Tuesday, January 13, 2015

தேனி வாழ் மக்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் பாதிப்பா?

  • மேற்கு போடி மலையில் திட்டமிடப்பட்ட வழிப்பாதை.
    மேற்கு போடி மலையில் திட்டமிடப்பட்ட வழிப்பாதை.
  • குகை மற்றும் சுரங்கப்பாதையின் திட்டம்.
    குகை மற்றும் சுரங்கப்பாதையின் திட்டம்.
  • இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்ட குகையின் மாதிரி தோற்றம்.
    இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்ட குகையின் மாதிரி தோற்றம்.
உலகின் மாபெரும் அறிவியல் ஆய்வுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தேனி மாவட்ட மலைப் பகுதியில் தொடங்கப்படவுள்ளது.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய அணுசக்தி துறை ஆதரவில் இந்த ஆய்வுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் போலவே நியூட்ரினோவும் அடிப்படையான துகள். மற்ற துகள்களைக் காட்டிலும் மிக மிக இலகுவானவை. பிரபஞ்சம் தோன்றியதிலிருந்தே இருக்கும் இந்த நியூட்ரினோ துகள்கள், தினமும் கோடான கோடி கணக்கில் நம்மை கடந்து செல்கின்றன. மனித உடலில் புகுந்து வெளியேறுகின்றன. பூமிப் பந்தின் ஒரு பக்கம் புகுந்து, மறுபக்கம் சாதாரணமாக வெளியேறுகின்றன. சூரியனிலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் புகுந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
நியூட்ரினோ துகள்களின் குணங்களை மேலும் விரிவாக ஆராய்ந்தால், அதன்மூலம் சூரியனின் தோற்றம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் தோற்றம் உள்ளிட்ட ஏராளமான புதிர்களுக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பூமிக்கு அடியில் ஆராய்ச்சியே சாத்தியம்
பூமியின் மேற்பரப்பில் காஸ்மிக் கதிர்கள் மற்றும் பிற அடிப்படை துகள்களின் தாக்கம் அதிகளவில் இருக்கும். இதனால், நியூட்ரினோவை மட்டும் தனித்து ஆராய்வது சாத்தியமல்ல. பூமிக்குள் ஆழத்தில் ஆராயும்போது, பூமியை ஊடுருவிச் செல்லும் நியூட்ரினோக்களை மட்டும் தனித்து ஆராய வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான ஆய்வுக் கூடம் தேனி மாவட்டம், மேற்கு போடி பகுதியில் பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலையைக் குடைந்து அமைக்கப்படவுள்ளது. இதற்காக, மலையைக் குடைந்து 2 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. சுரங்கப்பாதையின் முடிவில் இரண்டு குகைகள் தோண்டப்பட்டு, 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்தமயமாக்கப்பட்ட இரும்புப் பாலங்களைக் கொண்ட உணர்கருவி (Detector) நிறுவப்படும்.
குகைகளைக் கடந்து செல்லும் நியூட்ரினோ துகள்களைப் பற்றிய தகவல்கள் உணர்கருவியால் சேகரிக்கப் பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த ஆய்வின்மூலம் சூரியனில் நடைபெறும் ஆற்றல் உருவாக்கம், பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையில், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஐஐடி-க்கள் என மொத்தம் 21 நிறுவனங் கள் இணைந்து இந்த ஆய்வுத் திட்டத்தை மேற்கொள்கின்றன. தமிழகத்திலிருந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை ஐஐடி, சென்னை கணித அறிவியல் நிறுவனம் ஆகியவை இந்த ஆய்வுத் திட்டத்தில் இணைந்துள்ளன.
மத்திய அரசு ஒப்புதல்
உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ள ரூ. 1,500 கோடி மதிப்பிலான இந்த அறிவியல் ஆய்வுத் திட்டத்துக்கு கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தச் சூழலில் இந்தத் திட்டத்தால் தேனி மலைப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் என்றும் கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அணைகளுக்கு பாதிப்பு?
இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் ஏற்படுத்தும் பாதிப்புகளால் முல்லைப் பெரியாறு, வைகை மற்றும் வைப்பாறு போன்ற ஆறுகளுக்கான நீராதாரம் பாதிக்கப்படும் என்றும், தமிழகம் மற்றும் கேரளத்தில் உள்ள 12 அணைகள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் வி.டி. பத்மநாபன்.
அவர் மேலும் கூறும்போது, ‘ஆய்வுக்கூடம் அமையவுள்ள இடம் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்துள்ள பகுதியாக உள்ளது. எனவே, திட்டம் செயல்படுத்தப்படும்போது ஏற்படும் நில அதிர்வுகளால் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்’ என்றார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரான ஜி. சுந்தர்ராஜன் கூறும்போது, ‘மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்க சுமார் 8 லட்சம் டன் அளவுக்கு பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிர்வுகளும், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.
மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃபெர்மி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து அனுப்பப்படும் அதிக சக்தி வாய்ந்த நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்வதற்காகவே இங்கு ஆய்வகம் அமைக்கப்படுகிறது. எனவேதான், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை, பெரும் தொகையை செலவு செய்து இங்கு மேற்கொள்ள அவசியம் இல்லை என்று வலியுறுத்துகிறோம்’ என்றார்.
எதிரான கருத்துகள் அனைத்தும் வதந்தி
இந்த நிலையில், நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் நிலவும் பல கேள்விகள், சந்தேகங்கள் பற்றி இந்தத் திட்டத்தின் மூத்த விஞ்ஞானியான- சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டி. இந்துமதி கூறியதாவது:
இந்த ஆய்வுத் திட்டம், நியூட்ரினோ என்ற அடிப்படையான துகளின் குணங்கள் குறித்தான ஆராய்ச்சியே தவிர, அணுசக்தி ஆராய்ச்சியோ, கதிரியக்கம், ராணுவம், பாதுகாப்புத் துறை தொடர்பான வேறு எந்த ஆராய்ச்சியோ இல்லை.
இந்தத் திட்டம் அமெரிக்கா தொடர்புடைய ஆய்வுத் திட்டம் என்று கூறப்படுவதில் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இல்லை. இந்தத் திட்டத்தால் மக்களுக்கு கதிரியக்க பாதிப்புகள் வரும் என்பது வதந்தியே. சாதாரணமாக, பூமியின் மேற்பரப்பில் கதிரியக்கங்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அந்தச் சூழலில் நியூட்ரினோ துகள்களை ஆராய முடியாது. எனவேதான், கதிரியக்க தாக்கம் இல்லாத வகையில் மலையைக் குடைந்து ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது.
அணு உலைக் கழிவுகளை சேகரித்து வைக்கும் இடமாக இந்த ஆய்வுக் கூடம் பயன்படுத்தப்படும் என்பதும் வதந்தியே.
சுரங்கம் தோண்டும்போது தினமும் இரண்டு முறை மட்டுமே வெடிபொருள் வெடிக்கப்படும். இதனால் ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிர்வுகள் வெளிப்பகுதியில் உணராத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கப்படும். இந்த அதிர்வுகளால் அணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது.
இங்கு வெட்டியெடுக்கப்படும் பாறைகளில் 90 சதவீதம் முழுப் பாறைகளாகக் கிடைக்கும். அவை அதிக தரமும், மதிப்புமிக்க கிரானைட் பாறைகளாகும். அந்த கிரானைட் பாறைகள் முழுவதும் தமிழக அரசுக்குச் சொந்தமானது என்பதால், அவற்றை வெளிச்சந்தையில் அரசு விற்பனை செய்யும். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே துகள்களாக கிடைக்கும். எனவே, பாறைகளை உடைப்பதால் தூசு மண்டலம் ஏற்படும் என்பதற்கும் வாய்ப்பு இல்லை.
தண்ணீர் பற்றாக்குறை வராது
இந்தத் திட்டத்துக்கு, திட்டப் பகுதியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்ட வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்தான் அந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் தண்ணீர் தேவை குறித்து தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். எனவே, நியூட்ரினோ திட்டத்துக்காக தண்ணீர் எடுக்கும்போது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் அரசு பார்த்துக் கொள்ளும்’ என்றார் இந்துமதி.
அறிவியல் கண்ணோட்டம் தேவை
‘நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் என்பது அடிப்படை அறிவியல் தொடர்பான ஓர் ஆராய்ச்சி. இந்தத் திட்டத்தின் சாதக- பாதகங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டுமே தவிர, மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டிவிட்டு உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக மாற்றக் கூடாது’ என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் சி. ராமலிங்கம்.
அவர் மேலும் கூறும்போது, ‘இங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்காக பாறைகளை உடைக்கும்போது ஏற்படும் அதிர்வுகள், சுற்றுப் பகுதியில் உள்ள அணைகளைப் பாதிக்கும் என்பது கற்பனையே. உலகிலேயே பொறியியல் துறையின் அதிசயம் எனப் புகழப்படும் கொங்கன் ரயில்வே திட்டத்துக்காக 91 இடங்களில் மலைகளைக் குடைந்து ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் சில குகைகள் 4 கி.மீ. நீளத்துக்கும் அதிகமானவை. மஹாராஷ்டிர மாநிலம், ரத்தினகிரி மாவட்டத்தில் 6.5 கி.மீ. நீளத்துக்கு மலையைக் குடைந்து பாதை அமைக்கப்பட்டது.
அதேபோல, பைக்காரா மின் திட்டத்துக்காகவும் மலையில் ராட்சத சுரங்கம் அமைத்துதான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, போடி மலையில் 2 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைப்பதால் அதிர்வுகள் ஏற்படும் என்பதும், அந்தப் பகுதியே நாசமாகும் என்பதெல்லாம் அறிவியலுக்கு புறம்பானவை.
மீத்தேன் திட்டம் எதிர்ப்புக்குரியது
அதேவேளையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள மீத்தேன் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பேரிடர் திட்டம். ஆகவே, அழிவைத் தரக் கூடிய அதுபோன்ற திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாறாக, ஆக்கபூர்வமான அறிவியல் வளர்ச்சிக்கும், இந்திய மாணவர்கள் குறிப்பாக, தமிழக மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆர்வத்தை தூண்டக்கூடியதுமான நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தடுத்து நிறுத்துவது சரியான அணுகுமுறை ஆகாது’ என்றார் ராமலிங்கம்.
தேவை மேலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்
திட்டம் செயல்படுத்தப்படவுள்ள தேனி மாவட்ட பகுதி மக்களை விஞ்ஞானிகள் குழுவினர் ஏற்கெனவே சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளனர். மக்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். எனினும், ஒருபகுதியினர் மத்தியில் இன்னமும் பல சந்தேகங்கள் நீடிக்கின்றன. தேனி மக்கள் மட்டுமன்றி, தமிழக மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் விரிவான பிரச்சாரத்துக்கு விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்வது அவசியம். ஏனெனில், வளர்ச்சிக்கான திட்டமாக இருந்தாலும்கூட மக்களின் நம்பிக்கை மற்றும் பங்கேற்புடன் கூடிய திட்டங்கள் மட்டுமே முழு வெற்றியைப் பெற இயலும். அதன்படி சர்ச்சைகளைத் தாண்டி, மக்களின் சந்தேகங்களைக் களைந்து, திட்டத்தை சாதித்துக்காட்ட இந்திய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தேனி மலையை தேர்வு செய்தது ஏன்?
இந்த ஆய்வுக்காக தேனி மலைப் பகுதியை தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி நியூட்ரினோ விஞ்ஞானிகள் அளித்த விளக்கம்:
காஸ்மிக் கதிர்களின் பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ துகள்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டுமானால், எல்லா திசைகளிலிருந்தும் குறைந்தது 1,000 மீட்டர் கற்களால் சூழப்பட்ட நிலையில், மலையின் உள்ளேதான் குகைக்குள் ஆய்வு நடத்த முடியும்.
இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக அந்த மலைப் பகுதி உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை.
ஆனால், தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதாவது, இமயமலையைப்போல சிறு சிறு பாறைகளின் தொகுப்பாக இல்லாமல், ஒரே பாறையிலான மலைகளாக இங்குள்ள மலைகள் உள்ளன. இந்த மலைகள்தான் நியூட்ரினோ ஆய்வை மேற்கொள்ள மிகவும் பாதுகாப்பானவை என்பதால் இங்கு இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனர்.
மதுரை விஞ்ஞான நகரமாக வாய்ப்பு
ஜப்பான், கனடா, இத்தாலி மற்றும் பூமியின் தென்துருவம் ஆகிய இடங்களில் தற்போது நியூட்ரினோ ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச விஞ்ஞானிகளின் ஆதரவுடன், இந்தியாவிலும் இதுபோன்ற ஆய்வு மையத்தை ஏற்படுத்துவது என 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நடத்தப்படும் நியூட்ரினோ ஆய்வு (India based Neutrino Observatory-INO) என்று இதற்கு பெயரிடப்பட்டது. இனி என்னென்ன பணிகள் நடை பெறும் என்று மதுரையில் உள்ள நியூட்ரினோ ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளரும், விழிப்புணர்வு பணி பொறுப்பாளருமான பேராசிரியர் ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
இந்தத் திட்டத்துக்காக பொட்டிபுரத்தில் 66 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. திட்ட ஆயத்தப் பணிகளுக்காக மத்திய அரசு வழங்கிய ரூ. 84 கோடியைக் கொண்டு, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 18 கி.மீ. தொலைவில் உள்ள குண்டன்நாயக்கன்பட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. தண்ணீரைத் தேக்கி வைக்க 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, தரைமட்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. டி.புதுக்கோட்டையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள சாலையின் குறுக்கே ஓடை செல்வதால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மலைக் குகையில் உள்ள ஆய்வுக் கூடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஆராய்வதற்கான ஆராய்ச்சி மையம் மதுரையில் அமைக்கப்படும். மும்பையில் இருந்து நியூட்ரினோ திட்ட அதிகாரி நபா கே. மாண்டல், சென்னையில் இருந்து கணித அறிவியல் நிறுவன மூத்த விஞ்ஞானி இந்துமதி உள்ளிட்டோர் அவ்வப்போது வந்து பணிகளை பார்வையிடுகின்றனர்.
மலையைக் குடைய டெண்டர்
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதால், பொட்டிபுரத்தில் மலையைக் குடைந்து ஆய்வு மையம் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்படும். மலை உச்சியிலிருந்து 1300 மீட்டருக்கு கீழ் அடுத்தடுத்து இரண்டு குகைகள் தோண்டப்படும். ஒரு குகையில் நியூட்ரினோ உணர்கருவியும், மற்றொன்றில் கட்டுப்பாட்டு அறையும் இருக்கும்.
பிரதான குகையானது 130 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும், 30 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். மிக உறுதியான சார்னோகைட் பாறைகளால் ஆன இந்த மலையை குடைந்து இந்த ஆய்வகம் அமைக்கப்படுவதால் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த ஆய்வு மையத்துக்குச் செல்ல மலையின் வெளிப்பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படும். 7 மீ. அகலம் 7 மீ. உயரம் உடையதாக சுரங்கப்பாதை அமைக்கப் படவுள்ளதால், இருவழி வாகனப் போக்குவரத்து நடைபெறும் அளவுக்கு அகலமாக இருக்கும்.
இந்தத் திட்டம் முழுமை பெற நீண்ட காலம் ஆகும். ஆனால், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளின் வருகை காரணமாக, மதுரை விஞ்ஞான நகராக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
பாசன பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை
நியூட்ரினோ திட்டத்துக்கு பெரியார் வைகை பாசன விவசாயிகள் ஆதரவளித்துள்ள அதேவேளையில், விவசாயத்துக்கு பாசனப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து 5 மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸ் கூறியதாவது:
இந்தத் திட்டம் குறித்து 4 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில், ‘பாறைக் கழிவுகளை எப்படி அகற்றுவீர்கள்?’ இந்தப் பணிக்குத் தேவைப்படும் தண்ணீரை எங்கிருந்து எடுப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினோம்’.
தண்ணீர் குறித்த கேள்விக்கு வெளியில் இருந்து எடுக்கப்படும் என்று மட்டும் பதிலளித்தனர்.
இந்த நிலையில், தற்போது திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளதால், எங்களது கோரிக்கைகளை புறக்கணித்துவிடக் கூடாது. கம்பம் பள்ளத்தாக்கு முதல் இடையமேலூர் வரை சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் வைகை, பெரியார் பாசனத்தை நம்பியே உள்ளது. மொத்தம் 21- 23 டி.எம்.சி. தண்ணீர் தேவையுள்ள இந்தப் பகுதிக்கு தற்போதே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, நியூட்ரினோ திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக இலவச மின்சார வசதியுடன் போதிய ஆழ்துளை கிணறுகளை இப்போதே ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
பெரியாறு அணைக்குப் பாதுகாப்பு
சிட்டம்பட்டி பிரிவு பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் கூறும்போது, ‘தொடக்கத்தில் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம். விஞ்ஞானிகள் விளக்கியப் பிறகு ஏற்றுக் கொண்டோம். இந்தத் திட்டம் வந்தால் அந்தப் பகுதி மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் வந்துவிடும் என்பதால், பெரியாறு அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கருதுகிறோம். கேரளத்தின் அழிவுச் சிந்தனையில் இருந்து பெரியாறு அணையைக் காக்க இந்தத் திட்டம் உதவும் என்று நம்புகிறோம். அதேவேளையில், தற்போதே மதுரை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும்பட்சத்தில் மேலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, பெரியாறு அணையின் முழு கொள்ளளவுக்கும் (152 அடி) தண்ணீர் தேக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நியூட்ரினோ அதிகாரிகளும் பரிந்துரைக்க வேண்டும்’ என்றார். 


நன்றி - த இந்து

0 comments: