Monday, January 19, 2015

மொசக்குட்டி மகிமா வின் முதல் அனுபவம்

பண்பு கண்டு வியந்தேன்!

மலையாள தேசம், தமிழ் சினிமாவுக்கு தன் தேவதைகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. 80களில் ரேவதி, ஷோபனா, அம்பிகா, ராதா அதன்பிறகு அசின், நயன்தாரா, கோபிகா, பூர்ணா, இனியா, அமலா பால், லட்சுமி மேனன் என்று மகிமா வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மகிமாவும் "மொசக்குட்டி' படம் வந்ததில் இருந்து நன்றாக நடிக்கக்கூடிய நடிகை என்று பெயர் பெற்றிருக்கிறார். போன் செய்த அடுத்த நிமிடமே, "ஷாலோம் ஸ்டுடியோ நிறுவனத்துக்கு வந்துடுங்க பேசலாம்' என்று அழைத்தார்.    சினிமாவுக்கு வந்ததெப்படி?  
 
 
 
 
சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் ஆசைதான். நடிக்கணும் என்றெல்லாம் கிடையாது. ஆனால் வளர வளர சினிமாவில் நடிக்கவேண்டும் என்று நினைத்தேன். படிக்கும்போதும் நிறைய சினிமா பார்ப்பேன். மலையாளத்தில் சின்னதாக ஒரு ரோல் பண்ணினேன். அப்புறம் படிப்பில் தீவிரமாகிவிட்டேன். ஒரு நாள் புரொடக்ஷன் மேனேஜர் ஷிவாதான் "சாட்டை' என்றொரு தமிழ்ப் படத்தில் நடிக்க கதாநாயகி தேவை நீ நடிக்கிறாயா? என்று கேட்டார். போட்டோ ஷூட் நடந்தது. இயக்குநருக்கும் பிடித்துவிட நடிக்கவந்துவிட்டேன்.    "சாட்டை'க்குப் பிறகு நிறைய இடைவெளி?  நான் "சாட்டை'யில் நடிக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அதனால், அந்தப் படத்துக்குப் பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.    இப்போதும் படிக்கிறீர்களா?  ஆமாம். பி.ஏ., ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் கேரளா செல்லவேண்டும். இறுதியாண்டு தேர்வுகள் எழுதவேண்டும்.    "மொசக்குட்டி' வாய்ப்பு எப்படி அமைந்தது?  "சாட்டை' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜீவன். அந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே "நான் ஒரு படம் இயக்கவிருக்கிறேன். அந்தப் படத்தில் நீதான் நாயகியாக நடிக்கவேண்டும்' என்று சொன்னார். சொன்னபடியே என்னை அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவைத்தார். அந்தப் படத்தில் நடித்ததால் எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. மகிமா நன்றாக நடிக்கக்கூடிய பெண் என்று சொல்லக்கேட்கும் பொழுது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?    தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோ நிறுவனத்திலேயே நடிக்கிறீர்களே?  ஐயோ... இது திட்டமிட்டு நடக்கும் நிகழ்வல்ல. "சாட்டை' படம் நடிக்கும் போதே, ஜீவன் அந்த நிறுவனத்துக்குப் படம் பண்ண ஒப்புக்கொண்டிருந்தார். அதனால் "மொசக்குட்டி' படத்தில் நடித்தேன். இடையில் "என்னமோ நடக்குது' படத்தையும் அந்த நிறுவனம் தயாரித்தது. விஜய் வசந்துக்கு நான் சரியான ஜோடியாக இருப்பேன் என்று இயக்குநர் கருதியதால் அந்தப் படத்திலும் நானே நடித்தேன். அவ்வளவுதான். இது தற்செயலானது. இதையெல்லாம் வைத்து ஏதாவது கிளப்பிவிடாதீர்கள். இப்போது நான் நடித்து வருவதெல்லாம் வெவ்வேறு நிறுவனங்களின் படங்கள்தான்.    இப்போது நடித்து வரும் படங்கள் பற்றிச் சொல்லுங்கள்?  "கிட்ணா', "புரவி 150 சிசி', அப்புறம் "அட்டகத்தி' தினேஷுடன் ஒரு படம். "கிட்ணா' படத்தில் நான் நடிக்கும் கேரக்டர் பற்றி சொல்லக்கூடாது என்று இயக்குநர் சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். படத்தில் நாயகன், நாயகி என்று யாரும் கிடையாது. நான்கு பாத்திரங்களை மையமாக வைத்துதான் படம் நகரும். அதில் என்னுடைய கேரக்டரும் ஒன்று.  "புரவி 150 சிசி' - இந்தப் படத்தை இயக்குநர் சேரனின் உதவியாளர் வெங்கட் என்பவர் இயக்குகிறார். இது ஒருநாள் இரவில் தொடங்கி, விடியலில் முடிவதுபோல இருக்கும். இந்தப் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறேன். எனக்கு ஜோடியாக ஆதித்யா நடித்துள்ளார். பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.  "அட்டகத்தி' தினேஷுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இன்னும் அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டவில்லை. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.    உங்களுடன் நடித்த நடிகர் சமுத்திரக்கனி, உங்களை இயக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி வித்தியாசம் இருக்குமே?  "சாட்டை' படத்தில் அவருடன் நடிக்கும்போது, நான் நன்றாக நடிக்கும் ஒவ்வொரு முறையும் கைதட்டி பாராட்டுவார். ஜாலியாக இருப்பார். அவருடன் நடிக்கும்போது எந்தவிதமான பயமும் எனக்கு இல்லை. ஆனால், அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, "" "சாட்டை' படத்தில் நான் சக நடிகன். அது இன்னொருத்தருடைய இயக்கம். அதனால் உன்னைப் பாராட்டி, மகிழ்ந்தேன். ஆனால், "கிட்ணா'வுக்கு நான் இயக்குநர். அந்தப் படத்தில் நடந்துகொண்டது போலவே இதில் நடந்துகொள்ளமாட்டேன். நன்றாக நடிக்கவில்லை என்றால்... பார்த்துக்கோ' என்று மிரட்டி வைத்தார். நல்லவேளை, அவர் கடிந்துகொள்ளும் அளவுக்கு நான் மோசமாக நடித்துவைக்கவில்லை.    மலையாளத்தில் "காரியஸ்தயன்' என்ற படத்தில் திலீப்புக்கு தங்கையாக நடித்தீர்களே... இப்போது வேறு ஏதாவது படத்தில் நடிக்கிறீர்களா?  இல்லை.    மலையாளத்தில் இருந்து நிறைய கதாநாயகிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்... நீங்கள் எந்தமாதிரி அறியப்பட விரும்புகிறீர்கள்?  நடிப்புக்கு என்று நான் எந்த இலக்கணமும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், ரேவதி, ஷோபனா, பிரியாமணி போன்று துணிச்சலான கேரக்டர்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்காக கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று சொல்லவரவில்லை. நடிக்க வந்துவிட்டோம். இப்படித்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடிக்கவேண்டும்.    தமிழ் சினிமாவில் மூன்று வருடத்துக்கு மேல் இருக்கிறீர்கள், இன்னும் பெரிய அளவில் அறியப்படவில்லையே?  நான் தொடர்ந்து நடிக்கவில்லை. இடையில் படிப்பதற்காகவும் சென்றுவிட்டேன். அதனால் "சாட்டை' படத்துக்குப் பிறகு வந்த நிறைய வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். நடிப்பு எப்படி முக்கியமோ, அதுபோல படிப்பும் எனக்கு முக்கியம்தான். நடிப்புடன் படிப்பையும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அதோடு, எனக்கு இப்போதொன்றும் வயதாகிவிடவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்கப்போகிறேன். நிறைய படங்களில் நடித்துதான் அறியப்படவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தேர்வு செய்து சில படங்களில் நடித்தாலும் போதும்.    தமிழ்த் திரையுலகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  முதன் முதலில் நடிக்க வந்தபோது எனக்கு மொழி ஒரு பிரச்னையாக இருந்தது. இப்போது அப்படியில்லை. நன்றாகத் தமிழ் பேசுகிறேன். மற்ற மொழிப்படங்களில் அந்த மொழியைச் சார்ந்த நாயகிகள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால், தமிழில் மட்டும்தான் தமிழ்நாட்டைச் சார்ந்த நாயகிகள் குறைவாகவும், மற்றமொழி நாயகிகள் அதிகமாகவும் இருக்கிறார்கள். ரசிகர்கள் மற்றமொழியைச் சார்ந்த நாயகிகளையும் அன்புடன் ஏற்றுக்கொள்கிறார்கள். திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களும், மற்றமொழியைச் சார்ந்த நடிகை என்று பேதம் பார்க்காமல் பண்புடன் பழகுகிறார்கள். உண்மையில் இதையெல்லாம் பார்த்து நான் வியந்தேன். இன்னும் வியக்கிறேன். இதனால், தமிழ் சினிமாவை அதிகமாகக் காதலிக்கிறேன்.  - மன்முருகன்
 
 
நன்றி  - சினிமாஎக்ஸ்பிரஸ்

0 comments: