Thursday, May 21, 2015

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 2

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 2


மூலம்: ராஜிவ் மல்ஹோத்ரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு
தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்
முந்தைய பகுதி
தொடர்ச்சி…
சுவாமி நித்யானந்தருக்கான நெருக்கடியைப் பற்றி ஆராய நான் மேற்கொண்ட ஆய்வுமுறையை இப்போது விளக்குகிறேன். அதற்குப் பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். எனது நிலைப்பாட்டினை கீழ்கண்ட அளவுகோல்களின் அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டிருக்கின்றேன்.
1. ஹிந்து மதத்தின் மீதான இந்த நெருக்கடியின் தாக்கம்
2. எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு இதனால் விளைய உள்ளப் பயன்கள் மற்றும் ஊறுகளின் ஒப்பீடு
3. வழக்கின் சட்டரீதியான பலம்
4. இந்த விவகாரத்தில் தங்களுக்கே இறுதி வெற்றி என்று ஊடகங்கள் மிதப்பு கொள்ள முடியுமா என்ற கேள்வி.
இவை ஒவ்வொன்றையும் விளக்க முயல்கின்றேன்.
1. ஹிந்துமதத்தின் மீதான இதன் தாக்கம்:
ஹிந்து விரோதிகள் திட்டமிட்டு சதி செய்து ஹிந்துமதத்தின் உதாரண புருஷர், சின்னம், கிரியை(சடங்கு), விழா, குரு, சித்தாந்தம் ஆகியவற்றில் எதையேனும் வீழ்த்தும் ஒவ்வொரு சமயத்திலும் பெரும் நாசம் விளைகிறது என்பதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். இடதுசாரிகள் உள்ளிட்ட மாற்று மதத்தினர் தமக்குள் சிக்கல்கள் வருகின்ற போது அடுத்தவர்கள் உள்ளே நுழைந்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிக்காமல் தாமே தமக்குள்ளே சிக்கல்களை தீர்த்துகொள்கின்றனர். ஹிந்துக்களும் இந்தக்கலையை விரைந்து கற்றுக்கொள்ளவேண்டும். இந்த ஒரே அளவுகோலை மட்டுமே கொண்டு கூட நான் சுவாமி நித்யானந்தரை ஆதரிப்பேன். அவரது எதிரிகள் எல்லோரும் ஹிந்துவிரோத பின்னணியைப் பின்புலத்தினை கொண்டவர்கள். ஆகவே இங்கே ஹிந்துக்கள் தமது ஒற்றுமை செய்தியை உறுதியாக சொல்லவேண்டி இருக்கிறது.
nithyananda_doing_homa_arati
2. எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு விளையும் பயன்கள் மற்றும் ஊறுகளின் ஒப்பீடு:
சுவாமி நித்யானந்தரின் போதனைகளால் பயன்பெற்ற பலரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவரது சீடர்களாக இல்லாதவர்களுக்கு அவரது போதனைகளை பற்றி கருத்து சொல்வதற்கு உரிமை இருந்தாலும் கூட அவற்றை மதிப்பீடு செய்வதற்கு தகுதியோ அருகதையோ கிடையாது. ஏன் என்றால் நம்முடைய ஹிந்து பாரம்பரியமே அனுபவத்தையே (அனுபூதி) சிரமேற்கொண்டு முக்கியம் என்கிறது. சுவாமியால் பயனடைந்தவர்களை இந்த விமர்சகர்கள் ஏமாற்றிவிட முடியாது. தங்கள் பக்கம் இழுத்துவிட முடியாது. இறுதியான ஆதாரம் அவரது ஆன்மிக முறைகளை, நுட்பங்களைப் பயன்படுத்திப் பார்த்தவர்களின் உள்ளார்ந்த கருத்துக்களாகத் தான் இருக்க முடியும். பயன்களை பாதகங்களோடு அளவிடுவது ஒப்பிடுவது அவசியம்தான். ஆனால் இன்றைக்கு ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டுமே நீதிமன்றத்தில் மிச்சம் இருக்கிறது. அதுகூட நம்பத் தகுந்ததாக இல்லை என்பது அடுத்து விளக்கப் படுகிறது. எனவே சுவாமி நித்யானந்தரால் தமது சேவையின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு நற்பயன்களை தரமுடியும். அவர் தீங்கு விளைவித்தார் என்ற வாதம் நிரூபிக்கப்படாமல் தவிடுபொடியாகி விட்டது. அவரிடம் பயன்பெற்ற ஏராளமான மக்கள் அவற்றை சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால் ஊடகங்கள் அவர்களது குரலை வெளியிட மறுத்து வருகின்றன. ஒற்றைப் புகாருக்கு மட்டும் ஊடகத்தின் வலுவான ஆதரவு கிடைத்துக்கொண்டிருக்கிறது. இது அபத்தமோ அபத்தம்.
3. வழக்கின் சட்டரீதியான பலம்:
திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தர் பாலுறவு கொண்டதை காட்டுவதாக சொல்லப்பட்ட வீடியோவை நூறு சதவீதம் அடிப்படையாகக் கொண்டு 2010இல் சொல்லப்பட்ட புகாரே நித்யானந்தர் மீதான முதல் தாக்குதலாகும். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்குவதற்காகவும் வழக்கு பதிவு செய்வதற்காக காவல்துறையின் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் பட்டது. ஆனால் இந்த வழக்கு உடைந்துபோனது. இந்த வீடியோ உருமாற்றம் செய்யப்பட்டது என்று அமெரிக்காவில் உள்ள தடயவியல் ஆய்வகங்கள் அறிவித்துவிட்டன.
இன்றும் ரஞ்சிதா நித்யானந்தரின் ஆசிரமத்திலே பக்தையாக வாழ்ந்துவருகிறார். அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை நிகழ்ச்சிகளை எல்லாம் மறுத்து விட்டார். அவரது வழக்குறைஞர்கள் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பலர்மீது வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சுவாமி நித்யானந்தருக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது. அவருக்கு எதிராக பொய்யான புகார்கள் அடிப்படையில் அவப்பெயரை உண்டாக்க முனைந்த ஒருவருக்கு அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்தது அந்த நீதிமன்றம்.
ஆகவே, இப்போது ரஞ்சிதாவை குறிப்பிடுவதை ஊடகங்கள் நிறுத்திவிட்டன. ஏன் என்றால் அவர்களது அத்துனை பரபரப்பு செய்திகளும் பொய்யான புகார்கள் என்று நிரூபணமாகி விட்டன. ஊடகங்களே, நீங்கள் குற்றம் சுமத்துவீர்கள் ஆனால் அது பொய்யென்று நிரூபிக்கப்பட்டாலும் கூட செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்புகேட்கும் அடிப்படை நாகரீகம் கூட உங்களுக்கு இல்லையே.
ஏன் அவர்கள் ரஞ்சிதாவை தொலைக் காட்சிகளில் காட்ட வேண்டும்? அவரது பாதிக்கப்பட்ட தன்மை இங்கே தீனியாக ஊடகங்களுக்குப் பயன்பட்டது. அதற்கு பரிகாரமாக அவரது மறுப்பு சுதந்திரமானவர்களால் பேட்டி எடுக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். அவரது பக்கத்தின் கருத்தும் முக்கியமானதாகும்.
சுவாமி நித்யானந்தரின் வழக்குறைஞர்கள் உச்ச நீதிமன்றத்தினை அணுகி இந்த வழக்கு நெடுங்காலமாக இழுத்தடிக்கப் படுகிறது என்று முறையிட்டதால் இப்போது காவல்துறையின் ஆங்காரம் கிளர்ந்து எழுந்திருக்கிறது. எந்த உறுதியான ஆதாரங்களும் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் காவல்துறையால் சமர்பிக்கப் படவில்லை. அவர்களது மெத்தனப் போக்கினை சோம்பலை நீதிமன்றம் கண்டித்தது. அதனால் தான் காவல்துறை திடீரென அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. காவல்துறை பழிவாங்கும் போக்கைக் கடைப்பிடிக்கலாமா?
இப்போது வேறொரு பெண்மணி குற்றச் சாட்டுகளோடு கிளம்பிவிட்டார். காவல்துறையிடம் புகார் கொடுத்த ஒரே ஒருவர் இவர்தான். இதுபற்றிய சில தகவல்கள் எனக்கு கிடைத்தன. குற்றச்சாட்டுகள் எல்லாமே போலியானவை மோசடியானவை என்பது மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிகின்றது. முதலில் தான் கற்பழிக்கப் பட்டதாக அவர் சொன்னார். பின்னர் அதற்குபிறகு ஏன் நீங்கள் அவரோடு தொடர்ந்து ஏறத்தாழ பத்து ஆண்டுகள் (இந்தக் காலத்தில் தான் கற்பழிப்பு நடந்ததாக சொல்லப்பட்டது) பயணம் செய்தீர்கள் என்று கேட்டபோது அவர் கதையை மாற்றி சொன்னார். அவரது சமீபத்திய கதை நடந்தது கற்பழிப்பு அல்ல, ஒத்துக்கொண்ட உறவே என்பது. அப்படியானால் அதை எப்படி வல்லுறவு குற்றமாக கருத முடியும்.
மிக முக்கியமானது: அமெரிக்க மருத்துவர்களிடமிருந்து அந்த பெண்ணின் மருத்துவ பதிவேடுகள் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவருக்கு தீராத தொற்றும் தன்மையுள்ள பால்வினை நோய் கடந்த பத்து ஆண்டுகளாக இருப்பது இந்த பதிவேடுகளிலிருந்து புலனானது. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் எப்போதாவது இவரோடு உடல் உறவு வைத்திருந்தால் அந்த நோய் அவருக்கும் நிச்சயம் பரவியிருக்கும். ஆனால் சுவாமி நித்யானந்தரின் மீதான மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு எந்த பால்வினை நோயும் இல்லை என்றே சொல்கின்றன. குற்றம் சாட்டியவருக்கு எள்ளளவும் நம்பகத்தன்மை இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
4. இந்த விவகாரத்தில் தங்களுக்கே இறுதி வெற்றி என்று ஊடகங்கள் மிதப்பு கொள்ள முடியுமா?
ஊடகங்கள் தங்கள் இஷ்டப் படி சில உண்மை தகவல்களையும் பொய்களையும் வெட்டியும் ஒட்டியும், தமது யூகங்களை கலந்தும், எதிர்க் குரல்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தும், பல சிக்கல்களுக்கு தாமே பூதாகாரமான முடிவுகளை அறிவிப்படை வழக்கமாகக் கொண்டுள்ளன. பெரும்பாலான இந்திய ஊடகங்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் நுண்ணறிவுத் திறனோ நேர்மையோ கிடையாது. இந்த விவகாரத்தில் அவர்களுக்கு தார்மீக வெற்றியை அளிக்க நான் தயாராக இல்லை. மாறாக, இந்த தாக்குதலே ஹிந்து குரு மரபுகளுக்கும் ஊடகங்களுக்குமான ஒரு பெரும் கருத்தியல் போர் என்றே கருதுகிறேன். இப்போது அதிர்ஷ்டவசமாக நமக்கு இந்த ஊடகங்களின் செயல்பாடுகளை மறுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் இணையமும், சமூக வலைத்தளங்களும் இருக்கின்றன. ஆனால், இந்த ஊடகக் காரர்கள் தம் பழைய அடாவடித் தனத்திலும் ஆடம்பரத்திலும் திமிரிலும் வாழ்கிறார்கள். இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
ராஜீவ் மல்ஹோத்ரா
ராஜீவ் மல்ஹோத்ரா
முடிவுரை:
இந்த விவகாரத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் தீர விசாரித்து பகுப்பாய்வு செய்து முடிவுகளுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய மதிப்பீடு எப்போதும் எளிதானதாக இருப்பதில்லை. பல்வேறு காரணிகளை ஆராய வேண் டும் தான், ஆனால் அவர் இந்த கருத்தியலை போதிக்கிறார், அந்த சம்பிரதாயத்தை பின்பற்றுகிறார் அல்லது பின்பற்றவில்லை என்பதெல்லாம் இங்கே கணக்கில் கொள்ளத் தேவையில்லை. அர்த்தமற்ற அடிப்படைகளில் சிலபேர் அவரை எதிர்க்கிறார்கள். நீங்கள் அவரது சடங்குகளை, தியான முறைகளை, உடை அலங்காரங்கள் போன்றவற்றை எதிர்க்கிறீர்கள் என்றால் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். (அதன் அடிப்படையில் அவர் தீயவர், ஒழித்துக் கட்டப் பட வேண்டியவர் என்றெல்லாம் கருதுவதும் வாதம் செய்வதும் அபத்தம்) நம்முடைய மதச் சின்னங்களையும் கிரியைகளையும் சடங்குகளையும் எல்லாம் நான் மிகவும் நேசிக்கின்றேன். அவற்றையெல்லாம் யக்ஞம் என்றே கருதுவேன். அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் நிகழ்த்தும் அற்புத நாடக மேடை என்றே அவற்றை நான் புரிந்து கொள்கிறேன். நித்யானந்தருக்கு எதிராக இத்தகையவர்கள் முன்வைக்கும் வாதங்களை படிக்கும் போதெல்லாம் அவர்களின் அறியாமையே வெளிப்படுவதை உணர்கின்றேன்.
அன்புடன்
ராஜிவ்
(ராஜிவ் மல்ஹோத்ரா அமெரிக்கா வாழ் இந்தியர்.  கார்ப்பரேட் துறையிலும், தொழிலதிபராகவும் வெற்றிகளை  ஈட்டியபின், கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்துப் பண்பாட்டுப் பாதுகாப்பு, இந்து மத அமைப்புகள் இந்து கலாசார ஆய்வுகள் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  முக்கியமான சமகால இந்து சிந்தனையாளராக  அறியப் படுகிறார். Breaking India (with Aravindan Neelakandan as co author), Being Different, Indra’s Net உள்ளிட்ட முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார்)

thanx = the hindu

0 comments: