Friday, April 24, 2015

உத்தம வில்லன் -தருணங்கள் - கமல்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் உடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் உடன் நடிகர் கமல்ஹாசன் | கோப்புப் படம்
"கமல் சார் தனது குருநாதர் கே.பி சாரைப் பற்றி பேசாத நாளைக் காணவே முடியாது. அந்த அளவுக்கு மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். கமலின் குரு பக்தியைப் பற்றி கூற நிறைய தகவல்கள் இருக்கின்றன" என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் நிகில். இனி நிகில் கூறியவை என் மொழி நடையில்...
கமல்ஹாசனின் தயாரிப்பு முயற்சி
ராஜ்கமல் நிறுவனம் தொடங்கப்பட்டவுடன் அந்நிறுவனத்தின் முதல் படத்தை கே.பாலசந்தர் தான் இயக்க வேண்டும் என்று விரும்பி அவரிடமும் கேட்டார் கமல்ஹாசன். சரி பண்ணலாம் என்று தெரிவிக்க, கமலுக்கு மிகுந்த சந்தோஷம். நான் உங்கள் அலுவலகத்துக்கு வந்து செக் தருகிறேன் என்று கமல் கூற, அதை ஏற்க மறுத்துவிட்டார் கே.பி. "நான்தான் உன் நிறுவனத்துக்கு வந்து வாங்கிக்கொள்ள வேண்டும்" என்று கூறி, சென்னை - எல்டாம்ஸ் சாலையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்துக்கு வந்து செக் வாங்கிக் கொண்டார் கே.பி. ஆனால், அந்த பட வாய்ப்பு ஏனோ அமையவில்லையே என்ற வருத்தம் கமலுக்கு இப்போதும் இருக்கிறது.
நான் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதுக்கு முக்கிய காரணம் கே.பி மட்டும்தான் என்று அடிக்கடி சொல்வார் கமல். இருவரும் சந்தித்த முதல் தருணம் சுவாரசியமானது.
கே.பி.யை சந்தித்த முதல் தருணம்
கே.பாலசந்தரிடம் இருந்து முதல் முறையாக கமலுக்கு அழைப்பு ஒன்று வந்தது. சரி, உதவி இயக்குநருக்காக தான் அழைக்கிறார் என்று நினைத்துச் சென்றார். அப்போது கமலின் அம்மா "ஒரு போட்டோ எடுத்துட்டு போடா" என்று தெரிவித்திருக்கிறார். கமலை நடிக்கத்தான் பாலசந்தர் அழைத்திருக்கிறார் என்பது தான் அவரின் எண்ணம். கமல் "போட்டோ வேண்டாம்" என்று தெரிவிக்க, அவருடைய அம்மாவோ கையில் எடுத்துகிட்டு போ என்றால் போ என்று கூறி போட்டோவை திணிக்க, போட்டோ எடுத்துக் கொண்டு பாலசந்தர் அலுவலகம் சென்றார் கமல்.
கமலைப் பார்த்தவுடம் கே.பி கேட்டது: "போட்டோ எடுத்துக்கிட்டு வந்தியா?" என்றுதான். அப்போது அம்மா கொடுத்த போட்டோ வேண்டா வெறுப்பாக பேன்டில் திணித்து வைத்திருந்தை எடுத்து கொடுத்தார் கமல்.
உதவி இயக்குநராக சேரப் போகிறோம் என்று நினைத்துச் சென்ற கமலை நடிகனாக்கி அழகு பார்த்தவர் கே.பி. கமல் கொடுத்த போட்டோவில் இரண்டு கைகளையும் உயர்ந்திக் கொண்டிருப்பார். அந்த போட்டோவில் இருப்பதைப் போல கமலை 'அரங்கேற்றம்' படத்தில் ஒரு காட்சியில் கையை உயர்த்தி நடிக்க வைத்தார்.
'உத்தம வில்லன்' தருணங்கள்
முதலில் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்க கமல் கேட்டபோது 'நடிக்க மாட்டேன்' என்று சொல்லிவிட்டார் கே.பி. ஆனால், கமல் தான் விடாமுயற்சியாக நின்று நடிக்க வைத்தார். முதல் நாள் படப்பிடிப்பு அன்றும், "இப்போதுகூட ஒன்றும் பிரச்சினையில்லை. எனக்கு வயதாகிவிட்டது" என்றார் கே.பி. அப்போது, "நீங்கள் கற்றுக் கொடுத்த வித்தை என்னிடம் இருக்கிறது சார். நான் கதையை மாற்றிக் கொள்கிறேன்" என்று கூறினார் கமல்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் கூட, சீக்கிரம் டப்பிங்கிற்கு ஏற்பாடு பண்ணு என்று தெரிவித்து முழுப்படத்திற்கும் டப்பிங் பேசி முடித்து விட்டார் கே.பி. ஆனால், படம் முடிந்து கே.பியால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இப்போது கமலுக்கு உண்டு.
நேரடியாக தொடர்பு கொண்டு பேசாத கமல்
கமல் அடைந்திருக்கும் உயரத்துக்கு, கே.பியிடம் நேரடியாக போனில் பேசலாம். ஆனால், தன்னுடைய குருநாதரிடம் இதுவரை நேரடியாக பேசியதில்லை கமல். முதலில் கே.பியிடம் அனந்து என்ற உதவியாளர் இருந்தார், அவருக்கு பிறகு மோகன் இருந்தார். முதலில் கமல் இவர்களிடம் தான் போன் செய்து, "சார்.. ப்ரீயாக இருக்கிறாரா.." என்று கேட்டுவிட்டு அவர்கள் கூறும் தகவலின் படி கே.பியிடம் போனில் அழைத்துப் பேசுவார்.
அதேபோல தான் கே.பியும். நேரடியாக கமலிடம் பேச மாட்டார். நிகிலிடம் போன் செய்து "நான் கமலைப் பார்க்க வேண்டும். எந்த நேரத்தில் ப்ரீயாக இருக்கிறார் என்று சொல் வருகிறேன்" என்பார். ஆனால், கமல் அலுவலகத்துக்கு கே.பி வருவது கமலுக்கு பிடிக்காது. பலமுறை இதேபோல் நடந்து, இறுதியாக கமல், கே.பி அலுவலகம் சென்று பேசுவிட்டு வருவார்.
சமீபத்தில் 60-வது பிறந்த நாள் நடைபெற்றது. கமல் தூய்மை இந்தியா திட்டத்தில் அன்றைய தினத்தில் இணைந்ததால் கடுமையான பணிகள் இருந்தது. அந்த நேரத்தில் நிகிலை கே.பி அழைத்து "கமல் எப்போது ப்ரீயாக அலுவலகத்தில் இருப்பான்னு சொல்லு. நான் வருவதை அவன்கிட்ட சொல்லாதே" என்றார். ஆனால் கே.பி அலுவலகம் வந்தால் கமல் சங்கப்படுவார் என்று கமலிடன் நிகில் கூறிவிட்டார். கமலிடம் கூறியவுடன் சற்றும் தாமதிக்காமல், "பத்திரிக்கையாளர் சந்திப்பு முன்பு நான் கே.பி சாரைப் பார்த்துவிட்டு வருகிறேன். சாரை இங்கே வரவேண்டாம் என்று கூறிவிடுங்கள்" என்றார். நிகிலும் கே.பியிடன் தெரிவித்துட்டார்.
கமல் நேரடியாக கே.பி அலுவலகம் சென்று ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தான் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார். அன்றைய தினத்தில் கமலுக்கு இருந்த பணிகளுக்கு அடுத்த நாள் போகியிருக்கலாம். ஆனால், தனது குருநாதர் மீது அளவு கடந்த அன்பு, பாசம், பக்தி என அனைத்து கொண்டவர் கமல்.
கமல் - பாலசந்தர் இருவரது குரு - சிஷ்யன் உறவு குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிகிலிடம் கேட்டேன். அப்போது...
"உம்மைக் குவித்து எம்மைப் புடைத்து
உமியை ஒதுக்கி உளகல் நீக்கி
சலியாதெம்மைச் சலித்து எடுத்து
சோறாய் வடித்து சமயல் மன்ன!
உலையில் சூட்டிலெம் உளம் பொங்காது
நலமே பொங்கக் கிண்டிக் கிளறி
இலைக்கு மாறாய் கலையை விரித்து
இதுவரை படையா விருந்தாய் எம்மை
இவ்வுலகுக்களித்த தொழில் விற்பன்ன!
சந்தை பேரம் செய்தே எம்மை
கந்தல் வடிவில் விற்கும் தெருவில்
தையற் கடையினை நிறுவிய எங்கள்
அய்யர்க் கென்றும் நன்றியைச் சொல்லுபல்
ஆயிரத் தொருவன் நான் வேறென்ன?
இவர் போல இனிமேல் வராது என்னும்
இகத்தின் கூற்றை மாற்றிடவெண்ணி
பயிற்றுவித்தே பயணித்தார் எமை
இவர் போலேயே எல்லாம் பண்ண.
அவர் ஒற்றை ஆளாய் செய்ததை இன்று
கூடி செய்யும் குழுவில் நாளை
பாகுபட்டதோர் தனியன் வருவான் - அவனை
பெற்று வளர்த்திடச் சந்ததித் தொடராய்
கற்றுத் தொடரும் அடுத்த தலைமுறை
காத்து நிற்குது எந்தன் வீட்டில்
கேட்டிடச் சொல்லும் கவைக்குவ்வாத
குட்டிக் கதையாய் நீர்த்து விடாமல்
நீர் ஒரு தொடரும் கதையாய் என்றும்
வாழ்ந்திட வாழ்த்தும் பேரப் பிள்ளை-என்
வீட்டில் போக பலரும் உண்டு
வாழிய என்றுமை வாழ்த்தும் வேளை
நீடிய ஆயுள் எமையே சேரும்.
போகிற போக்கில் கற்றுத் தந்த
பேராயர் நேயர் எந்தை கே.பி (K.B)
வாழ்க வென்று எந்தை நாமம்."
இது 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவுக்காக மறைந்த கே.பி சாரை நினைத்து கமல் சார் எழுதிய வரிகள். இந்த வரிகளை மீறி நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது" என்றார்.
கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு [email protected]


நன்றி - த  இந்து

0 comments: