Monday, June 16, 2014

உங்களது பேச்சுகளில் தமிழர்கள் குறித்த அவநம்பிக்கை அதிகமாக வெளிப்படுகிறதே? -தங்கர் பச்சான் நேர்காணல்

எளிய மனிதர்கள் வாழ்வைத் திரைமொழிக்கு இடம்பெயர்ப்பதில் தனித்தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான். கவர்ச்சிகரமான மேடைப்பேச்சுக்குரிய எந்த உத்தியையும் கையாளாமலேயே, தமிழர்கள் இழந்துவரும் மொழி, வாழ்முறை பற்றிய கருத்துகளை அதிர்வூட்டும் விதமாக எடுத்து வைப்பதில் தெளிந்த சிந்தனைக்காரர்.இவரின் சமீபத்திய இலக்கு இளைஞர்கள். தேடித்தேடிப் போய் பேசுகிறார். குறிப்பிட வேண்டிய விஷயம் தன்னுடைய பேச்சில் சாதியத்துக்கு எதிரான போருக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார். மனிதரிடம் பேசவா விஷயம் இல்லை? பேசினேன்.


நடந்து முடிந்த தேர்தலைச் சிறப்பாக நடத்தியற்காகத் தேர்தல் ஆணையத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பாராட்டுகிறார்களே?ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருடன் கையிலேயே கொடுக்கப்படும் சாவி போன்றதாகிவிட்டது மக்களாட்சிமுறை!! நோட்டா என்பதெல்லாம் எத்தனை முட்டாள்தனமானது? நோட்டா மூலம் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும்? ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே சமூகத்துக்கு எதிரானவர்கள் என அத்தொகுதியின் வாக்காளர்கள் நினைத்து அவர்களை விரட்டியடிக்க நினைத்தாலும் முடிவதில்லை. இந்த மோசமானவர்களில் யாராவது ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்கிறது இந்தச் சட்டம். இறுதியில் வேறுவழியில்லாமல் தொகுதிக்கு ஒரு மோசமான உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து மக்களாட்சி எனும் பெயரில் உருவாக்கப்படுவதுதான் நமது சட்டமன்றங்களும் நாடாளுமன்றங்களும்.பதிவான வாக்குகளில் பாதிக்குமேல் நோட்டாவுக்கு விழுந்தால் மறுதேர்தல் என ஆணையம் சொல்கிறது. இதெல்லாம் நடக்கக் கூடியதா? எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்து தொடர்ந்து தலைமுறை தலைமுறைகளாக அரசியல் வியாபாரம் செய்துவரும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் தந்திரங்களை வெல்ல முடியாமல் தத்தளிக்கிறது நம் தேர்தல் ஆணையம்.எத்தனை வாக்குகள் பதிவானதோ, அதில் யார் அதிக வாக்குகளைப் பெற்றார்களோ அவர்கள்தான் வெற்றிபெற்றவர்கள். யாருக்குமே வாக்களிக்காமல் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால் அதைப் பற்றியெல்லாம் தேர்தல் ஆணையத்துக்குக் கவலையே இல்லை. போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களது குடும்பமும் மட்டுமே வாக்களித்தால் போதும்!! அல்லது அதுகூடத் தேவையில்லை!!! ஒரு தொகுதியில் மூன்றே வாக்குகள் மட்டும் பதிவானால் போதும்! அதில் யார் இரண்டு வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றிபெற்றவர்கள் என அறிவித்துவிடுவார்கள். இவர்களைக் கொண்டு ஒரு நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் உருவாக்கிவிட முடியும். நம் மக்களாட்சியை உருவாக்க வாக்காளர்களே தேவையேயில்லை. வேட்பாளர்கள் மட்டுமே போதும். இதை மாற்றாமல் தேர்தல் மட்டும் நடத்தினால் இங்கே எந்த மாற்றமும் நிகழாது. சொத்துகளைச் சேர்ப்பதற்கும், சேர்த்து வைத்த சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவும் மட்டுமே தேர்தலில் போட்டியிடுபவர்களை மக்கள் புறக்கணிக்க நினைத்தால் இந்தத் தேர்தல்முறை பயன்படாது. மக்களுக்கு எதிரானவர்களே ஆட்சிமன்றத்தைக் கைப்பற்றும் முறைக்குத் தேர்தல் ஆணையம் கடுமையான விதிமுறைகளை வகுத்து, பணபலமற்ற, சாதி அடையாளத்தைத் துறந்த, மக்களுக்காகவே பணிபுரிய நினைக்கும் எளிய மனிதர்கள் ஆட்சிமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் அமரும் வாய்ப்பை அடுத்த தேர்தலுக்கு முன் உருவாக்க வேண்டும்.
இதெல்லாம் நடந்து அதன்பின் உருவாகும் ஆட்சிதான் உண்மையான மக்களாட்சி. அதுவரை தேர்தல் என்பது ஓர் அரசியல் நாடகம்தான்.


அண்மையில் மயிலாடுதுறையில் நிகழ்ந்த அம்பேத்கரின் 123-ம் பிறந்தநாள் கூட்டமொன்றில் பங்கேற்றுப் பேசிய நீங்கள், தனித்தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சிமன்றங்களுக்குச் சென்ற தலித் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்களே?உண்மைதான்! புரட்சியாளர் அம்பேத்கரைத் தங்கள் கட்சிகளின் முதன்மை அடையாளமாக முன்னிருத்தும் இந்திய தலித் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அவர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்.. அண்ணல் சொன்னதைத்தான் நீங்கள் செய்கிறீர்களா?
அவர்பட்ட அவமானம், வேதனை, காயங்களைத் தனது சமுதாயத்தின் எதிர்காலத் தலைமுறைகள் அனுபவிக் கூடாது என்பதற்காகத்தான் இறுதிவரை போராடினார். தன்னுடைய படிப்புக்காக, தன் வளர்ச்சியை விரும்பிய ஒருவரின் வற்புறுத்தலினால் வேறு சாதிக்காரனாகவும் பொய் சொல்லி நடித்திருக்கிறார். ஒருநாள் அதைக் கண்டுபிடித்து ஆதிக்க சாதிக்காரர்கள் அவரைத் தாக்கி, கல்லூரியிலிருந்து துரத்துகிறார்கள். அப்போது அவரது மனம் எப்படியெல்லாம் வேதனைப்பட்டிருக்கும். இவ்வாறெல்லாம்தான் கல்விபெற்றுதான் புரட்சியாளராக உருப்பெற்றார். நம்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கேட்டு மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி இறுதிவரை போராடினார். ஆனால் தனித்தொகுதியை மட்டும் கொடுத்தார்கள். கடைசிவரை இரட்டை வாக்குரிமையை பெற்றுத்தர முடியாத கவலையிலேயே அண்ணல் மாண்டு போனார். அவர் பெற்றுத்தந்த தனித்தொகுதிகளின் உரிமையால் இன்று தலித் மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது?அதேபோல அண்ணல் மற்றொன்றையும் சொல்லிவிட்டுப்போனார். எதிர்காலத்தில் என்மக்களை இந்த அரசியல் வியாபாரிகள் விலைக்கு வாங்கிவிடுவார்கள் என்றார். அதுதானே நடந்திருக்கிறது! இந்திய விடுதலை என்கிற நாடகத்துக்குப் பிறகு, கடந்த 66 ஆண்டுகளில் பல முறை நடந்த தேர்தல்களில் தனித்தொகுதிகள் மூலம் எத்தனை தலித்துகள் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் சென்றிருப்பார்கள்? அவர்களில் எத்தனைபேர் அம்பேத்கர் போராடிப் பெற்றுத் தந்த உரிமைக்கு உழைத்து உரிய பலனைப் பெற்றுத்தந்து தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்கள்? அவர்கள் தங்களை நிறுத்தும் கட்சிகளின் தலைமையிடம் போராடித் தம் மக்களின் தேவையைத் தீர்க்கத் தவறிவிட்டனர்.இதுபோக தலித் மக்களின் முன்னேற்றத்துகெனத் தனியாக அரசியல் கட்சி தொடங்கியவர்களின் செயல்பாடுகளையும் இன்று அம்பேத்கர் பார்த்தால் மகிழ்ச்சியடைவாரா? ஆதிக்கசாதிகள் தலித் மக்களை நடத்துவதுபோலத்தான் பெரிய அரசியல் கட்சிகளும், தங்களுடன் கூட்டுசேரும் தலித் கட்சிகளையும் நடத்துகின்றன எல்லோருக்கும் கொடுத்ததுபோக கடைசியாக மீதி இருப்பதைக் கொடுத்து, முடிந்தால் வாங்கிக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நடையைக் கட்டுங்கள் என்கின்றன. தம் மக்களின் வாக்குகளையெல்லாம் அரும்பாடுபட்டு வாங்கி, பெரிய கட்சிகளிடம் கொடுத்துவிட்டு ஏமாந்துபோகின்றன. இம்மக்களின் 18 விழுக்காடு வாக்குகள், தலித் கட்சிகள் திரண்டு தேர்தலைச் சந்திக்காததால் அம்மக்களுக்குத் தேர்தல் என்பது மீண்டும் மீண்டும் ஏமாற்றமாகவே முடிந்துபோகிறது.விடுதலைபெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் கூடத் தங்குவதற்கு வீடு கூட இல்லாமல், கைகால் கொண்டு உழைத்தால் மட்டுமே உணவு எனும் நிலையில், வாழ்க்கைக்கு எந்த உத்திரவாதமும் இன்றி, கழிப்பிட வசதிகூட இல்லாமல் அலையும், இம்மக்களுக்காக மட்டுமே இவர்களெல்லாம் போராடி உழைத்திருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. இனிவரும் தலைமுறைகளாவது முன்னேறவும், இளைஞர்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளவும் கல்வி ஒன்றுதான் வழி என்பதை அம்மக்களுக்கு இந்தத் தலைவர்கள் உணர்த்த வேண்டும்.விடுதலைக்குப் பிறகு சட்டத்தின் மூலம் தலித்துகளுக்குக் கிடைத்த கல்வி, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவில்லை என்கிறீர்களா?அது அண்ணல் பெற்றுத் தந்த சட்டத்தின் மூலம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அம்பேத்கர் பெற்றுத் தந்த தனித் தொகுதிகள் மூலம் அதிகாரம் பெற்றவர்கள் என்னசெய்தார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. இன்று, தலித் மக்களுக்குப் பெரிய எதிரி யாரென்று பார்த்தால் முன்னேறிய தலித்துக்கள்தான். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறிய தலித்துக்கள் அந்தக் கூட்டத்திலிருந்து தங்களை அறுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்களே! அண்ணலும் இப்படித் தன்னலத்துடன் வாழ்ந்திருந்தால் இன்றைக்கு இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?நாம் முன்னேறிய மாதிரி நமது சமுதாயத்தில் நாலுபேரையாவது முன்னேற்றுவோம் என நினைக்க வேண்டும். அம்பேத்கருக்கு இருந்த பொறுமையும் காரியமாற்றும் திறனும்தான் ஒவ்வொரு தலித்துக்கும் உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும். அண்ணலுக்குச் சிலை வைப்பதால் மட்டுமே இது கிடைத்துவிடாது. இத்தனை காலங்களுக்குப் பிறகு அண்ணலின் சிலை, ஒவ்வொரு ஊரின் மையப்பகுதியில் கம்பீரமாக வீற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக மக்கள் வசிப்பதற்கே தகுதியற்ற இடங்களில், என் மக்களைப் போலவே அண்ணலின் சிலை சேரிப்பகுதியிலேயே நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கும்போது நான் வெட்கப்படுகிறேன். காரணம் அண்ணல் தனது ஓடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக மட்டுமே போராடியவர் இல்லை. பெண்களுக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும், பெண்களுக்குச் சொத்துரிமை பெற்றுத் தர காரணமாக இருந்தவர். இன்னும் கூட அம்பேத்கரையும் காமராஜரையும் சாதித்தலைவர்களாகப் பார்க்கும் இந்தக் கேடுகெட்ட சமூகத்தை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.இந்த இடத்தில் திரைப்படக் கலைஞன் என்ற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் மக்களிடம் கொண்டுசேர்க்கத் தவறிவிட்டீர்களே?ஒரு பொறுப்புள்ள மனிதனாக, கலைஞனாக என் கடமையிலிருந்து நான் தவறவே இல்லை. செயல்பட்டேன் அதற்கான பலன்தான் கிடைக்கவில்லை.. இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், இத்திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டிலும் வெளியாகியிருக்க வேண்டும். அதற்காக அப்போது இருந்த தமிழக அரசும் பத்து லட்சரூபாய் மொழிமாற்றம் செய்ய நிதியுதவி அளித்தது. ஆனால் அப்போது யாருமே அதை வாங்கி வெளியிட முன்வரவில்லை. இறுதியாக நானே களத்தில் இறங்கி வெளியிட முயன்று தோற்றுப்போனேன். இதுபற்றிய கவலை என்றுமே எனக்குண்டு. இதுபற்றி வெளிப்படையாக என்னால் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.நடந்ததெல்லாம் முடிந்துபோகட்டும். நான் சொல்வது ஒன்றை மட்டும் செய்தாலே அம்பேத்கரை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கலாம்.தலித் அல்லாதவர்களும், பிற சமுதாய மாணவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தாலே அடுத்து வரும் தலைமுறைகளில் சாதீயம் பாதி ஒழிந்துவிடும். ஒவ்வொரு மாணவனும் முழுமையான அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் ஆணையை உருவாக்கிச் செயல்படுத்தட்டும். அது இளம் உள்ளங்களில் மிகப்பெரிய மனமாற்றத்தை உருவாக்கும். காட்சி ஊடகத்தின் வலிமையைப் புரிந்தவன் என்ற பார்வையில் இதைச் சொல்கிறேன். அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய பொருளாளர் அம்பேத்ராஜனைச் சந்தித்தபோது இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் அம்பேத்கர் திரைப்படத்தை மொழிபெயர்த்து, அதனைத் தொலைக்காட்சி மூலமாகவும் டிவிடி மூலமாகவும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவரும் அதனைக் காரியமாற்றித் தருவதாக உறுதியளித்திருக்கிறார். தேசிய திரைப்பட விருதுக்குழுவில் தமிழ்ப் படங்களுக்காக வாதாடிய அதேநேரம் ஃபான்றி (Fandry) என்ற மராட்டிய படத்துக்காகப் பெரிதும் வாதிட்டு வென்றீர்கள் என்று செய்திகள் வெளியானது. ஃபன்றி போன்ற ஒரு தலித் திரைப்படம் தமிழ்சினிமாவில் சாத்தியமா?இந்திய சினிமா ஃபன்றி படத்துக்காகப் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது. ஃபான்றி என்ற படத்தின் தலைப்பே சாதீயத்தின் இழிநிலையைச் சுட்டும் ஒன்றுதான். சாதி அடுக்கிலிருந்து மீளமுடியாத ஒரு மராட்டிய கிராமத்தில் கதை நடக்கிறது. அதை ஒரு பேச்சுக்காக வேண்டுமானால் நாம் கதை என்று சொல்லலாமே தவிர, அந்தப் படத்தில் உள்ளதைவிட மோசமானதாக தலித்துகளின் வாழ்நிலை இன்றும் இருக்கிறது. ஃபான்றி படத்தின் நாயகன் பதின்பருவத்தில் இருக்கும் ஒரு பள்ளி மாணவன். ஆதிக்க சாதியைச் சேர்ந்த தன்னுடன் பயிலும் பள்ளி மாணவியை மனசுக்குள் தனது காதலாக வரித்துக் கொள்கிறான். அவளைக் கிராமத்தின் எல்லாத் தருணங்களிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவளுக்கு அவன்மீது அப்படி எந்த உணர்வும் கிடையாது. ஒரு தலித்தாக தனது தாழ்நிலையை, ரத்தத்தில் ஊறிப்போன தனது வலியை எங்கே அவள் பார்த்துவிடுவாளோ என்று அவன் பதறியது ஒரு கட்டத்தில் அரங்கேறுகிறது. அவனை இழிந்த விலங்கினை விட கேவலமாகச் இந்தச் சமூகம் பார்க்கிறது. அப்போது கோபத்தில் அந்த இளைஞன் வீசியெறியும் கல், கேமரா நோக்கி வந்து பார்வையாளன் முகத்தைத் தாக்குகிறது. அத்துடன் படம் முடிகிறது. அவன் விட்டெறிந்ததை நான் கல்லாக எடுத்துக் கொள்ளவில்லை. செருப்பாகத்தான் எடுத்துக்கொண்டேன். இந்தப் படத்தைப் பார்க்கும் தலித் அல்லாத பார்வையாளன் கண்டிப்பாக என்னைப் போலத்தான் உணர்வான்.
இந்தப் படைப்பு தலித் கலைஞர்களின் அதிகமான பங்கேற்பால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. என் போன்றவர்களால் தலித்துகளின் புண்களைப் பார்த்து வேதனைப்பட முடியுமே தவிர அவர்களின் உயிர்போகும் வேதனை அவர்களால் மட்டுமே வெளியே சொல்ல முடியும். அதேபோல்தான் தலித்துகளின் வலியை தலித்துகளால்தான் படமாக்க முடியும். நம்மிடம் இந்தப் படத்தின் இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே போன்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். தங்களின் கலையறிவை, தம் மக்களின் விடுதலைக்குப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டதை ஃபன்றி படம் நமக்கு உணர்த்துகிறது.தொடர்ச்சியான உங்களது பேச்சுகளில் தமிழர்கள் குறித்த அவநம்பிக்கை அதிகமாக வெளிப்படுகிறதே?இவர்களை எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம் கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத்தெரியவில்லை. வெட்கமில்லாமல் வேறுமொழி கலந்து இன்னொரு தமிழனிடம், அரைவேக்காட்டு ஆங்கிலம் பேசும் சூப்பர் தமிழனாகிவிட்டாய். மொழிக்கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமையோடு மிதப்பில் அலைகிறாய். எதைவைத்து உன்னை நீ தமிழன் எனச் சொல்கிறாய்? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கிறாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்றவுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் வாழலாமே! தமிழா.. உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? திரைப் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது மட்டுமே நமது பெரும்சாதனையாக இருக்கிறது. உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றையாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய்போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.நீயே அனைத்தையும் இழந்து, தமிழன் என்ற தகுதியை இழந்து, அகதியாகப் பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகு நீ எப்படி ஈழத்தமிழனுக்காக போராட முடியும்?ஈழத்தமிழனுக்கு நாடு மட்டும்தான் இல்லை. அதனால் அவன் அகதியாகி விட்டான். உனக்கு நாடு ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அவனிடமிருக்கும் மொழிப்பற்று, போராட்ட குணம், அரசியல் தெளிவு எதுவுமே உன்னிடம் இல்லை. ஒருநாள் ஈழத்தமிழனுக்கு இழந்த மண் கிடைக்கும். ஆனால் நீ இழந்த எதுவுமே உனக்கு கிடைக்கப்போவதில்லை. இப்போது சொல் யார் அகதி? நீயா? ஈழத்தமிழனா? நீ முதலில் தமிழனாக மாறு. உனக்கு எல்லாமே கிடைக்கும். ஒருநாளும் ஈழத்தைத் தமிழக அரசியல்வாதிகளால் பெற்றுத் தரமுடியாது. அதற்கு இந்திய அரசும் இடம் கொடுக்காது. தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து உண்மையான தமிழனாக மாறுங்கள். அப்போது இந்திய அரசு உங்களை நோக்கி ஓடிவரும். ஈழம் என்ன, நீ கேட்கும் அத்தனையும் அப்போது உனக்குக் கிடைக்கும். அதுவரை உனக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.
தங்கர் பச்சான்

தொடர்புக்கு - ஆர்.சி. ஜெயந்தன் [email protected]

THANX - TAMIL HINDU


 • Flag
  தங்கர் பச்சான் பேட்டியும் அவரின் ஜாதிய சமூகத்தின் மீதான கோபமும் எதிர்ப்பும் எத்தனை திரைப்பட கலைஞர்களிடம் இருக்கிறது என்பது ஐயமே. அண்ணல் அம்பேத்கர் திரைப்படத்தை ஒவ்வொரு மாணவரும் பார்க்க வேண்டும்; அப்படி பார்த்தால், பாதி ஜாதிய மனோநிலை ஒழியும் என்று சொன்னதற்கு பாராட்டுக்கள்! நவ இந்தியாவின் முக்கிய நால்வரில் ஒருவராகவும், இந்திய தலை எழுத்து என்னும் அரசமைப்புச் சட்டத்தின் தந்தையாகவும், இன்றுவரை அதிகபட்ச உயர்கல்வி பட்டங்களைப் பெற்ற ஒப்பற்ற தலைவராகவும் புரட்சியாளர் பாபாசாஹேப் அம்பேத்கர் விளங்குகிறார் என்பதை இந்திய பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களில் கற்றறிய மத்திய மாநில அரசுகள் உடனடி சட்டம் கொண்டு வர வேண்டும். தலித் தலைவர்களை விமிரிசனம் வைத்த முறை பாராட்டுக்குரியது. ஆயினும், ஜாதி ஒழிப்பில் தலித் தலைவர்கள் மட்டுமல்ல; ஜாதியை அடியொற்றி அரசியல் செய்யும் எல்லா தலைவர்களுமே ஜாதி ஒழிப்பில் ஈடுபட வேண்டும் என்பதையும், தலித் அல்லாதவரின் தீண்டாமை வன்கொடுமை செய்வது தலித் அல்லாதவர் தான் என்பதையும் தங்கர் சொல்லி இருக்க வேண்டும்!

  40 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed


  •  Ram  

   'எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்து தொடர்ந்து தலைமுறை தலைமுறைகளாக அரசியல் வியாபாரம் செய்துவரும் பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் தந்திரங்களை வெல்ல முடியாமல் தத்தளிக்கிறது நம் தேர்தல் ஆணையம்.'என்று தங்கர் கூறுவது உண்மையே.

   45 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed   • First Thangar Bachan should change his name into Tamil as Nedunchezhian Anbazhagan and others did. Very often he is talking about this name issue.He should set an example to others.

    about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed    • ஒருநாள் ஈழத்தமிழனுக்கு இழந்த மண் கிடைக்கும். ஆனால் நீ இழந்த எதுவுமே உனக்கு கிடைக்கப்போவதில்லை. இப்போது சொல் யார் அகதி? நீயா? ஈழத்தமிழனா? நீ முதலில் தமிழனாக மாறு. அருமை.

     about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed


     •    

      அது என்னா தங்கர் பச்சன் !! சுத்த தமிழோ !! கண்டவர்கள் தமிழர்களை பற்றி கேவலமாக பேசுவது வாடிக்கை யாக உள்ளது . கோலிவுட் காரர்கள் சினிமாவில் நிறைய சம்பாதிப்பார்கள் !!இளிச்சவாய் தமிழன் சினிமாவை மட்டும் பார்த்துகிட்டு ஏழையாகவே இருக்கணும் !! இங்கிலீஷ் படிக்க கூடாதா !! இங்கிலீஷ் படம் பார்க்க கூடாதா !! என்னய்யா நியாயம் , வேற வேலையை பாருங்கையா !! சிங்கரவேல் , சுவாமிமலை

      about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed

      Vaduvooraan  Up Voted


      • மற்ற மொழிகளின் மீது வெறுப்பை உமிழும் இந்த அறிவுஜீவிகளுக்கு தமிழைத் தவிர வேறு ஒரு மொழியும் தெரியாது என்பதுதான் உண்மை. மற்ற மொழிகளில் புலமை இல்லாததை நியாயப் படுத்த தங்களை தமிழ் மொழியின் காவலர்களாக கட்டிக் கொள்வது ஒரு வித மோசடி முயற்சி! தமிழ் உட்பட எந்த ஒரு ஒரு மொழியையுமே ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் பக்குவமோ, பொறுமையோ, பரந்த உள்ளமோ இல்லாத இவர்களை நாலு வார்த்தை தமிழில் பிழை இல்லாது எழுதச்சொல்லி பார்த்தால் இவர்களது தமிழார்வத்தின் லட்சணம் தெரிய வரும்! கேரளா மாநிலத்தவர் போல நாலு மொழிகள் கற்றுக் கொண்டு பிழைக்கும் வழியை பார்க்க நினைக்கும் தமிழர்கள் சார்பில் படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: எப்படியாவது எங்கள் தங்க ராசு வுக்கு பட வாய்ப்புகள் கொடுத்து அவரை பிசியாக இருக்குமாறு செய்து எங்களை காப்பாற்றுங்கள்! இவர போன்றவர்கள் வேலை இல்லாமல் இருப்பது ஆபத்து!

       about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed

       Syed  Up Voted


       • சிந்தனை இருக்கிற எல்லோருமே சிந்தனையாளர்கள் என்றால் இந்த சாதாரண சினிமாக்காரரை சிந்தனையாளர் என்று ஏற்றுக் கொள்ளலாம்! பேரன் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வல்லவன் என்பதால் அவனை நாடாளு மன்ற வேட்பாளராக அறிவிக்கிறேன் என்கிற அளவு தமிழினத் தலைவர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் இந்த மனிதர் தமிழர் பற்றியும் தமிழகம் பற்றியும் சற்று அதிகமாக குரல் கொடுப்பது ஒரு வித கவன ஈர்ப்பு உத்தியாக தெரிகிறது. திரைத் துறையிலும் என்ன சாதித்து விட்டார் என்பதை இவரைத் தாங்கிப் பிடிக்கும் ஊடகங்கள் உணர்த்தினால் நல்லது. தரமுள்ள சினிமா, இலக்கியம் பற்றி நிறயப் பேசும் தங்க ராசு தனது படங்களில் குத்துப் பாடல் இல்லாமல் பார்த்துக் கொள்ளக் கூடாதோ? (ஆஹா ஓஹோ என்று பாராட்டப் பட்ட அழகி படம் கூட இதற்கு விதிவிலக்கல்ல!) தமிழன் தனது அடையாளங்களை தொலைத்து விட்டு நிற்கிறான் என்பது மட்டும் நூற்றுக்கு நூறு சரி. இவரே தனது இயற்பெயரை ஒரு வட இந்திய நடிகர் பெயரை ஒத்திருக்குமாறு மாற்றிக் கொண்டிருப்பதில் இருந்தே இவரது தாழ்வு மனப்பான்மை தெரிகிறதே; இதில் மற்றவர்களை பற்றி ஒப்பாரி வைப்பது தேவையா?

        about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed


        •  senthil  

         Super

         about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed


         •  John  

          தமிழா.. உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? தங்கர் பச்சானை சொல்லுகிறார் போல

          about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed


          •  Kathiresan  

           பேட்டியின் கடைசி பத்தியை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். செருப்பால் அடித்தமாதிரி இருக்கிறது. தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் தலைவர்களுக்கு சொந்தமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலேயே தமிழ் கலந்த ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். தமிழ் மொழி அரசியல்வாதிகளுக்கு சோறு போடுகிறது, ஆனால் அதை பயின்ற சாதாரண மக்களுக்கு சோறு போடமுடியவில்லை, வேலை வாங்கி தர முடியவில்லையே. பயனில்லாத பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்று, தமிழையும் ஒதிக்கிவிட்டோம்

           about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed


           •  shan  

            தமிழ் தமிழன் என்று சொல்வதை சிறிது குறைத்து கொண்டு இந்தியன் என சொல்லிப்பாருங்கள் சாதி பிரச்சினை சிறிதாவது குறைவதை நீங்கள் உணருவீர்கள்

           0 comments: