Sunday, January 18, 2015

உதிரிப்பூக்கள் - ஆனந்த விகடன் -இயக்குநர் மகேந்திரன்

வரலாறு செய்தியாகி விட்டது! இயக்குநர் மகேந்திரன்

""சிலரை இழக்கும்போதுதான் அந்தத் தருணங்களின் பெருமை தெரிகிறது. எம்.ஜி.ஆரின் பக்கத்தில் அவ்வளவு நேரங்கள் இருந்திருக்கிறேன். சிவாஜியோடு அன்பு பாராட்டியிருக்கிறேன். ஆனால் அவர்களோடு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட என்னிடம் இல்லை. இப்போதுதான் அதன் அருமையும், பெருமையும் புரிகிறது. அதே போல்தான் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன் சார்'' நெகிழ்வாகப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.  ""7 மாதங்களில் பிறந்த குறை குழந்தை நான். அதுவே எனக்குத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டது. பள்ளியில் எல்லோரும் ஆடி, பாடி, ஓடி விளையாடும்போது நான் மட்டும் சும்மாவே இருப்பேன். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யாததைச் செய்ய, நூலகத்துக்குச் சென்றேன். அதுதான் புத்தகங்களின் மீது என்னை தீரா காதல் கொள்ள வைத்தது.  வாசிப்புதான், வரலாறுகளை உருவாக்குகிறது; அரசியலை தீர்மானிக்கிறது; கனவுகளை மனதுக்குள் ஏற்றுகிறது; கூட்டுப் புழுக்களை பட்டாம் பூச்சிகளாக்குகிறது. எனது தலைமுறையின் அநேகருக்கான வாசிப்பு, காமிக்ஸ்களில் இருந்தும் அம்புலிமாமாவில் இருந்தும்தான் தொடங்கியது. அடிப்படையில் நான் பத்திரிகைக்காரன். என் கால் சட்டை பருவத்தை "ஆனந்த விகடன்', "குமுதம்', "கல்கண்டு' இந்த மூன்று பத்திரிகைகளும் ஆக்கிரமித்து இருந்தன. அவற்றில் கதைகளுக்காக விரும்பிப் படிப்பது ஆனந்த விகடனை. அது தரும் பரவசங்களையும், ஆனந்தங்களையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.  
 
 
 
 
 
 
அந்த ஆர்வம் என்னைக் கையெழுத்துப் பத்திரிகை வரை அழைத்துச் சென்றது. "பாட்டாளி', "லட்டு' என இரண்டு கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தினேன். விகடன் கோபுலு வரையும் படங்களுக்கு நான் கதை எழுதுவேன். இப்படியே என் பதின் பருவங்களிலிருந்தே நான் பத்திரிகைக்காரன்'' என சொல்லிச் சிலிர்க்கும் மகேந்திரன் தொடர்கிறார்.  ""இன்னும் கூட அந்த நாள் என் நினைவில் இருந்து நீங்கவில்லை. 60-களின் இறுதி அது. சினிமாவின் மீது எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. சினிமாவை விட்டு ஊருக்கே போய் விடலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். சிவாஜி நடித்த "நிறைகுடம்' படம். அதற்கு நான்தான் கதை. சோ சார் திரைக்கதையாசிரியர். படம் முடிந்ததும் சம்பள பாக்கியை வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகத் தயாரானேன். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது, சோ சாரிடமிருந்து அழைப்பு. போய் பார்த்தேன். அவர் கேட்டுக் கொண்டதால் "துக்ளக்' பத்திரிகையின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். "துக்ளக்' ஆரம்பிக்கப்பட்ட காலம். அண்ணா சாலை "விகடன்' சுற்றுச் சுவருக்குள்தான் "துக்ளக்'கும் இருந்தது. "விகடன்' பதிப்பகத்திலிருந்துதான் "துக்ளக்' வெளிவந்து கொண்டிருந்தது.  ஒடுக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதி வந்தேன். பெரும் தொடராக வெளிவந்து கொண்டிருந்த அந்தத் தொடர், அப்போது அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தது. விகடனிலிருந்து மணியன் சார் "துக்ளக்' அலுவலகம் வரும் போதெல்லாம் அந்த நேர்காணல்கள் பற்றிப் பேசுவார். எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன் சார் அந்தத் தொடருக்குத் தெரிவித்திருந்த கருத்துக்களையும் சொல்லுவார். அப்போது அது எனக்குப் பெரிய சான்றிதழ்போல் இருந்தது.  அப்போது "துக்ளக்' அலுவலகம் வந்த எஸ்.எஸ் பாலசுப்பிரமணியன் சாரை ஒருமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன், அவ்வளவே.  துக்ளக்கில் நான் எழுதி வந்த தொடரில் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் வேலை பார்த்து வரும் ஒரு வெட்டியானின் நேர்காணலை "கடைசி வரை மூர்த்தி' என்று தலைப்பிட்டு எழுதியிருந்தேன். அதைப் பார்த்த எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன் ரொம்பவே நெகிழ்ந்து விட்டார். அது விகடனில் வந்திருக்க வேண்டிய கட்டுரை எனச் சொல்லியிருக்கிறார். ஆனந்த விகடன் அலுவலக வளாகத்தில் எஸ்.எஸ்.பாலன் சாரை அவ்வப்போது பார்ப்பது உண்டு. ஆனால், தொடர்பு இல்லை.  காலம் என்னை சினிமாவை நோக்கித் தள்ள, விகடன் சுற்றுச்சுவருக்கு வெளியே வந்து விட்டேன். "உதிரிப்பூக்கள்' வெளிவந்த சமயம் அது. எஸ்.எஸ்.பாலன் சாரிடமிருந்து அழைப்பு. ""உங்களுக்கு எப்போது வசதியோ, அப்போது வந்து பார்க்கலாம்'' என அவர் சொன்னது இன்னும் பிரமிப்பு. சில மணி நேரங்களில் அவர் முன்னால் போய் நின்றேன்.  உட்காரச் சொன்னவர், என் முன்னால் ஒரு ப்ளாங்க் செக் வைத்து, ""இந்தாங்க... நம்ம ஸ்தாபனத்துக்கு ஒரு படம் பண்ணுங்க'' என்றார்.
 
 
 
 
 
 ஆனால் அப்போது "நெஞ்சத்தை கிள்ளாதே' பட வேலைகளை வேறு ஒரு நிறுவனத்துக்கு ஆரம்பித்து விட்டதால், எஸ்.எஸ்.பாலன் சாரின் வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டியதாகி விட்டது.  ஆனால், ""நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம்'' என அன்புக் கட்டளை விட்டிருந்தார். அதன் பின்னால் ரஜினியை வைத்து "ஜானி' பட வேலைகளும் தொடங்கி விட்டன. அதன் பிறகு எஸ்.எஸ்.பாலன் சாரை நான் சந்திக்கவில்லை. அதன் பின் எழுத்தாளர் சுஜாதா, நடிகை லெட்சுமி, நான் என மூன்று பேரையும் சந்தித்து உரையாட வைத்து வெளியிட்டார். அது விகடன் அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்தது.  அதன் பின் தனிமை விரும்பியாகிவிட்ட எஸ்.எஸ்.பாலன், சந்திப்புகளைத் தவிர்த்து வந்தார். பண்ணை வீட்டுக்குப் போனதற்குப் பின், அவரை அதிகமாக விசாரிப்பேன். பண்ணை வீட்டில் விவசாயம், பறவைகள் என தனி உலகமாக வாழ்ந்தவர் இன்று தனிமையாகி விட்டார்.  கடைசியில் ஒரு வரலாறு ஒரு செய்தியாகவே முடிந்து விட்டது!'' கரகரப்பான குரலில் சொல்லி முடித்தார் இயக்குநர் மகேந்திரன்.
 
நன்றி - த இந்து

0 comments: