Wednesday, April 29, 2015

பெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாமி?- கிரேசியைக் கேளுங்கள் 30

  • ‘கூகுள் கடோத்கஜன்’ ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
    ‘கூகுள் கடோத்கஜன்’ ஓவியம்: ‘ஹிண்டு’ கேசவ்
எம்.ரகுநாதன், சென்னை.
உங்களுடைய ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தைத் தொடர்ந்து அடுத்த நாடகம் என்ன ‘பன்பட்டர் கிருஷ்ணாவா’ இல்லை ‘பிரட் ஜாம் கிருஷ்ணாவா’?
‘விஸ்வரூபம்’ படத்துக்குப் பிறகு கமல் ‘விஸ்வரூபம்’ பார்ட்-2 எடுப்பதைப் போல... ‘யதா கமல் ததா கிரேசி’. கமல் எவ்வழி கிரேசி அவ்வழியில் அடி யேன் ‘சாக்லேட் கிருஷ்ணா’ பார்ட்-2 ‘கூகுள் கடோத்கஜன்’ நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் ஜூன் மாதத் தில் அரங்கேறும். இதில் கிருஷ்ணன், கடோத்கஜன் என்று எனக்கு ரெட்டை வேடம்.
‘தம்மாத்துண்டு இருக்கிற நீயா கடோத்கஜன்?’ என்று நீங்கள் கிசு கிசுப்பது என் காதில் விழுகிறது. இந்தக் கேள்வியை உங்கள் சார்பில் ஹீரோ மாது பாலாஜி என்னிடம் கேட்க, அடி யேன் கடோத்கஜன் சொல்லும் பதில்:
மாது: பீமன் பையன் கடோத்கஜன் வாட்டசாட்டமா இருப்பான். நீ தம்மாதுண்டு இருக்கியே?
கடோத்கஜன்: மெய்யாலுமே நான் பீமன் பையன் கடோத்கஜன்தாம்பா! ஆனா, நீ நினைக்கிற அந்த பீமன் இல்ல. ‘சோட்டா பீம்’ பையன். அதான் தேசலா இருக்கேன். ஏம்பா மாது… நீ ‘POGO’ டிவி பாக்கிறதே இல்லியா?!
சினிமாவுக்கு விஷுவல் டிரெய்லர் போல, என்னோட அடுத்த நாடகத்துக்கு இது ‘வசன டிரெய்லர்’. முதன்முறையாக சினிமாவைப் போல் இந்த நாடகத்தில் ‘காஸ்டியூம் டிசைன்: ‘ஹிண்டு’ கேசவ்!
கி.மனோகரன், பொள்ளாச்சி.
வெய்யிலில் இருந்து தப்பிக்க அட்ட காசமான ஐந்து ஆலோசனைகளை, உங்கள் பாணியில் சொல்லுங்களேன்?
வெய்யில், மழை, காற்று, குளிர் என்று உடம்பை சொல்ல வைப்பது ஐம்புலன் கள்தான். இந்த ஐந்தின் ஆலோசனை களைக் கேட்காமல் இருந்தாலே போதும். என் இளம் வயதில் எங்கள் வீட்டில் மின்விசிறியே கிடையாது. இன்று ஏசி இல்லாவிட்டால் என் பேரன் எழுந்து கிரேஸியாகக் கத்துகிறான். வசதிதான் மனுசனுக்கு அசதி சாமி!
காந்திநாதன், மன்னார்குடி.
உங்களைப் பிடிக்காதவர்களை உங் களுக்குப் பிடிக்காதுதானே?
வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்ட கதையாக, என்னை இதுவரைப் பிடிக்காத Mr.ஜலதோஷத்தை நான் ஏன் வேலை மெனக்கெட்டுப் போய் பிடிக்க வேண்டும்?!
திருவாரூர் தீன், பூதமங்கலம்.
நீங்கள் மத்தியானம் பாடும் ராகம் என் னவோ? (மத்தியமாவதி என்று சொல்லித் தப்பிக்கக் கூடாது)
வாரிச் சுருட்டிப் படுத்துக்கொண்டு ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் குறட்டைவிடு வேன். இரவில்தான் விடிய விடிய ‘பூபாளம்’பாடி ‘காபி’ராகம் வரும் வரை எழுதுவேன்!
ஜே.கார்த்திக், கடலூர்.
பெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாமி?
அதுதான் ஹிப்நாட்டியிஸம் (Hip Naughtyயிசம்)
கோ.வசந்தி, கும்பகோணம்.
தாயை துதிக்கும் அளவுக்கு, தந்தையை பலர் மதிப்பதில்லையே, ஏன்?
யார் சொன்னார்கள். Mother India-வுக்கு விடுதலை வாங்கித் தந்தது Father of the Nationதானே?!
கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி.
பிரம்மா பரீட்சை எழுதினால் காப்பி அடிக்காமல் இருக்க ஹாலில் எப்படி உட்கார வைப்பார்கள்? அவருக்குத்தான் நான்கு பக்கமும் கண்கள் இருக்குமே?
படைக்கும் பிரம்மா ஏன் காப்பி அடிக்க வேண்டும்? நாம்தான் அவர் படைப்பைப் பார்த்து காப்பி அடிக்கிறோம். பறவை யைக் கண்டோம் விமானம் படைத்தோம். பாயும் மீன்களில் படகினைக் கண்டோம். எதிரொலி கேட்டோம் வானொலி படைத் தோம். மேலும் பல கோடி முகங்களைப் படைத்தும், ஒவ்வொன்றும் ஜாடையில் வேறுவிதமாக, வித்தியாசமாக இருக் கிறதே! தன் படைப்பையே காப்பி அடிக் காத பிரம்மன் மற்றவர்களைப் பார்த்து ஏன் காப்பி அடிக்க வேண்டும்? அவருக் கென்ன தலையெழுத்தா?!
சு.சங்கீதா, அரியலூர்.
பிறக்கும் ஒவ்வொருவர் நெற்றியிலும் Expiry Date குறித்திருந்தால்?
சந்தேகமே வேண்டாம். கெடு நாளை குறித்துத்தான் வைத்திருக்கிறான் எமன். அதனால்தான் அவனை டபாய்க்க… பாழ் நெற்றியாய் இல்லாமல், பட்டை யாக திருநீறோ, நாமமோ இட்டு Expiry Dateஐ மறைக்கச் சொன்னார்கள் நம் முன்னோர்கள். இதுதான் நம் முன்னோர் களின் ‘ஆயுள் காப்பிட்டுத் திட்டம்’. ஆயுளைக் காப்பாத்த ஏதேனும் இடு நெற்றியில்!
கோ.சரவணன், ஓசூர்.
ஆடித் தள்ளுபடி ‘டாஸ்மாக்கில்’வருமா?
வந்தால்… அது ‘தள்ளாடிக் கள்ளுபடி!’
சுமதி, கீழ்திருப்பதி.
ஆசாரமாக இருந்தால் வியாதிகளே வராதாமே?
எனக்கு தூரத்து உறவினர் ஒருவர் இருக்கிறார். நெருங்கிய உறவுதான். ஆசாரம் காரணமாக எப்போதும் சற்று தூரத்தில் தள்ளியே நிற்பார். அதனாலயே தூரத்து உறவினர் ஆகிவிட்டார். டம்ளரை எச்சில் பண்ணாமல் குடிக்க, காபியை மாடியில் இருந்து ஊற்றச் சொல்லி கீழே நின்று அண்ணாந்து குடிப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
மனைவிக்கு ஃப்ளையிங் கிஸ்தான் கொடுப்பார். ‘மெட்ராஸ் ஐ’, ‘சிக்கின் குனியா’ போன்ற இம்சைகள் ஊருக்குள் நுழைந்ததும்… லாட்ஜில் ரூம் போடுவது போல, முதல் காரியமாக இவரிடம் தான் குடிபுகும். இப்போதிருக்கும் ‘பொல் யூஷனை’ சமாளிக்க ‘இல்யூஷன்’தான் ஒரே சொல்யூஷன். இயற்கையோடு இணைந்து வாழ கற்க கசடறதான்!
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
பெண்பாற் புலவர்களில் உங்களை கவர்ந்தவர் யார், ஏன்?
‘ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத் தாள் வாழி’ என்று போற்றப் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோதை நாச்சியார்தான்!
ஏன் என்றால்… அன்றே I Love You (143) சொல்லிவிட்டாள் அரங்கனுக்கு. அவரும் பதிலுக்கு ‘ஓ.கே கண்மணி’என்று சொல்லி மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
‘பட்டர் பிரான்பெண்ணை Butter பிரான்கண்ணன்
ட்விட்டரில் காதலுக்கு தூதுவிட்டான் - லெட்டராய்
நூத்திநாப் பத்திமூணு நூற்றாள் பதிலுக்(கு)
ஆத்தியது ஐலவ்யு ஆச்சு’!


thanx - the  hindu

0 comments: