Sunday, January 18, 2015

சொல்லத்தான் நினைக்கிறேன்', "அக்னி சாட்சி' "சிந்து பைரவி'- கே பாலச்சந்தரின் மாஸ்டர் பீஸ் எது?

அதுதான் பாலசந்தர்! நடிகர் சிவகுமார்

"பாலசந்தர் என்றதுமே இருவர் நினைவுக்கு வருகிறார்கள். ஒருவர் எஸ்.பாலசந்தர். வித்தியாசமான மனிதர். அந்த காலத்திலேயே பாடல்கள் இல்லாமல் ஏறக்குறைய ஆர்ட் பிலிம் மாதிரி "அந்த நாள்' என்ற படத்தையும் மற்றும் சில வித்தியாசமான படங்களையும் எடுத்தவர். இதைத் தவிர தானே வீணை பயின்று பெரிய இசைக்கலைஞராகவும் திகழ்ந்தார். அதேபோல், திரைப்படத்துறையில் மிகவும் வித்தியாசமாக விளங்கியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். 
 
 
 ஒரு காலகட்டத்தில் ஸ்டுடியோ அதிபர்களில் சிலர் தயாரிப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்தார்கள். ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்றவர்கள் இதற்கு உதாரணங்களாவார்கள்.  இவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஸ்டுடியோ அதிபர்களாகவோ, தயாரிப்பாளர்களாகவோ இல்லாமல், ஒரு படைப்பாளியாகத் திரைத்துறையில் விளங்கியவர்களில் முதன்மையானவர் ஸ்ரீதர். அதே சமயம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த ஏ.பி.நாகராஜனையும் குறிப்பிட வேண்டும். இன்னொருவரும் இருந்தார். 
 
 
மிகவும் குள்ளமாக இருந்தாலும் கிராமிய, சமூகக் கதைகளில் பிறர் தொட்டிராத எல்லைகளைத் தொட்டு உயர்ந்து நின்றவர். அவர்தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.  இவர்கள் யாருமே சாதாரணமானவர்கள் இல்லை. இவர்களுடைய சாதனைகள் மகத்தானவை. அப்படியிருக்கும்போது, இவர்களுக்கு நடுவே தனித்தன்மையோடு திரையுலகில் நுழைகிறார் கே.பாலசந்தர். நானும் அப்போதுதான் சினிமாவுக்கு வருகிறேன். கே.பி. இயக்கிய முதல்படம் நீர்க்குமிழி (1965) வெளியான அதே ஆண்டுதான் நான் அறிமுகமான "காக்கும் கரங்கள்' படமும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  நான் சென்னைக்கு வந்த புதிதில் "மேஜர் சந்திரகாந்த்' நாடகம் கலக்கிக் கொண்டிருந்தது. கே.பி. கதை-வசனம் எழுதிய "சர்வர் சுந்தரம்' படத்தில் நாகேஷ், எஸ்.என்.லட்சுமி நடித்த ஒரு காட்சிதான் நான் வாழ்க்கையில் பார்த்த முதல் படப்பிடிப்பு.
 
 
  நான் "நீர்க்குமிழி' நாடகம் பார்த்திருக்கிறேன். நாடகமே சினிமா பார்ப்பதுபோல இருக்கும். கதைக் களன் ஆஸ்பத்திரிதான். நாமும் ஆஸ்பத்திரியில் இருப்பதுபோலவே இருக்கும். ஒரே சீன், இடைவேளை வந்து விடும். சினிமா மாதிரியே! நான் அப்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். சுற்றிலும் யார் யார் இருந்தார்கள்? "மேஜர்' சுந்தர்ராஜன், அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், பி.ஏ.படித்த ஜெய்சங்கர், மலேஷியாவிலிருந்து வந்த ரவிச்சந்திரன் இப்படி எல்லோருமே பெரிய ஆட்களாக இருந்தார்கள். சினிமாவில் நான் என்ன சாதிக்கப் போகிறேன்? எப்படி சாதிக்கப் போகிறேன் என்றே புரியவில்லை.  ராஜா அண்ணாமலை மன்றத்தில் கே.பாலசந்தரின் "எதிர்நீச்சல்' நாடகம் பார்க்கப் போனேன். சௌகார் ஜானகி முதல் வரிசையில் என்னை அமரவைத்தார். நாகேஷின் மோனோ ஆக்டிங்கைப் பார்த்துவிட்டு அன்று ராத்திரி முழுவதும் நான் தூங்கவில்லை. "நாம தப்பு பண்ணிட்டோம், நாம இந்தத் துறைக்கே வந்திருக்கக்கூடாது' என்று நினைத்தேன். 
 
 
 
"மூஞ்சியைப் பார்த்து சிவன், விஷ்ணு, முருகன்னு வேஷம் கொடுக்கறாங்க...சொர்க்கத்துல மேகத்துல சஞ்சாரம் பண்ணிக்கிட்டிருக்கடா... விழுந்துடுவ' என்று என் மனசாட்சி சொன்னது. அப்போது நாடகத்தில் நடித்தால்தான் தேற முடியும் என்று எனக்குப் பட்டது. இதற்குக் காரணம், பாலசந்தரின் நாடகம்தான். எம்.எஸ்.பெருமாளின் "அம்மன் தாலி' கதையைப் படமாக்கியபோது அதில் நடித்தேன்.  இப்படி இருக்கும்போது, லட்சுமியுடன் "காவல் தெய்வம்' படத்தில் நடித்து விட்டேன். கே.பி. இயக்கும் "எதிரொலி' படத்தில் ஒரு சிறு வேடத்தில் லட்சுமியுடன் நடிக்க அழைப்பு வந்தது. மை லேடீஸ் கார்டனில் படப்பிடிப்பு. "குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன?' என்ற வாலியின் அருமையான பாடல். பாலசந்தர் படம் எடுக்கும் விதமே வித்தியாசமாக இருந்தது. சுகமாக இருந்தது. ஆனால், அதே சமயம் கெட்டிக்கார வாத்தியாரிடம் வேலை செய்யும் பயமும் இருந்தது. ஆக "எதிரொலி'தான் கே.பியிடம் கொண்ட நட்பின் முதல் படி.  கே.பியின் "நவக்கிரகம்' நாடகம் திரைப்படமாயிற்று. அப்போது நாகேஷூக்கும் மனோரமாவுக்கும் இடையே இருந்த ஒரு மனவருத்தம் காரணமாக, நாடகத்தில் நடித்த மனோரமா திரைப்படத்தில் இடம் பெறவில்லை.  கே.பி. "குமுதம்' இதழில் "நவக்கிரகம்' தொடரை எழுதிக் கொண்டிருந்தார். அதற்காகவே "குமுதம்' வாங்கியவர்கள் எத்தனையோ பேர். அதில், "நாடகத்தில் நடித்த உனக்கு, திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை...மன்னித்து விடு மனோரமா' என்று பகிரங்கமாக எழுதியிருந்தார். யாருக்கு வரும் இந்தப் பெருந்தன்மை?  எனக்குத் தெரிந்து பல வி.ஐ.பிக்கள் தொலைபேசியில் அவர்களே அழைத்தபோதும் லேசில் லைனில் வரமாட்டார்கள். நாம் காத்திருக்க வேண்டும். "டொய்ங் டொய்ங்' என்று அர்த்தமில்லாத இசையை சகித்தபடி இருக்க வேண்டும். பாலசந்தர் அவரே எண்ணைச் சுழற்றிக் கூப்பிடுவார். நாம் கூப்பிட்டால் அவரே எடுப்பார்.  பணியின் சுமை அதிகமாகி, மாரடைப்பு வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாலசந்தர். கிட்டத்தட்ட ஆறு மாதம் ஓய்வுதான். சும்மா இருப்பாரா? நோண்டி நோண்டி ஒரு கதையைத் தயாரித்தார். அதுதான் "அரங்கேற்றம்' என்னும் மாஸ்டர் பீஸ். மிக நீளமான வசனங்கள் திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில் கச்சிதமான வார்த்தைகளை வைத்துக் கொண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.  நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனங்களால் அனைவரையும் கவர்ந்த பாலசந்தர், பிறகு "விஷுவல்'ஸில் கவனம் செலுத்தினார். "சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படும்போது, பொங்கிய பாலில் நீர் தெளித்து அது அடங்குவதாகக் காண்பித்தார். மாடியிலிருக்கும் இளைஞனிடம் தினம் ஒரு கடிதம் கொடுத்து, அதைத் தபாலில் சேர்க்கும்படி சொல்கிறாள் கீழே குடியிருக்கும் அந்தப் பெண். உண்மையில் ஒவ்வொரு நாளும் அவள் தரும் கடிதம் அவனுக்குத்தான். அவன் அவற்றையெல்லாம் படித்திருப்பான் என்றுதான் அவள் எண்ணுகிறாள். ஒரு நாள் அவள் மாடியேறி வரும்போது அங்கே தன் தங்கையின் படத்தை இவன் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவன் தன்னைக் காதலிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்கிறாள். அத்தனை நாட்கள் அவனைத் தபாலில் அனுப்பச் சொன்ன கடிதங்களுக்கான தபால் செலவைக் கொடுக்கிறாள்.  "இதுல ஒண்ணைக்கூட நீ படிக்கலியா?'  "இல்லை'"ஏன்?'  "இன்னொருத்தருக்கு எழுதப்பட்ட கடிதத்தை எப்படிப் படிக்க?  "உண்மையிலேயே நீதான்யா ஹீரோ'  இந்தப் படத்தில் எஸ்.வி.சுப்பையாவுக்கு என் முயற்சியால் ஒரு வேலை கிடைக்கும். அவர் நெகிழந்துபோய் என் காலில் விழ வருவார். நான் பதறிப்போய் "நான் ஒண்ணுமே செய்யலை சார். அதுவா உங்களுக்குக் கெடச்சுது' என்று சொல்வேன். "எல்லாத்தையும் செஞ்சுட்டு எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறதுதான் அவர் கேரக்டர்ப்பா' என்பார் ஸ்ரீவித்யா. மூன்று சகோதரிகளில் யாருக்குமே என்னுடன் திருமணம் நடக்காது. படம் முடிந்து விட்டது. "நான் இன்னொரு சீன் வைக்கப் போறேன்' என்றார் பாலசந்தர். எப்படி என்று யோசித்தேன்.  அந்தக் காட்சி இதுதான்: நான் சோபாவில் உட்கார்ந்திருக்கிறேன். எஸ்.வி.சுப்பையா வந்து தனக்கு பம்பாய்க்கு மாற்றலாகியிருப்பதைச் சொல்வார். "நல்லது போய்ட்டு வாங்க' என்று சொல்வேன். "உண்மையிலேயே நீங்க தியாகிதான். நீங்கதான் ஹீரோ' என்பார். "நான் ஹீரோ இல்லை. ஏன்னா இந்த மூணு ஹீரோயின்ல நான் யாரையுமே கல்யாணம் பண்ணிக்கலையே' என்று சொல்லி சிரிப்பேன். அங்கேயே காட்சியை உறையச் செய்து படத்தை முடிப்பார் பாலசந்தர்.  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர் அவினாசிமணி, எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "எம்.ஜி.ஆர். என்ற ஹீரோவை மாமனிதனாகக் காட்டுவதற்காக பத்து பன்னிரெண்டு எழுத்தாளர்கள் உட்கார்ந்து விடிய விடிய எழுதுவார்கள். இங்கே ஒரு சாதாரணமான இளைஞனை பாலசந்தர் என்பவர் ஹீரோவாக்கி இமயமலை அளவுக்கு உயர்த்தி விட்டார்' என்று எழுதியிருந்தார்.  கே.பி. இயக்கத்தில் நான் நடித்த "அக்னி சாட்சி' மறக்க முடியாத படம். அந்தப் படத்தில் நாயகி சரிதா எரிமலை என்றால் நான் பனிமலை. "டேய்... க்ளைமாக்úஸ கிடையாதுடா' என்றார் பாலசந்தர்.  சரிதா பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றிருப்பார். வீட்டில் நான் ஷேவ் பண்ணிக்கொண்டிருப்பேன். தொலைபேசி ஒலிக்கும். பின்னணி இசை இருக்காது. அடுத்தமுனையில் பேசுபவரின் குரல் ஒலிக்காது. என் குரல் மட்டும்தான்.  "அரவிந்தன்'  "........'  "எது? அவசரமா? சிசேரியனா...? நான் ஒடனே வரேம்மா'  முகம் கழுவிக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்ப எத்தனிக்கும்போது மறுபடியும் தொலைபேசி மணி... மரணச் செய்திதான். இறந்தது கண்ணம்மாவா? குழந்தையா? இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இன்னொரு கண்ணம்மா கிடையாது. கண்ணம்மாதான் இறந்து விட்டாள்.  ரிசீவர் கையிலிருந்து நழுவி விழுகிறது. திரும்பிப் பார்த்தால் அவள், அவளுடைய படத்திலேயே எழுதி வைத்திருப்பாள். "ஒரு தெளிவுற்ற நெஞ்சம் தேடுகிறது பிராயச்சித்தம். ஆண்டவனே! என்னை அழைத்துக் கொள்ள வேண்டுகிறேன். கண்ணம்மா'. இங்கேதாண்டா நீ அழலாம்' என்றார் பாலசந்தர்.  இதற்கு முந்தைய காட்சி என்ன? அவள் மருத்துவமனைக்குச் செல்வது. அப்போது அவளைப் பொறுத்த மட்டில் உன்னைக் கடைசியாகப் பார்க்கிறாள். உனக்கு அது தெரியாது. நீ பெரிதாக உணர்ச்சிகளைக் காட்டக்கூடாது. ஏதோ காபி வாங்கிட்டு வரேண்டா கண்ணா என்பதுபோலத்தான் இருக்க வேண்டும்' என்றார். ஆனால், இப்போது...? "நல்லா அழுதுக்கோ..., நீயே நடிச்சு... நீயே "கட்' சொல்லிக்கோ...' என்றார்.  மேனா தியேட்டரில் பாலசந்தர், நான், சரிதா மூன்று பேரும் ரீ ரிகார்டிங்குக்கு முன்பு இந்தப் படத்தைப் பார்த்தோம். எனக்குத் தொண்டையெல்லாம் அடைத்தது. சரிதா மயங்கி விழுந்து விட்டார். படம் தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. லிட்டில் ஆனந்த் தியேட்டரில் மட்டும் ஒரு கணக்குக்கு நூறு நாட்கள் ஓடியது. "வேற எப்படிடா என்னை படம் எடுக்கச் சொல்றே?' என்றார் பாலசந்தர். மீண்டும் சிலிர்த்து எழுந்தார். அதுதான், "சிந்து பைரவி'.  சினிமாவில் தண்டபாணி தேசிகர், கே.பி.சுந்தராம்பாள், ஜி.என்.பி. போன்றவர்கள் கர்நாடக சங்கீத வித்வான்களாக நடித்தார்கள். இங்கே ரேடியோ என்பதையே இளைஞனான பின்பே பார்த்த என்னை, கர்நாடக இசையே தெரியாத என்னை, ஒரு கர்நாடக வித்வான் பாத்திரத்தில் நடிக்க வைக்கிறார் பாலசந்தர். "சரி உங்களுக்கு தைரியம் இருந்தால் பண்ணலாம்' என்றேன். ஜே.கே.பி. உண்மையில் ஏகபத்தினி விரதன். மனைவியை மிகவும் நேசிப்பவன். குழந்தை இல்லை. அதனால் என்ன உனக்கு நான் குழந்தை... எனக்கு நீ குழந்தை என்று மனைவியுடன் வாழ்ந்தவன். அவன் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தாள். இவனுக்கு அவளுடைய இசைமீது இசைத் திறமை மீது காதல். ஏனென்றால், அவனுக்கு இசைதான் சுவாசமே. எனவே இது தோல் காதல் அல்ல. ஆனால் மெல்ல மெல்ல அபிமானம் போதையாகிவிடுகிறது. அவளைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. அவளை இரண்டாம் தாரமாக கட்டி வைக்க அவன் மனைவியே முனைகிறாள். தாலி கட்டும் நிலைமைவரை போய்விடுகிறது. அங்கே பாலசந்தர் யோசிக்கிறார்.  இரண்டாம் தாரம் கட்டிக் கொள்வதுபோல் காட்சி வைப்பது எல்லாம் தவறு என்றெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு "மடி'யானவர் அல்ல பாலசந்தர். ஆனால், ஒரு கேள்வியை எழுப்புகிறார். ஜே.கே.பியை ஆயிரம் ரசிகைகள் நேசிப்பார்கள். எல்லோரையும் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா? "இல்லடா, அவன சோரம் போனவன் மாதிரி காட்ட விரும்பல' என்றவர், சிந்து கைக்குழந்தையை விட்டுச் செல்வதுபோல் படத்தை முடித்தார்.  தியாகராயநகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் நான் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது பூக்காரிகள், பத்து பாத்திரம் தேய்க்கும் பெண்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். நான் அவர்களிடம் கேட்டேன். "ஏம்மா... நான் சிந்துவை கல்யாணம் பண்ணியிருக்கலாமா?' அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? "தப்பு சாமி, கொழப்பம் தீராதுல்ல'  "இந்தப் பிறவிக்கு இருமாதரை சிந்தையாலும் தொடேன்' என்ற ராமனின் பூமியில் வந்தவர்கள்தானே' நாம், இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் பாலசந்தர். 
 
 
 
 
 சிவகுமார் என்ற தனிமனிதனுக்கு ஒரு "இமேஜ்' இருக்கிறது. அது சினிமாவில் வரும் சிவகுமாரின் பாத்திரங்களுக்குப் பெரும்பாலும் ஒத்துப்போகும் விதமாக இருந்திருக்கிறது. இதில் கே.பியின் பங்கு உண்டா என்ற கேள்வி எழுகிறது.  ஒரு முறை நான் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருந்த இளைஞன் கொஞ்ச நேரம் காணாமல்போய்த் திரும்பி வந்தான். என்னிடம் பேச ஆரம்பித்தான்.  "சார்... நீங்க சிந்து பைரவி'யிலே தண்ணியடிச்சது தப்பு சார்'  "அட அது வெறும் காட்சிதாம்பா... நெசமான "தண்ணி' இல்ல, வெறும் ஃபேண்டாதான்'  "சும்மா சொல்லாதீங்க சார்... படத்துல தண்ணி வேணும்னு கேட்டிங்களா இல்லையா?'  "இதென்னப்பா பைத்தியக்காரத்தனமா இருக்கு'  "எது சார் பைத்தியக்காரத்தனம்? கேரளாவுல பொம்பளைங்க ஒங்களை கடவுளா நெனச்சுக்கிட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா சும்மா தண்ணி அடிச்சேன்றீங்க. நான் தண்ணி அடிக்கிறவன்தான் சார். டாய்லட்டுக்குப் போய்தான் ரெண்டு பெக் அடிச்சேன். உங்க முன்னாலே குடிக்கலாமா சார்? தப்பில்லையா?'  
 
 
 
 
 
 இது பாலசந்தருக்கு கை வந்த கலை. அவருடைய நூறு படங்களும் அவருக்கு செல்லக் குழந்தைகள்தான். ஆனால், அவர் ரசித்து மறக்கவே முடியாத படங்கள் "சொல்லத்தான் நினைக்கிறேன்', "அக்னி சாட்சி' "சிந்து பைரவி' என்று அடித்து சொல்வேன். அந்த மூன்றிலும் நான் கதாநாயகனாக நடித்ததை என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக நான் நினைக்கிறேன்.  "அக்னி சாட்சி'யில் என்ன ஆனது?  படத்தில் முக்கிய பாத்திரம் சரிதாதான். ஆனால் படம் பார்த்தவர்களுக்கு என்ன தோன்றியது தெரியுமா? "இப்படி ஒரு ராட்சஸிக்கு வாக்கப்பட்டா புருஷங்காரன் என்ன செய்வான்?' என்ற "சிம்பதி' எல்லாம் என்மீது திரும்பி விட்டது. எனக்குப் பல இளம்பெண்கள் கடிதம் எழுதினார்கள். "உங்கள் படம் பார்த்தோம். எங்களுக்கு அரவிந்தன் மாதிரி கணவன் அமைய வாழ்த்துங்கள் சிவகுமார்' என்று எனக்கு கடிதங்கள் வந்தன.  அதுதான் பாலசந்தர்!
 
 
thanx - the hindu

0 comments: