Thursday, February 12, 2015

லோ பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க 10 ஐடியாக்கள்-அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப் | கோப்புப் படம்
அனுராக் காஷ்யப் | கோப்புப் படம்

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படைப்பு: சினிமா ஆர்வலர்களுக்கு அனுராக் காஷ்யப் 10 கட்டளைகள்!

அனுராக் காஷ்யப்... இந்திய சினிமாவைத் தன் வழக்கமான பாதையில் இருந்து மாற்றுத் தளத்துக்கு முன்னெடுத்துச் செல்பவர்களில் முக்கியமானவர். தன் முயற்சிகளுக்கு எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காதவர். அதனாலேயே அவரின் படங்களும் எந்த சமரசத்துக்கும் உட்படாமல் விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் வரவேற்பை மட்டுமே பெற்றிருக்கிறது.
சினிமா மீதான ஆர்வம் கொண்டவர்களுக்கும், குறைவான முதலீட்டைக் கொண்டோ, 'ஜீரோ' பட்ஜெட்டிலோ படம் எடுக்க நினைக்கும் அறிமுக இயக்குநர்களுக்கும் அனுராக் காஷ்யப் பத்து வழிமுறைகளை 'எம்.டிவி இந்தியா' மூலம் வழங்கியிருந்தார். அதன் எழுத்து வடிவம் இதோ..
1. குறைவான இடங்களில் கதைக்களம் அமைப்பீர்
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது எழுதுவதுதான். செட்களைத் தவிருங்கள். சிஜி வேலைகள் இப்போதைக்கு வேண்டாம். மிகவும் குறைவான இடங்களையே பயன்படுத்துங்கள். ஓர் அறையையோ அல்லது அடிக்கடி இரவலாகக் கிடைக்கக்கூடிய இரண்டு மூன்று இடங்களையோ மட்டும் பயன்படுத்துங்கள். தவிர்க்கவே முடியாத நேரங்களில் மட்டும் மற்ற பிற இடங்கள். ஆனால், கதையை எழுதும்போதே உங்களிடம் செலவு செய்ய அதிகப் பணம் இல்லை என்பதை நினைவில் வையுங்கள். அதிகம் செலவு பிடிக்காத இடங்களில் மட்டுமே உங்கள் கதை பயணிக்கும்படி இருக்கட்டும்.
2. நிதானமான - பொறுப்பான குழுவில் இருப்பீர்
பொறுமையாகவும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ள ஒரு குழுவுடன் வேலை பாருங்கள். என்னுடைய 'யெல்லோ பூட்ஸ்' படத்தின் பெரும்பாலான காட்சிகள் என் வீட்டிலேயே படமாக்கப்பட்டன. படத்தில் நடித்த நடிகர்கள் எல்லாம் பணம் கேட்காதவர்கள்; அவர்களுடைய சொந்த உடையைப் படப்படிப்புக்குப் பயன்படுத்துபவர்கள். உண்ணும் உணவைக் கூட எடுத்து வருபவர்கள்.
இந்த மாதிரியான குழு இருந்தால் போதும். நீங்கள் நட்சத்திரங்களை நாடிப் போக வேண்டியதில்லை. இங்கு நடிப்புத் தாகம் கொண்ட ஏராளமான இளம் நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படம் குறைவான இடங்களில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அது படத்தில் வெளிப்படக்கூடாது. பரபரப்பாய் இருக்கும் பொது இடங்களில் நீங்கள் படம் பிடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது. இந்த மாதிரியான இடங்களில் நீங்கள் மறைத்துவைக்க முடிகிற கேமராக்களை, 5டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
3. தேவைகளைக் குறையுங்கள்
நீங்கள் எடுக்கும் சினிமாவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். வயதான கதாபாத்திரத்துக்கு இளம் நடிகர் தேவையில்லை. அதற்கான மேக்கப் அனாவசியம். செலவைக் குறைத்தல் அவசியம். அதற்கு பதிலாக அதிக வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். மற்றவர்களுக்கு இல்லை. அடுத்தவர்களின் பார்வைக்கு நீங்கள் நேரத்தை வீணடிப்பதாகத் தோன்றலாம். ஆனால் உங்களுக்கு படம் உருவாக்கப்பட வேண்டும். அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் கடைசியில் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
4. தன்னம்பிக்கையுடன் இருங்கள்
பெரும்பாலான நேரங்களில் நியாயமே இல்லாத மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அவர்களை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் புரிந்து கொண்டாற்போல நடியுங்கள். அவர்கள் சொல்வதைக் கேட்பது போலப் பேசுங்கள். ஆனால் உண்மையில் உங்கள் படத்துக்கு என்ன வேண்டுமோ, அதை மட்டும் செய்யுங்கள். இறுதி உருவாக்கத்தை அவர்களே ரசிப்பார்கள்.
5. எல்லாரிடமும் நன்றாகப் பழகுங்கள்
மற்றவர்களிடம் இருந்து என்ன வேண்டும்; அது எப்படிக் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இது ஒரு வழிப்பாதை கிடையாது. முதலில் நீங்கள்தான் உதவும் விதமாய் இருக்க வேண்டும். பின்னர் உங்களுக்குத் தேவையானது தானாய்க் கிடைக்கும்.
6. கடன் கேளுங்கள்
ஒலி வடிவமைப்புக்கும், படத் தொகுப்புக்கும் உங்களுக்கு ஸ்டூடியோ தேவை. தொடர்ந்து அவர்கள் பின்னால் அலைய வேண்டும். உங்கள் இடத்துக்கு எடுத்துக் கொண்டு போக நினைக்கக் கூடாது. ஸ்டூடியோவை அவர்கள் தர முடிகிற நேரத்தைக் கேட்டு, அமைதியாய் அங்கேயே அமர்ந்து வேலை பாருங்கள். முக்கியமான ஆளுமைகளின் உதவியாளர்களை அணுகுங்கள். பட வாய்ப்புக்காக ஏங்குபவர்களாக அவர்கள் இருந்தால் இன்னும் நல்லது. அவர்களை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
7. சாத்தியமான விளம்பரங்களை நாடுங்கள்
ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் உங்கள் படத்தை விளம்பரப்படுத்துங்கள். ரசிகர்களை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். இன்றைய நிலையில் உங்களை யாருக்கும் தெரியாது. உங்கள் உணர்வுகளைக் குறித்து கவலை கொள்ள யாருமில்லை. எல்லோரும் எதிர்பார்ப்பது உங்கள் படம் இன்னும் உயிருடன் இருக்கிறதா என்பதே.
இதற்கு எளிதான வழி, படம் குறித்த விளம்பரங்களை அவ்வப்போது படங்களையே யூடியூபில் பதிவேற்றுவதுதான். வைரல் வீடியோக்களை உருவாக்குங்கள். சொந்தமாய் விளம்பரங்களை, டிவிடிக்களை உருவாக்கி அதை சந்தைப்படுத்துங்கள். எப்படியாவது உங்களுக்கான ரசிகர்களை அடையாளம் காணுங்கள்.
8. ஆசைகளை தியாகம் செய்வீர்
உங்கள் ஆசைகளைத் தியாகம் செய்யுங்கள். தேவையில்லாத செலவுகளைக் குறைத்து ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை வாங்குங்கள். நாட்களை சந்தோஷமாய்க் கழிக்கும் நண்பர்களைக் கண்டு கவலை கொள்ளக்கூடாது. நானே சினிமா வாழ்க்கையில் இருந்து கொண்டு 19 வருடங்கள் கழித்துத்தான் சொந்தமாய் வீடு வாங்கி இருக்கிறேன்.
9. கதையின் உள்ளடக்கத்தின் அவசியம் அறிவீர்
கதையின் உள்ளடக்கம்தான் முக்கியமே தவிர மற்ற விஷயங்கள் இல்லை. காட்சிகள் முக்கியமில்லை. அதைச் சொல்லும் விதமும் கதாபாத்திரமும்தான் முக்கியம். பரபரப்பாய் இயங்கும் பொதுவெளிகளில் படம்பிடிக்கும்போது அந்த நேரத்தில் கிடைக்கும் சிறந்த தருணங்களைப் படம்பிடியுங்கள். அங்கு தேவையில்லாமல் கோபப்படுவது பயனற்றது. ஆனால் முந்தைய நாளே அந்த ஷாட் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டிருக்க வேண்டும். படம் மிகவும் இயற்கையாய் இருக்க வேண்டுமேயன்றி குறைந்த பட்ஜெட் படமாய்த் தெரியக்கூடாது.
10. பட விழாவில் கவனம் கொள்வீர்
பட விழாக்களுக்கு உங்கள் படங்கள் அனுப்புவதோடு விட்டுவிடாமல், அது தேர்வாளர்களால் பார்க்கப்பட்டதை உறுதி செய்யுங்கள். முதலில் எல்லாத் திரைப்பட விழாக்களையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதில் எந்த விழா தன்னிச்சையான சினிமாவை ஆதரிக்கிறது எனப் பாருங்கள்.
அமெரிக்க, லுக்கானோ, இத்தாலி திரைப்பட விழாக்கள் இத்தகைய சினிமாவை ஊக்குவிக்கின்றன. அதைக் கவனியுங்கள். வெறும் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புதல் மட்டும் போதாது. தேர்வாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி அவர்கள் படத்தைப் பார்க்கிறார்களா எனபதைக் கவனியுங்கள். பார்த்தால்தானே பிடிக்கிறதா பிடிக்கவில்லையா எனத் தெரிய வரும். அதை முதலில் உறுதி செய்யுங்கள். விரைவில் திரையில் உங்களைப் பார்க்க என்னுடைய வாழ்த்துக்கள்!
அனுராக் காஷ்யாபின் இந்த 10 கட்டளைகளை வீடியோ வடிவில் காண யூடியூபில் The 10 Commandments of No-Budget Filmmaking with Anurag Kashya எனக் குறிப்பிட்டுத் தேடுக.

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.