Wednesday, January 28, 2015

சிம்லா - டூர் ஸ்பெஷல்

இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிகவும் புகழ்பெற்று விளங்குவது சிம்லாவாகும். இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது துவங்கியுள்ளது. அதிலும் தற்போது அடிக்கடி பனி மழை பெய்வதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது சிம்லா. இதனை ஷிம்லா என்றும் அழைப்பர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக இந்த சிம்லா இருந்துள்ளது. இது மிக அழகான மலைவாழிடமாகும்.
ஒருமுறை சிம்லா சென்று வந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அதனை எப்போதுமே மறக்க மாட்டார்கள். இப்பகுதியில் அமைந்திருக்கும் ஷியாமளா எனப்படும் காளியின் அவதாரமான அம்மனின் பெயரால் தான் இவ்விடமே ஷிம்லா என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும், ரம்மியமான புகைப்படங்கள் எடுக்க உகந்த இடமாகவும் இது விளங்குகிறது. சீசன் காலங்களில் பனி மழையும், பனியில் சறுக்கு விளையாட்டுகளும் இங்கு பெயர் பெற்றது. குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை பூஜ்ஜியத்தை தாண்டும்.
சீசன் காலங்கள் மட்டும் அல்லாமல் எப்போதுமே இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும். கோடைக் காலங்களும் கூட இங்கு இனிமையாகவே இருக்கும் என்பதால் பலரும் இங்கு படையெடுத்து வருவது வாடிக்கை.
ஷிம்லாவில் பார்க்கத் தகுந்த இடங்கள்…
வட இந்தியாவில் மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்றான கிறிஸ்ட் தேவாலயம் , ஹனுமார் கோயில்களில் வித்தியாசமாக காட்சி அளிக்கும் ஜகூ ஆலயம், ஷிம்லாவின் இயற்கை எழிலை முழுவதும் கண்டு களிக்க வகை செய்யும் ஷிம்லாவின் ரிட்ஜ், பல்வேறு சிற்பங்கள், கலைப் பொருட்கள், பாரம்பரிய, கலாச்சாரத்தை பறைசாற்றும் விஷயங்களை அறிய உதவும் ஷிம்லா அரசு அருங்காட்சியகம் மற்றும் நடுக்காட்டில் வேட்டையாட வந்தவர்களுக்காக சிந்தியா ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிக அழகான கட்டடம் சிறந்த கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்கிறது.
மேலும்,
கடல் மட்டத்தில் இருந்து 1851 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தாரா தேவி ஆலயம், ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் அமைந்துள்ள சம்மர் ஹில், கெய்டி ஹெரிட்டேஜ் கலாச்சார வளாகம், சங்கத் மோச்சான் ஆலயம்,
சாலி எனப்படும் பனிச் சறுக்கு விளையாட்டு மைதானம் தான் ஷிம்லாவில் பெரும்பாலானோரை கவரும் இடமாகஇருக்கும்.
எப்படி செல்வது
விமான மார்கம்
இமாச்சலப் பிரதேச மாநிலம் ஜூபர்ஹதி நகரில் அமைந்துள்ள விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ஷிம்லா செல்லலாம். ஜூபர்ஹதியில் இருந்து ஷிம்லா வெறும் 23 கி.மீ. தான்.
ரயில் மார்கமாக
ஷிம்லாவில் மிகச் சிறிய ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது கல்கா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் மிகச் சிறிய ரக ரயில் இயக்கப்படுகிறது. சண்டிகர், தில்லி போன்ற முக்கிய ஊர்களில் இருந்து கல்காவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பேருந்தில் செல்ல
வடஇந்திய நகரங்களில் இருந்து ஏராளமான அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஷிம்லாவுக்கு இயக்கப்படுகிறது. சண்டிகரில் இருந்து 117 கி.மீ. தொலைவிலும், மணாலியில் இருந்து 260 கி.மீ. தொலைவிலும், தில்லியில் இருந்து 343 கி.மீ. தொலைவிலும் ஷிம்லா அமைந்துள்ளது.
வாடகை வாகனத்தில் செல்ல..
தில்லியில் இருந்து ரிங் ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் செல்ல வேண்டும். அம்பாலா சென்ற பிறகு தேசிய நெடுஞ்சாலை 2 அடைந்து அங்கிருந்து கல்கா செல்லலாம். தில்லியில் இருந்து 6 முதல் 7 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
அப்புறம் என்னங்க… இவ்வளவையும் சொல்லிட்டோம்.. ஷிம்லாவைக் காண வேண்டுமா.. உடனே கிளம்புங்க

நன்றி - தினமணி 

0 comments: