Wednesday, February 04, 2015

சினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க வேண் டிய 3 தகுதிகள் - இயக்குநர் சீனுராமசாமி

சினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு 3 தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்’ என்று, திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையும் மனோ மீடியா கிளப்பும் இணைந்து நடத்தும் 3 நாள் கரிசல் திரைவிழா பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று தொடங்கியது.
இயக்குநர் சீனுராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும்போது, ‘இந்நிகழ்வில் பறை இசை இசைத்தது நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு மூன்று தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஒன்று அதீத ஆர்வம், அதுவே சினிமா இயக்க அடிப்படைத் தேவை, இரண்டு சினிமாவின் மீதான காதல், மூன்றாவது தரமான இலக்கிய வாசிப்பு. உலகத்திரைப்படம் என்று தனியாக எதனையும் கூற முடியாது. ஒரு வாழ்வியல் முறை எவ்வளவு எதார்த்தமாக, ஆழமாக பதிவு செய்யப்படுகிறதோ அதனை வைத்தே அது உலகத்தரம் பெறுகிறது.
புரட்சி கருத்துகள் நிராகரிப்பு
திரைப்படத்தை தணிக்கை செய்கையில் ஆபாசமான காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் நீக்கப்படுவதைப்போல புரட்சிகரமான கருத்துக்களை உடைய காட்சிகளும் தணிக்கைக் குழுவினரால் நிராகரிக்கப்படுகின்றன.
சத்திய ஜித் ரே போன்ற இயக்குநர்களை முன்னோடிகளாக கொண்ட இந்திய சினிமாத் துறையில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி நமது திறமையினை பறைசாற்றி வருகின்றன.
வீழ்ச்சி என்று பார்க்கையில் ‘நாயக பிம்பம்’ எனும் படிமம் அதிகரித்து, எதார்த்த சினிமாக்கள் குறைந்து முழுக்க முழுக்க கதாநாயகனைத் தூக்கி நிறுத்தும் படங்கள் வரத் தொடங்கியுள்ளன.
குடிக்கு எதிரான காட்சி
குடிப்பழக்கத்தின் காரணமாக கலாச்சாரம் எனும் முதுகெலும்பு உடைக்கப்பட்ட சமூகம் அநீதியை எதிர்க்கும் திராணியற்றிருக்கிறது. எனவே தான் எனது படங்களில் குடிநோய்க்கு எதிரான காட்சிகளை அமைக்கிறேன்’ என்றார் அவர்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தலைமை வகித்தார். தொடர்பியல் துறைத் தலைவர் பெ.கோவிந்தராஜு கருத்துரை வழங்கினார். தொடர்பியல் துறை மாணவர் கு.நாகரத்தினம் வரவேற்றார்.
மாணவர் பி.ஹாட்லின் ஜெனித்த ரால்ப், 3 நாள் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். மாணவி வெ.அபிநயா நன்றி கூறினார்.
மதியம் போட்டியாளர்கள் அனுப்பிய குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடுவராக ‘தமிழ் ஸ்டூடியோ’ அமைப்பின் நிறுவனர் மோ.அருண் செயல்பட்டார். இதை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இத்திருவிழா நாளை வரை நடைபெறுகிறது.


நன்றி  - த இந்து

0 comments: