Sunday, April 06, 2014

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி: வீடியோ வெளியிட்டது 'கோப்ரா போஸ்ட்'


கோப்புப் படம்.
கோப்புப் படம்.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்று 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம் தெரிவித்துள்ளது. அதற்கு ஆதாரமாக இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட ரகசிய விசாரணைகளின் வீடியோ தொகுப்பு நேற்று வெளியிடப் பட்டது.


சுமார் மூன்றரை மணி நேரம் ஓடும் ரகசிய வீடியோ பதிவை டெல்லி பத்திரிகையாளர் மன்றத் தில் கோப்ராபோஸ்டின் ஆசிரியர் அனிரோத் பெஹல் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:


ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது. இதில் பெரும் சதி உள்ளது.


இந்த வழக்கை பல ஆண்டுக ளாக விசாரித்தும் சிபிஐயால் உண்மையை நிரூபிக்க முடிய வில்லை. ‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப் பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை இப்போது நாங்கள் வெளியிட்டுள்ளோம்.


பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாகக் கூறி கோப்ராபோஸ்டின் இணை ஆசிரியரான கே.ஆஷிஷ் , 23 முக்கிய தலைவர்களை பேட்டி எடுத்தார். அவர்கள் சதியை உருவாக்கியவர்கள் அல்லது சதியாளர்களாக செயல்பட்டிருப் பதை வீடியோ பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.


இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சி தானந்த் சாக்‌ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் உட்பட பா.ஜ.க., சிவசேனை, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.


இதில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித் துள்ளது. இதில் விடுபட்டிருந்த வர்களான பி.எல்.சர்மா, மஹந்த் அவைத்யநாத், நிருத்ய கோபால்தாஸ் மற்றும் ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோரிடம் கோப்ரா போஸ்ட் நடத்திய ரகசிய விசாரணை இப்போது வீடியா பதிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது என்று அனிரோத் பெஹல் தெரிவித்தார்.


முக்கிய சாராம்சங்கள்


பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 40 பேரில் 32 பேர் மீது சதியை செயல்படுத்தியதாக 92/197 பிரிவிலும், எட்டு பேர் மீது சதியை திட்டமிட்டதாக 92/198 பிரிவிலும் வழக்குகள் நடந்து வருகின்றன.


கோப்ராபோஸ்ட் சார்பில் 23 பேரிடம் எடுக்கப்பட்ட பேட்டியின் முக்கிய சாரம்சங்கள் வருமாறு:


பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனையால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல். இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங் களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்பட்டன.


வி,ஹெச்.பி.யின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தளத்துக்கு குஜராத்தின் சுர்கேஜிலும் சிவசேனைத் தொண்டர்களுக்கு மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மற்றும் மொரேனாவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.


நிலத்தை விரைந்து தோண்டுவது, சுவர் உட்பட உயரமான கோபுரங்களில் எளிதாக ஏறுவது, கோடாரி, கடப்பாரை, மண்வெட்டியை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


பாபர் மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி தலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார் யார் தர்மேந்தர் உட்பட பலரது முன் னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.


மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இதுதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.


டைனமைட் குண்டுகளை வைத்து மசூதியை இடிக்க திட்ட மிட்ட சிவசேனையின் முயற்சி தோல்வி யுற்றது. இதற்காக பயன்படுத்தப் பட்ட பாரம்பரிய கருவிகளுடன் பெட்ரோல் குண்டுகளை பிஹார் பிரிவினர் பயன் படுத்தினர். இதற்கு அயோத்தியின் நிர்வாகம் உதவி செய்தது.


இடிக்கப்பட்ட மசூதியில் பல புராதன பொருட்கள் கிடைத்ததா கவும் அதில் 1528-ல் மீர்பாகி அமைத்த இரு கல்வெட்டுக்கள் பவண் பாண்டேவிடம் இருந்தன என்பன உள்ளிட்ட தகவல்கள் கோப்ராபோஸ்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


புதியவை அல்ல: அயோத்தி முஸ்லிம்கள் கருத்து


கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்ட ரகசிய பதிவில் வெளியான விஷயங்கள் புதியவை அல்ல என்று அயோத்தி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.



அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினர் காலீக் அகமது கான்: ‘கோப்ரா போஸ்டில் வெளியான விஷயங்கள் அனைத்தும் ஏற்கனவே லிபரான் கமிஷ னால் தெரிவிக்கப்பட்டவையே தவிர புதிய விஷயங்கள் அல்ல. இதற்காக சதி செய் ததாக பதிவான வழக்கில் இருந்து சிபிஐ, எல்.கே.அத்வானியை விடுவித்தபோதே எங்களுக்கு புரிந்த விஷயத்தை கோப்ரா போஸ்ட் இப்போது உறுதி செய்துள்ளது.



ராமர் கோயில்- பாபர் மசூதி வழக் கின் முக்கிய மனுதாரர் ஹாசீம் அன்சாரி (85) ‘மசூதி இடிக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு பின் முதல்கட்ட தேர்தல் தொடங்க இரண்டு நாள்கள் இருக்கும்போது இந்த ரகசிய பதிவுகள் வெளியிட அரசியல் காரணங்கள் உள்ளன. இதே அரசியல் காரணத்துக்காக காங்கிரஸுடன் இணைந்துதான் பாஜக பாபர் மசூதியை இடித்தது. இந்த விஷயத்தை கையில் எடுத்து அரசியல் லாபம் பார்ப்பதில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுக்குமே சமபங்கு உள்ளது. இதனால்தான் ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயங்களில் பாபர் மசூதி- ராமர் கோயில் விவகாரம் வெளியாகி விடுகிறது’ எனக் கூறுகிறார்.



கோப்ரா போஸ்டின் ரகசிய பதிவை ஆதாரமாக வைத்து ரே பரேலி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



பாஜக புகார்


பாஜக துணைத்தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் சதி செய்யப்படுகிறது. இதுதொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்” என்றார்.
பாஜக தேசிய செய்தி தொடர்பாளரான ரவி சங்கர் பிரசாத், ‘இந்த இணையதளம் இதுவரை எந்த ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் மீதும் ‘ஸ்டிங் ஆப்பரேஷன்’ நடத்தவில்லை. எனவே, ‘‘காங்கிரஸ் போஸ்ட்” என விமர்சித்துள்ளார்.



பாஜக மூத்த தலைவர் ஆர்.ராமகிருஷ்ணா “கோப்ரா போஸ்ட் நடத்தும் செய்தியாளர் கூட்டத்தை தடை செய்ய வேண்டும்” என தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தார். ஆனால், இது குறித்து தமக்கு எந்த தகவலும் வரவில்லை என கோப்ரா போஸ்டின் ஆசிரியர் அனிரோத் பெஹல், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நன்றி- த ஹிந்து 

0 comments: