Sunday, April 06, 2014

நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும் - முழுநீள காமெடி படம்?- அருள் நிதி பேட்டி

தன் குடும்பத்தைச் சுற்றி நடந்துவரும் தேர்தல் களேபரத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது அடுத்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் அருள்நிதி. கோடம்பாக்க இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…



‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படம் என்ன மாதிரியான கதை?


முழுப் படமும் காமெடிதான். இயக்குநர் சிம்புதேவனைப் பற்றி உங்களுக்கே தெரியும். எப்போதுமே கதையோட ஹியூமர் வந்துகிட்டே இருக்கும். அதை நீங்க இந்தப் படத்துலயும் பார்ப்பீங்க. மொத்த படப்பிடிப்பையும் 43 நாட்கள்ல முடிச்சுட்டோம். அந்த அளவிற்கு பக்காவா எல்லாத்தையும் ப்ளான் பண்ணினார். நாசர், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, வி.எஸ்.ராகவன் இப்படிப் பல சீனியர் நடிகர்களை நடிக்க வச்சு 43 நாட்கள்ல ஷுட்டிங் முடிச்சது எவ்வளவு பெரிய விஷயம்!


முதல்ல இதை இயக்குநர் பாண்டிராஜ்தானே தயாரிப்பதாக இருந்தார்?


இந்தப் படம் ஆரம்பிச்சதுக்கு காரணமே இயக்குநர் பாண்டிராஜ் சார்தான். முதல்ல அவரே தயாரிப்பதா இருந்துச்சு. பிறகு அவர் வேறு படங்கள், இயக்கப் போயிட்டதால, நானும் ‘தகராறு' முடிச்சுட்டு ஆரம்பிக்கலாம்னு உடனே எங்களோட பேனர்லேயே பண்ணிட்டோம்.



‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்', ‘நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்' இப்படி காமெடி படங்கள் பக்கம் போயிட்டீங்க போல?


அப்படிச் சொல்ல முடியாது. என்னோட படங்கள் எல்லாமே வெவ்வேறு வகையாதான் இருக்கும். ‘வம்சம்',‘உதயன்', ‘மெளன குரு', ‘தகராறு' இப்படி எல்லாப் படங்களுமே வேற வேற கேரக்டர்கள்தான் பண்ணியிருப்பேன். நான் சிட்டி படங்கள் பண்ணாம இருந்தேன். முழுக்க தாடியோடயே சுத்திட்டு இருந்தேன். அப்படியிருக்கும்போதுதான், சிம்புதேவன் சார் இந்தக் கதையைச் சொன்னார். காமெடி கதை இதுவரைக்கும் நான் பண்ணதில்லை. இப்ப பண்ணலாமேன்னு தோணிச்சி.


அடுத்த படமான ‘நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்' படத்தில் கதை செம ஸ்டராங். அதை காமெடின்னு சொல்ல முடியாது. நாங்க சீரியஸா பண்ற விஷயங்கள், உங்களுக்கு காமெடியா தெரியும். ரொம்ப வித்தியாசமான கதை. இந்த ரெண்டு படங்களையும் பார்த்தீங்கன்னா ரெண்டுமே வித்தியாசமான படங்களாதான் இருக்கும்.


அந்த ஹீரோ மாதிரி ஆகணும், இந்த ஹீரோ மாதிரி ஆகணும்னு நான் சினிமாத் துறைக்குள்ள வரல. 10 படங்கள் பண்ணினத்துக்கு அப்புறம், இவன் வித்தியாசமான படங்களா பண்றான் அப்படிங்கிற பேர் கிடைச்சா போதும். ஆக் ஷன், காமெடி, த்ரில்லர் இந்த மாதிரியான படங்கள் மட்டும்தான் பண்ணனும்னு எனக்குக் கிடையாது. கதை நல்லாயிருக்கா அதுல ஆக் ஷன், காமெடி எதுவானாலும் பண்ணுவேன்.


முழுநீள காமெடி படம் பண்றது கஷ்டமா இல்லயா?


யாராவது என்கிட்ட பேசினாங்கன்னா, இயல்பாவே உடனுக்குடன் கவுண்டர் கொடுத்துக் கிட்டே இருப்பேன். அது ஒவ்வொருத்தங்க பேசுற விதத்துல இருக்கு. என்கிட்ட நல்லா பழகிட்டாங்கன்னா, பேசப் பேச கவுண்டர் கொடுத்துக்கிட்டே இருப்பேன். ‘வம்சம்' படத்துல முதல் பாதி காமெடிதான். ‘தகராறு' படத்துலயும் அப்படித்தான். காமெடி பண்றது எனக்குக் கஷ்டமா தெரியல. சிம்புதேவன் சார் படத்துல அவரோட வசனத்தை நாம சாதாரணமா சொன்னாலே காமெடி ஒர்க் அவுட்டாயிடும். ஏன்னா, அவரோட வசனங்கள் அவ்வளவு ஸ்ட்ராங்.



அரசியலில் அருள்நிதியை எப்போது எதிர் பார்க்கலாம்?



இப்போதைக்கு எனக்கு அரசியல் ஆசையே கிடையாது. வருங்காலத்தில் என்ன நடக்கும்னு இப்போ எப்படிச் சொல்ல முடியும். ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும், இந்தக் கேள்வி வந்துகிட்டே இருக்கு. எங்கப்பாவே இப்ப அரசியல்ல கிடையாதே.


உங்களோட சினிமா வளர்ச்சிக்கு தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின் எந்த அளவிற்கு உதவியா இருந்தாங்க?


ரெண்டு பேருமே எனக்கு உதவியாதான் இருந்தாங்க. பாண்டிராஜ் சாரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது உதயநிதி அண்ணன் தான். இப்போவும் ஞாபகம் இருக்கு, ‘வம்சம்' இசை வெளியீட்டு விழாவுல இடம் இல்லாம, துரை அண்ணன் நின்னுக்கிட்டே பாத்தாங்க. ஏன்னா, என் மீது அவ்வளவு பாசம். ‘தகராறு' பாத்தீங்கன்னா, தயாரிச்சது துரை, ரிலீஸ் பண்ணது உதய் அண்ணன்.


வீட்டுல நடிக்கப் போறேன்னு சொன்ன போதும், இப்பவும் என்ன சொல்றாங்க?



நடிக்கப் போறேன்னு சொன்ன உடனே ஏன் அரசியலுக்கு வரப் போறியானு கேட்டார் அப்பா. ஏன்னா அப்பா என்னை அரசியல்ல ஈடுபாடு காட்ட விட மாட்டார். என்னை ஒதுக்கியே வைச்சிருப்பார். ‘கோபுர வாசலிலே' உள்ளிட்ட நிறைய படங்கள் பண்ணிட்டு, சினிமாவுல இருந்து விலகிட்டார். அரசியலும் ஈடுபடாம, முழு நேரமா பிசினஸை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கார். அப்பாகிட்ட பேசி, ஒத்துக்க வைச்சதுக்கு அப்புறம் தாத்தாவைப் பார்த்துப் பேசினேன். நடிக்கிற வேலை மட்டும் பார், அரசியலுக்கு எல்லாம் வராதேன்னு சொல்லிட்டார். இன்னமும் நல்ல நடிக்கணும்னு சொல்லிட்டே இருக்கார். கூடிய சீக்கிரத்தில் “பிரமாதமா நடிச்சிருக்கடா” அப்படின்னு அவர் கிட்டேயிருந்து பாராட்டு வாங்கணும். வாங்குவேன்.


thanx - the hindu

1 comments:

rrmercy said...

another view http://kanavuthirutan.blogspot.com/2014/04/blog-post_6.html