Tuesday, February 03, 2015

தொழில் ரகசியம்: பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்! (மார்க்கெட்டிங் டெக்னிக்)

மரங்களுக்கு மார்க்கெட்டிங் பிராப்ளம் உண்டு. தன் இனத்தை காட்டிற்குள் பெருக்க தானே சென்றா காடெங்கும் நட முடியும்? அதனால் விதைகளை பழங்களில் வைத்து மனிதர்களை, பறவைகளை உண்ண வைத்து விதைகளை பல இடங்களில் பரவலாகப் பரப்புகின்றன. மற்றவர்கள் வந்து எடுத்துச் சென்று பரப்ப வேண்டிய மார்க்கெட்டிங் பிராப்ளம் மரங்களுக்கு.
மார்க்கெட்டர்களுக்கு இந்த பிராப்ளம் இல்லை. பிராண்ட் செய்தியை மற்றவர்கள் எல்லா வாடிக்கையாளர்களிடமும் எடுத்துச் சென்று பரப்ப காத்திருக்கவேண்டாம். அவர்களே ஊரெங்கும் சென்று பிராண்ட் செய்திகளை நடலாம். பரப்பலாம்.
பிராண்ட் செய்தியை வாய் வழி பரப்புவதே ‘ேவர்ட் ஆஃப் மவுத் மார்க்கெட்டிங். சரியானவர் களைப் பிடித்து சரியான முறையில் பேசவைத்து சரியான செய்தியை சரியானபடி பரப்பவேண்டும். பிராண்ட் செய்தியை சரியாக பரப்புபவர்களை ‘நெட்வொர்க் ஹப்ஸ்’ என்கிறார் ‘இமானுஎல் ரோஸென்’. போன வாரம் நாம் பார்த்த அவருடைய ‘The Anatomy of Buzz’ புத்தகத்திற்கு மீண்டும் செல்வோம்.
எல்லோரும் வளவளவென்று பேசும் டைப் இல்லை. அனைவரும் மற்றவரிடம் வலிய சென்று விஷயம் பேசுபவதும் இல்லை. அதேபோல் எல்லோருடைய பேச்சையும் நாம் கேட்பதில்லை. சிலர் பேச்சைக் கேட்கிறோம். அதன்படி நடக்கிறோம். அது போன்றவர்களைத் தான் ‘நெட்வர்க் ஹப்ஸ்’ (வளைய மையங்கள்) என்கிறார் ரோஸன்.
சகஜகமாகப் பேசி பலரை தங்கள் பேச்சைக் கேட்க வைத்து சொன்னது போல் நடக்க வைக் கும் திறனுள்ள இவர்களை ‘ஒபீனியன் லீடர்’ என்றும் கூறுவர். பேசப்படும் செய்திக்கேற்ப, பொருள் பிரிவிற்கேற்ப மாறுபடும் தன்மை கொண்ட இவர்களை அடையாளம் காண்பது எளிதல்ல.
‘இவ்விடம் சகாய விலையில் செய்திகள் பரப்பப்படும். அணுகவும் ஸ்டார் நெட்வர்க் ஹப்ஸ்’ என்று போர்டு மாட்டி அமர்ந்திருக்கமாட்டார்கள். இவர்களைத் தேடிப் பிடித்து செலக்ட் பண்ணி, கரெக்ட் செய்தால் உங்கள் பிராண்ட் செய்தி பலரிடம் பரவலாகப் பார்சல் செய்யப்படும்.
கார், சினிமா, புடவை கடை போன்ற ‘உரையாடல் பொருட்களில்’ நெட்வொர்க் ஹப்களை பார்க்கலாம். இவர்களில் பல ரகங்கள் உண்டு. சரியானவர்களைப் தேடிப் பிடித்தால் பிராண்ட் செய்தியை சுடச்சுட பலருக்குப் பரிமாறுவார்கள். செல்வாக்கின் அளவைக் கொண்டு நெட்வொர்க் ஹப்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
ரெகுலர் ஹப்
இவர்கள் சாதாரணமானவர்கள். தெரிந்தவர், பக்கத்து வீட்டுக்காரர், கூட வேலை செய்பவர் போன்றவர்கள். தங்கள் பேச்சை கேட்டு நடக்கும் சிறிய கூட்டத்தை கொண்டவர்கள். ‘ஷேர் மார்க்கெட் பத்தி நம்ம சுப்ரமணி சொன்னா கரெக்டா இருக்கும்’ என்று அவர் டிப்ஸ்ஸை நாடுகிறோமே, அவரைப் போன்றவர்கள்.
மெகா ஹப்
மீடியா பிரபலங்கள் மெகா ஹப்கள். ‘தோசைக்கு ரிஃபைண்ட் ஆயிலுக்கு பதிலா நல்லெண்ணெய் யூஸ் பண்ணா நல்லா இருக்கும்னு டீவி சமையல் புரோக்ராம்ல சொன்னாங்க’ என்று உங்கள் மனைவி நல்லெண்ணெய்க்கு மாறுவது மெகா ஹப் புண்ணியத்தால். பத்திரிகைகளில் போட்டிருக்கும் மார்க் அடிப்படையில் படம் பார்க்கப் போவதும் இவ்வகையே.
எக்ஸ்பர்ட் ஹப்
பிரபலங்களின் அபரிமித விஷய ஞானத்திற்காக அவர்கள் கூறுவதைக் கேட்கிறோமே அவர்கள் எக்ஸ்பர்ட் ஹப்கள். என்றைக்கோ எழுத்தாளர் ‘அமரர் சுஜாதா’ ஒரு புத்தகத்தை சிலாகித்து எழுதியதை இன்று படித்து அந்த புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கத் தோன்றுகிறது பாருங்கள், அப்பேற்பட்டவர்கள்.
சோஷியல் ஹப்
ஒரு சமூக வளையத்திற்குள் பிரபலபமாக சிலர் இருப்பார்கள். கிராம பஞ்சாயத்து தலைவர், காலனி அசோஷியேஷன் செக்ரட்டரி போன்றவர்கள். இவர்கள் சோஷியல் ஹப்கள். தங்கள் சமூக வளையத்திற்குள் செல்வாக்கு பெற்றவர்கள்.
பிராண்ட் செய்தியை மக்களிடம் சேர்க்க இரு வழிகள் உண்டு. அதை ஒலிபரப்பலாம் இதற்கு மாஸ் மீடியாவும் மாஸ் பணமும் வேண்டும். இல்லை சரியான நெட்வர்க் ஹப்பைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் செய்தியைப் பரப்பலாம். இதற்கு சமயோஜிதமும், சமர்த்தும் இருந்தால் போதும். இது போல.
பொருளுக்கேற்ற ஹப்பை தேர்ந்தெடுப்பது
கிடைத்த ஹப்பை கொண்டு நம் பிராண்ட் செய்தியை பரப்ப நினைப்பது தப்பாட்டம். சரியான ஹப்பை தெளிவாய் தெரிந்து, அவர் செல்வாக்கைப் புரிந்து, பிராண்ட் பற்றிய புதிய செய்தியோடு அணுகினால் அந்த ஹப் நம் பிராண்டைப் பரப்புவதில் ஒரு பவர் இருக்கும். பொருத்தமாய் இருக்கும்.
வெளிவரப் போகும் படத்தின் பாடல்களை பாப்புலராக்க எஃப் எம் ரேடியோ அறிவிப்பாளர்களுக்கு ஸ்பெஷலாய் அனுப்பி அவர்களைக் கொண்டு பாடல்களைப் பரவச் செய்வது பவர்ஃபுல் ஐடியா. எஃப் எம் அறிவிப்பாளர்கள் இசை சம்பந்தப்பட்ட பிரபலத்துவம் உள்ள சோஷியல் மெகா ஹப் என்பதால்!
சிலாகித்துப் பேச ஸ்பெஷல் விஷயம் தருவது
வெறும் கையில் முழம் போட முடியாது. ஹப்கள் சிலாகித்து விவாதிக்க உங்கள் பிராண்டைப் பற்றி ஸ்பெஷல் செய்தியை உருவாக்கித் தரவேண்டும். வெறும் வாயில் மெல்ல அவல் கொடுத்தால் தமிழர்கள் வாய் வலிக்கும் வரை மெல்வார்கள்.
அழகு சாதனப் பிராண்டுகளை அறிமுகப்படுத்தும் போது அதை அனைவருக்கும் கோயில் பிரசாதம் போல் பட்டுவாடா பண்ணாமல் பெண்கள் கல்லூரிகளில் பிரபல ஒபீனியன் லீடர்களுக்குக் கொடுத்து அதன் விசேஷங்களை விளக்கி உபயோகிக்கச் சொல்லலாம். மற்றவர்களை விட முதலில் உபயோகிக்கிறோம் என்று தெரிந்தால் அந்த பெண்கள் சும்மா இருப்பார்களா? காலேஜ் பிரின்ஸிபால் முதல் கடைசி ஸ்டூடெண்ட் வரை பிராண்ட் செய்தியை பரப்போ பரப்பு என்று பரப்ப மாட்டார்களா! ஹப்கள் பிராண்டை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவது ’அருமையான பிராண்ட், ஆனால் நான் உபயோகப்படுத்துவதில்லை’ என்று ஹப் சொன்னால் பிராண்ட் உருப்படுமா? தேர்ந்தெடுக்கும் ஹப்பை பிராண்டை உபயோகிக்க வைப்பதோடு அவர் உபயோகிப்பதை மற்றவர் பார்க்க வைக்கவேண்டும்.
ஏஷியன் பெயிண்ட்ஸின் உத்தி ’ஏஷியன் பெயிண்ட்ஸ்’ கிராமங்களில் ‘உத்சவ்’ பிராண்டை அறிமுகப்படுத்தியபோது அதை விளம்பரங்களால் பிரபலப்படுத்தாமல் ஹப்களை கொண்டு பேச வைப்போம் என்று முடிவு செய்தது. ஊர் மக்கள் தங்கள் சந்தேகங்களை, பிரச்சினைகளைத் தீர்க்க தாங்கள் மதிக்கும் ஊர் பஞ்சாயத்து தலைவரைத்தான் நாடுவார்கள் என்று அத்தகைய தலைவர்கள் வீடுகளுக்கு இலவசமாக உத்சவ் பெயிண்ட் அடித்தது. ஓசியில் அடித்தால் அவர்களும் சும்மா இருப்பார்களா? தன் பங்கிற்கு ஊர் முழுவதும் தண்டோரா போடாத குறையாய் பிராண்டைப் பற்றி நாலு நல்ல வார்த்தைகள் கூறினார்கள். ஊர் தலைவரே தன் வீட்டிற்கு உத்சவ் பெயிண்ட் அடித்து அதைப் பற்றி ஓஹோ என்று கூறினால் அது நல்ல பிராண்டாகத்தான் இருக்கும் என்று ஊரே உத்சவ் பிராண்டை வாங்க அதன் விற்பனை பெயிண்டை விட பிரகாசித்தது!
வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா என்று எத்தனை தரம் வாழ்க்கையில் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பீர்கள்? ஒரு மாறுதலுக்கு மற்றவர்கள் வாயை சும்மா வைத்துக்கொள்ள விடாமல் உங்கள் பிராண்டைப் பற்றி பேச வையுங்கள். ேவர்ட் ஆஃப் மவுத் மார்க்கெட்டிங்கின் அபரிமித சக்தியை உணர்வீர்கள். இன்னமும் கூட வாங்கிக் கட்டிக்கொள்வீர்கள். லாபத்தை!
இக்கட்டுரை பிடித்திருந்ததா? பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன். ேவர்ட் ஆஃப் மவுத் மார்க்கெட்டிங் பற்றிய கட்டுரையை படித்துவிட்டு மற்றவர்களுக்குச் சொல்லவில்லை என்றால் எப்படி சார்!



thanx  -  the hindu

0 comments: