Thursday, February 12, 2015

NOBODY WANTS THE NIGHT (2015) - சினிமா விமர்சனம் (உலக சினிமா)

65வது பெர்லின் உலகப் திரைப்படவிழாவில் வெள்ளியன்று சிகப்புக் கம்பள வரவேற்பில் ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் வழங்கும் நடிகை நிகோலே கிட்மேன். (படம்: ராய்ட்டர்ஸ்)
65வது பெர்லின் உலகப் திரைப்படவிழாவில் வெள்ளியன்று சிகப்புக் கம்பள வரவேற்பில் ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் வழங்கும் நடிகை நிகோலே கிட்மேன். (படம்: ராய்ட்டர்ஸ்)
பெர்லின் திரைப்பட விழா நடைபெற்று வரும் பெர்லினேலேவில் பத்திரிகையாளருக்கான திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறந்த பல படங்களைப் பார்க்க முடிந்தது. போட்டியில் பங்கேற்க வந்திருந்த உலகப் படங்களைப் பார்க்கும் முதல் பார்வையாளர்களாக நாங்கள் இருந்தோம். இவ்விழாவில், பெண்களுக்கு பிடித்த படமாக சொல்லப்படும் ஹெர்சாக்கின் 'பிட்சரால்டோ' திரையிடப்படுவதாக இருந்து பின்னர் அவரது புதிய படமான 'குயின் ஆப் த டிசர்ட்' திரையிடப்பட்டது.
வியாழன் அன்று முதல் நாள் விழா திரைப்படமாக இசபெல் காய்செட்டின் 'நோபடி வான்ட்ஸ் தி நைட்' அமைந்திருந்தது. இப்படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த படம். இதில் ஜோஸெபைன் பியரி எனும் முக்கிய பாத்திரத்தில் ஜூலியட் பினோஷே நடித்திருந்தார். வட துருவத்தில் கொடி நாட்டுவதற்காக தொலைதூரம் தனது மனைவியான பியரியை அழைத்துச் செல்கிறான் அவளது கணவன். கணவன் அங்கேயே இருக்க விருப்பப்பட்டால் தானும் அவன் அருகிலேயே தங்கியிருக்கவே அவள் விரும்புகிறாள். கண்ணுக்கெட்டிய தூரம் பனிநிறைந்திருக்கும் ஆர்க்டிக் துருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மிகவும் த்ரில்லானவை.
நட்ட நடு பனிப்பிரதேசத்தில் இருந்துகொண்டு ஜோஸ்பைன் கூறுகிறாள், இங்கு நாம் மேற்குதிசையின் வினோதமான ஒரு உலகில் இருக்கிறோம். இங்கு நம் இஷ்டத்திற்கு எதையும் செய்ய முடியாது. எதை செய்தாலும் நாம் இணைந்துதான் முயற்சிக்கவேண்டும். எதைத் தொடங்குகிறோமோ அதை முடிப்போம் மேலும் அதை நிறைவேற்றுவோம் என்கிறாள். அப்போது காற்று அவளைச் சுற்றிலும் ஊளையிடவில்லை. ஆனால் காற்றின் பற்கள் நறநறவென்று கடிப்பதை நம்மால் உணர முடிகிறது.
ஆனால், பனிச்சரிவுக்குப் பின்னரான ஒரு மோசமான சூழலை, மெல்லிய பனியைக் கடக்கும், மூக்கில் ரத்தம் வரத் தூண்டும் அதிகமான குளிர்உள்ள தட்பவெப்ப நிலையில், முடி உதிரும்படியாக, ஆனால் நல்லறிவு சிறிதும் உதிராததாக, திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு கதை நாயகரை வழிநடத்துபவராக இயக்குநர் இசபெல் காய்செட்டை நாம் காண்கிறோம்.
'பிட்சரால்டோ'வில் ஒரு முக்கிய அம்சமாக, பிரதான கதாப்பாத்திரத்தை பெருவியன் மழைக்காட்டில் உள்ள ஊருக்குக் கொண்டுவந்திருப்பார் அப்படத்தின் இயக்குநர். அக்கதாபாத்திரம் ஓபரா இசையை விரும்புபவராவும் காட்டியிருப்பார்.
இப்படத்திலும் அந்தமாதிரி ஒரு அம்சம் இருக்கிறது. ஜோஸ்பைன் அலாகாவை இனுயீட் இன மக்களின் இடமான ஆர்க்டிக் பிரதேசத்தை நோக்கி அழைத்துச் செல்வாள். அங்கு பிற இனத்தினர் சூழ்ந்திருக்க ஒரு குவார்ட்டர்ஸில் தங்கி அவள் விரும்பும் ரெட் ஒயின், போர்க், ஸ்பூன் போன்ற சாப்பிட உதவும் கரண்டிகள், ரிகார்ட் பிளேயரின் ஓபரா இசை என மேற்கத்திய கலாச்சார சுவைகளைத் தருவித்திருப்பார் இப்படத்தின் இயக்குநர் இசபல் காய்செட்.
மிகுதியும் வெளிப்புறக் காட்சிகளின் வழியே நகரும் இப்படம் கதைப்பூர்வமாக ஒரு யு டர்ன் செய்கிறது. அந்த இடத்தையும் நாம் மிகவும் மெதுவாகவே புரிந்துகொள்கிறோம். அதன் பின்னரும் ஒரு திருப்பமாக, ஒரு கட்டத்தில் இந்த இரு பெண்களைச் சுற்றியே செல்லத் துவங்குகிறது. 'நோபடி வான்ட்ஸ் தி நைட்' கடைசியாக இது ஒரு நட்பின்வலிமையைச் சொல்லும் கதை என்பதை உரத்துச் சொல்கிறது. இருவேறு மக்கள் பிரிவினரிமிருந்து வந்துள்ள இருவர் முதலில் மோதிக்கொள்கின்றனர்.
பின்னர் நண்பர்களாக அல்லது அதற்கு மேலுமான ஒரு நட்புறவை அவர்கள் பெறுகின்றனர். இதில் அலாகா தன்னுடைய மோசமான ஆங்கிலத்தில் வுமேன், மேன் என்று சொல்லும் இடங்கள் வித்தியாசமாக உள்ளது. பியரி பனிப்பிரதேசத்தில் தன் கால்விரல் சேதமடைந்தநிலையிலும் அவர் கழிவிரக்கம்கொள்ள விரும்பாமல் மறுபுறத்தில் ஜோஸ்பைன் ஒரு பெண்ணாக செய்வதற்கு எதுவும் தோன்றாதநிலையில் வெறும் முகத்தையே பார்க்கும்நிலையில் அங்கு ஒருவருக்கொருவர் ஆறுதலாக மட்டுமே இருக்கக் கூடிய தருணங்கள் சிறப்பானவை.
இப்படத்தில் ஒரே ஒரு மனிதனாக வரும் கேப்ரியல் பைர்னே, பிராம் என்ற கதாப்பாத்திரத்தில் வழிகாட்டியாக வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் ஜோஸ்பைன் அவரைக் கேட்பார், கடவுளால் கைவிடப்பட்ட இத்தகைய இடங்களுக்கு ஏன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதற்கு அவர், உருக்கமாகக் கூறுவார், இது மிகவும் தூய்மையாக இருக்கிறது. கடலைக் காட்டிலும் தூய்மையாக இந்த இடங்களும் வானமும் இருக்கிறது. இவைகள் என்னை மனிதனின் இருப்பிலிருந்து அப்பால் கொண்டுபோய் இன்மையுடன் மிகவும் நெருக்கமாக்குகிறது.
அவள் அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்பாள் ''மன்னிக்கவும், அது எனக்கு சற்றே மாயமாக இருக்கிறது'' என்பாள். ஆனால் விரைவில் அலாகாவைவிட்டு பின்னர் ஒவ்வொருவரும் பிரிந்துவிட அவள் அந்த பனிமண்டிய ஆர்க்டிக் வனாந்தரத்தில் தனித்துவிடப்பட்ட நிலையில் வாய்விட்டு கத்துவாள். பின்னர்தான் அவள் 'இன்மைக்கு நெருக்கமாதல்' என்பதை அவள் உணரத் தொடங்குவாள்.
'நோபடி வான்ட்ஸ் தி நைட்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆர்க்டிக் பிரதேச இடங்கள் இதுவரை உலக சினிமா அறியாதவையாகும். விளிம்பின் உச்சத்திற்கே செல்கின்றன இப்படத்தின் காட்சிகள். குறிப்பிடும்படியாக மனிதநடமாட்டமே இல்லாத இடங்களில் பின்னணிகுரலோடு பாடல் வரிகள் இடம்பெறுவதோடு படம் முடிவடைவது ஒரு மூன்றாந்தர கவிதைப்பூர்வமான சிந்தனை என்று சொல்லவேண்டும்.
ஆர்க்டிக் பிரதேசத்தில் ஜோஸ்பைன் மற்றும் அலாகா ஆகிய இருவரின் அற்புதமான நடிப்பைத்தாண்டி நம் கண்களை அகற்ற முடியவில்லை. இப்படத்தில் நடித்துள்ள பினோஷே ஒரு சௌகரியமான நடிப்பை சாதாரணமாக வழங்கியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். அதே நேரத்தில் பனிப்பிரதேச சூழலின் குளிர்ச்சியைவிட அவர் மிகவும் குளிர்ச்சியாக தோன்றுகிறார். மேலும் ரிங்கோ கிகுச்சி இப்படத்தில் அலாகாவாக வந்து நம் மனதோடு நெருக்கமாக வந்து அரவணைத்துக்கொள்வது போதுமானதாக இருக்கிறது.
'நோபடி வான்ட்ஸ் தி நைட்' கலைத்தன்மை அடர்த்தியாக உள்ள படம் என்று சொல்லமுடியாது. இப்படம் உச்சபச்சமாக ஒரு உலக சினிமா விழாவுக்கான படமாக இருந்ததென்னவோ உண்மை. சற்று கூடுதலாக மைய நீரோட்ட படைப்பாக அமைய முயற்சித்திருக்கும் இசபெல் காயிசெட்டிடமிருந்து இம்முறை ஹாலிவுட் காற்று வீசியிருக்கிறது என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.
தமிழில்: பால்நிலவன்


நன்றி- த இந்து

0 comments: