Wednesday, April 23, 2014

கவுண்டமணி vs சந்தானம் - ஹீரோக்களாகும் காமெடியன்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

ஹீரோக்களாகும் காமெடியன்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Special Story - comediyan turn as Heros
தமிழ் சினிமாவில் காமெடியன்கள் ஹீரோவாக நடிப்பது ஒன்றும் புதிதில்லை, அந்தக் காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி போன்ற பெரும்பாலான கமெடியன்கள், ஹீரோ அவதாரம் எடுத்தார்கள். அது தனித்தனி காலகட்டமாக இருந்தது. இப்போது ஒரே நேரத்தில் இருக்கிற அத்தனை காமெடியன்களும் ஹீரோ அவதாரம் எடுத்து, இருக்கிற ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்கள். காமெடியில் நான்கு படம் கலக்கி விட்டால் அடுத்து ஹீரோதான் என்று அடம்பிடிக்கிறார்கள். இதனால் காமெடியன்கள் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று ஹீரோக்கள் அஞ்சுகிறார்கள்.

கவுண்டமணி

காமெடியன், ஹீரோ என செந்திலுடன் ஒரு ரவுண்ட் வந்த கவுண்டமணி, இப்போது மீண்டும் 49ஓ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரிட்டர்ன் ஆகிறார். இயற்கை விவசாயத்தை பற்றி பேசப்போகும் பொலிட்டிக்கல் பொடிமாஸ் படம் இது.

சந்தானம்

கவுண்டமணியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவர் பாணியிலேயே மற்றவர்களை நக்கல் காமெடி செய்து புகழ்பெற்ற சந்தானம் முன்பு அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதில் கஞ்சா கருப்பு இன்னொரு ஹீரோ. இப்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலோ ஹீரோவாக இறங்கி விட்டார். விஜய், அஜீத் ரேன்ஞ்சுக்கு ஓப்பனிங் சாங், டூயட், பைட்டுன்னு களத்துல குதித்துவிட்டார். எத்தனை நாளைக்குத்தான் ஹீரோவுக்கு பிரண்டாவே நடிக்கிறதுன்னு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

வடிவேலு

இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வடிவேலு ஹீரோவானர். அது அவருக்கென்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்பதால் படம் சக்கைபோடு போட்டது. உடனே அதே மாதிரி பாணியில் இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் நடித்தார் படம் அவுட். பிறகு அரசியல் பிரவேசம், வனவாசம் எல்லாம் முடித்து மீண்டும் அதே பாணியில் தெனாலிராமன். இந்திரலோகத்தில் நா.அழகப்பன் அளவுக்கு கீழே போகவில்லை என்றாலும், வடிவேலு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து பிரபுதேவா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டில் பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தது. சிறு முதலீட்டு படங்களின் ஆஸ்தான காமெடியனாக வலம் வந்தார். அவருக்கும் ஹீரோ ஆசை வந்துவிட அவரே சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தொடங்கி ஹீரோவாகிவிட்டார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறவர் சிரிச்சு சிரிச்சு வந்த சீனா தானோ டோய் என்று ஆடிய ரகசியா. அடுத்து வங்காள விரிகுடா என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கருணாஸ்

ஹீரோவாக மாறுவதெற்கென்றே தயாரிப்பாளர் ஆனவர் கருணாஸ். அவர் தயாரித்து நடித்த திண்டுக்கல் சாரதி என்ற படம் மட்டும் சுமாரக போனது. அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம், சந்தமாமா படங்கள் தோல்வியடைய இப்போது சினிமாவில் நான் ரொம்ப இழந்துட்டேன் என்று மீண்டும் காமெடிக்கே திரும்பி விட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனாலும் ஹீரோ ஆசை இருந்துக்கிட்டுதான் இருக்கு.

பிரேம்ஜி அமரன்

அண்ணன் இயக்கும் படத்தில் கூடுதல் இணைப்பாக காமெடியில் நடித்துக் கொண்டிருந்த பிரேம்ஜி, மாங்கா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அடுத்து அண்ணன் இயக்கப்போகும் ஒரு படத்திலும் சோலோ ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

தம்பி ராமையா, விடிவி.கணேஷ்

கண்டுகொள்ளப்படாத காமெடி நடிகராகவும், வடிவேலு டீமில் டயலாக் ரைட்டராகவும் இருந்த தம்பி ராமையா ஒரே ஒரு தேசிய விருது மூலம் உச்சத்துக்கு சென்றார். காமெடியன், வில்லன், குணசித்திரம் என அவர் இல்லாத படமே இல்லை. அவரும் உ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் தோல்வி அடைந்தது. விடிவி கணேஷ் இங்க என்ன சொல்லுது படத்தில் ஹீரோவாக நடித்தார். அதுவும் தியேட்டருக்கு போன வேகத்தில் திரும்பி விட்டது. இருவரையும் ஹீரோவாக போட்டு படம் எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் திட்டத்தை பரணில் தூக்கி போட்டுவிட்டார்கள்.

அப்புக்குட்டி

தம்பி ராமையாவைபோலவே அப்புக்குட்டியும் தேசிய விருதுக்கு பிறகு தேடப்படும் நடிகரானவர். அவர் விருது பெற்ற அழகர்சாமியின் குதிரையில் அவர்தான் ஹீரோ. அடுத்தும் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு மன்னாரு என்ற படத்தில் நடித்தார் அதுவும் தோல்வி அடைய ஹீரோ ஆசையை மூட்டைகட்டி வைத்து விட்டு மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

சிம்ஹா, செண்ட்ராயன்

பீட்சா, சூதுகவ்வும் படங்களில் காமெடியனாக நடித்த சிம்ஹாவும், பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில் கவனிக்க வைத்த செண்ட்ராயனும் ஹீரேவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஹீரோ மாயையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கும் காமெடியன் சூரி மட்டுமே. அவரையும் ஒரு நாள் வளைத்து போட்டு ஹீரோவாக்கி விடுவார்கள். அதனால் தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு நிறைய தேவை வரப்போகிறது. திறமை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்யலாம்.
 
 
thanx - dinamalar 

0 comments: