Saturday, May 02, 2015

மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா- ஒரு சகாப்தம் - இரா, முருகன் (சுஜாதா பிறந்த நாள்: 03.05.1935 சிறப்புக்கட்டுரை)

தமிழ் உரைநடையில் புறக்கணிக்க முடியாத பங்களிப்பு செய்தவர் சுஜாதா!இராமுருகன்

 த இந்து
சுதந்திரப் போராட்ட கால இளைஞர்கள், குறிப்பாக 1940-களின் இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களைப் பிணைத்துக்கொண்டு சொந்த வாழ்க்கையின் அபத்தங்களைப் புறம் தள்ளிச் செயல்பட அவர்களுக்கு சுதந்திரப் போராட்டம் இருந்தது. 1960-களின் இளைஞர்கள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் மறந்து முற்றாக ஈடுபட்டு அமிழ, இந்தி எதிர்ப்பு இயக்கம் இவர்களுக்குப் பற்றுக்கோடானது. ஆனால், 1950-களின் இளைஞர்கள்? இவர்கள் பரிதாபத்துக் குரியவர்கள். உணர்ச்சிகரமாகப் பற்றிக்கொண்டு, இதை அடையவே உயிர் வாழ்கிறேன் என்று முன்னே போக லட்சியங்கள் ஏதும் இவர்களுக்கு இல்லை. ஜனநாயக சோஷலிசமும், பஞ்சசீலமும், அணைக்கட்டுகளும், எஃகுத் தொழிற்சாலைகளும் வீர வழிபாட்டுக்கான விஷயங்களில்லை. 50-களின் இளைஞர்கள், எதையாவது சார்ந்தோ எதிர்த்தோ, தங்களை அடையாளம் காணவும் காட்டவும் வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்கள். இவர்களில் ரங்கராஜனும் ஒருவர்.
இலக்கியமும் ஆன்மிகமும் ஓஹோ என்று கொண்டாடினாலும், திருவரங்கம் அடிப்படையில் சின்னஞ்சிறு ஊர். கண்ணடி ஜன்னல் எகிற, தெரு கிரிக்கெட் ஆடுவதில் மகிழ்ச்சியும், வால்வ் ரேடியோவில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்டு ஆனந்தமும் அடைந்தவன் ரங்கராஜன், கொஞ்சம் வளர்ந்து, சைக்கிளில் திருச்சி போய் மைதானத்தில் உள்ளூர் அணிகளின் கால்பந்து விளையாட்டை ரசித்து, கோல் கீப்பரை கெட்ட வார்த்தைகளில் திட்டி, கண்ணில் படும், சோனியான, குடிகூரா பவுடர் பூசிய இளம் பெண்ணை சைட் அடித்து மகிழ்ந்த இன்னொரு இளைஞன். இதோடு கு.ப.ரா., ஜானகிராமன் என்று இலக்கியத் தேடல்.
இந்தச் சூழலிலிருந்து, சென்னை போய் படித்த பொறியியல் பட்டமும், ஆர்வமுமே துணையாகக் கொண்டு பணி நிமித்தம் டெல்லிக்குக் குடிபெயர்கிறார் ரங்கராஜன். அங்கே இருந்தபடி, நாட்டு வழக்கப்படி எட்டு லட்சணமும் பொருந்திய பைங்கிளிக் கதை எழுதி அப்படியான கதைகளை அச்சுப்போடும் ஆயிரச் சுழற்சி சென்னை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறார், அதெல்லாம் சுவரில் அடித்த பந்துபோல் திரும்பி வர, சராசரிக் கோட்டுக்குள் மீண்டும் தள்ளப்படுகிறார்.
வந்தார் வென்றார்!
இந்த மாதிரி வாழ்க்கை அனுபவங்கள் சாதாரணமாக ஒரு கல்யாணத்திலும், தொடர்ந்து பிள்ளை பெறுவதிலும், பி.எஃப். லோன் எடுத்து வீடு கட்டுவதிலும், சபாவில் சங்கீதக் கச்சேரி ஏற்பாடு செய்து வித்வானுக்கு வீட்டிலிருந்து மிளகு ரசம் வைத்து எடுத்து வந்து கொடுப்பதிலும் சுபமாக முடிகிறது வழக்கம். பிய்த்துக்கொண்டு வெளியே வந்த ரங்கராஜன், மனைவி பெயரை சுவாதீனத்தோடு தனதாக்கிக்கொண்டு, சுஜாதாவாக அதே சென்னை பத்திரிகைகளுக்குப் படை எடுக்கிறார். கதாசிரியராக, தொடர்கதை மன்னனாகப் பெருவெற்றி பெறுகிறார். கும்பலில் ஒருவராக இருந்தவரைச் சுற்றி ஆராதனை செய்ய ஒரு கூட்டம்.
நிர்ணயித்தரீதியில் போய்க்கொண்டிருந்த பத்திரிகைக் கதையாடலைச் சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் வேகப்படுத்தியது சுஜாதா செய்த முதல் மதிப்புக் கூட்டல். அவர் கதையில் ‘படி இறங்கிய’வர்கள் எழுத்து எழுத்தாகக் கீழே வந்து வாசகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தார்கள். எழுவாயைத் தவிர்த்து நடந்தார்கள், கைத் தண்டையில் மல்லிகைச் சரம் சுற்றி முகர்ந்தார்கள். கொலை செய்தார்கள்.. . பூடகமாக, ஆனால் புரிகிற விதத்தில் சிருங்காரம் பேசி மகிழ்ந்தார்கள்.
இதெல்லாம் எதற்கு? வேறுபடுத்திக் காட்டித் தன் இருப்பைக் கவனப்படுத்தத்தான். கூடவே, அது தமிழ் எழுத்து நடையில் ஒரு புதுப் பாய்ச்சல் ஏற்படவும் காரணமாயிற்று. மாறுதலுக்காகக் காத்துக்கொண்டிருந்த மொழியை யார் வித்தியாசமாகக் கையாண்டிருந்தாலும் இது நடந்திருக்கக் கூடும். ஆங்கிலத்துக்கு நெருக்கமாக அந்த நடை குறிக்கோள் கருதிச் செயல்படாமலே சுஜாதா தமிழுக்குக் கொண்டுவந்தது. இன்றைக்கு அவரை ஏசுகிறவர்களும், இகழ்கிறவர்களும்கூட எளிமையும், துள்ளலுமாக நகரும் சுஜாதா உரைநடையின் கூறுகளை இயல்பாகத் தனதாக்கிக்கொள்வதைப் பார்த்து மையமாகச் சிரிக்கிறேன்.
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். அவதாரம்
சுஜாதாவின் தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் அவை தக்கதோ, தகாததோ - கடல் காவு கொள்ளட்டும். அவருக்கான இடத்தைத் தமிழ் உரைநடையில் நிர்ணயிக்க அவருடைய பத்திகள் போதுமே? 1960-களின் டெல்லி வாழ்க்கை நேரத்தில் வார்த்தை விளையாட்டுக் கதைகள் எழுதிப் புகழ் வெளிச்சத்துக்குள் மெல்ல வந்துகொண்டிருந்தபோதே சுஜாதா ஏற்படுத்திக்கொண்ட இன்னொரு அடையாளம், அவருடைய ஆளுமைக்கு நெருக்கமான ரங்கம் எஸ்.ஆர். ‘கணையாழி’ பத்திரிகைக்காக விளையாட்டாக எடுத்த அவதாரம் அது. ‘கணையாழி’ நிறுவனர் கஸ்தூரிரங்கன் சுஜாதாவின் ரங்கத்துப் பள்ளித் தோழர் என்பதும், டெல்லியிலிருந்து ‘கணையாழி’ இயங்கியதும், ரங்கம் எஸ்.ஆரை உயிர்ப்பித்தன.
அந்தப் பத்தியின் சிந்தாகதியும் எழுத்து வேகமும் வெகுஜனப் பத்திரிகையிலிருந்து விலகிய இன்னொரு வட்டத்தில் சுஜாதாவைக் கொண்டு நிறுத்தின. இலக்கியத்தோடுகூட இலக்கிய வம்பும், சம்பிரதாய மில்லாத சிறு விமர்சனச் சீண்டல்களும், முப்பது சொற்களில் அறிமுகப்படுத்தி நிஜாரைக் கழற்றும் திரைப்பட விமர்சனங்களும், போலி செய்து நகைக்கும் கவிதைகளுமாக, ஒரு விநோதமான, ரசனை சார்ந்த உலகம் அது.
கடைசிப் பக்கங்கள்
ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் ‘கணையாழி’யின் கடைசிப் பக்கங்கள்’, சுஜாதாவே எதிர்பார்த்திராத அளவு அறிவுஜீவி வட்டாரத்தில் ஆழ்ந்து கவனிக்கப்பட்டது. எழுதுகிறவர் யாரென்று தெரியாமல், எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் எள்ளலோடு விமர்சனமும் சின்னதாகப் பாராட்டும் எஸ்.ஆரால் வழங்கப்பட்டன. சுஜாதாவைக் கொண்டாடி அவர் மதிப்பைக் கூட்டிய வெகுஜனப் பத்திரிகைகளை, ஏன் சுஜாதாவைக்கூட விட்டு வைக்க வில்லை எஸ்.ஆர். ஒரு தீபாவளி மலர் விடாமல் கேட்டு வாங்கிப் போடக் கதை எழுதித் தந்த சுஜாதா, அவற்றின் பொது அமைப்பை நையாண்டி செய்து, ‘எடை போட்டதில், இந்தப் பத்திரிகை தீபாவளி மலர் மற்றதைவிட 250 கிராம் அதிகம்’ என்று விமர்சனம் செய்யும் வசதி அவருக்கு ‘கணையாழி’யின் கடைசிப் பக்கம் மூலம் தொடர்ந்து கிடைத்தது. சுஜாதா வாசகர்கள் அல்லாத எஸ்.ஆர். வாசகர்கள் இன்னும் சிலாகிப்பது இந்தப் பத்தியில் சுஜாதா கையாண்ட நடையை, எழுதப் பட்ட விஷயங்களை!
கதையாடலில் அதிர்ச்சி மதிப்புக்காக அவர் கைகொண்ட மொழிநடையிலிருந்து பெரும்பாலும் விலகி, இறுக்கம் தளர்ந்த, ஆனால் பேசும் பொருளில் மிகச் சரியாக மையம் கொண்ட உரைநடை அது. பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும், இந்த நூற்றாண்டு அறிவியல் அறிவும், கலைகள் பற்றிய அறிமுகப் பார்வையும், நாசூக்கொழித்து, ஏகடியத்தை அதைவிட உக்கிரமாக எதிர்கொள்ளலுமாக, பத்தி எழுதவரும் இன்னும் பலரையும் இன்றுவரை பாதித்துவருபவை அந்தப் பக்கங்கள். கிண்டல் விமர்சனம் செய்த ஒரு வாசகரை இருப்பதில் பெரிய லாரியாகப் பார்த்து குறுக்கே விழச் சொல்லி எழுதியதும், முடிச்சவிழ்க்க வரச் சொல்லி இன்னொரு எழுத்தாளருக்கு அழைப்பு விடுத்ததும், இன்னும் பல விதங்களில் மருவி வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஈசனை ஈசலாக்கி, ‘Zoom கேமிரா கோணம்’ என்று எழுதியதை ‘2000 காமிரா’க் கோணமாக்கிக் கணையாழியில் அச்சுக் கோத்த கம்பாசிட்டர் ரகளை செய்தாலும், அதுவும் கடைசிப் பக்கத்தின் ரசனைக்கு அணி சேர்த்ததாகவே கருதி அப்படியே பிரசுரிக்கப்பட்டு எஸ்.ஆரின் பத்தி புத்தகமாகப் பல பதிப்புகள் கண்டாயிற்று.
கடைசிப் பக்கத்தின் நீட்சியான ‘கற்றதும் பெற்றதும்’ வெகுஜனப் பத்திரிகையில் வாராவாரம் தொடராக வந்ததும், ‘ஏன் எதற்கு எப்படி’ என்று ஆகாயத்துக்குக் கீழே இருக்கும் சகலமானதையும் பற்றிய தொடர் கேள்வி பதிலும், அறிவியலும் உயிரியலுமாகக் கலந்து மனித மூளையை மிகச் சரியாக அறிமுகப்படுத்தும் ‘தலைமைச் செயலகம்’ போன்ற எழுத்துகளும், தொடர்கதை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து மிக விலகி இருப்பவை.
சுஜாதாவுக்கு இலக்கிய மதிப்பில்லை என்று பிடிவாதமாகக் குடை பிடிப்பவர்களும், உரைநடை என்ற பெருவெளியில் அவருடைய பங்களிப்பை அங்கீகரித்தே ஆக வேண்டும். இன்று தூக்கி நிறுத்தப்பட்டு நாளை காலாவதியாகிற இலக்கிய மதிப்பீடுகளைவிட நீடித்திருப்பது அந்த ஆக்கம்!
- இரா.முருகன்,
‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: [email protected]

சுஜாதா பிறந்த நாள்: 03.05.1935

 • Ashok Kumar  
  கமலை விட ரஜினியை விட எம் சி ஆரை விட கலைஞரை விட இன்னும் பல அப்பாடக்கர்களை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் இவர் ஒருவரே.
  Points
  3065
  about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     
  • ஆனந்த் ஆனந்த் Owner at Self-Employed 
   இவரின் தலைசிறந்த நாவல்களில் ஒரு நாவலின் பெயர் "எப்பொழுதும் பெண்". பெண்ணாக பிறந்தவள் இந்த இந்திய சமூகத்தினால் எப்படி ஒரு குறுகிய வட்டத்தில் வளர்க்கப்படுகிறாள், இறுதியில் எப்படி மரித்தும் போகிறாள் என்பதை துக்கம் கலந்த உரைநடையாக சுவைபட எழுதியிருப்பார் பாருங்கள். அதற்காகவே போற்றப்பட வேண்டியவர். நண்பர்களே நேரமிருந்தால் படித்துப் பாருங்கள். பெண்களின் வாழ்க்கை வலிகளை ஓரளவாது அப்போது உணர்ந்து கொள்வீர்கள்.
   Points
   2495
   about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • Mani  
    கதை மட்டுமே படிப்பவர்களுக்குக்கூட அறிவியலையும் அதில் பொதிந்த ஆச்சரியங்களையும் எளிய நடையில் கிரகிக்கவைத்தவர்.
    Points
    555
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Satyaraj N  
     சுஜாதாவின் எழுத்து வீச்சை அவரின் கதைகளைக் காட்டிலும் கட்டுரைகளில்தான் உணர முடிகிறது. அதிலும் அவரின் தனித்தன்மையான உரைநடையானது, 'ஜீனோம்', 'உயிரின் இரகசியம்', 'ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து', 'கடவுள் இருக்கிறாரா', 'நானோடெக்னாலஜி' போன்ற அறிவியல் கட்டுரைகளை அபாரமாக்கி விடுகிறது.
     about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • வெங்கட்ரமணன்  
      சுஜாதா தமிழ் எழுத்தை அடுத்த பல கட்டங்களுக்கு நகர்த்தியவர். தனது ஆழமான விஞ்ஞான அறிவை மிகச் சாதாரணமான நடையில் பாமரனுக்கும் அறிவூட்டும் பணிக்குப் பயன்படுத்தியவர். அவரை ஜெயமோகன் குறைசொல்வது ஒருவகை தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடே. அடே நேரத்தில் மனுஷ்யபுத்திரனால் கொண்டாடப்படுவது எஸ்.ஆருக்கு ஏற்படும் இழுக்கு.
      Points
      7795
      about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
       மற்ற கதாசிரியர்கள் உபயோகிக்க தயங்கும் நிறைய ஆபாச வார்த்தைகளை சுலபமாக எழுதி இளைஞர்களை கவர்ந்ததில் சுஜாதா வெற்றிபெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்...இன்னும் அந்த "மெக்சிகோ சலவைக்காரி" விடுகதைக்கு விடை சொல்லாமலேயே சென்று விட்டார்..
       Points
       960
       about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       • Mannan Mannen  
        எழுத்தாளர் சுஜாதா பற்றி விவரித்து எழுத இன்று ஒரு நாள் போதாது .......அவர் ஒரு சிறுகதையில் எழுதி இருபார் " ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்று அவரை காண வீடு வரவேற்பறையில் அமர்ந்து இருந்த பொழுது இவர் எதிரே உள்ள டீபாய் அடியில் ஒரு நாய் வந்து அமர்ந்து கொண்டு இவரை உற்று நோக்கும் ...இவர்க்கு (அந்த காதபாதிரதிர்க்கு ) அது அவரை இண்டரிவு செய்த அதிகாரி பார்த்த பார்வையை நினைவு படுத்தியது என்று எழுதி இருப்பார் ......மேலும் அவர் கதைகளில் கடிதம் எழுதி இருப்பார் இது போன்று சொல்ல வந்த விசியத்தை மிக மிக கனகச்சிதமாக கடிதம் இருக்கும் .....அந்த கடிதங்களை பல முறை படித்து படித்து வியந்து இருக்கிறேன் ......அனைத்து விசியங்களையும் இலேசாக தொட்டு கதையை விரைவாக நகர்த்தி கொண்டு செல்வார் ....சில விசயங்கள் படிபவர்க்கு முற்றிலும் தெரியாத விசயமாக இருக்கும் ....படிக்கும் வாசகரை சிந்தனையை வளர்த்தார் இதன் முலம் ....அவருடையே கட்டுரைகளில் call centre BPO போன்ற விசியங்கள் இந்தியாவில் வரும் பல வருடம் முன் சொன்னார் ....Sujatha சார் Great M
        Points
        24265
        about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • S Kalyanasundaram  
         கதையோ கட்டுரையோ எதுவானாலும் எவ்வளவு ஆண்டுகள் கழித்து மறுமுறை படித்தாலும் அதனுடைய சுவையோ வீச்சோ குரையெவெ இல்லை. என்ன ஒரு அற்புதமான படைப்பு. No doubt he was a trend setter.

        0 comments: