Thursday, August 28, 2014

கத்தி - மூத்த குடி’ கதையின் அட்டக்காப்பி - ஜூ வி flash news

‘கத்தி’ படத்திற்கு புதிது புதிதாக சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.


லைகா நிறுவனம் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தில் இருந்து விலக மாட்டேன் என்று மறைமுகமாகச் சொன்ன கையோடு செப்டம்பர் 18-ம் தேதி இசை வெளியீட்டு விழா என்றும் சொல்லிவிட்டது.


அனிருத் இன்னமும் பாடல்களுக்கான இசையை போட்டுக் கொடுக்கவில்லை என்று ஹீரோ விஜய்யும், இயக்குநரும் கடுப்பில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இந்தப் படத்திற்கு தங்களது முழு எதிர்ப்பை காட்டுவதற்கு 65 அமைப்புகள் முழு மூச்சாக இறங்கியிருக்கின்றன.


இதெல்லாம் போதாதென்று இப்போது “இந்தப் படத்தின் கதை என்னுடையது…” என்று சொல்லி ஒருவர் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியிருக்கிறாராம். இது இயக்குநர் முருகதாஸுக்கு செம குத்தாக இருக்கும் போல தெரிகிறது..! இது பற்றி இன்றைய ‘ஜூனியர் விகடன்’ இதழின் கழுகார் செய்தியில் தெரிவித்திருக்கிறார்கள்.


மீஞ்சூர் கோபி என்பவர்தான் வழக்குத் தொடுத்திருப்பவர். இவருக்காக வாதாடுபவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு. எதிர்த்தரப்பில் இவர் வழக்கு தொடுத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிர்வாகி ஜெகன் சார்பில் ஆஜராவது சதீஷ் பராசரன் என்ற பெரிய வழக்கறிஞர்.


மீஞ்சூர் கோபி என்ற நயினார் சென்னையை அடுத்த திருவள்ளூரைச் சேர்ந்தவராம். தலித் இலக்கிய படைப்பாளி. தலித் மற்றும் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை வைத்து கதை, கட்டுரைகளை எழுதக் கூடியவர்.


இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ஒரு பெரிய கதையையே சொல்லியிருக்கிறார்.


“சில வருடங்களுக்கு முன் என் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது எனது ஊரில் ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து ‘மூத்த குடி’ என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன்.


இந்தக் கதையை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன். அப்போது ஜெகன் என்பவரும் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் அந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் ‘இப்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது’ என்று விஸ்வாஸ் சுந்தர் சொன்னார்.


ஆனால் அப்போது அவருடன் இருந்த ஜெகன், ‘இந்தக் கதை ரொம்ப நல்லாயிருக்கு.. இதைத் திரைப்படமாக தயாரிக்க நான் தயாரிப்பாளர் முருகதாஸிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்..’ என்று சொல்லி என்னை முருகதாஸிடம் அழைத்துச் சென்றார்.


கதையைக் கேட்டுவிட்டு பாராட்டிய முருகதாஸ், சில திருத்தங்களையும் சொல்லி கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் மாற்றச் சொன்னார். அதன் பின் என்னை இயக்குநராக வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவும் முருகதாஸ் சம்மதித்தார்.


அதன்படி கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென்று அந்த வேலையை நிறுத்திவிட்டு ‘என்னால் இப்போது இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடியாது’ என்று சொல்லி முருகதாஸ் ஒதுங்கிக் கொண்டார்.


அதன் பிறகு திடீரென்று நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அது பற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது ‘கத்தி’ திரைப்படத்தின் கதை நான் சொன்ன ‘மூத்த குடி’ கதைதான் என்று எனக்குத் தெரிய வந்தது.


எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குநர் முருகதாஸ் மற்றும் ஜெகன் மீது நடவடி்ககை எடுக்க வேண்டும். அதுபோல் ‘கத்தி’ திரைப்படம் வெளியாகும் முன் எனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்..” என்று தன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறாராம்.


இந்த வழக்கு பற்றி விசாரித்து உண்மை நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் சங்கர் என்பவரை நீதிமன்றம் நியமித்தது.  ’இவர் முன் கோபியும், முருகதாஸும் தங்களது கதையின் நகலைக் கொடுக்க வேண்டும் என்றும் இரண்டும் ஒரே கதைகளா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.


கோபி தன் கதையின் நகலை அட்வகேட் கமிஷனர் சங்கரிடம் சமர்ப்பித்துவிட்டார். ஆனால் முருகதாஸ் தரப்பு இன்னமும் கதையின் நகலைக் கொடுக்கவில்லையாம். மாறாக இந்த வழக்கில் “அட்வகேட் கமிஷனரை நீதிமன்றம் நியமித்ததை ரத்து செய்ய வேண்டும். இதுவரை கோபியை முருகதாஸ் சந்தித்ததே இல்லை. அவரிடம் எந்தக் கதையையும் கேட்கவில்லை..” என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளனராம்.“கதையின் நகலை இ்ப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் வழக்கு விவகாரமும் கதையில் உள்ள முக்கியமான அம்சங்களும் வெளியில் கசிந்துவிடும். அதனால் ‘கத்தி’ திரைப்படத்தின் வியாபாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்..” என்று முருகதாஸ் தரப்பில் காரணம் சொல்கின்றனர்.


இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து இறுதித் தீர்ப்பு வருவதற்கே இரண்டு வருடமாகிவிடும். அதுவரையில் ‘கத்தி’ காத்திருக்குமா..? ஆகவே, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்யவே இந்த வழக்கில் அதிகம் வாய்ப்புண்டு என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.


தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு இயக்குநரின் முகமூடியும் இப்படி கிழிந்து கொண்டே வருகிறது.


மொத்தத்தில் ‘கத்தி’ படத்தின் தலைக்கு மேலேயே இப்போது கத்தி தொங்குகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை..!


thanx - http://www.tamilcinetalk.com/a-case-submit-in-high-court-by-writer-gopi/

0 comments: