Tuesday, April 29, 2014

கோலங்கள் தேவயானி

‘கோலங்கள்’ தொடர்...கோலங்கள் தொலைக் காட்சித் தொடர் உச்சத்தில் இருந்த நேரம். அபி பதில்கள் என்ற பெயரில் தேவயானியிடம் வாசகர்கள் கேள்விகளுக்குப் பதில் வாங்கி வெளியிடலாம் என்று ஆசிரியர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை ஒரு தொலைக்காட்சி விளம்பரமாகவும் வெளியிடலாம் என்றும் முடிவு செய்தோம். தேவயானியைத் தொடர்புகொண்டால் மலையாளப் படப்பிடிப்பு ஒன்றுக்காகப் பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். ‘பொள்ளாச்சிக்குப் போய் ஒரு விளம்பரப் படமாக அதை எடுத்துக்கொண்டு வந்து விடுங்கள்’ என்று அலுவலகம் பணிக்க, எதிர்பாராத சூழலில் விளம்பரப் பட இயக்குனராக மாறினேன். உடன் போட்டோகிராபர் ராஜசேகர். விளம்பரப் பட நடுக்கமெல்லாம் ஒருபக்கம் இருக்க, தேவயானியை இதுவரையில் நேரில் சந்தித்ததில்லை என்பது கலக்கமாக இருந்தது. பொதுவாக நடிகைகளைப் பேட்டி எடுப்பதே கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிலும் முன்பின் அறிமுகமில்லாத நடிகையை வைத்து விளம்பரப் படம் எடுப்பதென்றால்..? கொஞ்சம் அறிமுகமாவது செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தேவயானியின் எண்ணுக்குப் போன் செய்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். ‘ஷூட்டிங் லொகேஷன் எங்கேனு தெரியலை நீங்க நேரா சக்தி ஹோட்டலுக்கு வந்திடுங்க’ என்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டார். என்னாகும் என்று புரியவில்லையே என்ற குழப்பத்தோடு மறுநாள் காலை பத்து மணிக்கு பொள்ளாச்சி சக்தி ஹோட்டலில் இருந்தோம்.
அறை எடுத்துக் குளித்துவிட்டுப் போனால் லேட்டாகிவிடும், முதலில் வேலையை முடித்துவிட்டுப் பிறகு ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளலாமா என்ற யோசனையோடு ரிசப்ஷனை அணுகியபோது, ‘தேவயானி மேடம் கெஸ்ட்டா? அவங்க ரூம் சாவியைக் கொடுத்திருக்காங்க. நீங்க டைரக்டராமே… உங்க அசிஸ்டெண்ட்களுக்குத் தனியா அவங்க அசிஸ்டெண்ட் ரூம் சாவி கொடுத்திருக்காங்க’ என்றார்கள். லேசாக ஆச்சரியம் எழுந்தது. அவசர கதியில் தயாரானதும் லொகேஷனைச் சொன்னார்கள். அடித்துப் பிடித்து ஓடினோம். மோகன்லாலுடன் நடித்துக்கொண்டிருந்த தேவயானி, ‘கொஞ்சம் தூங்கி ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கலாமே… நான் லஞ்சுக்கு வருவீங்கனுதான் நினைச்சேன்’ என்றார். குளிக்க அறை கொடுத்த ஆச்சரியத்தில் இருந்தே மீளவில்லை. இதில் உறக்கம் வேறா? ‘ரெண்டு நாள் தங்கற மாதிரி புரோகிராமா இருந்திருந்தா தனி ரூம் சொல்லியிருப்பேன். உடனே கிளம்பறீங்கனு சொன்னதால விட்டுட்டேன். இப்ப தனி ரூம் போட்டாக்கூட இந்தப் புரொடக்ஷன்ல தனியா பணம் கொடுக்க விட மாட்டாங்க. எதுக்கு அவங்களுக்கு வீண் செலவுன்னுதான் என் ரூமைக் கொடுத்துட்டேன்… வசதியா இருந்துச்சா..?’ என்றார். சீரியலில் வருவது போல நிஜமாகவே தேவயானி அன்பின் திருவுருவம்தானோ என்று தோன்றியது. விளம்பரத்துக்கான வாசகங்கள் என்ன என்று கேட்டார். என்ன மாடுலேஷனில் பேச வேண்டும் என்று கேட்டார். ஓகே போகலாம் என்றார். சிரித்த முகத்தோடு சொன்னவரிடம், ‘மேடம்… மக்கள் பிரச்னைகளை எழுதச் சொல்றோம்… கொஞ்சம் சீரியஸா சொல்லுங்க..!’ என்றதும் ‘என்ன சார்… அனவுன்ஸ்மெண்ட்தானே… அதோட சீரியஸான முகத் தோட சொன்னா எடுபடுமா..?’ என்றார். சீரியஸாகத்தான் வேண்டும் என்றதும், ‘ரொம்ப அடமா இருக்கீங்களே..?’ என்று சொல்லிவிட்டுச் சொன்னபடி செய்தார். வேறு வேறு பின்னணிகளில் வைத்து ஒரே வாசகங் களைத் திரும்பத் திரும்பச் சொல்லவைத்தோம். ‘ஒரு பத்து செகண்ட் கமர்ஷியல் பண்ற மாதிரியே எடுக்கறீங்க. இதுக்கு எனக்கு நீங்க பேமன்ட் தரணும்’ என்று சிரிப்போடு சொன்னார். நடுநடுவே சொந்தப் புரொடக்‌ஷன் போலக் காபி, மோர் எல்லாம் வந்தது. வேலை திருப்திகரமாக முடிந்தது. 


அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பற்றிய பிரபலங்களின் கருத்துகளைக் கேட்க, தேவயானியைத் தொடர்புகொண்டபோது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. போனிலேயே பேசிக்கொள்ளலாமா என்றவர், பணம் பற்றித் தன் கருத்துகளைச் சொன்னார். எல்லாம் பேசி முடித்த பிறகு, ‘இந்தப் பகுதியிலே ஏதாச்சும் கதை சேர்த்தா நல்லாயிருக்கும். பணத்தோட முக்கியத்துவம் பற்றி அம்மா நிறைய கதைகள் சொல்லியிருக்காங்க… எனக்குக் கொஞ்சம் யோசிக்க டைம் குடுக்கறீங்களா..?’ என்றார். 


அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பற்றிய பிரபலங்களின் கருத்துகளைக் கேட்க, தேவயானியைத் தொடர்புகொண்டபோது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. போனிலேயே பேசிக்கொள்ளலாமா என்றவர், பணம் பற்றித் தன் கருத்துகளைச் சொன்னார். எல்லாம் பேசி முடித்த பிறகு, ‘இந்தப் பகுதியிலே ஏதாச்சும் கதை சேர்த்தா நல்லாயிருக்கும். பணத்தோட முக்கியத்துவம் பற்றி அம்மா நிறைய கதைகள் சொல்லியிருக்காங்க… எனக்குக் கொஞ்சம் யோசிக்க டைம் குடுக்கறீங்களா..?’ என்றார். 


கொஞ்ச நேரத்தில் அவரே போன் செய்து, இந்தக் கதை நல்லாயிருக்குமா பாருங்க என்றபடி கதையைச் சொன்னார். 


ஒரு ரூபாய் சம்பாதித்துக் கொண்டுவந்தால்தான் சாப்பாடு என்று அப்பா சொல்ல, மகனோ அம்மாவிடம் காசை வாங்கி அப்பாவிடம் கொடுத்துவிட்டுச் சாப்பிடப் போகிறான். அப்பா அந்தக் காசை அருகில் உள்ள குளத்தில் எறிகிறார். தினமும் இது நடக்க, ஒரு நாள் அம்மா ஊருக்குப் போய்விடுகிறாள். வேறு வழியில்லாமல் மகன் மூட்டை தூக்கி ஒரு ரூபாய் சம்பாதித்துக் கொண்டுவருகிறான். அப்பா வழக்கம்போல அதை குளத்தில் எறியப் போக, மகனுக்குக் கோபம் வருகிறது. 


சம்பாதித்தால்தான் பணத்தின் அருமையை உணர முடியும் என்று கதையை முடித்த தேவயானி, இந்த மகனைப் போல எங்களுக்கும் காசு அருமையை உணர வைத்தவர்கள் எங்கள் பெற்றோர் என்றார். 


தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை எங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த குணத்திலேயே அது தெரிந்துவிட்டதே! 


தொடர்புக்கு: [email protected] 

 நன்றி - த இந்து 

0 comments: