Saturday, January 17, 2015

இது நம்ம ஆளு - சிம்பு நயன் தாராவின் நிஜ காதல் கதையா? - இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி

‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசரில் இருந்து ஒரு காட்சி.
நயன்தாரா: (சிம்புவிடம்) ‘லவ் பண்ணியிருக் கியா?’ (சிம்பு திரும்பி நயன்தாராவை பார்க்கிறார்)
சூரி: லவ் பண்றத தானே நீங்க பொழப்பா வெச்சிருக்கீங்க.
நயன்தாரா : இவ்வளவு நாளா நீ எங்க இருந்த?
சிம்பு: உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தேன்!
நயன்தாரா: (சிம்புவிடம்) உனக்குப் பொண்ணுங்கன்னா பிடிக்குமா?
சூரி: இவனுக்குப் பொண்ணுங்கன்னு எழுதினாலே பிடிக்கும்.
- இனி இப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜிடம் சில கேள்விகள்...
‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசரைப் பார்க்கும்போது, இது சிம்பு-நயன்தாரா வுக்கு இடையே இருந்த நிஜமான காதல் கதையை வெளிக்காட்டுவதுபோல் தெரிகிறதே?
படம் பார்க்கும்போது அப்படித் தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக சிம்பு, நயனுக்காக ஒரு இடத்தில்கூட வசனத்தைச் சேர்க்கவில்லை. இது சிம்பு, நயன் இருவருக்குமே தெரியும். படத்தில் நிறைய இடங்களில் அவர்களுக்காகவே எழுதின மாதிரி தெரிந்தாலும், இது சாதாரண காதலன் - காதலிகளின் இயல்பான கேள்வி, பதில்கள்தான்.
இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடித்த இருவரின் நட்பு, இப்போது எப்படி இருக்கிறது?
சிம்புவும் நயனும் பிரிந்துவிட்டார்கள், 7 ஆண்டுகளாக அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை என்றெல்லாம் நாம்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் நல்ல புரிதல் உள்ள நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். பிரிந்த பிறகும் இருவரும் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். இந்தப் படத்தில் என் வேலை மிகவும் குறைவுதான். இரு வருக்கு மான காதல் காட்சிகளைப் பற்றி நான் பெரிதாக விளக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அவர்களது முதிர்ச்சிதான் அதற்கு காரணம்.
நயன்தாரா சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஆனால் சிம்பு அதற்கு நேர் எதிராக செய்கிறார் என்று பரவலாக ஒரு பேச்சு இருக்கிறதே?
நயன்தாராவிடம் இந்தப் படத்துக்கு 15 நாட்கள் கால்ஷீட் பெற்று, 13 நாட்களிலேயே அவருடைய பகுதியை முடித்துவிட்டோம். 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அந்த நேரத்துக்குள் அவர் மேக்கப்புடன் தயாராக வந்து நின்றுவிடுவார். அவருடைய சினிமா பயணம் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்வதற்கு இது ஒரு முக்கிய காரணம். சிம்புவைப் பொறுத்த வரை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதுதான் பிரச்சினை. வந்துவிட்டால் ஒரே டேக்தான். சிம்பு நடித்த படங்களிலேயே குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடித்த படம் இது.
சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவதை மட்டும் அவர் கடைபிடித்தால் அவர் எங்கேயோ போய்விடுவார். இப்போதும்கூட 3 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு படம் வந்தாலும் இதன் டீசரை அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர் ரசிகர்கள் அந்த அளவுக்கு அவர்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை சிம்பு கெடுத்துக் கொள்ளக்கூடாது. ஆண்டுக்கு ஒரு படமாவது கொடுக்க வேண்டும்.
உங்கள் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரிக்கும் புதிய படத்தின் பணிகள் எப்படி நகர்கிறது?
50 சதவீதம் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். மிக அருமையாக சென்று கொண்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போகிறீர்களா? இப்போதெல்லாம் கிராமங்களில் பொங்கல் பண்டிகை முன் போலவே உள்ளதா?
எனக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் ஊருக்கு சென்றே ஆகவேண்டும். அப்போது தான் இழந்த புத்துணர்ச்சியை மீண்டும் பெற்றதுபோல் உணர்வு வரும். சாதாரண நாட்களிலேயே அப்படி எனும்போது பொங்கலை விட்டுவிடுவேனா என்ன?
நான் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எழுதிய ‘ப்ளாஷ்பேக்’ தொடர் மாதிரிதான் பொங்கலைப் பற்றி பேச நிறைய விஷயம் உள்ளது. பிடித்த கடவுளை, நடிகரை, பூக்களை வாங்கி நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகளாக அனுப்பிய காலம் எல்லாம் ஆனந்தமான பருவம். இப்போது எஸ்.எம்.எஸ்.ஸில் யாரா வது அந்த உணர்வை உணர முடிகிறதா? சொல்லுங்கள்.
பொங்கலுக்கு அண்ணன் வருவாரா? என்று கடிதம் வருவதற்காகவும், தனக்கு பிடித்த கத்தரிப்பூ நிற ஆடைகள் வாங்கி வருவார் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கைகள் இன்று ஒரு போனில் சில விநாடிகள் பேசி, அந்த சுவாரஸ்யத்தை எளிதாககடந்துபோகிறார்கள். நவீனம் அதிகரிக்க அதிகரிக்க சோம்பேறித்தனமும் அதிகரித்து விட்டது. திருமணப் பத்திரிகையை நேரில் சென்று கொடுத்து அழைத்த காலம் போய், போனில் அழைக்கும் காலம் வந்துவிட்டது. 


நன்றி  -த இந்து

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்ப இது தொலைந்த காதலை தூசி தட்டிய கதைதான்...