Monday, April 20, 2015

‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி இந்தியன் ரிக்கி கேஜ் சிறப்புப் பேட்டி

  • மணிரத்னத்துடன்
    மணிரத்னத்துடன்
  • கிராமி விருதுடன் ரிக்கி கேஜ், வோடர் கெல்லர்மே
    கிராமி விருதுடன் ரிக்கி கேஜ், வோடர் கெல்லர்மே
  • தனது இசை கோப்புக் கூடத்தில் ரிக்கி கேஜ்
    தனது இசை கோப்புக் கூடத்தில் ரிக்கி கேஜ்
பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இந்திய இசைக் கலைஞர்கள் வரிசையில் கிராமி விருதை வென்றுள்ளார் ரிக்கி கேஜ். திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால், இசைக் கலைஞர்களுக்குக் கிராமி. இதற்கு முன் நாம் அதிகம் கேள்விப்படாத ரிக்கி கேஜ் பிறந்தது அமெரிக்காவில். படித்தது, வளர்ந்தது வாழ்வது எல்லாம் பெங்களூருவில்.
பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், இந்துஸ்தானி இசையின் மீது கொண்ட தீராக் காதல் அவரை கிராமி விருதுவரை அழைத்து வந்திருக்கிறது. வோடர் கெல்லர்மே எனும் தென் ஆப்பிரிக்க இசைக் கலைஞரோடு இணைந்து இவர் உருவாக்கிய ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) என்ற இசை ஆல்பத்துக்காகவே கிராமி விருதை வென்றுள்ளார்.
அண்மையில் சென்னைக்கு வந்திருந்தவர் ‘தி இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
இந்திய இசைக் கலைஞர்களில் உங்களை அதிகம் பாதித்தவர் யார்?
மறைந்த மாமேதை பண்டிட் ரவிசங்கர். தனியாளாக இந்துஸ்தானி இசைக்கு உலக அளவில் ரசிகர்களை உருவாக்கினார். அவரால்தான் என்னைப் போன்றவர்கள் இன்று வாழ முடிகிறது. அவரால்தான் எனது இசை மேற்கத்திய நாடுகளில் ஒலிக்கிறது. அவர் புதிய இசையைப் படைத்தார் என்பதோடு, பல்வேறு கலாச்சாரம், நாடுகளைச் சேர்ந்த புதிய இசைக் கலைஞர்களோடு இணையத் தயங்கியதில்லை. ஜப்பானிய இசைக் கலைஞர் கிடாரோவுக்கும் ரசிகன் நான். அதேபோல் ஏ.ஆர். ரஹ்மான். ஒவ்வொரு இசைக் கலைஞரிடமும் ரஹ்மானின் தாக்கம் இருக்கும். அப்படி இல்லையென்று கூறுபவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்றே அர்த்தம். இந்திய இசைச் சூழலில் அவர் அப்படியொரு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கிராமி விருது பெற்ற உங்களின் விண்ட்ஸ் ஆஃ சம்சாரா ஆல்பத்தைப் பற்றி கூறுங்கள்..
தென் ஆப்பிரிக்க இசைக் கலைஞர் வோடர் கெல்லர்மேனும் நானும் மூன்று வருடங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சந்தித்தோம். அப்போது இருவரும் இணைந்து ஒரு இசை ஆல்பத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நான் ஏற்கனவே இசையமைத்ததை அவரிடம் கூறினேன். அதே போல அவரும், நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளை ஒட்டி இசையமைத்திருந்தார்.
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா இருவருமே தத்தமது தேசத்தின் தந்தையாக அறியப்படுபவர்கள். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி வாழ்ந்தது, காந்தியின் கொள்கைகளை நெல்சன் மண்டேலா பின்பற்றியது என இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் பல வகையில் தொடர்புகள் உள்ளன.
எனவே இவர்களது கொள்கைகளை அடிப்படையாக வைத்து இசையமைக்கத் தொடங்கினோம். உலகம் முழுவதும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 120 இசைக் கலைஞர்களை இதில் ஈடுபடுத்தினோம். இரண்டு வருடங்கள் முடிந்தபோது எங்கள் கையில் விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா இசை ஆல்பம் இருந்தது.
இந்தியாவில் இசைத் துறை எப்படி இருக்கிறது?
இந்தியாவில் தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கான (Independent Musicians) வாய்ப்புகள் மிகவும் குறைவு. இங்கே எல்லா வகை இசையுமே சினிமா இசையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எல்லா மொழிகளிலுமே சினிமா இசையே ஆதிக்கம் செலுத்துகிறது. பண்பலை வானொலி, தொலைக்காட்சி என எல்லாவற்றிலுமே சினிமா பாடல்களுக்கே முக்கியத்துவம் இருக்கிறது.
இந்தியாவில் நான் யாரிடமாவது பேசும்போது என்னை ஒரு இசையமைப்பாளர் என அறிமுகம் செய்துகொண்டால், எந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளீர்கள் என்று கேட்கின்றனர். இங்கிருக்கும் பெரும்பான்மை இசை, ஒரு திரைக்கதையைச் சார்ந்தோ, நாயகன் நாயகியிடம் என்ன சொல்கிறான் என்பதைப் பொருத்தோ, அந்தக் கதையைப் பொருத்தோதான் இருக்கிறது. அந்த இசைக் கலைஞரைச் சார்ந்து இருப்பதில்லை; ஒரு இசைக் கலைஞரின் உணர்வு அவரது இசை மூலமாக வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குத் தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கான துறை, தளமும் மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.
தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கான வாய்ப்பை திரை இசை கெடுக்கிறது என நினைக்கிறீர்களா?
இங்கு சூழலே அப்படி என நினைக்கிறேன். திரை இசையும் மிக நன்றாக இருக்கிறது. ஒரு இசைக் கலைஞர் அவருக்கான இசையைத் தர வேண்டும் என்றும் நினைக்கிறேன். அவர் வாழ்க்கையை ஒட்டிய இசையைப் படைக்க வேண்டும்.
மேற்கில் அடெல் என்ற ஒரு இசைக் கலைஞர் இருக்கிறார். தனக்கு ஒரு காதல் தோல்வி ஏற்பட்டால் அந்த உணர்வுகளைப் பற்றி ஒரு இசை ஆல்பத்தை வெளியிடுவார். யாரையாவது காதலித்தால் அதுபற்றி ஒரு இசை ஆல்பம். இதே போல ஜான் மேயர், நோரா ஜோன்ஸ் எனப் பல இசைக் கலைஞர்களின் இசை அவர்களது வாழ்க்கையை ஒட்டியே இருக்கிறது. அப்படியான இசை முக்கியம் என நினைக்கிறேன்.
இங்கிருக்கும் இன்னொரு பிரச்சினை, தனி இசைக் கலைஞர்கள், தனியான ஆல்பங்களை உருவாக்குவதும் திரை இசைக்கான வாய்ப்புக்காகவே. எனவே ஒரு தயாரிப்பாளர் தனது இசையை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இசையமைக்கிறார்கள். அதுவும் சினிமா இசையைப் போலவே இருக்கிறது. இசைக் கலைஞர்கள் ஆத்மார்த்தமாக, எதையும் சாராமல் இசையமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கன்னடப் படங்களுக்கு இசையமைத்தது உங்களது வளர்ச்சிக்கு உதவியதா?
இந்தியாவில் யாரைப் பார்த்தாலும் எந்தப் படத்துக்கு இசையமைத்தீர்கள் என்று கேட்டார்கள். அந்தக் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அந்தச் சமயத்தில்தான் நடிகர், இயக்குநர் ரமேஷ் அரவிந்தைச் சந்தித்தேன். அற்புதமான மனிதர் அவர். ஒருவகையில் அவரை என் வழிகாட்டி என்றுகூடச் சொல்லுவேன்.
நல்ல நண்பர். அவருடன்தான் கன்னடத்தில் 3 படங்களில் பணியாற்றினேன். ஒரு கதையைச் சார்ந்து இசையமைப்பது எனக்குக் கடினமாக இருந்தது. தனித்து இயங்குவதே எனது விருப்பம்.
அதே போல பைரஸியும் (Piracy) இசைக் கலைஞர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கிறதே?
இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் பைரஸி குறைவாகவே இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இந்தியாவில் திரையுலகம் இந்த பைரஸியை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கு பாடல்கள் ஹிட் ஆனால் போதும். அதை வைத்து சினிமா டிக்கெட்டுகளின் விற்பனையை அதிகமாக்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. எனவே இசை சிடிக்களின் விற்பனையை கண்டு கொள்வதில்லை.
இங்கு பைரஸி அனைத்து வகையிலும் வேரூன்றியுள்ளது. அனைவரிடத்திலும் 2 ஜிபி 3 ஜிபி என பாடல்கள் சேர்க்கப்படுகின்றன. கடைசியாக எப்போது காசு கொடுத்து ஒரு இசையை வாங்கினோம் என யாருக்கும் நினைவிருக்காது.
ஒரு தனி இசைக் கலைஞரின் வாழ்வாதாரம் அவரது ஆல்பத்தின் விற்பனையை ஒட்டி இருக்கிறது. யாருமே பணம் கொடுத்து வாங்காமல், பைரஸியின் பின்னால் சென்றால் இசைக் கலைஞர் எப்படி வாழ முடியும்? அதனால் தான் அவர்கள் சினிமா இசைக்குத் தாவுகிறார்கள். அவர்களுக்கு இங்கு இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று இசைத் துறைக்குச் செல்ல வேண்டும். அல்லது எங்காவது வேலை செய்து கொண்டு பகுதி நேரத்தில் இசையைத் தொடரலாம். எனவே இந்தியாவில் தனித்து இயங்கும் இசைக் கலைஞர்களுக்கு கடினமான சூழலே இருக்கிறது.
எனக்குக் கடினமாக இருந்தது. தனித்து இயங்குவதே எனது விருப்பம்.
மீண்டும் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் எண்ணம் இல்லையா?
உடனடியாக அப்படி எந்த திட்டமும் இல்லை. ஒருவேளை எந்த இயக்குநருக்காவது எனது இசை பிடித்துப் போய், இப்படியான இசைதான் வேண்டும் என அணுகினால் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்வேன். ஏனென்றால் எனது இசை பலரிடம் சேர வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் யாராவது வந்து, அண்மையில் ஹிட்டான 10 பாடல்களைக் காட்டி, அதைப் போலதான் எனக்கு இசை வேண்டும் என்று கூறினால் என்னால் முடியாது. எனக்கு அந்தத் திறமை கிடையாது.
சர்வதேச அளவில் இசைக் கலைஞர்கள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் இந்த ஆல்பத்தின் இசை இந்திய இசையைப் போலவே இருப்பதற்கான காரணம் என்ன?
இசை எப்போதுமே நமது குணம், நம்பிக்கை, ஆளுமை இவற்றின் வெளிப்பாடாகவே இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். நான் எனது உணர்ச்சிகளை இந்திய இசையின் மூலமாகவே வெளிப்படுத்துவேன். நான் ஒரு இந்தியன், இங்கேயே வளர்ந்தவன். எனவே இந்துஸ்தானி, இந்திய இசையே எனது வெளிப்பாடாக இருந்து வருகிறது.
எனவே நான் எப்போது இசையமைக்க ஆரம்பித்தாலும் அதில் எப்படியாவது இந்தியத்தன்மை வந்துவிடும். அதானால் தான் விண்ட்ஸ் ஆஃப் சம்சாராவாக இருக்கட்டும், எனது முந்தைய இசைப் படைப்புகளாக இருக்கட்டும், அதில் இந்திய இசையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன்.
இசைத் துறைக்கு வர எவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டீர்கள்?
முதலில் இந்தத் துறைக்கு வரும்போது முறையான பயிற்சி ஏதும் இருக்கவில்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, இசைதான் என் எதிர்காலம் என முடிவெடுத்தவுடன் முறையாக பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தேன். ஏனென்றால் முறையான பயிற்சி இல்லாததை ஊனம் போல உணர்ந்தேன். பெரிய இசைக் கலைஞர்களிடம் பேசும் போது அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளவாவது பயிற்சி தேவை. எனவே நல்ல ஆசிரியர்களிடம் இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுக் கொண்டேன்.
மருத்துவப் படிப்பு படித்தும் தொழில் முறையில் அதை கைவிட்டதன் காரணம் என்ன?
நான் பல் மருத்துவம் படித்தேன். ஆனால் உண்மையில் நான் மருத்துவராகவேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இருந்ததில்லை. எப்போதுமே இசை தான் எனது பாதையாக இருந்தது. 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் இசை தான் என் எதிர்காலம் என முடிவு செய்து அதை எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்களுக்கு எல்லா பெற்றோரைப் போலவே, நான் பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
பல சண்டை, வாக்குவாதங்களைத் தொடர்ந்து ஒரு சமரசத்துக்கு வந்தோம். நான் பல் மருத்துவம் படித்து முடித்து பட்டம் வாங்கிய பிறகு நான் விரும்பியதை செய்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடனே படித்தேன். எனவே படித்து முடித்து பட்டம் வாங்கியவுடன், அதை என் தந்தையிடம் கொடுத்து விட்டு இசையின் பக்கம் வந்துவிட்டேன்.
தமிழ் திரை இசையை கேட்பதுண்டா?
கண்டிப்பாக. ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா என பலரது இசையை விரும்பிக் கேட்கிறேன். சில வருடங்களுக்கு முன் 'பலே பாண்டியா' என்ற படத்தில், இசைக் கருவிகள் இல்லாமல் வெறும் குரல்களை மட்டும் வைத்து அகபெல்லா (A capella) வடிவில் ஒரு பாடலைக் கேட்டேன்.
அப்படி தமிழில் பல புதிய முயற்சிகளைத் தொடர்ந்து யாராவது செய்து கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களும் அத்தகைய முயற்சிகளை நன்றாக வரவேற்கிறார்கள். இந்த சூழல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
கிராமி விருதை வென்றாகிவிட்டது. அடுத்து என்ன?
அறுதியிட்டு சொல்ல கடினமாக இருக்கிறது. ஏனென்றால் எனக்கு 33 வயதுதான் ஆகிறது. அதற்குள் மிகப்பெரிய இசை விருது கிடைத்துள்ளது. 60 வயதில் கிடைத்திருந்தால், இதுதான் என் வாழ்நாள் சாதனை என்று கூறிக் கொள்ளலாம். ஓய்வு பெறலாம். இப்போது கிடைத்துள்ளதால் மீண்டும் எனது இசைப் பயணத்தை புதிதாக தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த விருதால் 'நீ வணிகரீதியிலான இசையிலிருந்து விலகி உனக்குப் பிடித்ததை ஆத்மார்த்தமாக செய்தாய். அதனால்தான் உனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதையே தொடர வேண்டும்' என யாரோ கூறியதைப் போல இருக்கிறது. எனவே அதையே தொடர விரும்புகிறேன். இன்னும் அதிக மக்கள் என் இசையை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.


நன்றி - த இந்து

0 comments: