Tuesday, February 03, 2015

இளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார் - சந்தானம் கடுப்பு

சினிமா பிரபலங்களை பேட்டிக்காக தொடர்பு கொள்ளும்போது தங்கள் அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ வந்து சந்திக்கச் சொல்வார்கள். ஆனால் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கொஞ்சம் வித்தியாசமானவர். “நீங்கள் ‘தி இந்து’ தமிழ் இணையதளத்துக்காக வீடியோ பேட்டியும் வேண்டுமென்று கேட்கிறீர்கள். அதை வெளியில் எங்காவது எடுத்தால் ரசிகர் கூட்டம் கூடிவிடும். அதனால் நானே உங்கள் அலுவலகத்துக்கு வருகிறேன்” என்றார்.
சொன்ன நேரத்துக்கு அலுவலகம் வந்த அவரிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்:
உங்களை யாராவது விமர்சித்தால்கூட அதை ஜாலியாக எடுத்துக் கொள்கிறீர்களே.. எப்படி?
நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னை கைது செய்து கொண்டுபோனபோதும் நான் ஷூட்டிங்குக்கு போவது போல்தான் போனேன். இந்த கட்டத்தில் இப்படி நடக்க வேண்டும் என்பது கடவுளின் அமைப்பு என்றுதான் எடுத்துக்கொள்வேன். ராமரே 14 வருடங்கள் காட்டில் இருந்தார், அது அவருடைய தலை எழுத்து. அதே மாதிரி நானும் சிறைக்குப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.
‘ஐ’ படத்தில் உங்களுக்காக ஷங்கர் வசனங்களை எழுதினாராமே.. உண்மையா?
‘ஐ’ படத்தில் முதலில் எனக்கு காரில் இருந்து இறங்கி வரும் காட்சி மட்டும்தான் இருந்தது. அதன் பிறகு உடற்பயிற்சி செய்யும் காட்சியையும் சேர்த்தார்கள். அதில் “2016-ல் நான்தாண்டா சி.எம்” என்ற வசனத்தை ஷங்கர் எனக்காகவே எழுதினார். “இந்த வசனத்தை உங்களுக்காகவே எழுதியிருக்கிறேன்” என்றார். எனக்காக அவர் வசனம் எழுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
படங்களைத் தயாரிப்பதையும், நாயகனாக நடிப்பதையும் நிறுத்தி விட்டீர்களே?
இப்போது எனக்கு நேரம் சரியில்லை. அதனால் ஏப்ரல் வரை தள்ளிப் போட்டிருக்கிறேன். ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றிருக்கிறேன்.
உங்களுக்கு சந்தானம்தான் திரையுலகில் நெருங்கிய நண்பர் என்றும் அவர் உங்களுக்கு உதவிகள் செய்வதாகவும் கூறப்படுகிறதே?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தோடு சந்தானம் என்னை கழட்டி விட்டுவிட்டார். என்னுடைய வளர்ச்சி அவருக்கு பிடிக்கவில்லை. எல்லா இடத் திலும் என்னை டம்மியாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ‘யா யா’ என்று ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அதில் அவர் என்னுடன் நெருக்கமாக நடிக்கவில்லை. போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தைப் போடக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார்.
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில்கூட ஒரு காட்சிதான் கொடுத்தார். அப்போது கூட என்னை சந்திக்க மறுத்துவிட்டார். சந்தானம் நல்லவர்தான், ஆனால் அவருடன் இருப்பவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம். ‘பவருக்கு சப்போர்ட் பண்ணாதே, அவர் வளர்ந்துவிடுவார்’ என்று தடுக்கிறார்கள்.
சந்தானம் உங்களுக்கு போட்டி என்று சொல்லலாமா?
எனக்கு போட்டி என்றால் அது ரஜினிதான். ரஜினி ஏன் போட்டி என்றால் அவர் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். அவரைப்போல் நானும் வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். எனக்கு எதிரி என்று யாருமே கிடையாது. சினிமாவில் நான் வளரக் கூடாது என்று நினைக்கிற முதல் ஆள் சந்தானம்.
தொடர்ந்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிப்பீர்களா?
பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தால் பெரிய நடிகராகி விடலாம் என்பது பொய். எப்போதுமே கதைதான் ஹீரோ. ரஜினி நடித்த ‘லிங்கா’ படமே தோல்வியடைந்துவிட்டது. ஆகை யால் எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.
இப்போதாவது சொல்லுங்கள் உங்கள் ‘லத்திகா’ படத்தை எப்படி 250 நாட்கள் ஓட வைத்தீர்கள்?
‘லத்திகா’ படத்தை 250 நாட்கள் ஓட்டியது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தமிழ் திரையுலகில் என் பெயர் நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு குவாட்டர், பிரியாணி எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். எனது படம் ஒடிய திரையரங்கில் வெள்ளை அடித்துக் கொடுத்தது, சீட் மாற்றியது என்று பல வேலைகள் செய்தேன். அதற்காக நான் செய்த செலவுக்கு ஒரு தியேட்டரையே விலைக்கு வாங்கியிருக்கலாம்.


நன்றி - த இந்து 

0 comments: