல்கள் வழியாகவும் ராமச்சந்திரனின் ஓவியங்கள் வழியாகவும் விகேடி பாலன், அறிவுமதி, பர்வீன் சுல்தானா மற்றும் தனது குரலின் வழியாகவும் கல்யாணசுந்தரத்தின் தெவிட்டாத பாடல்கள் வழியாகவும் படத்தை சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார் இயக்குனர் சாரோன். 


கல்யாணசுந்தரத்தோடு வாழ்ந்த இரண்டாண்டு வாழ்வை மட்டுமே இன்னமும் தன் ஞாபகங்களில் சுமந்து கொண்டு நம்மிடையே வாழ்ந்து வரும் கெளரவம்மாளின் நினைவு பகிர்தல்கள், சில இடங்களில் கண்ணீர் தளும்ப வைக்கிறது. மாயாண்டி பாரதி, எஸ்.எஸ். ராஜேந்திரன், கவிஞர்.ஜீவபாரதி, எம்.எஸ்.விஸ்வநாதன், புகைப்படக்காரர் மணி ஆகியோரது ஆத்மார்த்தமான பேட்டிகள் ஆவணப்படத்தின் அங்கம் போல அமைந்திருக்கின்றன. 


உள்ளடக்கத்தோடு இதயப்பூர்வமான ஒட்டுதலின்றி இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது சாத்தியமில்லாத ஒன்று. அடைப்படை தகவல்களுக்கும் ஆவணங்களுக்கும் அல்லாடி சேகரித்து ஆய்வு செய்து காட்சிப்படுத்துதல் எவ்வளவு சிரமம் என்பதை அனுபவப் பூர்வமாய் நான் அறிவேன். தகவல்களுக்காக காட்சிகளுக்காக, பாடல்களுக்காக, அதை கரிசனத்தோடு தமிழ் சமூகத்தின் முன் வைப்பதற்காக இயக்குனர் சாரோன் உழைத்த உழைப்பை படம் சொல்கிறது. 

நன்றி - த இந்து

0 comments: