Wednesday, August 06, 2014

'அனேகன்', - தனுஷ்

ஒரு நடிகர் திரையுலகிற்கு கமர்ஷியல் படம் மூலமாக அறிமுகமாகி வந்த காலகட்டத்தில் 'துள்ளுவதோ இளமை' மூலம் அறிமுகமானவர் தனுஷ். அப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியபோது "இது விடலைப் பசங்களின் கதை என்பதால் படம் ஹிட். ஆனால் தனுஷால் தொடர்ந்து ஒரு நடிகராக ஜொலிக்க முடியாது. என்று தான் நினைத்தார்கள்.

அடுத்து, அண்ணன் செல்வராகவன், தனுஷ் இருவரது கூட்டணியில் வெளியானது 'காதல் கொண்டேன்'. தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்தார் தனுஷ். அப்போது கூட "இதே மாதிரி படங்கள் தான் இவருக்கு சரியாக வரும். கமர்ஷியல் படங்கள் சரியாக வராது" என்று பேச்சுக்கள் நிலவின. அவர்களது விமர்சனங்களுக்கு பேச்சுக்கு தனுஷ் கொடுத்த பதில் தான் 'திருடா திருடி'

அப்படம் வெளிவந்த போது டீக்கடை, பேருந்து, கல்லூரி என எல்லா இடங்களிலும் ஒலித்த பாடல் 'மன்மதராசா.. மன்மதராசா' தான். அந்த நேரத்தில் ‘மன்மத ராசா.. ‘ பாடலில் தனுஷும் சாயா சிங்கும் ஆடுவது போல் இருந்த ஸ்டிக்கர்கள் பல ஆட்டோக்களில் ஒட்டப்பட்டிருந்தன. இத்தனைக்கும் 'மன்மதராசா..' பாடல் படப்பிடிப்பின்போது தனுஷ் ஜுரத்தால் அவதிப்பட்டுக்கொண்டிந்தார்.

'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி' ஆகிய மூன்று படங்கள் மூலம் முன்னணி நடிகராக வலம் வர ஆரம்பித்தார். தொடர்ந்து மூன்று படங்கள் ஹிட்! பல்வேறு முன்னணி இயக்குநர்களின் படங்கள் என தொடர்ச்சியாக ஒப்பந்தமானார்.

'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்', 'சுள்ளான்', 'ட்ரீம்ஸ்', 'அது ஒரு கனா காலம்', 'குட்டி', 'சீடன்', '3', 'மரியான்', 'நய்யாண்டி' ஆகியவை இவரது நடிப்பில் சறுக்கிய படங்கள். ஆனால், 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். 'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். லிங்கா, யாத்ரா என இவருக்கு இரண்டு மகன்கள். ரஜினிக்கு, தனது பேரன் லிங்கா மிகவும் செல்லம் என்பதால், தற்போது தன் படத்திற்கு 'லிங்கா' என்று தலைப்பிட்டார் ரஜினி என்கிறது கோலிவுட். ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வர முயற்சி செய்யாமல், தன் சொந்த உழைப்பால் மேலே வந்திருக்கிறார் தனுஷ்.


தனுஷை உலகளவில் புகழடைய செய்தது 'WHY THIS KOLAVERI DI' பாடல் தான். முதலில் YOUTUBE இணையத்தில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அப்பாடல் வெளியானது. அப்பாடலின் இசை மற்றும் பாடல் வரிகள் அனைத்து தரப்பு மக்களும் புரியும் வகையில் அமைந்தது. உலகம் முழுவதும் அப்பாடலுக்காக ரசிகர்கள் அவர்களாகவே FLASH MOB செய்து வெளியிட்டார்கள். தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட அப்பாடலுக்கு நடனமாடியது தான் இதில் ஹைலைட். உடனடியாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அப்பாடலை வெளியிட்டது.

அப்பாடலின் மூலம் அமிதாப்பச்சனுடன் சந்திப்பு, ரத்தன் டாடா உடன் சந்திப்பு, மன்மோகன் சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்டது என 'WHY THIS KOLAVERI' மூலம் இவர் அடைந்த உச்சம், பிரமிக்கத்தக்கது. தொடர்ந்து இந்தியில் அனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ராஞ்ஹனா' என்னும் படத்தில் அறிமுகமானார். படம் 100 கோடிக்கு மேல் வசூல்.

நடிகராக அறிமுகமாகி, பின்பு பாடலாசிரியர் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அனிருத், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தனுஷ்.

தற்போது மீண்டும் 'வேலையில்லா பட்டதாரி' மூலம் தமிழ் திரையுலகில் வெற்றியை ருசித்து இருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'அனேகன்', வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படம், பால்கி இயக்கத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் 'ஷமிதாப்' என தன் திரையுலகப் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்கால நடிகர்களில் எந்த ஒரு பாத்திரம் கொடுத்தாலும், அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு அப்பாத்திரத்தை திரையில் பிரதிபலிப்பது தனுஷ் போன்ற மிகச் சிலர் மட்டுமே.

இன்று 31வது பிறந்த நாள் காணும் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

 நன்றி - த இந்து

0 comments: