Monday, January 26, 2015

நானும் என்னுடைய சகோதரரும் - ஆர் கே லட்சுமன்

Rk_laxmanஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்கிய ஆர்.கே.நாராயண்-ஆர்.கே.லட்சுமண் சகோதரர்கள் இருவருமே வெவ்வேறு துறையில் பிரபலமானவர்கள் என்றாலும், இவர்களுக்குள் உள்ள நகைச்சுவையுணர்வு மட்டும் ஒருவருக்கொருவர் சளைத்ததல்ல.
எழுத்தின் மூலம் ஒருவர் நகைச்சுவையை வெளிப்படுத்தினால் இன்னொருவர் கேலிச்சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். 50 ஆண்டுகளுக்குமேல் தன்னுடைய சகோதரர் கற்பனைக்குப் பார்ட்னர் போல் ஓவியங்களை வரைந்து வந்ததோடு “மால்குடி’ என்ற கிராமத்தையும் நம் கண் முன்னே உருவாக்கிய பெருமை லட்சுமணனையே சேரும்.
முன்னவருக்கு அரசியல் பிடிக்காது. பின்னவருக்கு அரசியல்தான் சாப்பாடு, ஊறுகாய் எல்லாமே. அனைத்து விஷயங்களிலும் ஒத்துப்போனாலும் இருவருக்கும் “எமர்ஜென்சி’ சமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுண்டு. முன்னவர் “தேவை’ என்றார். பின்னவர் “தேவையில்லை’ என்றார். உண்மையில் இது ஒரு “டிராஜடி’தான். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை வைத்து சுவையான சம்பவமாக அதை சித்தரித்ததும் உண்டு.
நாராயண் விட்டுவைத்த அரசியல்வாதிகள் முகமுடிகளைக் கிழித்தெறியவோ, தாக்குவதற்கோ லட்சுமண் தயங்கியதே இல்லை. இதைப்பற்றி லட்சுமணிடம் கேட்டபோது அவர் சொன்னாராம், “”இந்த அரசியல்வாதிகளைப்பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. அவர்களுடைய கோபம் என்னை எந்த வகையிலும் பாதிக்காது. நான் வரையும் கார்ட்டூன்கள் மக்களுக்காகத்தான்; அரசியல்வாதிகளுக்காக அல்ல.”
இதுதான் லட்சுமண். மறைந்த அவரது சகோதரர் நாராயண் பற்றி இங்கே நினைவு கூறுகிறார்:
நாராயணுடன் கழித்த என்னுடைய இளமை கால நினைவுகள் மிகவும் மந்தமானவை. இரண்டு சகோதரிகள். மூத்தவர்களில் நாராயணும் ஒருவர். முதலில் சென்னையில் படித்து வந்த அவர், பின்னர் மைசூரில் படிப்பைத் தொடர்ந்தார். என்னைப் பொறுத்தவரை, நான் முழுக்க முழுக்க மைசூர்க்காரன். நான் பேசுவதுபோல் அவருக்கு சுலபமாக கன்னடம் பேச வராது.
அதன் பின்னர் சம்பவங்கள் நன்கு நினைவில் இருக்கின்றன. என்னுடைய மூத்த சகோதரர்களுடன் சேர்ந்து ஒரு கோஷ்டிபோல் சுற்றிக் கொண்டிருப்பார். சில சமயங்களில் விடியற் காலையிலேயே அவர்களனைவரும் ஓர் அறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொள்வார்கள். என்ன பேசுவார்களோ அது கடவுளுக்குத்தான் தெரியும். சாப்பாட்டு நேரத்தில்தான் அனைவரும் ஒன்றாகக் கூடுவோம். அப்பா நடுநாயகமாக வீற்றிருப்பார். மெத்தப் படித்தவர். அதனால்தானோ என்னவோ நாராயண் நிறைய படிப்பதுண்டு. பிறகுதான் அதிகமாக எழுதத் தொடங்கினார். என்னுடைய மற்ற சகோதரர்கள் எல்லாம் தங்களுடைய நண்பர்களைப் பார்க்கச் செல்வதுண்டு. இவரோ தனிமையில் அமர்ந்து கொண்டு டைப்ரைட்டர் மெஷினில் கதைகளை அடித்துக் கொண்டிருந்தது நன்கு நினைவில் இருக்கிறது.
எங்கள் அனைவருக்குமே அம்மா ஓர் உதாரண புருஷியாக விளங்கினார். அந்தக் காலத்திலேயே அவர் செஸ், பிரிட்ஜ் ஆட்டங்களில் சாம்பியனாக விளங்கினார். அப்பா ஒரு ரோமானிய செனட்டர் மாதிரி கிளப்புகளுக்குச் செல்வார். டென்னிஸ் ஆடுவார். அவரது நண்பர்கள் கூட கம்பீரமாக இருப்பார்கள். கோட்டு, சூட் அணிந்திருப்பார்கள். அப்பாவிடம் எங்களுக்கெல்லாம் மிகுந்த மரியாதை உண்டு. அம்மாவுடன் இருக்கும் போதெல்லாம் ஏதாவது ஜோக் வருமா என்று எதிர்பார்த்து காத்திருப்போம். வாழ்க்கையில் எங்களனைவருக்கும் ஏற்பட்ட ஒழுக்கம், கண்டிப்பு போன்றவை அப்பாவிடமிருந்து வந்ததாகும். நாராயணை பொறுத்தவரை, அவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற இன்னொரு நபர் எங்களுடைய பாட்டி. சென்னையில் பெரும்பாலும் அவருடன்தான் இருந்தார். அதன் வெளிப்பாடுதான் “சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்’ கதையில் வரும் பாட்டி.
வளர்ந்தவுடன் எங்களிருவருக்கும் ஏதோ ஒரு நெருக்கம் ஏற்படத் தொடங்கியது. ஒருமுறை நான் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “”என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். அதைவைத்தே “டாட்-தி மணிமேக்கர்’ என்ற சிறுகதை எழுதிவிட்டார். எனக்குப் பிடிக்கவில்லை. பின்னர் “தி மெர்ரி மாகசின்’ என்ற பத்திரிகையில் இந்தக் கதை வெளியானபோது சிறந்த இலக்கிய விருதுக்காக ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றது. அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை. சில சமயங்களில் தன்னுடைய சிறுகதையின் கருத்தை சொல்லி குடும்பத்தினருடன் விவாதிப்பதும் உண்டு.
எல்லா சகோதரர்களிடமும் நகைச்சுவை உணர்வு இருந்தது. ஆனால் அவர்கள் எல்லாம் அரசாங்க வேலையைத் தேடிக் கொண்டார்கள். நானும் நாராயணும்தான் தன்னிச்சையாக ஏதாவது செய்ய வேண்டுமென்று தீர்மானித்தோம். அவரைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்வதென்பது ஒத்துவராத விஷயம். அப்பாவின் வற்புறுத்தலால் அவர் தேடிக்கொடுத்த பள்ளிக்கூட ஆசிரியர் வேலையில் சேர்ந்த மூன்றாவது நாளே சென்னபட்டணாவிலிருந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டார். வேலையில் சேர்ந்த மறுநாள் இவரை உடற்பயிற்சி வகுப்பு நடத்தச் சொன்னார்களாம். இரண்டு நாள் நடத்திய பிறகு லீவில் போவதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவர் வீட்டிற்கு வந்த அன்றைய தினம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. வந்தவுடன் அவருடைய தேவை என்ன என்பதை உணர்ந்து கொண்ட அப்பாவை முதலில் சந்தித்தார். அம்மாவுக்கு அப்பாவின் கருத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. “”எவ்வளவு துரும்பாக இளைத்துவிட்டான் பார்” என்று ஆதங்கப்பட்டாள். இத்தனைக்கு அவர் சென்று திரும்பியது மூன்று நாட்கள்தான்! ஏதாவது சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். பிறகு பழையபடி அவர் படிப்பது, சுற்றுவது என்றாகிவிட்டார்.
எங்கள் வீட்டைப் பொறுத்தவரை யாருமே தோல்வியைப்பற்றி யோசித்ததே கிடையாது. நாங்கள் எல்லாருமே படிக்கும்போது ஏதாவது ஒரு வகுப்பில் தோல்வியடைந்திருக்கிறோம். அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை. நான் எஸ்.எஸ்.எல்.சி.யில் தோல்வியடைந்தேன். நாராயண் இன்டர் படிக்கும்போது ஆங்கிலத்தில் தோல்வி அடைந்தார். கல்வியில் இதெல்லாம் ஒரு பகுதியென்றே பெற்றோர்கள் கருதினார்கள்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி தில்லி வந்தேன். வேலை தேடிச் சென்றபோது, ஒரு பத்திரிகை ஆசிரியர் “உன்னுடைய தகுதிக்கு இங்குள்ள பத்திரிகைகள் எல்லாம் சரிப்படாது. அமெரிக்காதான் சரி. அங்கு ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்’ என்று அறிவுரை செய்தார். உண்மையில் முதலில் நான் எழுத்தாளனாக வேண்டுமென்றுதான் விரும்பினேன். ஆனால் நடந்ததென்னவோ வேறு. எதுவொன்றையும் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டுமென்பார். அவரது அனுமதியின்றி பேசினால் ஏதோ ஒரு வார்த்தையில் சொல்ல வந்தவையெல்லாம் பறிபோய் விட்டதாக கருதுவார். அதனால்தான் அவரது எழுத்துக்கள் தெளிவாக இருந்தன. மொழியை மீறி கருத்துக்கள் வெளிப்பட்டன.
ஆங்கில இலக்கியத்தின் சுமைகளைக் கற்பனையில் ஏற்றாமல் தன்னுடைய எழுத்துக்களையும் இன்றைய காலத்திற்கேற்ப உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியுமென்பதற்கு இவர் ஓர் உதாரணமென்று சொல்லலாம். அவர் தெருவைப்பற்றி வார்த்தைகளில் சொல்வார். நான் கூடவே குப்பைத்தொட்டியையும் காக்கை அல்லது நாயையும் வரைவேன். எங்களைப் பொறுத்தவரை, நாணயத்தின் இருபக்கங்களாகவே இருந்தோம்!


நன்றி  - தினமணி 

0 comments: