Friday, January 02, 2015

பிரைட் ஆப் தமிழ் சினிமா! - ஜி.தனஞ்செயன்

பிரைட் ஆப் தமிழ் சினிமா! - ஜி.தனஞ்செயன்

1931 இல் வெளியான முதலாவது பேசும் படமான "காளிதா'ஸில் இருந்து, 2013 இல் உருவாகி, திரைப்பட விழாக்களில் இடம்பெற்றாலும், ஏதோ சில காரணங்களால் இன்னும் திரையரங்கை எட்டாத "குற்றம் கடிதல்' வரையில், தேசிய அளவில் விருதுகளைப் பெற்ற 203 படங்கள் சம்பந்தமாக இந்த "பிரைட் ஆப் தமிழ் சினிமா' புத்தகத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இணையத்தில் தேடினாலும் கிடைக்காத பல அரிய தகவல்களை இந்தப் புத்தகத்தில் பார்க்க முடிந்தது. நூலாசிரியர் ஜி.தனஞ்ஜெயனை இந்தப் புத்தகத்திற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். நூலாசிரியரும், "யு.டிவி மோஷன் பிக்சர்'ஸின் இயக்குநருமான தனஞ்செயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.இந்தப் புத்தகம் எழுதுவதற்கான ஆரம்ப விதை எப்படி விழுந்தது...? தமிழ் சினிமாவைப் பற்றி அறிய முற்படும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கோ, இல்லை வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உதவும்முகமாக தமிழ் சினிமா சம்பந்தமான சரியான ஆவணங்கள் ஆங்கிலத்தில் இல்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழ் சினிமாவை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் வரும் பல ஆய்வு மாணவர்கள் சரியான தகவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்காமல் திண்டாடுவதை கண்கூடாகக் கண்டுள்ளேன். 
 
 
 
 
தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாகப் பிரதிபலிக்கக் கூடியவகையில் ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுத விரும்பினேன். சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக உழைத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறந்த படங்களை "பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா' என்ற பெயரில் நூலாக வெளியிட்டேன். 
 
 
 
ரஜினி, கமல் உள்பட திரையுலகினர் பலரிடமிருந்தும், இன்னும் பல்வேறு முகம் தெரியாத நபர்களிடமிருந்தும் அந்தப் புத்தகம் எனக்குப் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை எனது பார்வையில் இருந்துதான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு சிறப்பாகத் தெரியும் ஒரு படம் இன்னொருவருக்கு சராசரியாகவும், எனக்கு சராசரியாகத் தெரியும் ஒரு படம் இன்னொருவருக்கு சிறப்பாகவும் தெரியலாம் இல்லையா...? இந்த மாதிரியான நடைமுறைப் பிரச்னையை அப்புத்தகம் வெளிவந்தவுடன் எதிர்கொண்டேன். இந்தப் படத்தை சேர்த்திருக்கலாம், இதை சேர்க்காமல் விட்டிருக்கலாம் என்பது போன்ற பல தரப்பட்டவர்களின் கருத்துக்களால் தான் இம்முறை, தேசிய அளவில் விருது பெற்ற படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து "பிரைட் ஆப் தமிழ் சினிமா'வாக எழுதினேன்.
 
 
 
 
 
 தேசிய அளவிலான விருதுகளை அளவுகோலாக எடுக்கக் காரணம் என்ன? ஒரு நடிகரைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறீர்கள். அவர் தேசிய விருது பெற்றவராக இருந்தால் "தேசிய விருது பெற்ற நடிகர்...' என்று ஆரம்பிப்பீர்கள் இல்லையா...? இந்தியாவில் தேசிய விருதுதான் சுப்பீரியர். அதனால்தான், இந்தப் புத்தகத்திற்கு தேசிய விருது என்பதை ஒரு அளவு கோலாக எடுத்தேன். அத்துடன் மிகவும் மதிக்கப்படும் இந்தியன் பனோரமாவில் தேர்வாகிய படங்கள், ஆஸ்கருக்காக பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் என தேசிய அளவில் கவனம் பெற்ற படங்களையும் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கினேன். 
 
 
 
 
 
 புத்தகத்தை எப்படி எழுதினீர்கள்...?
 
 
 பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா புத்தகத்தை மீண்டும் திருத்தி எழுதினேன். அதிலிருந்த பல படங்கள் இந்தப் புத்தகத்தில் இல்லை. அலுவலக நேரம் தவிர்த்து, இரவு பகலாக புத்தக வேலையில் மூழ்கி இருப்பதைப் பார்த்து, என் வீட்டிலிருந்தவர்களே கடுப்பாகிவிட்டனர். 1940, 1950 களில் வெளியான பழைய படங்களின் படச்சுருளை தேடிப் பிடித்து வாங்கி வந்து வீட்டில் போட்டுப் பார்த்தால், அது எழுப்பும் "டொயிங்' என்ற ஒலிக்கே வீட்டிலுள்ள அனைவரும் ஓடிச் சென்று விடுவார்கள். ஆனால், நான் புத்தகத்தை எழுதி முடித்தபோது என்னை விட எனது குடும்பத்தினரே அதிகம் சந்தோஷப்பட்டார்கள். (சிரிக்கிறார்). 
 
 
 
 
விருதுகள் சம்பந்தமாக அரசால் வெளியிடப்பட்ட ஆவணங்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்தினேன். எந்த விதமான தகவல் பிழைகளும் புத்தகத்தில் இடம் பெறக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். ஒவ்வொரு படம் சம்பந்தமாகவும் பல அபூர்வ தகவல்களை திரட்டினேன். ஒரு நாளுக்கு குறைந்தது சுமார் 6 மணி நேரம்வரை வேலை செய்தேன். நாம் தேடிப்படிக்கும் தகவல்கள் முழுவதும் உண்மையாக இருக்கும் என எந்த நிச்சயமும் இல்லை. பெரும்பாலும் சுயசரிதைப் புத்தகங்களைப் தேடிப் படித்து தகவல் திரட்டினேன். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் குடும்பம் வெளியிட்ட புத்தகத்தைப் பயன்படுத்தினேன். ஏவி.எம் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த புத்தகங்களைப் பயன்படுத்தினேன். ஒரு சம்பவம் சொல்கிறேன்... உயர்ந்த மனிதன் படத்தினை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியிருப்பார். ஆனால், படத்தில் கதை என எவரின் பெயரும் இருக்காது. படத்தின் கதை சம்பந்தமாக படத்தில் எங்கேயும் பதிவு இருக்காது. படத்தின் கதையை நான் இணையத்தில் தேடி அது உத்தர் புருஷ் என்ற பெங்காலிப் படத்தின் ரீமேக் என அறிந்து கொண்டேன். பின்பு ஏவி.எம் பாலசுப்ரமணியணை தொடர்பு கொண்டபோது அவரும் அதை ஏற்றுக் கொண்டார். களத்தூர் கண்ணம்மா படத்திற்காக கமல் தேசிய விருது வாங்கினார் என பல பத்திரிகைகள் எழுதுகின்றன. அது உண்மையில்லை. தனி கார்டு போட்டு, டைட்டில் மரியாதை கமலுக்கு வழங்கப்பட்டது. ஏவி.எம் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் இளம் நாயகன் கமல் என அந்தக் கார்டில் இருக்கும். களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல் நடித்த பாத்திரத்தில் டிசி என்ற பெண்ணை நடிக்க வைக்க இறுதி செய்து வைத்திருந்தனர். ஆனால், இயக்குநர் அந்தப் பெண்ணின் நடிப்பில் திருப்தி அடையவில்லை. மெய்யப்ப செட்டியாரின் மனைவியான ராஜேஸ்வரி அம்மாள் மூலமாக தகவல் தெரிந்து கொண்ட பரமக்குடியை சேர்ந்த ஒரு டாக்டர் குடும்பம்தான் கமலை மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது. கமல் மெய்யப்ப செட்டியாரை சந்தித்து, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசிக் காட்டினார். கமலின் வசன உச்சரிப்பில் மிகவும் கவரப்பட்டு, முதல் படத்திலேயே கார்டு போடவைத்தார் மெய்யப்ப செட்டியார். உங்கள் பதிவை தேசிய அளவிலான அங்கீகாரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..ஆனால், தேசிய அளவில் கவனம் பெறாத பல நல்ல படங்கள் உண்டே...? அவை உங்கள் புத்தகத்தில் தவறிப் போனது பற்றிக் கவலை இல்லையா...? நியாயமான கேள்விதான். எல்லாப் படங்களையும் உள்ளடக்கி எழுதினால் அது "என்சைக்ளோபீடியா'. என்னால் "என்சைக்ளோபீடியா' எழுத முடியாது. 2013-ம் வருடத்தில் பல நல்ல படங்கள் வந்தன. ஆனால், "தலைமுறைகள்', "தங்க மீன்கள்', "வல்லினம்' ஆகிய மூன்று படங்கள்தான் தேசிய விருதைப் பெற்றன. இந்த மூன்று படமும்தான் அந்த ஆண்டின் சிறந்த படங்களா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், இந்திய அளவில் தமிழ் சினிமாவின் "பிரைட்' என்றால் அவை தேசிய விருது பெற்ற படங்களேயாகும். இதைத் தவிர வேறு பெருமைக்குரிய படங்கள் இல்லையா...? நிச்சயமாக இருக்கும். ஆனால், ஒரு நியாயமான தலைப்புக்குள் படங்களை அடக்க முயற்சிக்கும் போது என்ன செய்வது...? இப்படியாக சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். சைக்கோலாஜிக்கல் லவ்வரை வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால், அவற்றுக்கெல்லாம் ஆரம்பமாக அமைந்த "குணா' படத்தை என்னால் இந்தப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய முடியவில்லை. "குணா'விற்கு தேசிய அளவில் எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை. நான் மிகவும் விரும்பிப் பார்த்த படம் என்பதால் கொஞ்சம் மன வருத்தமாக இருந்தது. ரஜினியின் "எங்கேயோ கேட்ட குரல்' எனக்கு மிகவும் பிடித்த படம். துரோகம் செய்து இன்னொருவனுடன் ஓடிச் சென்ற மனைவிக்கு, ரஜினி இறுதிச் சடங்கு செய்யும் காட்சி அவ்வளவு உயிர்ப்பாக இருக்கும். ஆனால், தேசிய அளவில் அங்கீகாரத்தைப் பெறாததால் அந்தப் படத்தையும் என்னால் உள்ளடக்க முடியவில்லை. "துலாபாரம்' அளவுக்கு என்னைக் கவர்ந்த படம் இல்லை. அந்தப் படத்தையும் என்னால் உள்ளடக்க முடியவில்லை. தேசிய விருதுகளுக்குப் பின்னால் பல லாபிகள் உண்டு என குற்றச் சாட்டு உள்ளதே... எந்த விருதுக்குப் பின்னால்தான் லாபி இல்லை...? சில டி.விகள் விருதுகளை மொய் எழுதுவதுபோல வருபவர்கள் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். ஆனால், என்னதான் லாபி இருந்தாலும் தேசிய விருதை மற்றைய விருதுகளை விட அதிகம் மதிக்கலாம். கேரளாவில் தேசிய விருதைப் பெற்றவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கவே நடத்தப்படுகிறது. தமிழ் நாட்டில் இந்த முறை இன்னும் வரவில்லை. நிரந்தரமான பதிவாக இருக்கப்போகின்றவை தேசிய விருதுகள்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. மக்களின் விருப்பத்தைப் பெற்ற படம் தேசிய விருதைப் பெறாது, அதேபோல தேசிய விருதைப் பெற்ற படம் மக்களின் விருப்பத்தைப் பெறாது என சினிமா வட்டாரத்தில் பொதுவாகக் கூறுவார்களே... நாம் எதையுமே பொதுவாகத் தரப்படுத்த முடியாது. தரப்படுத்தவும் கூடாது. "பாசமலர்', "வீரபாண்டிய கட்டப்பொம்மன்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "உதிரிப்பூக்கள்', "அஞ்சலி', "தேவர் மகன்', "ஆடுகளம்' போன்ற பல படங்கள் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றன. தேசிய விருதைப் பெற்ற சில படங்கள் வணிக ரீதியில் தோல்வியடைந்ததும் உண்மை. திரையுலக வட்டாரத்தில் புத்தகம் சம்பந்தமாக எப்படியான எதிர்வினை இருந்தது...? புத்தகம் வெளி வந்து சில நாட்களே ஆன படியால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் புத்தகம் இன்னும் சில வருடங்களில் திருத்தப்பட்டு வெளியிடப்படும்போது அந்தப் பதிப்பில் தமது படமும் இடம்பெற விரும்புவதாக பல இளம் இயக்குநர்கள் சொன்னார்கள். டெல்லியில் உள்ள தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு அழைத்துப் பாராட்டி, இது மாதிரியான புத்தகங்கள் எல்லா மொழியிலும் வர வேண்டியது அவசியம் என்றார்கள். மராத்தியில் இதே போல புத்தகம் கொண்டுவரப் போவதாக சாந்தாராமின் மகன் கிரண் சாந்தாராம் கூறினார். அடூர் கோபாலகிருஷ்ணன், புத்தகத்தைப் பாராட்டியதோடு, "இப்படியான புத்தகம் மலையாள சினிமாவுக்கும் அவசியம்' எனக் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது. - அருளினியன்.
 
 
 
 
 
 "பிரைட் ஆப் தமிழ் சினிமா' புத்தகத்தைப் பற்றி... • இந்தியாவின் முதலாவது பேசும் படமான "ஆலம் அரா' (ஹிந்தி)- வின் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட செட்டில்தான், தமிழின் முதலாவது பேசும் படமான "காளிதாஸ்' படமாக்கப்பட்டது. படம் வெளியான 1931 இல் மெட்ராஸ் பிரசிடன்சியில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் பேசப்பட்டதால், படத்தில் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களும் பல தெலுங்கு வசனங்களும் இடம்பெற்றன. • "காளிதாஸ்' படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே "சுதேச மித்திரன்' பத்திரிகையில் படத்தின் விளம்பரமும், விமர்சனமும் இடம்பெற்றது. அதாவது பத்திரிகையாளர்களுக்கு படத்தை போட்டுக்காட்டும் பிரஸ் ஷோ நடை முறையானது தமிழின் முதல் பேசும் படத்தில் இருந்தே ஆரம்பமாகியுள்ளது. • தமிழ் சினிமாவின் முதலாவது முத்தக்காட்சி 1934 இல் வெளியான "மேனகா' படத்தில் இடம்பெற்றது. நாயகன் டி.கே.சண்முகம் மொத்தமாக 12 தடவைகள் நாயகி கே.டி.ருக்மணியை முத்தமிட்டார். வலது கரத்தில் ஆரம்பித்து, தோள்பட்டை வரை நீண்ட ஒரு முத்தக் காட்சியானது அந்தக் காலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. • 1936 இல் வெளியாகி பெரு வெற்றி பெற்ற "சதிலீலாவதி' படமும் அதே ஆண்டு வெளியான "பதி பக்தை' படமும் ஒரே மாதிரியான கதையைக் கொண்டிருந்தன. "பதி பக்தை' படத்தின் தயாரிப்பாளர்கள் கதை உரிமைப் பிரச்னையை எழுப்பி நீதிமன்றம் சென்று "சதி லீலாவதி' படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்குமாறு கோரினார்கள். ஆனால், "சதி லீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள், இரண்டு படமுமே ஆங்கில நாவலான "டான்பியூரி ஹவு'ஸின் தழுவல்தான் என நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது கதைத் திருட்டு, கதை உரிமைப் பிரச்னை எல்லாம் 1936 இலேயே ஆரம்பித்துவிட்டது.
 
 
 
 
 
 
 • 1939 இல் பி.யூ.சின்னப்பா நடிப்பில் வெளியாகிய "உத்தம புத்திரன்'தான், தமிழ் சினிமாவில் வெளிவந்த முதலாவது டபுள் ஆக்க்ஷன் படம். • எம்.ஜி.ஆர் பெற்ற முதல் சம்பளம் 300 ரூபாய். "சதி லீலாவதி' படத்திற்காக 300 ரூபாய் பேசி அதில் 100 ரூபாய் அட்வான்ஸôகக் கொடுத்தனர். • 1953 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அளவிலான சிறந்த படத்திற்கான "தங்கத் தாமரை' விருதை 1990 இல் "மறுபக்க'மும், 2007 இல் "காஞ்சிவர'மும் மட்டுமே தமிழில் பெற்றன. இன்றுவரை வேறு எந்தப் படமும் "தங்கத் தாமரை' விருதைப் பெறவில்லை. • 1967 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை அதே ஆண்டில் "கந்தன் கருணை' படத்திற்காக கே.வி.மகாதேவன் பெற்று, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். • "துணைவன்' படத்திற்காக கே.பி.சுந்தராம்பாள் 1969 இல் தேசிய விருதைப் பெற்றார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.
 
 
நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ் 
பிரைட் ஆப் தமிழ் சினிமா! - ஜி.தனஞ்செயன்

0 comments: