Monday, April 13, 2015

12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015 - 13 4 2016) -ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

பொதுப்பலன்
ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் 14.04.2015 செவ்வாய்க்கிழமை மதியம் மணி 1.42-க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் 8-ம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்கிரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் பிறக்கிறது.
மன்மத வருடத்தின் பலன் வெண்பா:
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே- மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.
சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி மன்மத ஆண்டில் நன்கு மழை பொழியும். மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் பெருகும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லது நடக்கும். பலவகை தானியங்களும் நன்கு விளையும். நாடாளுபவர்கள் போர் குணம் கொண்டிருப்பார்கள். உலகின் ஒரு பகுதியில் சண்டை மூளும். தெற்கு திசையில் இருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்று வீசும். அரிதான மூலிகைச் செடிகள் அழியும்.
மேஷம்
முயற்சியில் இருந்து பின்வாங்காதவர்களே! வருடம் பிறக்கும்போது உங்கள் ராசிநாதன் செவ்வாயும், தனாதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
வருடம் பிறக்கும்போது உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியனும் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகள் திருமணத்தை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா வரும். புது வேலை அமையும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 8-ல் அமர்ந்து அஷ்டமத்து சனியாக தொடர்வதால் ஏதோ ஒன்றை இழந்ததைப்போல இருப்பீர்கள். எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. சின்னச் சின்ன பிரச்சினைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள்.
மற்றவர்களுக்கு பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி மத்தியப் பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷம் அடைவதாலும் மாசி மாதம் மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் மேற்கண்ட காலக்கட்டங்களில் வீண் விரயம், ஏமாற்றம், குடும்பத்தில் சலசலப்பு, பண இழப்பு, சிறுசிறு வாகன விபத்துகள் வந்து செல்லும். 4.7.2015 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாரிடம் கோபப்படாதீர்கள். முறையான அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.
5.7.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். ஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு.
புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தூக்கம் குறையும். 8.1.2016 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால் கர்ப்பிணிகள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்துவீர்கள். ஜூலை முதல் தொழில், வியாபாரம் செழிக்கும். ஆனி மாதம் முதல் வேலைச்சுமை குறையும்.
அதிகாரிகளின் மனநிலையைப் புரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். ஆவணி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புது வாய்ப்புகளும் வரும். இந்த மன்மத வருடம் இடையூறுகளை தந்தாலும், விடாமுயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
ரிஷபம்
எதிலும் புதுமையை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது மன்மத வருடம் பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தோல்விமனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 7-ல் அமர்ந்து கண்டச் சனியாக நீடிப்பதால் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்சினையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும்.
மனைவிக்கு முதுகு வலி, தலைசுற்றல், ஹார்மோன் பிரச்சினைகள் வந்துபோகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். சிலர் உதவுவதைப் போல உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். ஆவணி, மாசி, பங்குனியில் புதிய திட்டங்கள் நிறைவேறும். திடீர் பணவரவு உண்டு. 4.7.2015 வரை உங்களின் அஷ்டம லாபாதிபதியான குரு 3-ம் வீட்டில் நிற்பதால் சில வேலைகள் மூன்றாவது முயற்சியில் முடிவடையும். வாழ்க்கை மீது வெறுப்பு, சலிப்பு வந்து போகும். தன்னம்பிக்கை குறையும்.
5.7.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவதால் தடைபட்ட காரியங்களெல்லாம் முடிவ டையும். என்றாலும் தாயாருக்கு உடல்நலக் குறைவு, அவருடன் மனத்தாங்கல் வந்துபோகும். வீட்டில் கூடுதலாக தளம் அமைப்பது அல்லது வீட்டை இடித்துக் கட்டுவது போன்ற முயற்சிகளின்போது கவனம் தேவை. அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, வருமான வரிகளை தாமதமின்றி செலுத்துங்கள். சாலை விதிகளை மீற வேண்டாம். வாகன லைசன்ஸ், காப்பீடுகளை புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். மறைமுக விமர்சனங்கள், வீண் பழிகள் வந்து செல்லும். ஜனவரி 7 வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம்.
வரனை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. கர்ப்பிணிகள் பயணம் தவிர்ப்பது நல்லது. மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும். 8.1.2016 முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். தாயாருடன் வீண் விவாதங்கள், அவருக்கு கை, கால், மூட்டு வலி வந்து போகும். விரும்பத்தகாத இடமாற்றம், கவுரவக் குறைவான சம்பவங்கள் நடக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.
புது முதலீடுகளை தவிர்க்கவும். ஆவணி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களால் நெருக்கடி வந்துபோகும். மாசி, பங்குனியில் பழைய சம்பள பாக்கிகள் கைக்கு வரும். அடிக்கடி இடமாற்றம் உண்டு. இந்த புத்தாண்டு வீண் செலவுகள், அலைச்சல்களை தந்தாலும் கடின உழைப்பால் முன்னேற்றத்தை தருவதாக அமையும்.
மிதுனம்
மனித நேயத்தின் மறுஉருவமாய் விளங்குபவர்களே! வருடப் பிறப்பு முதல் இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். 4.7.2015 வரை குருபகவான் தன ஸ்தானமான 2-ல் நிற்பதால் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
5.7.2015 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். சூரியன், புதன், செவ்வாய் ஆகியவை லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் புது பதவிகள், பொறுப்புகள் தேடிவரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வருமானம் உயரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் புத்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 7.1.2016 வரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 10-ம் இடத்தில் கேதுவும் நிற்பதால் வீண் டென்ஷன், சின்னச் சின்ன அவமானங்கள், ஏமாற்றங்கள், தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும்.
ஆனால் 8.1.2016 முதல் ராகு 3-ம் வீட்டில் நுழைவதால் முயற்சிகள் பலிதமாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். கேது 9-ல் நுழைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சித்திரை, புரட்டாசி, தை, பங்குனியில் உங்களது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பங்குச் சந்தை மூலம் லாபம் வரும்.
பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆனி, ஆடி, ஆவணி மத்தியப் பகுதி வரை சனி வக்கிரமாகி ராசிக்கு 5-ல் அமர்வதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளியுங்கள். கர்ப்பிணிகள் எடை மிகுந்த பொருட்களை சுமக்கக் கூடாது. வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.
புது அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். என்றாலும் ஜனவரி 7 வரை கேது 10-ல் நிற்பதால் வேலைச் சுமை இருக்கும். இடமாற்றங்களும் உண்டு. புரட்டாசி, பங்குனி மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். குரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் தந்தாலும் சனிபகவான் சாதகமாக இருப்பதால் சாதிப்பீர்கள்.
கடகம்
நல்லது, கெட்டதை சமமாக பாவிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள், அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்ப சூழ்நிலை அமையும். விஐபிகளுக்கு நெருக்கமாவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடையும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் கிடைக்கும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
இந்த ஆண்டு முழுக்க உங்களின் சப்தம அஷ்டமாதிபதியான சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் மனஇறுக்கம் உண்டாகும். தெளிவாக முடிவு எடுக்கமுடியாமல் குழம்புவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை வெடிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பயணங்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். 4.7.2015 வரை குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் அலர்ஜி, நோய்த் தொற்று, செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை, அல்சர் வரக்கூடும். பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வருகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள்.
5.7.2015 முதல் குருபகவான் தன ஸ்தானமான 2-ம் வீட்டில் நுழைவதால் பழைய பாக்கிகள் கைக்கு வரும். ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மருந்து, மாத்திரையில் இருந்து விடுபடுவீர்கள். அடகில் இருந்த வீட்டு பத்திரங்கள், நகைகளை மீட்க பண உதவிகள் கிடைக்கும். 7.1.2016 வரை ராகு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும்.
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 9-ம் இடத்தில் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள், பிதுர்வழி சொத்து சிக்கல்கள், வீண் விரயச் செலவுகள் வந்து போகும். 8.1.2016 முதல் ராகு 2-ம் வீட்டில் நுழைவதாலும், கேது 8-ல் சென்று மறைவதாலும் எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம், ஆர்வமின்மை, பிறர்மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் வரும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, மார்கழியில் புது ஏஜென்சி, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உங்களது கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். குற்றம், குறை கூறிய உயர் அதிகாரிகளின் மனம் மாறும். பதவி, சம்பள உயர்வு இனி தடையின்றி கிடைக்கும். இந்த தமிழ் புத்தாண்டு மதில்மேல் பூனையாக இருந்த உங்களை குன்றிலிட்ட விளக்காக ஒளிர வைக்கும்.
சிம்மம்
உண்மைக்கு முக்கியத்துவம் தருபவர்களே! உங்களுடைய ராசிக்கு பிரபல யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் எத்தனை பிரச்சினைகள், சிக்கல்கள், நெருக்கடிகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
பழைய கடன் பிரச்சினை தீரும். வைகாசி, ஆனி, தை, பங்குனியில் எதிர்பாராத திருப்பங்கள், யோகங்கள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஐப்பசி, கார்த்திகையில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனமடைவதால் வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி, உறவினர் பகை, வீண் செலவுகள் வந்து போகும்.
உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் குரு மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். திடீர் பயணங்களால் அலைச்சல்களும் இருக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். 5.7.2015 முதல் உங்களுடைய ராசிக்குள் குரு நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
காய்ச்சல், சிறுநீர்த் தொற்று, தோல் நமைச்சல், தலைசுற்றல் வந்து போகும். கொழுப்பு, காரம் அதிகம் உள்ள உணவுகள் வேண்டாம். மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். மனைவி உங்கள் நிறை, குறைகளை சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். 7.1.2016 வரை உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டிலேயே ராகுவும், 8-ம் இடத்திலேயே கேதுவும் நிற்பதால் கண் எரிச்சல், பல் வலி, காது வலி வந்து போகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். இடம், பொருள், ஏவலறிந்து பேசுங்கள்.
8.1.2015 முதல் ராகு உங்கள் ராசியிலேயே அமர்வதுடன், கேதுவும் ராசிக்கு 7-ல் அமர்வதால் வீண் குழப்பம், விரக்தி நிலவும். உணர்ச்சிவசப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். அதிலும் குறிப்பாக கேதுவால் மனைவிக்கு மூட்டு வலி, மாதவிலக்கு கோளாறு, தலைச்சுற்றல் வந்து போகும்.
அவருடன் கருத்து வேறுபாடுகளும் வரக்கூடும். இந்த ஆண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் தாயாருக்கு முதுகுத் தண்டில் வலி, நெஞ்சு எரிச்சல் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். புதியவர் களை நம்பி ஏமாற வேண்டாம். கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகும். தை, பங்குனியில் புது வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தன் கையே தனக்குதவி என்று உணரவைப்பதுடன், வளைந்து கொடுக்கும் பண்பையும் இப்புத்தாண்டு கற்றுத் தரும்.
கன்னி
எதார்த்தமான பேச்சால் எல்லோரையும் கவருபவர்களே! வருடப் பிறப்பு முதல் இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே நிற்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை அமையும்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகள் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். உறவினர், நண்பர் களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
உங்கள் தன பாக்யாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கும் போது புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகமாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. 4.7.2015 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 5.7.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தூக்கம் குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். கடந்த காலத்தில் நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள்.
உங்களுடைய ராசியிலேயே ராகுவும், ராசிக்கு 7-ல் கேதுவும் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் முன்கோபம் அதிகமாகும். பூச்சிக்கடி, விஷக் காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 8.1.2016 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாவதால் எதிலும் ஆர்வம் பிறக்கும்.
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதத்தின் மையப்பகுதி வரை உங்கள் ராசிக்கு பகைக் கோளான செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சகோதர வகையில் மனவருத்தம், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துபோகும். வியாபாரத்தில் புது உத்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.
ஆனி, ஆடி, ஆவணியில் கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். மார்கழி, மாசியில் புது வேலை வாய்ப்பு தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். இந்த புத்தாண்டு உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள், புகழ், கவுரவத்தை தருவதாக அமையும்.
துலாம்
ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே! வருடம் பிறக்கும்போது உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. விலை உயர்ந்த டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் பிடிவாதப்போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள்.
தாய், தாய்வழியில் உதவிகள் உண்டு. பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். வீடு கட்ட பிளான் அனுமதி கிடைக்கும். 4.7.2015 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு நிற்பதால் கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். சின்னச் சின்ன ஏமாற்றங்களும் வரக்கூடும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றங்கள் இருக்கும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள்.
5.7.2015 முதல் குருபகவான் லாப வீட்டில் வந்து அமர்வதால் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். புது வேலை கிடைக்கும். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். உங்களை குற்றம், குறை கூறியவர்களின் மனம் மாறும். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலியவந்து பேசுவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தள்ளிப்போன அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். இந்த ஆண்டு முழுக்க ஏழரைச் சனி நடப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.
பாதச் சனி நடப்பதால் கண்ணில் தூசு விழுந்தால்கூட அலட்சியமாக இருக்காதீர்கள். மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. கணுக்கால், முழங் கால் வலி வந்துபோகும். ரத்தத்தில் சர்க்கரை அளவை சரிபாருங்கள். செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டவேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் 7.1.2016 வரை கேது தொடர்வதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு.
8.1.2016 முதல் 5-ம் வீட்டில் கேது நுழைவதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். 7.1.2016 வரை ராசிக்கு 12-வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் கனவுத் தொல்லை அதிகமாகும். பயணங்கள் அதிகரிக்கும். 8.1.2016 முதல் ராகு 11-வது வீட்டுக்கு வருவதால் புகழ், கவுரவம் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஜூலை மாதம் முதல் புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
ஆடி, ஆவணியில் கடையை புது இடத்துக்கு மாற்றுவீர்கள். தை, மாசி, பங்குனியில் சிலர் சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள்.உத்தியோகத்தில் நியாயமான உழைப்புக்கு பலன் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அலுவலகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு ஆடி மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். தை, மாசி, பங்குனியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.
இந்த புத்தாண்டு ஏழரைச் சனியால் சில பாதிப்புகளை தந்தாலும் குருவின் திருவருளால் திடீர் அதிர்ஷ்டங்களையும் அள்ளித் தரும்.
விருச்சிகம்
இரக்க சுபாவம் அதிகம் உள்ளவர்களே! உங்களுக்கு 3-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் தைரியமும் சாமர்த்தியமும் பிறக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் சிலர் வீட்டு மனை வாங்குவீர்கள்.
உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு முழுக்க சனி அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். கூடாப் பழக்கவழக்கம் உள்ளவர்களுடன் எந்த தொடர்பும் வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும்.
முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். குருபகவான் 4.7.2015 வரை சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்கள் வருகையாலும் வீடு களைகட்டும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். ஆனால் 5.7.2015 முதல் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு வந்து அமர்வதால் உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் இருக்கும்.
7.1.2016 வரை கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் மீது கோபப் படாதீர்கள். அவர்களை அன்புடன் அரவணைத்துப் போங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்து பிரச்சினைகள் வந்துபோகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 8.1.2016 முதல் 4-ம் வீட்டில் கேது வந்து அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். தாய்க்கு கை, கால் வலி வந்துபோகும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற செலவுகள் வந்துபோகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.
ஆனி மாதம் மற்றும் ஆடி மாதத்திலும், ஐப்பசி மாதம் பிற்பகுதி முதல் கார்த்திகை, மார்கழி மாதம் மத்திய பகுதி வரையும் மாசி மாதம் மத்திய பகுதி முதல் பங்குனி மாதம் வரையிலும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் இக்காலக்கட்டங்களில் சிறுசிறு விபத்துகள், விரயங்கள், சகோதர உறவுகளுடன் விவாதங்கள், கடன் பிரச்சினைகள் வந்துபோகும். வியாபாரத்தில் விளம்பர உத்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள்.
பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வந்துபோகும். சித்திரை, வைகாசியில் இரட்டிப்பு லாபம் உண்டு. 4.7.2015 முதல் குரு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால் அலுவலகத்தில் மரியாதைக் குறைவான சில சம்பவங்கள் நடக்கும். மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்கும். சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.
ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி நிலவும். இந்த புத்தாண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று யோசிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவு, சுளிவுகளையும் கற்றுத் தரும்.
தனுசு
பாசத்தால் அனைவரையும் கட்டிப் போடுபவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் அனுபவப்பூர்வமாக செயல்படுவீர்கள். சாதுர்யமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். ஆனால் உங்களுக்கு ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
வாகனத்தில் செல்லும்போதும், சாலைகளை கடக்கும்போதும் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து கலங்கவேண்டாம். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்று கண்டறிய முடியாமல் திணறுவீர்கள். வாங்கிப்போட்ட இடம் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க, அடிக்கடி சென்று கண்காணிப்பது நல்லது. 7.1.2016 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் கேது தொடர்வதால் தாயாருக்கு அசதி, கழுத்து வலி, மூட்டு வலி வந்துபோகும். ஒரு சொத்தை விற்று மறு சொத்தை காப்பாற்றவேண்டி வரும்.
8.1.2016 முதல் கேது 3-ம் வீட்டில் நுழைவதால் தன்னம்பிக்கை பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 7.1.2016 வரை ராசிக்கு 10-ம் வீட்டில் ராகு நிற்பதால் வேலைச்சுமை, மறைமுக விமர்சனம், சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துபோகும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போகும். ஆனால் 8.1.2016 முதல் ராகு 9-ம் இடத்தில் நுழைவதால் தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
என்றாலும் பரம்பரை சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். தந்தையின் மூட்டு வலிக்காக சின்னச் சின்ன அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரலாம். உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். சொத்துக்கான முழு பணத்தை கொடுத்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 4.7.2015 வரை உங்களுடைய ராசிநாதன் குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால் வீண் அலைச்சல், சிறிய இழப்புகள், வீண் செலவுகள், குழப்பங்கள் வந்துபோகும்.
ஆனால் 5.7.2015 முதல் குருபகவான் உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் அடங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சிலர் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். என்றாலும் 7.1.2016 வரை ராகு 10-ம் வீட்டிலேயே நிற்பதால் பற்று வரவு சற்று சுமாராகவே இருக்கும். உத்தியோகத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். 7.1.2016 வரை ராகு 10-ம் இடத்திலேயே தொடர்வதால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைச்சுமை குறையும்.
ஆனால் ஜூலை மாதம் முதல் குரு 9-ம் வீட்டில் நுழைவதால் அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். ஆரம்பம் சற்று அலைச்சல், அசதியைத் தந்தாலும் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து நினைத்ததை கைகூடச் செய்யும் வருடம் இது.
மகரம்
நீதி, நியாயத்துக்கு மட்டும் தலை வணங்குபவர்களே! உங்கள் ராசிநாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பெரிய திட்டங்கள், முயற்சிகள் அனைத்தும் தங்குதடையின்றி நிறைவேறும். தொட்ட காரியங்கள் துலங்கும். பல வகையிலும் வருமானம் உயரும். சிலர் மனை வாங்கி, புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். சிலர் புது முதலீடு செய்து சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். உங்களது பிரபல யோகாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் வாகன வசதிகள் பெருகும். சிலர் வீடு மாற திட்டமிடுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
உங்கள் ராசியிலேயே இந்த புத்தாண்டு பிறப்பதால் முன்கோபம், வேலைச்சுமை, வீண் டென்ஷன், அலர்ஜி, நோய்த் தொற்று, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். 7.1.2016 வரை 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது உங்களுக்கு ஞானத்தையும் மனப் பக்குவத்தையும் தருவார். வாழ்க்கையின் சூட்சுமத்தையும் உணர வைப்பார்.
ஆன்மிகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதிதாக சிலரது அறிமுகம் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். தொண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்று வீர்கள். 7.1.2016 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் பணப் பற்றாக் குறை ஏற்படும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். பரம்பரை சொத்துகளைப் பெறுவதில் தடை, தாமதம் ஏற்படும்.
வழக்கில் அலட்சியம் வேண்டாம். 8.1.2016 முதல் 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் வந்து அமர்வதால் வீண் வாக்குவாதம், கண் வலி, மூச்சுத் திணறல், வீண் செலவுகள், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்துசெல்லும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று நியமன உத்தரவுக்காக காத்திருப்பவர்களுக்கு அழைப்பு வரும். தள்ளிப்போன திருமணம் கூடிவரும்.
ஆனால் 5.7.2015 முதல் குரு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். தூக்கம் குறையும். தொழில் ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும்.
அதிகாரிகளை அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு உண்டு. இந்த மன்மத வருடம் சவால்களில் வெற்றிபெற வைப்பதுடன் வருமானத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும்.
கும்பம்
உதவும் மனப்பான்மை உடையவர்களே! உங்களது பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
வங்கிக் கடனுதவியுடன் வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்தில், கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மறைமுகப் பகை வந்துபோகும். பழைய கடன் பிரச்சினையால் நிம்மதி இழப்பீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையெழுத்திட்டு வைக்கவேண்டாம்.
5.7.2015 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். அழகு, இளமை கூடும். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் அடங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேருவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. முடங்கிக் கிடக்கும் தொழில் சூடுபிடிக்கும். அடகில் இருந்த நகை, வீட்டு பத்திரத்தை மீட்க புது கடனுதவி கிடைக்கும்.
நோய் குணமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பணப்பட்டுவாடா விஷயத்தில் கவனமாக இருங்கள். மற்றவர்களுக்காக சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். 8.1.2016 முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால் செரிமானக் கோளாறு, தலைசுற்றல், நெஞ்சு எரிச்சல், எதிலும் ஒருவித வெறுப்புணர்வு வந்து நீங்கும். நேரில் நல்லவர்களாக காட்டிக்கொள்பவர்கள் உங்களைப் பற்றி வெளியே தவறாகப் பேசுவார்கள். ஆனால் குருவின் பார்வை ராசியில் இருக்கும் கேது மீது விழுவதால் கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும்.
ராகு 7-ல் நுழைவதால் மனைவிக்கு முன்கோபம், வேலைச்சுமை, முதுகுத் தண்டில் வலி, மூட்டுவலி வரக்கூடும். சிறிய அளவில் அறுவை சிகிச்சையும் செய்யவேண்டி வரலாம். ராகு 7-ம் வீட்டில் நுழைந்தாலும் குருவுடன் சென்று சேர்வதால் கெடுபலன்கள் குறையும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் கேந்திர பலம் பெற்று 10-ம் வீட்டில் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் புது பொறுப்புகள், கவுரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வீர்கள்.
5.7.2015 முதல் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். ஜூலை மாதம் முதல் உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். அதிகாரிகளின் பலம், பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். வசதி வாய்ப்புகள் ஓரளவே கிடைத்தாலும் மன அமைதி, மகிழ்ச்சி, நிம்மதியை முழுமையான அளவில் இந்த புத்தாண்டு தரும்.
மீனம்
உள்மனம் சொல்வதை அப்படியே செய்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். மூத்த சகோதர வகையில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசியிலேயே கேது 7.1.2016 வரை இருப்பதால் கோபப்படுவீர்கள்.
குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும். சளித் தொந்தரவு, காய்ச்சல், தோல் நமைச்சல் வரக்கூடும். உடம்பில் இரும்புச் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சைக் கீரை, காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே 7.1.2016 வரை ராகு நீடிப்பதால் கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சிறிய விஷயங்களையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள்.
இருவரும் மனம்விட்டுப் பேசுவது நல்லது. வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். 8.1.2016 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாக மாறுவதால் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேருவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டினரால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேரவேண்டிய பங்கு கைக்கு வரும். 5.7.2015 முதல் உங்கள் ராசிநாதன் 6-ல் சென்று மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் வந்துகொண்டே இருக்கும்.
யாரும் உங்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருந்துவீர்கள். 8.1.2016 முதல் உங்கள் ராசிநாதன் குருபகவான், ராகுவுடன் சம்பந்தப்படுவதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், கொழுப்புக் கட்டி, கை, கால் வலி, அசதி, சோர்வு வந்து போகும். சிறுசிறு விபத்துகளும் நிகழக்கூடும். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் தந்தையுடன் மோதல்கள், அவருக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து போகும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். வேலையாட்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை கலந்துபேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடித்துக்காட்டுவீர்கள்.
ஜூலை மாதத்துக்குள் புது வாய்ப்புகள், சம்பள உயர்வு, புது சலுகைகள் கிடைக்கும். ஆனால் 5.7.2015 முதல் உங்கள் ராசிநாதனும், உத்தியோக ஸ்தானாதிபதியுமான குருபகவான் 6-ல் சென்று மறைவதால் உத்தியோகத்தில் உங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள போராடவேண்டி வரும். இந்த மன்மத ஆண்டு உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரியவைக்கும். அலைச்சலோடு ஆதாயத்தையும் தரும்


நன்றி - த  இந்து

1 comments:

[email protected] said...

அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு