Thursday, May 03, 2012

காந்தியடிகள் ஒரு கையெழுத்துப்போடவே எங்கப்பா கிட்டே காசு கேட்டவர் - பழ நெடுமாறன் பேட்டி @விகடன்

1.' 'நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போதேனும் உணர்ந்து இருக்கிறீர்களா?'' 
''நிறைய முறை உணர்ந்திருக்கிறேன்! எங்கள் முதல் சந்திப்பே உங்களுக்கு ஆச்சர்யமூட்டும். 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை, பாண்டி பஜாரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதையட்டி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக சிறைக்குச் சென்றிருந்தேன்.


அந்த நால்வரில் பிரபாகரனும் அடக்கம். அப்போது வரை நான் பிரபாகரனை நேரில் சந்தித்தது இல்லை என்பதால், மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். நான்குஇளைஞர் கள் வந்தனர். இராகவன், உமா மகேஷ்வரன், ஜோதீஸ்வரன் என ஒவ்வொருவரும்தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நான்காவ தாக நின்ற இளைஞர், 'அண்ணா,மன்னித்துக் கொள்ளுங்கள்...


 நான்தான் பிரபாகரன்’ என்று சொன்னபோது, திகைத்துப்போனேன். ஏனெனில், அவர் எனக்குப் புதியவர் அல்ல. என் வீட்டில் அவரும் வேறு சில இளைஞர்களும் அதற்கு முன் பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது எம்.எல்.ஏ-வாகஇருந்த நான் பெரும்பாலும் வெளியூர்களில்தான் இருப்பேன். சென்னை வீட்டில் இந்த       இளைஞர்கள்தான் தங்கியிருப்பார்கள்.அவர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்திருக்கிறார் என்பதும் அதை வெளிப்படுத்தாமலேயே அத்தனை நாட்கள் என்னிடம் பழகிவந்திருக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம் அளித்தது.


அப்போது எல்லாம் நான் பிரபாகரனிடமே பல முறை, 'உங்கள் தலைவர் பிரபாகரனை அழைத்து வாருங்கள், சந்திக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறேன். 'சரி, சரி’ என்று அவரும் பணிவாகத் தலையாட்டியிருக்கிறார். அவரும் அவருடைய தோழர்களும் ரகசியம் காத்த தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. இந்தக் கட்டுக்கோப்புதான் விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய பலம்.''  2.''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று எங்கோ படித்திருக்கிறேன். இந்தச் செய்தி உண்மையா?'' 


''உண்மைதான்.1938-ம் ஆண்டு காந்தி ராமேஸ்வரத்துக்கு வந்தார். அப்போது மதுரையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வீடு, எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. என் அப்பா பழனியப்பனார் அப்போது இளைஞர். ஜார்ஜ் ஜோசப்பின் மனைவி, மதுரை ரயில் நிலையத்தில் காந்தியைப் பார்ப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். என் அப்பா காந்தியின் மீது பெரும்பற்று கொண்டவர் என்பதால், 'நீயும் வா’ என அவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். 


ரயில் வந்ததும், காந்தியைப் பார்த்து உண வைக் கொடுத்திருக்கிறார் அந்த அம்மை யார். காந்தியைப் பார்த்த பரவசத்தில் அப்பா அவரிடம் கையெழுத்து பெற முயற்சித்து இருக்கிறார். 


அதற்கு காந்தி அவர்கள் சிரித்துக் கொண்டே, 'ஒரு கையெழுத்துக்கு 5 ரூபாய் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார். அவசர மாகக் கிளம்பிச் சென்றதால், அப்போது அப்பாவிடம் காசு இல்லை. உடனே, தன்னு டைய கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து 'இதை வைத்துக்கொண்டு கையெழுத்துப் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.


 அதைப் பார்த்து திருமதி ஜோசப், 'இது இவருடைய திருமண மோதிரம்’ என்று காந்தியிடம் சொல்ல... உடனேகாந்தி, தன் டைரியில் ஒரு பேப்பரைக் கிழித்து 'காந்தி’ எனத் தமிழிலேயே கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார். இப்போதும் அந்தக் கையெழுத்து பத்திரமாக என்னிடம் இருக்கிறது!''
3. ''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற் றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார் களா?'' 


 ''ஒற்றுமை நிறைந்த இனமாக, தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடும் இனமாக தமிழினம் வடிவெடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறை என்ன? மதவெறி, சாதிவெறி போல தமிழர்கள் கட்சி வெறியால் பிளவு பட்டு உள்ளனர். அரசியல் கட்சிகளே மதங் களாக மாறிவிட்ட நிலையில், மக்களைப் பக்தர்களாக்கிக் குளிர்காய்கின்றனர்.


 இது மிகவும் ஆபத்தான போக்கு. ஏற்கெனவே சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் தமிழ கத்தை வஞ்சிக்கின்றன. மத்திய அரசுதமிழ் நாட்டை மதிப்பதே இல்லை. இந்த நிலையில் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளின் போக்கும் இதே சுயநலத்துடன் நீடித்தால், இந்தியாவில் எல்லா வகையிலும் தமிழகம் பின்தங்கிய மாநிலமாக மாறிவிடும்!''4.''தமிழீழம் பற்றி ஆதியோடு அந்தமாகத் தெரிந்துகொள்ள நான் என்ன புத்தகம் படிக்க வேண்டும்?''


''வரலாற்று அறிஞர் முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கைத் தமிழர் வரலாறு’ என்ற நூல் படித்தால், முழுமையான வரலாறு அறிந்துகொள்ளலாம்!''


5.''கவிஞர் கண்ணதாசனுடன் நெருங் கிப் பழகியவர் நீங்கள். அவருடனான நினைவுகளில் மறக்க முடியாததைக் குறிப்பிடுங்களேன்?'' 


''ஒன்றல்ல... இரண்டல்ல... பல சம்பவங்கள் உண்டு. ஒருமுறை குடும்பக் கட்டுப்பாடு விழாவுக்கு கவிஞரை அழைத்து இருந்தார்கள். 14 குழந்தைகளுக்குத் தகப்பனான அவர் அந்த விழாவில் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் நானும் சென்று இருந்தேன். பேச்சைத் தொடங்கும்போதே, 'எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமானவன் நான் என்பதால், என்னைப் பேச அழைத்திருக்கிறார்கள்’ என்று அவர் சொன்னபோது, அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது


.
இன்னொரு சந்தர்ப்பத்தில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஹார்மோனியத்தில் மெட்டை இசைத்துக்காட்ட, பாடல் எழுதுவதற்காக எதிரே அமர்ந்திருந்தார் கவிஞர். அவர் மெட்டை இசைத்தார். கேட்டதும், கண்களை மூடி, 'மறுபடியும் வாசிச்சுக்காட்டு’ என்று  எம்.எஸ்.வி-யிடம் சொன்னார் கவிஞர். 


அவர் மறுபடி வாசித்தார். அதைக் கேட்டதும், 'போ... போ... இந்த மெட்டுக்கு எல்லாம் பாடல் எழுத முடியாது’ என்று சொல்லி விட்டார். உடனே எம்.எஸ்.வி. எழுந்து சற்று தள்ளிப்போய் நின்றுகொண்டு, 'இந்த மெட்டுக்குப் பாட்டு எழுதலேன்னா, அப்புறம் என்ன நீங்க கவிஞர்?’ என்று கேட்டுவிட்டு வாசலுக்கு வெளியே ஓடிப்போய்விட்டார். 'பிடி, பிடிய்யா அவனை’ எனக் கவிஞர் சற்று கோபத்துடன் சத்தமிட... எம்.எஸ்.வி. பயத்துடன் வெளியிலேயே நின்றுகொண்டுஇருந்தார். 


பிறகு கோபம் தணிந்ததும், 'உள்ளே... வா’ என்று அழைத்து... அதே மெட்டுக்கு மறுபடியும் பாடல் எழுதிக் கொடுத்தார். வெளியானதும் பெரிய அளவில் பிரபலமான அந்தப் பாடல்.... 'யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா போங்க...’  


காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, இந்திரா காங்கிரஸில் இணைந்தார் கண்ணதாசன். நான் காமராஜர் காங்கிரஸிலேயே தொடர்ந்தேன். இருந்தாலும், நான் காமராஜரின் பிறந்த நாளை தேசியத் திருவிழாவாக மதுரையில் நடத்தியபோது கவிஞரைஅழைத் தேன். எந்த மறுப்பும் சொல்லாமல் முந்தைய நாளே வந்திருந்து விழா குறித்து மதுரையின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். அத்தகைய அரசியல் நாகரிகம் மிகுந்தவர் கவியரசர்!''6.''ராஜீவ் காந்தியின் மரணச் செய்தியை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?'' 


''கோவை ரயில் நிலையத்தில் இறங்கிய ஓர் அதிகாலைப் பொழுதில் ராஜீவ் கொலை செய்தியைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னை இந்திராவின் குடும் பத்தோடு நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், என்னை ராஜீவின் மரணம் கூடு தலாகப் பாதித்தது. ஆனால், இதைப் பற்றி பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பம் பிறகு வரவில்லை. காரணம், அதன் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை!''  ''7. விலைவாசி உயர்வு, லஞ்சம், தமிழ்நாட்டு சாதிப் பிரச்னைகள்பற்றி எல்லாம் பேசாமல் எப்போதும் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பது ஏன்?'' 


 ''யார் சொன்னது? நாங்கள் அனைத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசியும் எழுதியும் போராடியும்வருகிறோம். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதி நீர்ப் பிரச்னைகளுக்கு முதன்முதலாகக் குரல் கொடுத்தது எங்கள் தமிழர் தேசிய இயக்கம்தான். 


ஆனால், இலங்கைப் பிரச்னைபற்றி நான் சொல்வது மட்டுமே ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுகிறது. எங்களு டைய மற்ற போராட்டங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. இதனால் உங்களுக்கு அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அது தவறு. ஈழத் தமிழர்களின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்குத் தமிழ்நாட்டு தமிழர் நலனும் முக்கியமே.''8. ''இலங்கைப் போரை இந்தியா ஆதரித்ததற்கு 'சீனாவின் ஆதிக்கம்அங்கே வந்துவிடும்’ என்பது மட்டும்தான் காரணமா?''   


''இது ஒரு திசை திருப்பும் பேச்சு. ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில், இலங் கையில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தைக் கொண்டுவருவதற்கான ரகசிய முயற்சி நடந்தது. உடனே இந்திராகாந்தி நாடாளு மன்றத்தில், 'இந்தியப் பெருங்கடல் எல்லை யில் எந்த நாட்டு ராணுவத்தளம் அமைக்கப் பட்டாலும், இந்தியா அதைத் தனக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதும்’ என எச்சரித்தார். உடனே, ஜெயவர்த்தனா அடங்கிப்போனார். அதைப் போல, 'சீனாவிடம் உதவி பெற்றால், அதை நாங்கள் எங்களுக்கு எதிரானதாகக் கருதுவோம்’ என்று ராஜபக் ஷேவை நோக்கி இந்தியா எச்சரித்திருந் தாலே இலங்கை அடங்கிப்போயிருக்கும். ஆகவே, சீனாவைக் காட்டி இந்தப் பிரச்னை யைத் திசை திருப்புவது சரியானது அல்ல. உண்மையான காரணம் என்ன? இந்தியா வில் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், மிசோரம் எனப் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தின் சரிபாதி அங்குதான் நிற்கிறது.


 ஒருவேளை இலங்கை யில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால்,இந்தியா வில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்ட மிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார் கள்!''9.''உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் அடைய விரும்பிய லட்சியத்தை இன்று வந்து சேர்ந்துவிட்டீர்களா?'' 


''மாணவர் பருவத்தில் அண்ணன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்து என் அரசியல் வாழ்வைத் துவங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தபோது, ஒர் தமிழன் பெரும் பதவியில் இருக்கும்போது அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தன் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார் சம்பத்.


பெருந்தலைவரின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி சீரழிய ஆரம்பித்துவிட்டது. என்றைக்கு இந்திய ராணுவம் ஈழத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதோ, அன்றைக்கே நாங்கள் காங்கிரஸ் கட்சியை மறந்துவிட் டோம். தமிழர் தேசிய இயக்கத்தைத் தொடங்கினோம். எங்கள் லட்சியம், தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தச் செய்வதுதான். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண்டு இருக் கிறோம்!''

முற்றும் 

நன்றி - விகடன் 


டிஸ்கி 1 -

வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி http://www.adrasaka.com/2012/04/blog-post_8963.html

டிஸ்கி 2 -

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ நெடுமாறன் பேட்டி வீடியோ   http://www.adrasaka.com/2012/04/blog-post_19.html

டிஸ்கி 3 -

பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ராஜீவ் காந்தி - பழ நெடுமாறன் வெளியிடும் உண்மைகள் http://www.adrasaka.com/2012/04/blog-post_12.html டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

2 comments:

தமிழ்மகன் said...

அணைத்து வகையான கோப்புகளையும் Convert செய்ய ----- http://mytamilpeople.blogspot.in/2012/05/all-file-to-all-file-converter-3000-v77.html

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!பகிர்வுக்கு நன்றி!!!!!