Sunday, February 01, 2015

Goodbye Children -சினிமா விமர்சனம் ( உலக சினிமா)

Film: Goodbye Children
Director: Louis Malle
வளர்ந்த பிறகு, உலகம் புரிய ஆரம்பித்தபிறகு உருவாகும் நண்பர்களின் பிரிவுகள் பெரிய வலிகளை உண்டாக்குவதில்லை. ஆனால் பள்ளிப் பருவத்தில் கிடைத்த நண்பர்களும் அவர்களது பிரிவுகளும் மனதிலிருந்து அகலாத நினைவுகளாக, பச்சைத்தாவரத்தின் வேராக அமைந்து விடுகின்றன. அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. ஜூலியன் குவெண்டிற்கும் அப்படியொரு காரணம் இருப்பதை 'குட்பை சில்ட்ரன்' மிகச்சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
அம்மாப் பிள்ளை
ரெயில்வே நிலையத்துக்கு வந்து வழியனுப்பவந்த அம்மாவிடமிருந்து பிரிய முடியாதவனாகத்தான் ஜூலியன் இருக்கிறான். அவன் எப்பவும் அம்மா செல்லம். அம்மாவை விட்டு ஒரு போர்டிங் ஸ்கூலில் நிரந்தரமாகத் தங்கிப் படிப்பதென்றால் எவ்வளவு வலியான விஷயம். அவனுடைய அண்ணனும் அங்கு தான் படிக்கிறான். என்றாலும் ஜூலியன் சிரமப்படுகிறான்.
போர்டிங்கில் மாணவர்களுடன் இரவு அலமாரிப் படுக்கையொன்றில் உறங்குகிறவனாக அவன் இருந்தாலும், இப்பவும் படுக்கையில் மூத்திரம் போகிறவனாகத்தான் இருக்கிறான். சக மாணவர்கள் கை கொட்டி சிரித்து அவனைக் கிண்டல் பேசுகிறார்கள். சிறுபிள்ளைதானே என்றெல்லாம் மாணவர்கள் பார்க்க மாட்டார்கள். பள்ளிக்கூட வளாகத்தில், வகுப்பறையில், பொது இடங்களில் மாணவ சமுதாயத்தில் அவன் இரண்டறக் கலந்தாக வேண்டும். 


புதிய நண்பர்கள்
மாணவர்களிடம் இவன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டபோது போனத் என்ற மாணவனும் இருந்தான். ஆனால் அவனை முதலில் இவனுக்குப் பிடிக்கவில்லை. நன்றாகப் படிப்பவன். இசையிலும் நாட்டம் உள்ளவன். ஆனால் அவனது செய்கைகள் வினோதமாக இருக்கும்.
ஒருநாள் இரவு ஜூலியன் பாதி ராத்திரியில் தூக்கம் கெட்டு விழிக்கும்போது, போனத் ஒரு மதவழிப்பாட்டு உடையை அணிந்துகொண்டு ஹீப்ரூ மொழியில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ஓசையின்றி ஜூலியனின் நண்பனான ஜான் கிப்பெல்ஸ்டீன் லாக்கரை உடைத்து ஏதோ திருடிக்கொண்டிருந்தான். அதிலிருந்து அவனை ஜூலியனுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
யூதர்கள் வேட்டையாடப்படுவதால் வேறு பள்ளியிலிருந்து இங்கு வந்து படிக்கும் பேரே ஜான் மற்றும் கிப்பெல்ஸ்டீன் போன்றவர்களுடன் இணைந்து, விடுதியின் கிச்சனிலிருந்து ஜாம்மை திருடி விற்று அந்தக் காசில் சிகரெட் பிடிக்கிறான் ஜூலியன்.
அவன் இப்படித்தான் அவ்வப்போது தன் அம்மாவைப் பிரிந்த வலியை மறக்கிறான்.
நல்ல தலைமை ஆசிரியர்
விடுதியின் சமையலறையிலிருந்து ஜாம் திருடி சிகரெட் பிடித்துவந்த காலகட்டத்தில் ஒருநாள் அவர்கள் பிடிபட்டுவிட, என்ன தண்டனை கிடைக்குமோ என பயந்துநடுங்குகிறான். பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஃபாதர்) இவர்களை மன்னித்து எச்சரித்து விட்டுவிடுகிறார்.
இன்னொருநாள் புதையல்தேடி ஜூலியன் தன் நண்பனுடன் செல்கிறான். அந்த விறுவிறுப்பான பயணத்தின்போது காட்டில் திக்குத் தெரியாமல் அலைந்துதிரிகிறான். இரவு நேரம் ஆகிவிட என்ன செய்வது என திக்குமுக்காடுகிறான். பின்னர் அவ்வழியே ஜீப்பில் வந்த உள்ளூர் போலீசார், நண்பர்கள் இருவரையும் பின்னிரவு நேரத்தில் விடுதியில் கொண்டு வந்து விடுகிறார்கள். இருவரும் ஃபாதருக்கு தெரியக்கூடாது என நினைத்து நடுங்குகிறார்கள். ஆனால் ஃபாதருக்கு தெரிந்துவிடுகிறது. அப்போதும் அவர் அவர்களை தண்டிக்காமல் விடுகிறார்.
பனிபடர்ந்த அதிகாலைகளும் குறும்புத்தனங்களும் நிறைந்த பள்ளி வாழ்க்கை அவனுக்கு இனிக்கத் தொடங்குகிறது. என்றாலும் அந்த மெல்லிய குளிரடிக்கும் அதிகாலைகளும் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளும் மட்டுமே மறக்க முடியாத நினைவுகளாகிவிடவில்லை. அதற்கும்மேல் சில முக்கிய சம்பவங்கள்...
ஓட்டலில் நடைபெற்ற தகாத சம்பவம்
பெற்றோர்கள் தினத்தில் ஜூலியனின் அப்பா, அம்மா எனப் பலரும் வந்திருக்க, பல மாணவர்களும் அவரவர் அப்பா அம்மாக்களுடன் சுவையான உணவருந்த ஓட்டல் ஒன்றிற்கு வருகிறார்கள். அங்கு போனத் என்ற மாணவனுக்கு யாரும் வராதது குறித்து ஜூலியன் அறிய நேரிடுகிறது. அச்சமயம் சில ஜெர்மன் போலீஸும் ஓட்டலில் நுழைய, ஓட்டலில் சில கசமுசாக்கள் நடக்கிறது.
ஒரு தீய சமிக்ஞையாக.... அப்பொழுது மிலிஸ் எனும் படைப்பிரிவினர் யாரோ யூதரை ஓட்டலிலிருந்து வெளியேற்றுகிறார்கள். அப்படி வெளியேற்றும்போது ஜூலியனின் அண்ணன் அவர்களைப் பார்த்து 'கொலாபஸ்' என சத்தமிடுகிறான். இதனால் அந்த படைப்பிரிவினர் கோபப்படுகின்றனர். மேலும் நாங்கள் பிரான்ஸ் மக்களுக்கு மட்டும் ஓட்டலில் அனுமதிப்போம். யூதர்களுக்கு அல்ல என்கின்றனர். அதற்கு ஜூலியனின் அம்மா, " அவர் மதிப்புமிக்க மனிதர்.. அவரை ஏன் வெளியேற்றினீர்கள்? அது சரி, இத்தனைக்கும் நாட்டின் முக்கிய சோசலிசத் தலைவரான லியான் பிளம்மை தூக்கில் போடும்போதும் யாரும் எதுவும் பேசமுடியாமல் பார்த்துக்கொண்டுதானே இருந்தோம்" என்கிறார்.
விடுதி சமையற்காரரும் சில மாணவர்களும்
விடுதியின் சமையல் பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்ற உதவி சமையற்காரர் பிடிபடுகிறார். அதற்கு நிறைய மாணவர்கள், ஜூலியனும் அவனுடைய அண்ணனும்கூட உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பள்ளி முற்றத்தில் நிறுத்திவைக்கப்படுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் வெளியேற்றப்படும் சூழ்நிலை. அனைவரும் குற்றம் இழைத்ததற்காக எச்சரிக்கப்படுகிறார்கள். ஆனால் வெளியேற்றப்படவில்லை.
ஃபாதர் ஜான் ஒவ்வொருமுறையும் இப்படித்தான் தவறு செய்பவர்களை மன்னித்துவிடுகிறார். தண்டிப்பது அவர் பழக்கமில்லை.
பள்ளிக்குள் நுழைந்த ஜெர்மன் போலீஸ்
ஒரு நாள் காலை.... பள்ளிக்கு ஜெர்மன் ராணுவத்தின் ரகசிய காவல் பிரிவான கெஸ்டபோ நுழைகிறது. பள்ளி வளாகம், விடுதி வளாகம் என யூத மாணவர்கள் தேடப்படுகிறார்கள். இந்நிலையில் யூத மாணவர்களை மறைத்து வைத்திருந்தத குற்றத்திற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரும் கைது செய்யப்படுவார் என்கிறார் பிரெஞ்சு உயர் போலீஸ் அதிகாரி.
ஜெர்மன் ராணுவத்தின் ரகசிய புலனாய்வு போலீஸ் யூத மாணவர்களை வளைத்து வளைத்து தேடிப்பிடித்து பள்ளியின் வெளிமுற்றத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். அனைவரையும் அங்கு வருமாறு உத்தரவிடப்படுகிறார்கள். ஜூலியன், அவனது தோழன் போனத்தை மறைத்துவைத்து காப்பாற்றத் துடிக்கிறான். ஆனால் ஜெர்மன் போலீஸ் கண்டுபிடித்துவிடுகிறது.
விடைபெறும் நண்பனுக்கு ஒரு அன்பளிப்பு
விடுதியில் இருந்த ஜூலியனிடம் ஒரு புத்தகத்தைத் திருப்பித்தர வருகிறான் அவனது இன்னொரு யூத நண்பன். அவன் கொடுத்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு அவனுக்கு மிகவும் பிடித்த அரேபிய இரவுகள் எனும் புத்தகத்தை இவனும் பரிசாக அவனுக்குத் தருகிறான்.
யூத மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுதல்
பள்ளியின் வெளிமுற்றத்தில் அனைத்து மாணவர்களையும் நிற்கச் சொல்லி அவர்களது பெயர்களை கேட்ட மாத்திரத்திலேயே யூதர்களை அவர்களிடமிருந்து தனியே பிரித்து வந்து நிற்கச் சொல்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்ததற்காக தலைமை ஆசிரியரான ஃபாதரும் அவர்களுடன் சேர்த்து ஒன்றாக அழைத்துச் செல்லப்படுகிறார். கையறுநிலையாக பிரிந்து நிற்கும் மற்ற மாணவர்களின் நட்புணர்வு பள்ளியின் வெட்டவெளிவளாகத்தில் தகித்து எரிகிறது.
ஃபாதர் ஜானுக்கும் மரண தண்டனை
40 வருடங்களுக்குப் பிறகு.. நாயகனின் குரல் கேட்கிறது.... அதில் அப்போது மூடப்பட்ட பள்ளிக்கூடம் 1944க்குப் பிறகு திறக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றவர்களில் போனத், நெகஸ், ட்யூப்ரெ போன்றவர்கள் இரண்டாம் உலகப் போரின் ஆஸ்ச்விட்ச் வதைமுகாமிலும், மிகுந்த காருண்ய மனிதரான ஃபாதர் ஜான், மௌத்தாயூசென் வதைமுகாமிலும் கொல்லப்பட்டதாகவும் ஒவ்வொரு ஜனவரி 2 அன்று தலைமை ஆசிரியரும் மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்ட நாளை என்றென்றும் மறக்கமுடியவில்லை என்றும், நம் இதயத்தை ஜில்லிட வைக்கும் குரலில் பின்னணி குரல் கேட்கிறது.
அது, நம்மை உறைய வைத்த இப்படத்தைத் தந்த இயக்குநர் லூயி மாலேவின் மனக்குரலாக, விடைபெறாத பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது


நன்றி -த இந்து

0 comments: