Tuesday, May 19, 2015

புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”

‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”


ண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிஇந்துப் பெண்களின் மங்கலச் சின்னமான தாலியை அவமதிக்கும் வகையில் ஒரு விவாத நிகழ்ச்சியை அறிவித்து, பிறகு எதிர்ப்புகள் மிகவும் வலுக்கவே, அதன் ஒளிபரப்பை ரத்து செய்தது .  இந்த பின்னணியில் புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது  நிகழ்த்தப் பட்ட டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  இதில்  ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், பாஜக தேசியப் பொருளாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகிய தலைவர்கள்  இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
puthiya_thalaimurai_tiffin_box_bomb_newsஇது தொடர்பாக சமூக வலைத் தளங்களில் தெரிவிக்கப் பட்ட சில கருத்துக்களை இங்கு தொகுத்தளிக்கிறோம்.
ஹர்ஷ் தமிழ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்:
தமிழகத்தில் ஒரு சில “இந்து” அமைபுகள் இருக்கின்றன. இவையெல்லாம் சில்லறை விளம்பரத்திற்காகவும், பணத்துக்காகவும் இயங்கக் கூடியவை. சில கிறிஸ்தவ நிறுவனங்களாலும், சில இஸ்லாமிய நிறுவனங்களாலும், சில திராவிடக் கட்சிகளாலும் ”சோறு” போட்டு வளர்க்கப்படுபவை.
தமிழகத்தில் உண்மையான ஹிந்துத்துவம் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவும், பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களைச் சோறு போட்டு வளர்க்கும் நிறுவனங்களும் திராவிடக் கட்சிகளும் என்ன செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறார்களோ அவற்றை சிரமேற்கொண்டு செய்யக்கூடியவை இந்த சில்லறை அமைப்புகள்.
ஆர்.எஸ்.எஸ், வி.ஹி.ப மற்றும் இந்து முன்னணி போன்ற நேர்மையான, பண்பாடு மிக்க, உண்மையான தேசபக்தி கொண்ட ஹிந்து அமைப்புகள் ஜனநாயக முறையில் கையிலெடுக்கும் போராட்டங்களை இடையில் புகுந்து கெடுத்து நீர்த்துப்போகச் செய்வது; தேர்தல் சமயங்களில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் தாங்களும் திராவிடக் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தி ஹிந்து வாக்குகளைப் பிரிப்பது; பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் களத்தில் வேலை செய்வது; ஆகிய துரோகச் செயல்களில் ஈடுபடுவது இந்தச் சில்லறை அமைப்புகளின் வழக்கம்.
“இந்து கலாச்சாரத்தைக் காப்பாறுகிறோம்” என்று கூறிக்கொண்டு மட்ட ரகமான தரம் குறைந்த போராட்டங்களை அறிவிப்பது; உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு மஹாராஷ்டிர பாஜக-சிவசேனா அரசுக்கு எதிராக சென்னை ராஜ்பவன் கவர்னர் மாளிகை முன்பு மாடு அறுக்கும் போராட்டம் அறிவித்தபோது, அதற்கு எதிராக பன்றி அறுக்கும் போராட்டம் அறிவித்ததைச் சொல்ல்லாம்.
இவர்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஹிந்து விரோத சக்திகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றன இந்தச் சில்லறை அமைப்புகள்.
இந்தப் பின்னணியில்தான் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் குண்டு வீசியதாக்க்கூறி சரணடைந்தவரின் அமைப்பையும் நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகள் இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய சூனியா அரசு, “காவி பயங்கரவாதம்”, “இந்து பயங்கரவாதம்” என்று இல்லாத ஒன்றை, தேச விரோத ஊடகங்களின் உதவியுடன் கட்டமைத்துள்ளது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த சோரம் போன சில்லறை அமைப்புகள் நடந்துகொள்கின்றன.
தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. எனவே அதற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிடாமல் செய்யவும், இனி இந்த சில்லறை அமைப்புகளின் ஆட்டம் அதிகமாக இருக்கும். தேச விரோத ஹிந்து விரோத ஊடகங்களும் ஹிந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கும்.
இந்த சில்லறை அமைப்புகள் நமக்கு ஆபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரியான சில்லறை அமைப்புகளை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும்.
*********
ஜடாயு  தனது  ஃபேஸ்புக் பக்கத்தில்:
‘தாலி’ ஒரு சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தச் சர்ச்சைகளில் உண்மையிலேயே ஏதாவது சாரமிருக்கிறதா என்று பார்க்கலாம்.
thaali_mangalsutra1. மங்கல நாண் அணிவது தொன்மையான இந்துக் கலாசாரமே அல்ல. சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரத்தில், வேதங்களில், இதிகாசங்களில் அது பற்றி எதுவும் இல்லை என்கிறார்கள் சில “ஆய்வாளர்கள்” (என்னவோ மற்ற எல்லா விஷயங்களையும் இந்த நூல்களில் உள்ளதா என்று பார்த்துத் தான் செய்வது போல). சரி, ஒரு வாதத்திற்காக அது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அதன் அடிப்படையில் தாலியை அவமதிக்கவோ, விலக்கவோ வேண்டும் என்று வாதிடுவது, அதுவும் இந்து எதிர்ப்பாளர்கள் அவ்வாறு பேசுவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. நமது இன்றைய இந்துக் கலாசாரம் என்பது பல நூற்றாண்டுகளாக பரிமணித்து பல்வேறு கூறுகளை இணைத்துத் தொகுத்து வளர்ந்திருப்பது. அதிலுள்ள நல்ல கூறுகளை, அவை பிற்காலத்தவையாக இருந்தாலும் ஏற்பதும், தீய கூறுகள் பழமையானதாக இருந்தாலும் நிராகரிப்பதுமே ஆரோக்கியமான வழிமுறையாகும். இந்து மதத்தின் டி.என்.ஏவிலேயே இந்த இயைபுத் தன்மை (adaptability) உள்ளது.
மேலும் பொதுயுகம் 5-6ம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட பல நூல்களில் தாலி / மங்கல நாண் பற்றிக் குறிப்புகள் உள்ளன. லலிதா சகஸ்ர நாமத்தில் “காமேஸ்வரன் கட்டிய மங்கல நாண் அழகு செய்யும் கழுத்துடையவள்” (காமேஶ ப³த்³த⁴ மாங்க³ல்ய ஸூத்ர ஶோபி⁴த கந்த⁴ரா) என்றே ஒரு திருப்பெயர் உண்டு. “மன்றின் மணி விளக்கெனலா மருவு முக நகை போற்றி – ஒன்றிய மங்கல நாணின் ஒளி போற்றி” என்பது சிவகாமியம்மை துதி (காஞ்சிப் புராணம்). தாலியை இந்து சமூகம் திருமண உறவின் மங்கலச் சின்னமாக, புனிதமானதாக குறைந்தது 15 நூற்றாண்டுகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒன்றே அதை மதிப்பதற்கும் கட்டிக் காப்பதற்கும் போதுமானது. அதற்கு மேல் வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை.
2. எதிர்மறை அம்சம் என்ற வகையில் கணவனை இழந்த பெண்கள் தாலியை சடங்குரீதியாக அறுப்பது என்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது என்று சொல்லப் படுகிறது. அது உண்மை தான். ஆனால் இறப்பு தொடர்பான எல்லா சடங்குகளுமே அந்த வகையானவை தான்; உற்றவரின் மரணம் என்ற மாபெரும் இழப்பை சகித்துக் கொண்டு அதிலிருந்து படிப்படியாக மீண்டு வர உளவியல் ரீதியாக மக்களைப் பக்குவப் படுத்துபவை அவை. அந்த சடங்குகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் அவற்றை செய்கிறார்கள். கட்டாயமில்லை. மன முதிர்ச்சியுடன், புரிந்துணர்வுடன் அவற்றை அணுக வேண்டும்.
கசந்து போன திருமண உறவில், பிரிந்து வாழும் பெண் ஏன் அனாவசியமாக தாலியை சுமக்க வேண்டும் என்று கேட்கப் படுகிறது. அந்த சூழலில் தாலியை அணிவதும் விலக்குவதும் சம்பந்தப் பட்ட பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதில் எந்த விதக் கட்டாயமும் இருக்கக் கூடாது, நடைமுறையில் அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை.
இந்த எதிர்மறை அம்சங்களைக் காரணமாகக் காட்டி, தாலி என்ற மங்கலச் சின்னத்தையே ஒட்டுமொத்தமாக மறுதலிப்பது தர்க்கபூர்வமானது அல்ல. இத்தகைய வாதத்தை வைத்து அறிவியலை, கல்வியை, ஜனநாயகத்தை எல்லாவற்றையுமே மறுதலித்து விட முடியும்.
3. நமது சமுதாயம் தனது விருப்பதற்குரிய மரபுகளைக் கூட காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற பல மாறுதல்களுடன் தான் கடைப்பிடித்து வருகிறது. தாலிக்கும் அது பொருந்தும். மஞ்சள் கயிறு, சங்கிலி, தாழ்வடம் என்று பலவிதங்களில் கோர்த்து இந்துப் பெண்கள் மங்கல நாணை அணிகிறார்கள். இந்த அணிகலன் சிறியதாக கழுத்தில் அணியப் படுகிறதே அன்றி இஸ்லாமியப் பெண்களின் கருப்பு பர்தாக்கள் போல நடைமுறையில் பெண்களின் ஆரோக்கியத்திலோ, அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதிலோ அல்லது பணிச்சூழலிலோ எந்த விதமான இடையூறுகளையும், தேவையற்ற கவன ஈர்ப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.
எனவே தாலியின் மீது அநாவசிய வெறுப்பை உருவாக்குவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் படும் வெறுப்புணர்வுப் பிரசாரம் என்றே கருத இடமிருக்கிறது.
நிற்க.
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது நடந்த அதிபயங்கரமான “குண்டுவெடிப்பு தாக்குதல்” இன்றைய தி கிண்டுவின் எல்லா தேசிய பதிப்புகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. முதல் பக்கத்தில் பாதிக்கு செய்தி, ஒரு தலையங்கம், நடுவில் ஒரு முழுப் பக்கதிற்கு வழக்கமான தி கிண்டு பாணி மசமச வளவளா கட்டுரைகள்.. அலுவலக காம்பவுண்டில் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாத பட்டாசு சத்தம் கேட்டு ராத்திரி ஐயோ அம்மா என்று திடுக்கிட்டு எழுந்த வாட்ச்மேன்களின் பெயர்களைக் கூட முதல் பக்கத்தில் போட்டு செய்தி ஊடக வரலாற்றில் புதிய புர்ச்சியை செய்து விட்டிருக்கிறது தி கிண்டு.
இந்த “தாலி தேவையா” கழிசடை விவாதம் “புதிய தலைமுறை”யின் ஒரு மூன்றாந்தரமான பரபரப்பு உத்தி. அதை இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கருத்தியல் ரீதியாக கண்டனம் செய்வது மிகச் சரியான வழிமுறை. அதோடு, அந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களிடம் நேரடியாகப் பேசி இதனால் அவர்கள் பொது மக்களிடத்தில் மதிப்பிழப்பது பற்றி எச்சரிக்க வேண்டும்; மீறினால் அவர்களது தயாரிப்புகளைப் புறக்கணிக்கக் கோரி பிரசாரம் செய்யவும் வேண்டும்.
ஒரு பம்மாத்து டிவி நிகழ்ச்சிக்கு எதிராக சில லெட்டர்பேடு இந்துப் பெயர்தாங்கி இயக்கக் கோமாளிகள் வீராவேசமாக “வெடித்து” கிளம்புவதே பெரிய காமெடி என்றால் புதிய தலைமுறை, தி கிண்டு போன்ற ஊடகக் கோமாளிக் கயவர்கள் அதை முன்வைத்து நடத்தும் கூத்துகள் அதைவிடப் பெரிய காமெடியாக இருக்கின்றன.
islam_jihad_burqa_women_slaveryஒரு சார்லி ஹெப்டோவாக ஆக முடியாவிட்டாலும், எப்படியாவது ஏதாவது கருத்து சுதந்திர தியாகியாக மாறியே தீரவேண்டும் என்று உங்களுக்கு உள்ளூர ஆசை இருக்கிறது என்பது புரிகிறது.. ஆனால் இதுவா அதற்கான வழி? அதற்கு நேரடியான எளிதான வழிகள் நிறைய இருக்கிறதே – பர்தா என்னும் இருட்சிறைக்குள் இஸ்லாமியப் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது, தமிழ் மரபின் நெறிகளுக்கு எதிராக ஹலால் என்ற குரூரமான முறையில் மிருகங்களை வெட்டி கசாப்பு போடுவது, பெண்ணுரிமைகள் அனைத்தையும் கடாசி விட்டு தலாக் முறையில் விவாகரத்து செய்வது – இந்த அதிமுக்கியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் ஏன் விவாதம் நடத்தி அதை ஒளிபரப்பக் கூடாது? குரானிய வசனங்களின் ரத்தக் களரியைப் பற்றி, இஸ்லாமிய வரலாற்றின் கொள்ளைகளை, குரூரங்களை, வன்புணர்வுகளைப் பற்றி ஏன் நிகழ்ச்சிகள் தயாரிக்கக் கூடாது?
மேற்சொன்னவற்றைச் செய்யுங்கள். உடனடியாக நீங்கள் விரும்பியது நடக்க மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்போது அதற்கான தகுதியும் கூட உங்களுக்கு வந்ததாக ஆகும். அட, அவ்வளவு பெரிய கருத்து சுதந்திர வீரப் புகழுக்காக சில அடிகளையும் உதைகளையும் வெட்டுகளையும், சில உண்மையான சின்ன குண்டுவெடிப்புகளையும் கூட உங்களால் சகிக்க முடியாதா என்ன?
அதை விட்டுவிட்டு தாலியை அவமதிக்கத் துடிக்கிறீர்களே தறுதலைகளே – உங்களுக்கு வெட்கமாயில்லையா? தமிழகத்தில் பூ விற்கும் பெண்கள் முதல் புகழின் உச்சியில் இருக்கும் உயரதிகாரிகள் வரை மதித்து அணியும் மங்கலச் சின்னமான தாலி. தங்கள் உழைப்பிலும் பண்பிலும் உண்மையாக நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் மதித்து அணியும் தாலி. கட்டாயத்தின் பேரில் அல்ல, உள்ளார்ந்த அன்பினாலும், பாசத்தினாலும் கலாசார உணர்வாலுமே உந்தப் பட்டு தமிழ்ப் பெண்கள் மனமுவந்து அணியும் ஒரு அணிகலன். அது *அவசியமா* என்று கேட்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்? தாலியைப் போன்ற ஒரு பண்பாட்டு அடையாளத்தை அருவருக்கத் தக்க வகையில் பொது நிகழ்ச்சியில் அவமதிப்பதன் மூலம் என்ன பெரிய எழவுப் புரட்சியைக் கொண்டு வரப் போகிறீர்கள்?
உங்கள் ஊடக போலித் தனத்தின் அவலட்சணத்தைப் பார்த்து ஊரும் உலகமும் சிரிக்கிறது. அதையாவது உணருங்கள் அறிவிலிகளே.
************
 நம்பி நாராயணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்:
இந்த டிபன் பாக்ஸ் குண்டு வழக்கில் தற்போது சரணடந்து கைதாகி இருக்கும் ஜெயம் பாண்டியனின் பின்புலம் பற்பல சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. இந்த நபர் கோவை பெரியகடை வீதியில் உள்ள சான்மா காம்ப்ளெக்ஸ் இல் ஜெயம் டிவி என்கிற பெயரில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி வந்தவர். அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 25 லட்சம் ரூபாயை செலுத்தாமல் டிவியை பூட்டி கொண்டு தலைமறைவானவர். தற்போது சென்னை கோயம்பேட்டில் ஜெயம் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்திவருபவர். இவர் இல்லாத கட்சிகளே இல்லை எனலாம். திமுகவில் இருந்திருக்கிறார். பிறகு நாம் தமிழர் கட்சியில் இணைந்து மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்திருக்கிறார். அதன்பின் இந்து மக்கள் கட்சியில் பணியாற்றிவந்துள்ளார். இவரது இந்து இளைஞர் சேனா துவக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆகின்றன. யாருடைய பின் புலத்தில் இவர் இந்த இயக்கத்தைத் துவக்கினார் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
சம்பவம் நடந்து ஏழு மணிநேரத்தில் இவர் மதுரையில் சரண் அடைந்து இருப்பது சந்தேகம் வருகிறது. தனது இயக்கத்தின் பெயர் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மதுரையில் சரணடந்ததாக இவர் தெரிவிப்பது ஆச்சர்யமாக உள்ளது. எங்கே எப்போது யாரால் அப்படி அறிவிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இவரது கோயம்பேடு அலுவலத்தில் இருந்த ஐவரும் கூட கைதாகியுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையோடு பிரச்சனை முடிந்ததாகக் கருத இடமில்லை. காரணம் இதில் அடங்கியுள்ள மர்மங்களும் சந்தேகங்களும் தான்.. தற்போது பிரச்சனையில் நான்கு தரப்பினர் உள்ளனர். முதலாவது, 2000 தொலைபேசி எதிர்ப்புகளுக்குப் பிறகும், முக்கிய ஹிந்துத்வ பிரமுகர்களின் வேண்டுதலுக்குப் பிறகும் நிகழ்ச்சியை நடத்துவது என பிடிவாதமாய் இருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி. இரண்டாவது இவர்களின் உணர்வுகளை மதிக்காத போக்கால் வெகுண்டு எழுந்த ஹிந்துத்வ இயக்கங்கள். மூன்றாவது காவல்த்துறை. நானகாவது இந்த நிகழ்வுகளால் குளிர்காய நினைக்கும் பல மதவாத வகுப்புவாத இனவாத அமைப்புகள். இந்த நால்வரில் காவல்த்துறை மீது புதியதலைமுறை தனது ஊடகவலிமையால் தாக்குதல் செய்ய காவல்த்துறையும் நிலை தடுமாறி தேவையற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இரண்டாவதான, நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த முக்கிய ஹிந்து இயக்கம், ஒரு சாதாரண எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏதோ ஒரு மாபெரும் தாக்குதல் போன்று நாடகமாடி மக்கள் அரங்கில் அரேங்கேற்றிவிட்ட புதியதலைமுறையின் பொய் பிரசாரத்தை எப்படி எதிர் கொள்வது என திட்டமிட்டு வருகிறது. ஹிந்து பரிவார் இயக்கங்கள் என்றுமே வன்முறைகளில் ஈடுபட்டதில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. இதுவரை காங்கிரஸ் தலைமையில் இதர சிறுபாண்மை ஆதரவு ஹிந்து விரோத கட்சிகளால் புனையப்பட்ட ” ஹிந்து பயங்கரவாதம் ” என்ற சொல் எங்குமே நீடித்த வெற்றி பெறவில்லை. ஆக, மொத்த சந்தேகங்களும் மூன்றாவதும் நான்காவதுமான புதியதலைமுறை மீதும், இச்சம்பவங்களால் குளிர்காய நினைக்கும் மதவாத வகுப்புவாத இயங்கங்கள் மீதும் தான் படிகின்றன.
அது எப்படி புதிய தலைமுறையே அப்படி ஓர் காரியம் செய்ய முனையும், இதர கட்சிகள் அதற்கு உடன்பட முடியும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆனால் சமீபத்திய ஹிந்துத்வ எதிர்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் செயல்களும், அவற்றிற்கு ஆதரவாக பல ஊடகங்கள் சதி செய்து வந்ததும், வருவதுமான வரலாறு இந்த ஐய்யபாடுகளில் உள்ள நியாயத்தை உணர்த்தும்.
 (தொடரும்)

0 comments: